மட்பாண்டப் பாவனையிலிருந்து விலகியதால் வியாதிகள் ஏராளம்

நீரும் தூர்வையாக்கப்பட்ட களிமண்ணும் சேர்த்துக் குழைக்கப்பட்ட கலவையில் வேண்டிய உருவம் செய்து அதனை சூளையில் இட்டு உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி மட்பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு சூடாக்குவதன் மூலம் களிமண் வேறொரு திடமான பௌதிக வடிவத்துக்கு மாற்றமடைகிறது.

மட்பாண்டங்கள் செய்வதற்குப் பயன்படும் களிமண் இடத்துக்கு இடம் வேறுபாடாக அமைவதால் அவ்விடங்களில் செய்யப்படும் மட்பாண்டங்களும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டவையாக அமைகின்றன.சில குறிப்பிட்ட தேவைகளுக்காக களிமண்ணுடன் வேறு சில கனிமங்களையும் சேர்ப்பது உண்டு.

இவ்வாறு மட்பாண்டப் பொருட்களால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்களையே எமது முன்னோர் சமையல் மற்றும் இன்னோரன்ன தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர்.இதனால் முற்காலத்தில் உள்ளவர்கள் சிறுநீரக நோய் போன்ற பாரிய நோய்கள் எதுவும் இல்லாமல் நீண்ட சுகத்துடன் அதிக காலம் உலகில் வாழ்ந்தனர் எனலாம். நாட்கள் செல்லச் செல்ல நவீன கண்டுபிடிப்புக்களாக நவீன சமையல் பாத்திரங்கள் சந்தைக்கு வந்ததால் அதன் கவர்ச்சி,மற்றும் வேலைக்கு இலகு போன்ற காரணங்களால் மட்பாண்ட பாவனையிலிருந்து மக்கள் படிப்படியாக விடுபட்டு புதிய நவீன பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்த தொடங்கினர். இதனால் பாரதூரமான நோய்களுக்கு மனிதன் ஆளாகும் நிலைமை உருவானது.

இதன் பாதிப்புக்கள் பற்றி இன்றைய காலத்தில் அதிகம் பேசப்பட்டாலும் அல்லது பெண்கள், ஆண்கள் மத்தியில் தெளிவூட்டல்கள் இடம்பெற்றாலும் கூட, சிறுநீரக நோய் தொற்றலுக்கு பலர் தொடர்ந்து ஆளாகி வருகின்றமை பற்றி தெரிய வந்தாலும் கூட மட்பாண்ட சமையல் பாத்திரங்களைப் பாவிப்பதற்கு இன்றும் கூட மக்கள் முன்வருவதில்லை.

முன்னொரு காலத்தில் கிராமிய தொழிலாக மட்பாண்டப் பொருட்களை உற்பத்தி செய்து பலர் வருவாயை பெற்று வந்தனர். பலர் சுயதொழில் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். குறிப்பாக வீட்டுப் பெண்களுக்கு மேலதிக வருவாயைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு குடிசைக் கைத்தொழிலாக அப்போது மட்பாண்ட உற்பத்தி இருந்தது. ஆனால் அலுமினியப் பாத்திரங்களின் கவர்ச்சியால் மோகம் கொண்ட இவர்கள் மட்பாண்ட பாத்திரங்களுக்கு பதிலாக அலுமினியம்,சில்வர்,தகரம் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட சமையல் பா த்திரங்களை பாவிக்க தொடங்கினர். மட்பாண்ட சமையல் பாத்திரங்களின் பாவனை குறைவடைந்து போனது.

மண்பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விரைவில் பழுதடைந்து விடாமல் இருந்தன. இரண்டு மூன்று உணவு வேளைகளுக்கு வைத்திருந்து சாப்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் பழக்கம் அப்போது இருந்தது. ஆனால் இப்போது அவ்வாறில்லை. நவீன பாத்திரங்களில் சமைக்கும் உணவுகள் விரைவில் பழுதடைந்து விடுகின்றன.

தற்காலத்தில் சந்தைகளில் அல்லது பிரதான வீதி ஓரங்களில் மட்பாண்ட உற்பத்திப் பொருட்களான பானை,குடம், சட்டி போன்றவற்றை உற்பத்தியாளர்கள் குவித்து விற்பனைக்கு வைத்திருந்தாலும் கூட அதன் பெறுமதி தெரிந்த சிலரே அவற்றை கொள்வனவு செய்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் அவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.குறிப்பாக நகர்ப் புறங்களில் வாழும் மக்கள் தமது வசதிக்காக களிமண் பாத்திரங்களைக் கொள்வனவு செய்வதில்லை. ஆனால் கிராமப் பகுதிகளில் மட்பாண்ட சமையல் பாத்திரங்களை பாவிப்பவர்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

புதிய வடிவங்களில் சமையலறைகள் இக்காலத்தில் கட்டப்படுகின்றன. பல வடிவங்களில் அதை அழகுபடுத்துகிறார்கள். கவர்ச்சி மிக்க வர்ணங்களைப் பூசி,நவீன நவீன சமையல் பாத்திரங்களை அடுக்கி அவற்றை காட்சிப்படுத்துவதை பெருமையாக நினைக்கிறார்கள். மண் சமையல் பாத்திரங்கள் பாவிப்பதிலிருந்து மக்கள் விலகிச் சென்று விட்டனர்.

இவ்வாறு அருகிவரும் மட்பாண்ட சமையல் பாத்திரங்களின் உற்பத்தியும் குறைந்து வரும் மண்பாண்டங்களின் பாவனையும் ஆரோக்கியமானதல்ல. இது பற்றி மக்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமே பக்கவிளைவுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும்.

அநுராதபுரம் பிரதேசம் பழம் பெரும் கிராமங்களைக் கொண்டதாகும். கிராம மக்களில் பலர் இன்னுமே மட்பாண்டப் பாவனையில் இருந்து விலகி விடவில்லை. அநுராதபுரம், நொச்சியாகமவில் மண் சமையல் பாத்திரங்களை செய்யும் தொழிலாளர்கள் விற்பனைக்காக அவற்றை அடுக்கி வைத்திருப்பது தினமும் காண்கின்ற காட்சியாகும்.