தோழர் ஜெமினியுடனான நினைவுகள்…..

ஒரு நண்பரை, தோழரை இழந்தோம் என்பதற்கு அப்பால் ஒரு நல்ல மனிதாபிமானம் பண்புகளை கொண்ட ஒரு சமூகப்போராளியை இழந்தோம். ஜனநாய விழுமியங்களை நிமிர்த்தி நின்ற ஒரு ஒரு பரந்துபட்ட சிந்தனையாளனை இழந்தோம் என்ற பெரும் கவலையே என்னுள் குடிகொண்டது.

ஜெமினியை முதன்முதலில் ஒரு 20 களின் ஆரம்பத்தில் இருந்த இளைஞனாக ஜெர்மனியின் பெர்லின் நகரில் 85 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சந்தித்தது இன்னும் பசுமையாக நினைவிலுள்ளது. ஈரோஸ் அமைப்பினர் ஒழுங்கு படுத்தியிருந்த ஒரு கூட்டம் ஒன்றித்தான் அவரை பெர்லினுக்கு அப்பொழுது ஈரோஸ் அமைப்புக்கு பொறுப்பாகவிருந்த சிங்கம் அவர்களோடு சந்தித்தேன்.

அப்பொழுதைய பெர்லினின் EPRLF அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர்கள் தோழர் ஜெயசிங்கமும் ஜேசுவும் அவர்களோடு நானும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டோம். அரசியலில் சந்திப்பாக இருந்த பொழுதும் ஜெமினியுடனான நட்பு அன்றிலிருந்து தோழமை நட்பாக மாறியிருந்தது.

பெர்லினில் அதன் பின்பு நிறையத்தடவை அவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது நட்பாக தொடர்ந்தது. அதே 85 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உலக நாடுகளின் உல்லாசத்துறை இணைந்து மாபெரும் உல்லாசத்துறையை ஊக்குவிக்கும் கண்காட்சி ஒன்றை பெர்லினில் ஏற்பாடு செய்திருந்தது. அதில் இலங்கையும் கலந்துகொண்டது.

அதில் இலங்கையின் உல்லாசத்துறையினர் கண்காட்சிக்காக அமைத்திருந்த பகுதியை முற்றுகையிட்டு இலங்கையில் தமிழ் மக்களுக்காக நடக்கும் அநீதிக்கு எதிராகவும் உல்லாசப்பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆர்ப்பாட்டம் செய்வதாக அப்பொழுது பெர்லினில் இருந்து இயங்கிக்கொண்டிருந்த சகல அமைப்புக்களும் (இயக்கங்களும்) இணைந்து ஒரு மறியல் போராட்டத்தை நடாத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன் ஒழுங்கமைப்பில் அனைத்து அமைப்புக்களின் பொறுப்பாளர்கள் செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடி அதனை எப்படி வெற்றிகரமாக செய்து முடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதிலும் ஈரோஸ் அமைப்பின் சார்பாக சிங்கம், ஜெமினி உற்சாகமாக கலந்துகொண்டார்கள்.

மறியல் போராட்டத்தில் கண்காட்சியின் பார்வையாளர்களாக பதாகைகளை உள்ளே கடத்தி சென்று வெவ்வேறு நுளைவுகளால் உள்ளே வந்தவர்கள் இலங்கை உல்லாசத்துறை அமைத்திருந்த பகுதிக்கு முன்னால் மறியல் போராட்டத்தை நடாத்தினோம். அந்த மறியல் போராட்டம் பல நிமிடங்கள் நடந்தது. கண்காட்சியின் பாதுகாப்பினரும் பொலிசும் உள்ளே வந்து எம்மை வெளியேற்றினர்.

வெளியேறும் பொழுது ஏற்கனவே உடன்பட்டதற்கிணங்க யாரும் தனித்து செல்லக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. திடீரென எங்களில் வந்த LTTE அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவரை போலீசார் கைது செய்துவிட்டதை ஒருவர ஓடிவந்து சொல்ல, ஜெமினி நான் ஜெயசிங்கம் தோழர் ஜேசு தோழர் மற்றும் எம்மோடு நின்ற ஏனைய அமைப்பின் தோழர்கள் பலர் போலிஸ் வானுக்கு முன்னாலும் பின்னாலும் படுத்துவிட்டோம்.

கைது செய்தவரை விடுவிக்க கோரினோம். இறுதியில் போலீசார் வேறுவழியின்றி எமது கோரிக்கையின்படி கைதுசெயதவரை விடுவித்தார்கள். அந்த நிகழ்வும் ஜெமினியின் போராட்ட குணமும் ஒழுங்கமைக்கும் திறனையும் தோழர்களோடு பழகிய விதமும் மறக்க முடியாதது மட்டுமல்ல, அவருடனான நட்பு என்னை மேலும் அவருடன் நெருக்கமாக்கியது. அதன் பின்னர் அவர் STUTTGART க்கு சென்ற பின்னர் நானும் இங்கிலாந்து என்று வந்த பின்னரும் அவருடனான நட்பு அடிக்கடி இல்லாது போனாலும் அவ்வப்போது தொடர்ந்தவண்ணமேயிருந்தது.

தமிழ் ஓலிபரப்பு கூட்டுத்தாபனம் TBC லண்டன் வானொலியில் நான் VOLUNTEER ஆக 2௦௦௦ நடுப்பகுதியிலிருந்து பணிபுரிந்த காலத்தில் மீண்டும் வானொலியூடாகவும் தொலைபேசியிலும் அவரோடு பழகும் உரையாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

சாந்தமும், தோழமையும், பண்பும், கொள்கைப்பிடிப்பும், அனைவரையும் மதிக்கும் நல்ல மனிதனாகவே எப்பொழுதும் ஜெமினி இருந்தார். அவருடைய நகைச்சுவை உணர்வு அவ்ருக்கேயுரிய எல்லோரையும் கவர்ந்த சிறப்பம்சம். தேனீ இணையத்தளத்தின் ஊடாக அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி அந்த சக்தியை ஒரு ஜனநாயக இயக்கமாகவே வைத்திருந்தார் ஜெமினி.

ஏகப்பிரதிநிதித்துவம் என்ற ஒற்றை அதிகாரத்தில் தமிழ் ஊடகங்கள் ஜனநாயக மறுப்புக்கு ஆதரவளிதபோது தேனீ இணையத்தினூடாக மாற்றுக்கருத்தாளர்களுக்கு ஜனநாய குரலையும் தளத்தையும் ஜெமினி ஏற்படுத்திக்கொடுத்தார்.

புலம்பெயர் தேசத்தில் அவரது சமூகப்பணி என்பதும் ஜனநாயகத்துக்கான அவரது பங்களிப்பும் எதேச்சதிகாரத்தை எதிர்த்து நின்ற போராளிக்குணமும் ஜனநாயக சக்திகளை தனது ஊடகத்தின் வழியாக ஒன்று திரட்டியது என்பதும் அளப்பரியது மாத்திரமல்ல என்றென்றும் நினைவிலும் புலம்பெயர் தமிழர் வரலாற்றிலும் நிலைத்து நிற்கும். ஜெமினி என்றும் மறக்கமுடியாத மனிதர்.

அவரது இழப்பால் நாம் பெரும் நஷ்டம் அடைந்தாலும் அவரது மனைவி குடும்பத்தினருக்கு அவர்கள் அடைந்த இந்த பேரிழப்புக்கு அளவேயில்லை. அவரது மனைவி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதோடு அவர்கள் துயரினையும் பகிர்கிறேன்.
போய்வா தோழனே….. உன் நினைவுகளையும் கடமைகளையும் சுமப்பதற்கு ஏராளமான நெஞ்சங்கள் உண்டு…போய் வா தோழனே….