தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும்

ஆனால், சந்தேகமேயில்லை, ஐ.தே.கவுக்கு இணக்கமாகவே முடிவெடுப்பார் சம்மந்தன். மறந்தும் வேறு தெரிவுகள், முடிவுகளுக்கு அவரால் செல்ல முடியாது. மாற்று அரசியலில் அவர் அடி வைக்கவே மாட்டார். தமிழரசுக் கட்சிக்குச் சாத்தியப்படாத விசயம் அது.

அப்படியென்றால் ஏனிந்தச் சுணக்கம்? இப்போதே ஐ.தே.கவுக்குத்தான் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று சொல்லி விடலாமே! என நீங்கள் கேட்கலாம். முதலில் யாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்று ஐ.தே.க முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவுக்காகவே சம்மந்தன் காத்திருக்கிறார். இன்னும் அங்கே ரணிலா சஜித்தா என்ற இழுபறியே நடந்து கொண்டிருக்கிறது. இதில் யாரை நிறுத்தினாலும் கூட்டமைப்பு அவரை ஆதரிக்கும். ஆனாலும் அதுவரை அது பொறுத்தே இருக்கும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, தமிழ் முற்போக்கு முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவையும் இந்த முடிவுக்காகவே திண்ணையில் காத்துக் கொண்டிருக்கின்றன. ஐ.தே.கவிற்குள்ளே நடக்கிற அமளி ஓய்ந்து ஒரு முடிவு வரட்டும் என்ற காத்திருப்பே இது.

இந்த இழுபறிகளெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து இறுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிக்குரியவரா? எனச் சம்மந்தன் பரிசீலிப்பார். வெற்றியடையக் கடினமான வேட்பாளர் என்றால் எந்த முடிவையும் சொல்லாமல் அல்லது விளங்கிக் கொள்ளக் கடினமான மொழியில் ஒரு தீர்மானத்தைச் சொல்வார். வெற்றியடையக் கூடிய வேட்பாளர் என்றால் உடனடியாகவே பச்சைக்கொடியைப் பச்சைக் கட்சிக்குக் காட்டி விடுவார். அவ்வளவுதான். அதுவரைக்கும் இந்தச் சுழிப்புகளும் சூக்குமப் பொடிகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதை ரணில் உள்பட ஐ.தே.கவில் உள்ள அனைவரும் நன்றாகவே அறிவர்.

ஆக மொத்தத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.கவின் பக்கமே நிற்குமென்பது உறுதி.

தமிழரசுக் கட்சிக்கு எப்போதும் நெருக்கமான உறவு – ரத்தபந்தம் – ஐ.தே.கவே. தமிழரசுக்கட்சியின் மறைந்த தலைவர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தொடக்கம் இன்றைய தலைவர்களான சம்மந்தன், சேனாதிராஜா உள்ளிட்ட அத்தனைபேரும் ஐ.தே.க.வின் அனுதாபிகள், ஆதரவாளர்கள், செல்லப்பிள்ளைகளே.

ஐ.தே.கவின் நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சியினர் பங்கேற்கும்போது எடுக்கப்படும் படங்களைப் பார்த்தாலே இது தெளிவாகத் தெரியும். ஐ.தே.கவுக்கும் தமிழரசுக்கட்சியினருக்குமிடையில் நடக்கும் சந்திப்புகளை நேரில் பார்த்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும். அவ்வளவுக்கு பூரித்துப்போயிருப்பார்கள். இல்லையென்றால் தற்போதைய அரசாங்கத்தை நாங்கள் கொண்டு வந்த அரசாங்கம் என்று சிறிதரனும் இது எங்களுடைய அரசாங்கம் என்று மாவை சேனாதிராவும் கூற முடியுமா? மட்டுமல்ல, பன்றியோடு கூடிய பசுவும் மலம் தின்னும் என்று சொல்வதற்கு இலக்கணமாக தமிழரசுக் கட்சியோடு கூட்டு வைத்த ரெலோவும் புளொட்டும் கூட தமிழரசுக் கட்சியைப்போலவே சிந்திக்கத் தொடங்கி விட்டன. தமக்கென்றொரு வழித்தடத்தை உருவாக்குவதைப் பற்றிச் சிந்திக்க மறந்து விட்டன. இவை இரண்டும் தமிழரசுக் கட்சியை நிராகரித்து ஆயுதப்போராட்டத்தின் வழி வந்தவை. இதற்காக தமிழரசுக்கட்சியின் புகழ் மிக்க தலைவர்களான வி.தருமலிங்கத்தையும் (புளொட் சித்தார்த்தனின் தந்தை) ஆலாலசுந்தரத்தையும் இவை பலிகொண்டன. அந்தளவுக்குத் தன்னை ஐ.தே.கவுடன் இணைத்துக் கரைத்துக் கொள்வது தமிழரசுக் கட்சியின் குணாம்சம். இது அதனுடைய மக்கள் விரோத – மேட்டிமை அரசியலின் விளைவாகும்.

இதற்காக எவ்வளவு இழப்புகள், நெருக்கடிகள், சோதனைகள், அவமானங்கள், பிரச்சினைகள் வந்தாலும் தமிழரசுக் கட்சியானது ஐ.தே.கவையே ஆதரிக்கும். அதற்கும் ஐ.தே.கவுக்கும் இடையில் வருகின்ற பிரச்சினைகள், சச்சரவுகள் எல்லாம் தற்காலிகமானவை. அல்லது வெளித்தோற்றத்துக்குரியவை மட்டுமே. உள் இரத்தோட்டம் எப்போதும் விசுவாசமானது.

இதனால்தான் தற்போதைய ஆட்சியாளருடன் எந்தப் பேரத்தையும் பேச முடியாமலிருக்கிறார் சம்மந்தன். தமிழ் மக்களுக்கு எவ்வளவோ தேவைகளிருந்தும் அவற்றையெல்லாம் பெற்றுக் கொடுக்காமலிருக்கிறார். பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது. அவற்றுக்குத் தீர்வைக் காணவும் முடியும். இருந்தும் அவற்றைப் பற்றியெல்லாம் பேசாமல், அழுத்தம் கொடுக்காமல் தவிர்க்கிறார் சம்மந்தன். இதற்குக் காரணம், அரசாங்கத்துக்கு – ஐ.தே.கவுக்கு, ரணிலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடாது என்பதேயாகும். தமிழ் மக்களின் நன்மைகளுக்காக அழுத்தம் கொடுத்து அரசாங்கத்தை இணங்க வைத்தால் அது சிங்கள மக்களிடத்தில் ஐ.தே.கவை தனிமைப்படுத்திவிடும் என்று கருதுகிறது தமிழரசுக்கட்சி. ஐ.தே.க சிங்கள மக்களிடம் தோற்றுவிட்டால் தமக்கான லாபங்களைப் பெற முடியாது என்பதே இதன் மறைவிளைவாகும். இதனால் சனங்களின் பிரச்சினைகளைப் பற்றிப்பேசி, அவற்றுக்குத் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக தமக்கான நலன்களைப் பெறுவதுடன் மட்டுப்படுத்திக் கொள்கின்றனர் தமிழரசுக்கட்சியினர் Vs ரெலோ, புளொட் ஆகியனவும். இது ஐ.தே.கவுக்கும் இலகுவாகி விடுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூலமாக தமிழ்மக்களின் ஆதரவைப் பெறுவதோடு தமிழ் மக்களுக்கு எதையும் நாம் கொடுக்கவில்லை எனச் சிங்கள மக்களிடம் சொல்லி விடவும் முடிகிறது. ஆக ஆளுக்காள் ஆதரவு என்ற அடிப்படையில் ஐ.தேவுக்கு தமிழரசுக் கட்சியும் தமிழரசுக் கட்சிக்கு ஐ.தே.கவும் என்ற அடிப்படையில் இந்த உறவுத்தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நலன் உடன்படிக்கை அல்லது இவ்வாறான நலப்பகிர்வு முறை முறியடிக்கப்படாத வரையில் தமிழ்ச்சமூகத்துக்கு விடிவில்லை. தீர்வுமில்லை.

ஆனால், சம்மந்தன் இன்றிருக்கின்ற இடம் மிகமிகப் பெரியது. வலுவானது. புலிகள் ஒரு காலம் கொண்டிருந்த அரசியல் பலத்தையும் பேரம் பேசும் அரசியல் வலுவையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது கொண்டிருக்கிறது. அரசாங்கத்துக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஆதரவை இந்தக் கணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விலக்கினால் அடுத்த நொடியே இந்த ஆட்சி ஆட்டம் காணும். ஒரு நிமிசத்திலே, ஒரு தீர்மானத்திலேயே அரசியற் சூழலை மாற்றிவிடக்கூடிய வலுவோடு சம்மந்தன் இருக்கிறார். கடந்த ஒக்ரோபரில் ரணில் அரசாங்கத்தைக் கலைத்து மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தை மைத்திரிபால சிறிசேன நிறுவ முற்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்தியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே. இதைத் தடுத்தது நீதிமன்றமே எனச் சிலர் கருதக்கூடும். அல்லது விவாதிக்க முற்படலாம். ஆனால், கூட்டமைப்பு அன்று மகிந்த ராஜபக்ஸவுக்கோ மைத்திரிபால சிறிசேனவுக்கோ ஆதரவளித்திருந்தால் நீதிமன்றத்தினால் எதையுமே செய்திருக்க முடியாது. ஆக மொத்தத்தில் ரணிலை இருத்தி எழுப்பக்கூடிய வலுவோடு சம்மந்தனும் கூட்டமைப்பும் உள்ளமை மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்த வலுவை சனங்களுக்காக வல்லமையாக முன்னெடுக்கவும் இந்தப் பலத்தை ஆற்றலுடன் பயன்படுத்தவும் விரும்பாதிருப்பது ஏன்? இதற்குப் பின்னாலிருக்கும் காரணங்கள் என்ன? அவற்றின் அடிப்படைகள் எவை? இப்படி அரசாங்கத்தை – ஆட்சியைப் பாதுகாப்பதற்குரிய வலுவும் ஆற்றலும் அக்கறையும் உள்ள கூட்டமைப்பினால் தமிழ் மக்களுடைய சிறிய பிரச்சினைகளைக் கூடத் தீர்க்க முடியாதிருப்பது குறித்தே நாம் கேள்வியை எழுப்ப வேண்டியள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது பெற்றிருக்கின்ற வலுவையும் சந்தர்ப்பத்தையும் இனியொரு சூழலில் கூட்டமைப்போ, வேறு தமிழ் அரசியற் சக்தியோ இப்போதைக்குப் பெறும் எனச் சொல்ல முடியாது. ஏனெனில் அடுத்த தடவை மத்தியில் எத்தகைய ஆட்சி அமையும் என்று உறுதி கூறவியலாது. தமிழ்த்தரப்பின் அல்லது தமிழ் பேசும் ஏனைய தரப்புகளான முஸ்லிம், மலையக மக்களின் ஆதரவை முழு அளவில் எதிர்பார்க்காத ஆட்சி ஒன்று கூட அமையலாம். ஆகவே மத்தியில் அரசியல் வலுக்குறைந்த நிலை காணப்படும்போதே சிறுபான்மையினரின் அரசியலை வலுவாக்கம் செய்ய முடியும். இதைக் கூட்டமைப்பு புரிந்திருந்தும் அதற்குரிய அரசியல் முன்னெடுப்புகளைச் செய்யவில்லை என்பதே கூட்டமைப்பின் மீது அதாவது தமிழரசுக்கட்சி மற்றும் இன்றைய ரெலோ, புளொட் ஆகியவற்றின் மீது வரலாறு முன்வைக்கப்போகின்ற குற்றச்சாட்டாகும். இதிலிருந்து, இந்த வரலாற்றுத் தவறிலிருந்து இவற்றினால் தப்பவே முடியாது. ஏனெனில் கூட்டமைப்பு இன்று பெற்றிருக்கின்ற அரசியல் ஸ்தானத்தை வழங்கியவர்கள் போராட்டத்திலும் போரிலும் உச்சப் பங்களிப்புகளைச் செய்த மக்களாவர். கண்ணை இழந்தவர்கள், கையையும் காலையும் இழந்தவர்கள். தங்கள் பிள்ளைகளைத் தியாகம் செய்தவர்கள். கணவரை இழந்தவர்கள். தந்தையையும் தாயையும் பலி கொடுத்தவர்கள். வாழ்நாளெல்லாம் பாடுபட்டுழைத்த இழப்பை இழந்தவர்கள். தங்களின் இளமைக்காலத்தை அர்ப்பணித்துப்போராடியவர்கள். பிள்ளைகளையும் துணைவரையும் அரசியல் கைதிகளாகக் கொண்டிருப்பவர்கள். ஊர்களை இழந்தவர்கள். இப்படியான மக்களின் ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த மக்களைத் திரும்பிப் பார்க்கவில்லை என்பதும், அந்த மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை கொள்ளவில்லை என்பதும் மன்னிக்கக் கூடியதல்ல. எனவேதான் மீளவும் வலியுறுத்திச் சொல்கிறோம், தமிழரசுக் கட்சியினதும் கூட்டமைப்பினதும் அரசியல் தவறுகளை வரலாறு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. மன்னிக்காது என.

வரலாறாவது, கத்தரிக்காயாவது. அதைப்பற்றி நமக்கென்ன கவலை? இருக்கும்போது கிடைப்பதைச் சுருட்டு. ஏமாளிகளாகச் சனங்களிருக்கும் வரையிலும் ஏமாற்றிக் கொள்வதற்கு தமிழ்த்தேசியம், தந்தை செல்வா, தலைவர் பிரகாரன், சிங்களப் பேரினவாதம், திட்டமிட்ட சிங்களப் குடியேற்றம், சமஸ்டி, சுயாட்சி, தமிழீழம் என்ற சொற்களிருக்கும் வரையும் நமக்கென்ன குறை என்பதாகவே இன்று தமிழரசுக் கட்சி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. சம்மந்தனுடைய பாவனைகள் அத்தனையும் இதையே சுட்டுகின்றன. இதை மீற முடியாமல் கட்டுப்பட்டுள்ளன ரெலோவும் புளொட்டும்.

ஆக மொத்தத்தில் சரணாகதி அரசியலிலும் மக்கள் விரோத அரசியலிலுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பயணம் நிகழ்கிறது. அதனுடைய நாளைய வழித்தடத்தில் தமிழ்ச் சமூகத்தின் கண்ணீரையும் குருதியையும் ஆறுதலற்றுத் தவித்த ஆன்மாவையுமே காண முடியும்.