தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் சந்திப்புக்குக் காரணம்

அரசாங்கத்துடன் நட்பைப் பாராட்ட முனைந்தாலே தவறாகப் பார்க்கப்படுகின்ற மனோநிலை, தமிழ்த் தேசிய ஆதரவாளர்களின் பார்வையில் இருக்கிறது. இப்போதும் முன்னைய நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமைக்காக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விமர்சிக்கப்பட்ட வண்ணமிருக்கின்ற போதுதான் இந்த ஜனாதிபதியுடனான சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

ஜனாதிபதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சந்திக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வந்த வேளையிலேயே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு ஏற்கெனவே இருந்த இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கைத்தொழில் விடயதானங்களுக்கு மேலதிகமாக களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகு மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஐாங்க அமைச்சு ஐனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளிவந்தது.

இது, கடந்த காலத்தில் லொஹான் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த போது, மதுபோதையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று, தமிழ் அரசியல் கைதி ஒருவரை அழைத்து, தனது கைத்துப்பாக்கியை கைதியின் தலையில் வைத்து, தனது சப்பாத்தை நாக்கால் நக்குமாறு பணித்ததுடன் இழிவான வார்த்தைகளால் பேசியதான குற்றச்சாட்டு இருக்கும்போதும் அது தொடர்பான விசாரணை தொடரும் போதும், மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட்டமையானது, அரசாங்கத்தின் சிறுபான்மை இன மக்கள் தொடர்பான சிந்தனைத் தளத்தைப் பிரதிபலிப்பதாகவே பார்க்கப்பட வேண்டும்.

மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீ லங்காவின் நீதி அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் “உள்ளகப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறியமை, இந்தப் பதவியேற்பின்மூலம் ஏமாற்றுவேலை என்பதை நிரூபித்திருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. அது போன்றதோர் ஏமாற்றாக ஜனாதிபதியின் சந்திப்பு அமைந்துவிடக்கூடாது.

முழு உலகமும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. அதற்கு கொவிட்-19 பெருந்தொற்று காரணமாகச் சொல்லப்பட்டுவந்த நிலையில், இப்போது உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தரப்புக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன.

அதில் தமிழர் தரப்புக்கு அவர்களுடைய சுயநிர்ணயம் முக்கியப்படுகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோ ஒரு கவனக்கலைப்பானுக்கு அடிப்படையாகி, தமிழர்கள் தங்களுடைய நலன்களை மறந்துவிடுவது வழக்கம். என்றாலும் இனி வரும் காலங்களிலாவது யாருக்கு என்னவானாலும் காரியமே முக்கியம் என்றிருக்கின்ற மனோநிலைக்கு வந்துவிட வேண்டும்.

எரிபொருள், சீமெந்து, எரிவாயு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் பற்றாக்குறையால் பாதிப்படைந்து இருக்கும் மக்களுக்கு, பால், பாலாடை, வெண்ணெய், பேரீத்தம் பழம், அன்னாசிப்பழம், மாம்பழம் அப்பிள், திராட்சை உள்ளிட்ட பழவகைகள், தானியங்கள், சொக்கலேட், பழச்சாறு, நீர் போத்தல், வாசனைத் திரவங்கள், சவரத்துக்கு முன்னரும் பின்னரும் பயன்படுத்தும் பொருட்கள், சோப்புகள், மெழுகுவர்த்திகள், டயர்கள், அழிப்பான்கள், பயணப் பெட்டிகள், தோல் பொருட்கள், கார்பட்டுகள், ஆடைகளுக்கான டைகள், திரைச்சீலைகள், கட்டில் விரிப்புகள், விளையாட்டு காலணிகள், தொப்பி வகைகள், தலை பட்டிகள், குடைகள், போலி சிகைகள் என 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ளார். இது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியிருக்கிறது.

பேரினவாத கொடுங்கோலரின் கோர முகம் கொண்ட கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிடியில், நிகழ்காலத்தில் நாமும் எதிர்காலத்தில் எமது சந்ததியும் சிக்காமல் பாதுகாத்திட ஒரு கையெழுத்திடுவோம் என்ற கோசம் அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால், நடைபெற்றது ஒன்றுமில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் போராட்டம் ஜனாதிபதி அங்கில்லாத வேளையில் நடத்தப்பட்டது என்று ஒரு விமர்சனம் வெளிவந்திருந்தது. இப்போது அந்த எதிர்ப்பு நடவடிக்கையின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பு நடைபெறுவதாக தகவல் கசியவிடப்படுகிறது.

ஆனாலும், கடந்த தடவை ஜனாதிபதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துவிட்டு, திடீரென அந்தத் திகதியை இரத்துச் செய்திருந்தார். அதன் பின்னர் பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் நாட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார். நியூயோர்க்கில் வைத்து புலம்பெயர் தமிழர்களுடன் பேசத் தயார் என்று பகிரங்க அழைப்பு விடுத்தார். இராஜதந்திரிகளிடம், வெளிநாட்டு அமைச்சர்களிடம் புலம்பயர் தமிழர்களை சந்திக்க விரும்புவதாகவும் ஏற்பாட்டைச் செய்யுமாறும் கோரியிருக்கிறார். அது கூட பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் திடீரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது விசேடமாகப் பார்க்கப்பட வேண்டியதே.

அந்த வகையில்தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் தீர்வு என்பது மிகமிக முக்கியமானதாக இருக்கிறது.

நாட்டுக்குள்ளும் வெளி நாடுகளிலும் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான அழுத்தங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக ஜெனிவா அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கையின் விடயத்தில் பல இறுக்கமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

இந்தப்பின்னணியில்தான் ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பினைப் பார்க்கவேண்டும். உண்மையில் தமிழர்களுக்குப் பிரச்சினையே இல்லை என்று சொல்கின்ற ஒரு ஜனாதிபதி, ஏன் தமிழர் தரப்பை இந்த வேளையில் அழைக்கிறார் என்ற கேள்வியை நாம் முக்கியமாக பார்த்தாக வேண்டும்.

ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நேரத்தித்தை ஒதுக்கித்தருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ தொடர்ச்சியாக மௌனமாகவே இருந்து வந்திருந்தது. ஆனால் இப்போது வந்த அறிவிப்பு உண்மையானதுதானா, இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்படுமா என்றும் தமிழ் மக்கள் மத்தியில் சிந்தனை இருக்கத்தான் செய்கிறது.

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது முதல் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் காண்பித்து வருகின்ற தமிழர் தரப்புக்கு இதுவரையிலும் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. பண்டா – செல்வா, டட்லி – செல்வா எனத் தொடங்கி இறுதியில் பிரபா – ரணில் ஒப்பந்தம் நடைபெற்று முழுகிப்போனது. அதன் பின்னர் மஹிந்த தரப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுகளை நடத்தியிருந்தது. ஆனால் பயனனேதும் இல்லை. முடிவின்றிக் கைவிடப்பட்டது. அரசாங்கத்தின் நிபுணர்கள் சரியான முறையில் ஆலோசனைகளை வழங்கியிருந்தாலோ, அறிவுபூர்வமாக செயற்பட்டிருந்தாலோ நாடு இப்போது எல்லோரும் விமர்சிக்கின்ற துரதிர்ஷ்டவசமான நிலைமைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.

நாட்டில் டொலர் நெருக்கடி கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றுவிட்டது. நாட்டின் வெளிநாட்டு சொத்து மதிப்பு அதிகளவு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 500 மில்லியன் டொலர்களை செலுத்துவதை தவிர்த்துவிட்டு, வட்டியை மாத்திரம் வழங்கிவிட்டு, கடன் தொகையை மீளச் செலுத்துவதற்கு சர்வதேச நிதியம் அல்லது வேறு ஏதும் ஒரு நிறுவனத்தின் ஆலோசனைகளை பெறுவதற்கு அரசாங்கம் தவறுவதற்கு அவர்கள் கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் என்ற அச்சமே காரணமாகும். இந்தக் கட்டுப்பாடுகள் தமிழர் தரப்பினை முன்னிறுத்தியதாக இருக்கும் என்பதே வெளிப்படை.

தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வருகின்ற அழுத்தங்கள் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகளைக் கவனத்திலெடுக்காது இருக்கலாம் என்று செயற்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி, இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்திக்க அழைப்பு விடுத்திருக்கின்றமையானது அதே அழுத்தம் காரணமாகவே எனக் கொள்ளலாம்.

ஏதோ நடந்து, அவர் சந்திக்க அழைத்திருக்கிறார் என்பது மாத்திரமே உண்மை. இந்த வகையில்தான் நடைபெறப்போகின்ற சந்திப்பு பெயரளவிலானதாக இருக்கப்போகிறதா, அல்லது பெறுமதியானதாக தமிழர்களின் கடந்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கொண்டுவருவதாகவும் இருக்கப்போகின்றதா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனை விட்டால் ஒருவழியுமில்லை என்ற என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகக் கொள்ளக்கூடாது.