AR , FR,JR………

தமிழர்கள் என்றாலே எரிச்சலடையும் ஜே.ஆர். AR.FR நடைமுறைகளை கடைப்பிடிக்கும் தமிழ் அதிகாரிகள் தொடர்பில் எரிச்சலடைந்தார்.

அரச அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் நடத்திய போது ” எனது அரசாங்கத்தில் AR,FR எல்லாம் கிடையாது. JR சொல்வதன்படி தான் நடக்க வேண்டும்.

அதற்குத் தயாரானவர்கள் கதிரையில் இருக்கலாம். மற்றையவர்கள் வீட்டிற்குப் போகலாமென்றாராம்.

அரச சேவையில் தமிழர்களைக் குறைக்கும் வகையிலான வேலைத் திட்டங்களைக் கனகச்சிதமாக நடத்தினார்.

அகில இலங்கை சேவைப் போட்டிப் பரீட்சைகளில் தமிழர்கள் தெரிவாகாத வகையில் பரீட்சை முறைகளில் எல்லாம் குளறுபடிகளைச் செய்தார்.

அதன் பின்பாக சிங்கள அதிகாரிகள் மிகப் பெரும்பான்மையினராக அரச சேவையில் உயர் பதவிகளை வகித்த போது லஞ்ச ஊழல் நிர்வாக முறைமை வேகமாக உருவெடுத்தது.
அரச நிதி வளம் படுமோசமாகச் சுரண்டப்பட்டது.

அதன் ஒட்டுமொத்த தொடர்ச்சியே மத்திய வங்கியையே சூறையாடும் வல்லுநர்கள் உருவெடுத்தார்கள்.

இன்று அரச நிதி வளங்கள் மிக மோசமாக நிர்வகிப்பதற்கு வித்திட்டவர் ஜே.ஆர் தான்.
ஆனால் அவர் தனிப்பட்ட தேவைக்குச் சூறையாடியதாக வரலாறு இல்லை.

அவருக்குப் பின் வந்த தலைமுறைகளுமே நேர்மையற்ற ஒரு நிர்வாக முறையை உருவாக்கினார்கள்.

தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கித் தனிநாடு கோரிப் போராடிய போது அதனை வேரோடு கிள்ளி எறியப் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கொடூர சட்டங்களைக் கொண்டு வந்தார்.

1983 யூலை 23 இல் யாழ் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தி 13 இராணுவ வீரர்களைக் கொன்றார்கள்.
இறந்த படைவீரர்கள் நாட்டின் நாலா பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் கொழும்பில் இறுதிக் கிரியைகளை நடத்தினார்.

காடையர்களைத் தயார்படுத்தி தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை நாடெங்கும் கட்டவிழ்த்து விட்டார்.

அதன் எதிரொலியாக இலங்கைத் தீவு இரத்த ஆறு ஓடும் சுடுகாடாகியது.

அழகான இலங்கை மண்ணை நாசமாக்கியதில் ஜே.ஆரும் அவரது கட்சியும் செய்த பங்களிப்பின் தொடர் விளைவுகளையே நாம் அனுபவிக்கின்றோம்.