“உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்”
“இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்”
இதெல்லாம் யார் சொல்லியது தெரியுமா? “கப்டன் அங்கயற்கண்ணி” எனும் புஸ்பகலா.
10.6.1973-16.8.1994 இவ்வளவும் தான் அவள் வாழ்நாட்கள்!
சுமார் அறுபது கிலோ உடல் எடை கொண்ட அவள் முதுகில் சுமந்து நீந்தியதோ ஐம்பது கிலோவிற்கும் மேலான வெடி பொருள்!
சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்து விட்டாள்.
ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக் கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.
அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.
1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு.
“ரைட், கட்டளைக் கப்பல் அவுட்” என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் இழப்பு அந்த சந்தோஷத்தை அவர்களால் அனுபவிக்க முடியாமல் செய்தது.
இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகளிலேயே தன்னுயிரீந்து மண்ணுயிர்க்காய் ஆகுதியான முதற்பெண் அங்கயற்கண்ணி!!
அங்கமெல்லாம் கண்ணி சுமந்து கடலாடி எதிரியை களமாட இப்பெயரை தேர்ந்தெடுத்தாளோ என்னவோ?
இன்று “டிக்டொக்,ரீல்ஸ்” என்று சீரழியும் குலக்கொழுந்துகள் கட்டாயமாக நினைவில் கொள்ள வேண்டிய விடயம் “பலரது தியாகங்களில் தான் இன்று உயிருடன் ஊசலாடுகிறீர்கள்! என்று..
(மோ.கோகுலன்)