தோற்ற மயக்கம் – தூரம் அதிகமில்லை

இப்படிச் சந்தேகிப்பதற்கான காரணங்கள் உண்டு. இதோ பொங்கலுக்குத் தீர்வு. தீபாவளிக்கு நற்சேதி என்ற மாதிரி விடப்பட்ட கதைகள் உலர்ந்து சருகாக நம்முடைய கால்களில் மிதிபடுகின்றன. அதாவது ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகவும் மக்களுக்கு உறுதி மொழியாகவும் வெளிப்படுத்தப்பட்ட சங்கதிகள் அடுத்து வந்த ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே சிரிப்புக்குள்ளான கதை அனைவரும் அறிந்தது. 

சரி, அதை ஒரு பக்கமாக வைத்துவிட்டு இப்பொழுது என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்பதை நம்பிக்கையோடு நோக்குவோம்.

இப்பொழுது உண்மையில் என்ன, நடந்து கொண்டிருக்கிறது? 

1.      சுமந்திரன் தலைமையிலான அணியினர் அமெரிக்காவுக்குச் சென்று, அங்குள்ள முக்கிய தரப்புகளுடன் பேச்சுகளை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக சுமந்திரனும் பல இடங்களிலும் குறிப்பிட்டு வருகிறார். அவருக்கு ஆதரவான ஊடகங்களும் பெருமிதத்தோடு பல தகவல்களைக் கசிய விட்டபடி இருக்கின்றன. அதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சி அமெரிக்காவை நம்புகிறது. அதன் வழிகாட்டலில் இயங்க முயற்சிக்கிறது. 

2.       ரெலோவின் ஏற்பாட்டில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலுமாக தமிழ் பேசும் கட்சிகளில் பலவும் கூடி 13 தொடர்பாக (13ஐ வலுப்படுத்தல் மற்றும் அதைக் கடந்து செல்லுதல்) ஆராய்ந்து இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதத் தீர்மானித்துள்ளன. இதில் வடக்குக் கிழக்கில் இயங்கும் தமிழ்த்தேசியக் கட்சிகள் சிலவற்றோடு மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் முஸ்லிம் கட்சிகளும் பங்குபற்றுகின்றன. தொடக்கத்தில் தமிழரசுக் கட்சி இதில் பின்னடித்தாலும் பின்னர் தவிர்க்க முடியாமல் இணைந்து கொண்டது. இந்த முயற்சி இந்தியாவை நம்பிச் செய்யப்படுகிறது. 

3.      யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், தமிழ் சிவில் சமூக அமையம் போன்றவை தமிழ்த்தேசிய அரசியலின் நிலவரத்தைப் பற்றியும் அதன் எதிர்காலத் தளமாற்ற –குணமாற்றத் தேவைகளைப் பற்றியும் கருத்தமர்வுகளை நடத்தியுள்ளன. இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தமிழ்த்தேசியப்பரப்பில் படு தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இது ஏறக்குறைய தற்போது நடக்கின்ற இந்த முயற்சிகளைப் பற்றிய விமர்சனம் அல்லது கேள்வி எழுப்புதல் என்று கூறலாம். 

4.      இலங்கைக்கான சீனத்தூதர் வடக்கு நோக்கிச் சென்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். உச்சமாக இந்தியப் படகுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத்தையும் வழங்கியுள்ளார். இதெல்லாவற்றுக்கும் அப்பால் முதற்தடவையாக சீனா வடக்கு நோக்கி தன்னை விஸ்தரிக்க முயற்சித்துள்ளது. வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகளை மையப்படுத்தியது இந்த விஜயம் என்று கணிக்கலாம். ஆனால், இதனை அமெரிக்க, இந்திய ஆதரவுத் தமிழ்த்தரப்புகள் புறக்கணித்துள்ளன –கண்டித்துள்ளன.   

5.      தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சம்மந்தனை, டெல்லி அழைத்துள்ளது. ஆனால், அந்த அழைப்பை சம்மந்தன் தவிர்த்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதைப்போல சீனத்தூதரும் அழைப்பொன்றை சம்மந்தனுக்கு விடுத்துள்ளார். அதையும் சம்மந்தன் கிடப்பில் போட்டிருக்கிறார் என்கின்றன உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள். (அப்படியென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேறு ரகசிய நடவடிக்கைகளில்  – உபாயங்களில் – ஈடுபடுகிறதா? என்ற கேள்வி எழுகிறது). 

6.      தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலே “தமிழ்த்தேசியம் தடுமாறுகிறதா?” என்ற பொருளில் ஒரு கருத்தமர்வை நடத்தியிருக்கிறார். அதில் சுமந்திரன் உட்பட தமிழ்ப்பத்தியாளர்கள் சிலரும் கருத்துரைத்துள்ளனர். குறிப்பாக சுமந்திரனையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் விமர்சிக்கும் வகையில் ஏனைய பேச்சாளர்கள் கருத்துரைத்துள்ளனர். ஒரு பத்திரிகையாளரைத் தவிர. இதற்குச் சுமந்திரன் பதிலளித்துப் பேசினார். அது பதில் அல்ல. தப்பித்தலாகும். 

இப்படி பல விதமாக நடந்து கொண்டிருக்கும் முனைப்புகள் உண்மையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பயணத்தில் ஏதேனும் மாற்றங்களை உண்டாக்குமா? 

இதுவே இப்பொழுதுள்ள கேள்விகள். 

முதலாவது, சுமந்திரன் அணியின் அமெரிக்கப் பயணத்தின் கதை. அதைப்பற்றி அவரே சொல்லியிருக்கிறார். ஜனவரியில் –அதாவது இன்னும் ஒரு மாதம் பொறுத்துப் பாருங்கள் என்னவெல்லாம் நடக்கப் போகின்றன என்று. இதற்கு அவர் இன்னொரு் கதையையும் சொல்லியிருக்கிறார். 2011இல் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் தாம் நடத்திய சந்திப்புகள் – பேச்சுகளின் பெறுபேறுதான் இலங்கையின் ஜனநாயக மீறல்கள், பொறுப்புக்கூறல்கள் தொடர்பாக அமெரிக்கக் கரிசனையாக உருப்பெற்றன என்று. அதைப்போல 2021இன் சத்திப்புகளும் பல விடயங்களைச் சாத்தியப்படுத்தும் என்றிருக்கிறார். 

இதெல்லாம் எவ்வளவுக்குச் சாத்தியம் என்பதை நாம் பொறுத்திருந்தும் பார்க்கலாம். நமக்குள்ள அனுபவ ஞானத்தைக் கொண்டும் நோக்கலாம். நீண்டகாலம் பொறுத்திருக்கத் தேவையில்லை. இதோ, 2022 ஜனவரி பிறந்துள்ளது. 

ஆனால், அதற்கிடையில் தேவையற்ற ஊகங்களைச் செய்து குழம்பிக் கொள்ளாதீர்கள் என்றும் சுமந்திரன் அறிவுறுத்தியிருக்கிறார். அப்படியென்றால் அவர் தம் வாக்கை அருள் வாக்காக நம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான். பொறுத்திருந்து பார்க்க (ஏமாற) வேண்டியதுதான். (“முன்பு சம்மந்தர் பொங்கலுக்கும் தீபாவளிக்குமாக வடை சுட்டார். இப்பொழுது சுமந்திரன் அதைச் சுடப்போகிறார்” என்று சொல்கிறார் நண்பர் ஒருவர்) 

இரண்டாவது, ரெலோவின் ஏற்பாட்டில் நடக்கும் தமிழ் பேசும் தரப்புகளின் சந்திப்புகளும் உரையாடல்களும் தீர்மானங்களுமாகும். இது இந்தியாவின் பின்னணியில் நடக்கிறது என்றே பரவலான நம்பிக்கை. இதை ரெலோவின் முக்கியஸ்தர்களே உறுதிப்படுத்தியும் உள்ளனர். இதனால்தான் இதில் தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளப் பின்னடிக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தமிழரசுக் கட்சியைப் புறக்கணித்து விட்டு ரெலோவை இந்தியா அரவணைத்திருப்பது அதற்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது. இதனால்தான் டெல்லியின் அழைப்பையே சம்மந்தன் நிராகரித்தது. இரண்டாவது, தமிழரசுக்கட்சிக்கு 13 தொடர்பாக திருப்தியில்லை என்று சுமந்திரன் உரத்த குரலில் சொல்வது. அவர்கள் இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் (கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்) தீர்வு யோசனையைப் போல உச்ச அதிகாரத்தை நோக்கிச் சிந்திக்கின்றனர். 

ஆனாலும் தவிர்க்க முடியாமல் தமிழரசுக் கட்சியும் இந்தச் சந்திப்புகளிலும் உரையாடல்களிலும் ஈடுபட்டிருக்கிறது. இந்தியப் பிரதமருக்கு இலங்கை நிலவரம் பற்றியும் சிறுபான்மை இனங்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள், தீர்வுக்கான அடிப்படைகள் பற்றியும் கடிதம் எழுதவும் அது ஒப்புக் கொண்டிருக்கிறது. 

அதற்கான பொறுப்பைச் சுமந்திரன் அணி ஏற்றிருக்கிறது. 

அப்படியென்றால் இதனால் என்ன விளைவுகள் உண்டாகும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். 

இதற்குள் 13க்கு அப்பால் சுயநிர்ணய உரிமை பற்றிய பேச்சு ஏதாவது இருக்குமாக இருந்தால் தாம் அதைப்பற்றி யோசிக்க வேணும் என்கிறார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் திகாம்பரம். 

வடக்குக் கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் அது பற்றி சிந்திக்க வேண்டும் என்று சொல்லி றிஷாத் பதியுதீன் இடைவிலகி நிற்கிறார். றிஷாத்தைப் பார்த்து விட்டு தடுமாறுகிறது முஸ்லிம் காங்கிரஸ். 

இதையெல்லாம் கடந்து இந்தியப் பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பப்பட்டால், இந்தியா இந்தக் கடிதத்தின் அடிப்படையில் இலங்கையுடன் ஒரு சம்பிரதாய உரையாடலை, சிறுபான்மை இனங்கள் தொடர்பாகச் செய்யக் கூடும். அதற்கான வாய்ப்பை – துருப்பை – இந்தக் கடிதம் இந்தியாவுக்கு வழங்குகிறது. 

ஆனால், இதன் மறுவளமாக இந்தியாவை இலங்கை நிலவரத்துக்குள் தமிழ் பேசும் தரப்புகள் இழுத்து வருகின்றன என்ற விசயத்தைச் சிங்களக் கடும்போக்காளர்களும் இனவாதிகளும் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கான வாய்ப்பையும் இது அளிக்கிறது. இதனால் மேலும் இனங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்புண்டு. இது அரசாங்கத்துக்கும் சாதகமான –தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கொடுக்கிறது. அதை வைத்து மேலும் இனமுரண்பாட்டு அரசியலை முன்னெடுப்பதற்கு இவர்களுக்கும் வாய்ப்புள்ளது. (இது பழைய கதைதானே. பழிசுமத்தல் அரசியல் இதுதானே என்கிறார் அதே நண்பர்) 

இன்னொன்று இந்தக் கடிதத்தின் பிரகாரம், இந்தியாவின் மூலமாக மாகாணசபைத் தேர்தலை நோக்கி அரசை நகர்த்துவது. 

ஆனால், தற்போது தமிழ் பேசும் மக்கள் எவ்வாறான தீர்வை எதிர்பார்க்கிறார்கள்? எத்தகைய தீர்வு சாத்தியமானது? என்ற விவாதங்கள் மேலெழுப்பப்பட்டிருக்கின்றன. 

முன்பு கஜேந்திரகுமார் தரப்புத்தான் ஒரு நாடு இரு தேசம் என்ற கருத்தை –நிலைப்பாட்டை முன்வைத்தது. 

இப்பொழுது 13 போதாது. அதற்கு மேல் என்கிறது தமிழரசுக் கட்சி. சுமந்திரன் இதை உறுதியாகத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதற்கான இந்தச் சந்திப்பில் தமக்கு உடன்பாடு குறைவு என்பதற்குச் சொல்லப்பட்ட காரணங்களில் அதுவும் ஒன்று. 

ஆகவே இந்தப் பழமும் புளிக்குமா? என்ற கணக்கில்தான் நிலை உள்ளது. 

இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 13 அப்பால் நகர்வதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி உடன்பாடு தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை இந்த அணிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடும். ஆனால் இதொகா அரசாங்கத்துடன் இணைந்து நிற்கிறது. அப்படியென்றால் இதெல்லாம் எத்தகைய உடன்பாட்டைக் காணும்? எவ்வளவு தூரம் இந்தப் பயணம் நடக்கும் என்று தெரியவில்லை. 

மூன்றாவது, தமிழ்த்தேசியத் தரப்பினர் என்று தம்மைக் கருதிக் கொள்ளும் சிலரால் நடத்தப்படும் கருத்தரங்குகள் பற்றியது. இதில் வழமையைப்போல ஏராளம் பிளவுகள், பிரிவுகள் உண்டு. அதற்குள் நடக்கின்ற சங்கதிகளே பிரதான பேசுபொருளாக அமைகின்றன. குறிப்பாக தமிழ்த்தேசிய அடையாளம் என்ற தளத்தைப்பற்றிப் பேசுகின்ற, அதை ஒரு அரசியல் முதலீடாகவும் உபாயமாகவும் கொள்கின்ற தரப்புகளைப் பற்றிய விமர்சனங்களாகவும் உசாவல்களாகவும். 

குறிப்பாக மக்களின் வாழ்க்கைக்கு வெளியே வெற்றுப் பிரச்சார அரசியலை முன்னெடுப்பதை செல்வின் போன்றோர் கடுமையான தொனியில் விமர்சித்தினர். தேசியம் பற்றிய புரிதல் இல்லாத,மக்களுக்கு விசுவாமில்லாத, மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத, தமிழ் மக்களின் பொருளாதார விருத்தியைப் பற்றிச் சிந்திக்காத, தமிழ் மக்களின் இருப்பைப் பற்றி யோசிக்காத தலைமைகளால் என்ன பயன்? எனச் செல்வின் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழர்களுக்கு ஒரு பொருத்தமான வெளியுறவுக் கொள்கை வேண்டும் என்ற வகையில் நிலாந்தன் உள்ளிட்டோர் வாதிடுகின்றனர். இதில் மேற்கின் அனுசரணை முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். அதிலும் அமெரிக்க ஆதரவே பல நாடுகளின், பல இனங்களின் உயிர்த்திருத்தலுக்குச் சாத்தியங்களை அளித்தன. புலம்பெயர்ந்திருக்கும் தமிழ்ச்சமூகமும் மேற்கு மயப்பட்டிருப்பதால் மேற்குலகத்துடன் இணைந்து வேலை செய்யும் ஒரு வெளியுறவுப் பொறிமுறை அவசியம் என்ற வகையில் அவர்கள் தமது நியாயங்களை முன்வைக்கின்றனர். 

மாறியுள்ள பூகோளப் பொருளாதார வியூகங்களும் போட்டிகளும் எவ்வாறான நிலைமையை உருவாக்கியுள்ளன என்று பேராசிரியர் கணேசலிங்கம் தரப்பினர் விளக்கியுள்ளனர். 

இவை எல்லாமே வடக்கிற்குள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இதைப்பற்றி தெற்கில் உள்ளவர்களுக்கோ நாட்டின் பிற பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ எதுவும் தெரிந்திருப்பதுமில்லை. அவர்களை எவரும் பொருட்படுத்துவதுமில்லை. 

ஆகவே இதுவும் ஒரு சீசன் விளையாட்டுப் போலத்தான் உள்ளது. 

நான்காவது, இலங்கையின் பொருளாதாரா நெருக்கடி, வடக்கில் தொடருகின்ற இந்திய அதிருப்தி நிலை போன்றவற்றுக்கிடையில் சீனத்தூதரின் பயணம் நடந்துள்ளது. 

வடக்கிற்கு வந்த தூதர், முதலில் கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் அளித்திருக்கிறார். ஏனென்றால் இந்தியாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருப்பது இலங்கை மீனவர்களே. அதனால் அவர்களை அரவணைக்க முற்படுகிறது சீனா. 

இந்தியாவினால் மீனவர்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற மனப்பதிவும் கசப்பும் பலருக்கும் உண்டு. குறிப்பாக இலங்கை இந்திய உடன்படிக்கையில் எட்டப்பட்ட 13ஐக் கூட நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவின் கரிசனைகள் போதாது. கொழும்புடன் சேர்ந்து காலம் கடத்தும் நடவடிக்கையையே அது செய்கிறது என. 

இந்தச் சூழலில்தான் சீனா இடையில் தன்னுடைய கப்பலை வெற்றிகரமாக ஓட்டிவிடலாம் என்று முயற்சிக்கிறது. ஆனால், சீனத்தூதரின் வருகையை தமிழ் தரப்பினர் பலரும் வரவேற்கவில்லை. மட்டுமல்ல அதைப்பற்றிய எதிர்மறைக் கருத்துகளையே வெளிப்படுத்தினர். 

இவை எல்லாவற்றையும் உன்னிப்பாகப் பார்த்தால் மிகக் குழப்பமான ஒரு நிலையே தென்படுகிறது. தெளிவான ஒளிக் கீற்றுகள் ஏதுமில்லை. சும்மா வெறுமனே ஊடகத்தீனிக்குச் சரக்கே தவிர, நடைமுறையில் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அரிதினும் அரிதாகவே உள்ளது. 

இருந்தாலும் இந்தியப்பிரதமருக்கு எழுதப்படும் (காதல்) கடிதம் பல தடவை கிழித்துக் கிழித்து எழுதப்படுகிறது. அதன் பயன் என்னவென்றும் பார்க்கலாம். 

அதைப்போல தை (ஜனவரி) பிறந்துள்ளது. அமெரிக்க ஆதரவு என்ற சுமந்திரனின் வாக்குப்படி மெய் பிறக்குமா பொய் பிறக்குமா என்றும் பார்க்கலாம். 

தூரம் அதிகமில்லை.