தொண்டமானின் இழப்பு

இந்த ‘காங்கிரஸ்” என்ற வார்த்ததை அமெரிக்கா, இந்தியா, இலங்கை உட்பட உலகம் பூராகவும் மக்களுக்கு பரீட்சயமான தேர்தல் கட்சிகளின் சொல்லாடல். இதனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற வரிந்து கட்டிய தொழிற்சங்கத்தின் வாசிசுதான் ஆறுமுகம் தொண்டமான்.

தொண்டைமான்களின் அரசியல் சதுரங்க சாணக்கியம் இந்தியாவரை செல்வாக்கு செலுத்தியிருந்ததும் உண்மைதான். இந்தியாவில் இருந்து மலையகத்தின் அபிவிருத்திக்காக அழைத்து வரப்பட்டு குடியுரிமை அற்று கடைநிலை உழைப்பாளிகளாக இன்றுவரை அறியப்பட்டாலும் இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தா தொழிற்சக்கத்தின் பிரபல்ய தலைவர்களாக விளங்கியவர்கள்/விளங்குபவர்கள் தொண்டமான்கள்.

சௌமியமூர்த்தி தொண்டமானின்யின் மரணத்தை தொடர்ந்து தலமைப் பொறுப்பையும் பாராளுமன்றப் பொறுப்பையும் அனேக காலங்களில் அமைச்சர் பொறுப்பையும் ஏற்று செயற்பட்டவர் ஆறமுகம் தொண்டமான். மலையக மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகளவில் உயராவிட்டாலும் தொழிலாளர் காங்கிரசின் இருப்பு பல்வேறு புதிய தொழிற்சங்கங்கள் கட்சிகள் மலையகத்தில் உருவானாலும் தக்க வைக்கப்பட்டிருந்ததில் ஆறுமுகம் தொண்டமானின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது.

மலையக மக்களின் நலன்ளைப் பற்றி பேசவேண்டின் தொண்டமான்களைத் தவிர்த்து பேச முடியாது என்ற நிலையில் அடுத்த தொண்டமான் செந்தில் அவதாரம் எடுப்பர் என்று நம்பப்படும் ஒரு வகை குடும்ப அரசியல்தான் இங்கும் தொடர்கின்றது. ஆனாலும் இவர்களை மாற்றீடு செய்யும் தலமைகள் பலமாக மலையகத்தில் அதிலும் சிறப்பாக இடதுசாரி அமைப்புக்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை சண்முகதாசனுக்கு பிறகு என்பதனையும் இவிவிடத்தில் சீர் தூக்கிப் பார்த்துத்தான் ஆகவேண்டும்.

சிவனு லச்சுமணன், வெள்ளையன், நடேசையர், ஏன் ஈழவிடுதலைப் போராட் காலத்தில் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ், ஈரோஸ் என்று பலவும் இந்த மக்களின் நலன்களை… பிரதிநிதித்துவத்தை… ஏற்படுத்த முற்பட்டாலும் தொண்டமான்கள் அசைக்க முடியாத மக்கள் சக்தியாக இருந்தே வருகின்றனர் இன்று வரை. இதில் ஆறுமுகம் தொண்டமானின் பங்களிப்பும் குறிபிடத்தக்கது அது இனியும் தொண்டமான் என்று தொடரும் என்றுதான் நம்பப்படுகின்றது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தனிநாட்டுக் கோரிக்கை என்ற வட்டுக் கோட்டை செயற்பாடுகளில் ஜிஜி பொன்னம்பலம் ஐ தொடர்ந்து தந்தை செல்வா திருச்செல்வம் தொண்டமான் என்ற மூவர் இணைந்ததாக காட்டப்பட்டாலும் தந்திரோபாய செயற்பாட்டில் உதய சூரியன் காலையில் உதிக்க மலையகத்து சேவல் (மலை)முகட்டில் நின்று கூவாமல் உதய சூரியனில் இருந்து கழண்ட அரசியல் செயற்பாட்டையும் நாம் சீர்தூக்கிப் பார்க்கத்தான் வேண்டும்.

அதிகம் வலதுசாரி ஐதே கட்சியுடன் இணைந்து பயணித்து முடிந்தளவில் மலையக மக்களுக்கான சலுகைகளை இந்தியாவை வைத்து பேரம் பேசும் செயற்பாட்டில் மலையக மக்களை இன்று வரை நாள் ஒன்றிற்கு 1000 ரூபாய் என்ற சம்பளத்தையேனும் பெறமுடியாத சலுகைப் பேரங்கள் வரைதான் இந்த தொண்டமான்களால் இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் செய்ய முடிந்திருக்கின்றது.

மலையகத்தை செழுமைப் பூமியாக்கி இலங்கையின் அந்நிய செலவாணியின் பெரும் பங்கை ஈட்டித்தந்த மலையக மக்களை பண்டா சாஸ்திரி ஒப்பந்தப்படி மலையகத்திலிருந்து இந்தியாவிற்கு நாடுகடத்திய பெரும் அவலம் ‘நன்மை” என்ற கோதாவில் நடைபெற்றதுதம் இந்த தொண்டமான் இந்த உறவில்தான். நாடற்றவர் என்ற சொற் பதத்தை இன்றுவரை மலையக மக்களின் வாழ்வில் இருந்து நீக்க முடியவில்லை என்பதே தொண்டமான் அரசியலின் வெற்றிகள்.

மரணத்திற்கான அஞ்சலி மரியாதை எல்லாம் ஆறுமுகம் தொண்டமானுக்கும் உண்டு. பசுக்களை ஈரலிப்பான பசுமையான மலையகத்தில் அறிமுகம் செய்து சுதேசியத்தை தொலைதார்களா அல்லது அந்த மக்களின் வாழ்வில் பால் ஊற்றினார்களா…? என்பதை ஆறுமுகம் தொண்டமானுக்கு பால் ஊற்றும் இந்த சந்தர்பத்தில் நாம் நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை.

சென்று வாருங்கள் தொண்டமானே. உங்கள் கொடியைத் தாங்க இன்னொரு தொண்டமான் தயார் நிலையில் உள்ளார் அவர் தொண்டமானின் புகழ் பாடியபடியே தனது அரசியலை மலையக மக்களின் சந்தாப் பணத்தில் அரசியலைத் தொடருவார்.