புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 1)

2009 ஆண்டு ஏப்ரல் மாத இறுதிப்பகுதியில் வன்னியிலிருந்து படகுவழியாக தப்பியோடி யாழ்பாணத்தை அடைந்து உயிர் தப்பிய கருணாகரன் 2009 ஆகஸ்ட் மாதம் காலச்சுவடு பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரையில், புலிகள் வன்னி மக்களை மனித கேடயங்களாக அடைத்து வைத்து எவ்வாறு கொடுமைகளை மேற்கொண்டார்கள் என்பதனை கண்கண்ட சாட்சியாகவும், குற்ற ஒப்புதல் வாக்குமூலமாகவும் அம்பலப்படுத்தியுள்ளார். அதேநேரம் பத்திரிகையாளர் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள விடயங்களையும் விலாவாரியாக எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற இந்த மாபெரும் மனித அவலம் தொடர்பாக இருதரப்பினரும் இருட்டடிப்பு செய்ய முனையும் இத்தருணத்தில் கருணாகரனின் இக்குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மீள்பதிவு செய்கின்றோம். 

என் சனம் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். பார்வோன் பிரபாகரனிடம் போய்ச் சொல் “என் சனத்தை போக விடு” – யாத்ராகமம் 

ஈழப்போரின் இறுதி நாட்களைப்பற்றி தமிழில் பக்கச்சார்பற்று எழுதப்பட்ட இதுவரையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரால் படிக்கப்பட்ட மகத்தான கள ஆய்வறிக்கை 

நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆடப்பொற்சுண்ணம் இடித்து நாமே – திருவாசகம்  

By சிவராசா கருணாகரன் 

2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல்லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு தரப்பினருடைய நெருக்கடிகளுக்கும் முற்றுகைக்கும் உள்ளாக வேண்டியதாகியது. யுத்தம் ஓய்வற்று நடந்த இரண்டரை ஆண்டுகளிலும் வன்னி மக்கள் பட்ட துயரங்களும் கொடுமைகளும் அழிவுகளும் அவமானங்களும் சாதாரணமானவையல்ல. 

போர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க. 

புலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேணல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.

(தொடரும்)