இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை

இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டிய அதிபர் பிரேமதாசா விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களும் பணமும் கொடுத்து உதவிக் கொண்டிருந்தார்.

நன்றி மறந்த பிரபாகரனும் சிங்களவர்களும் நாங்களும் ஒரே நாட்டைச் சார்ந்த சகோதர்கள. எங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வோம் சமாதானமாகி விடுவோம் இதில் தலையிட நீங்கள் யார் என ராஜீவ் காந்தியை கேட்டுக் கொண்டிருந்த நேரம் அது.

அமரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களும் இந்திய பாதுகாப்பினை சீர்குலைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த புதிய கூட்டணிக்கும் அதன் சதிச் செயல்களுக்கும் மறைமுகமாக உதவிக் கொண்டிருந்தன.

எத்தனை பேர் உண்மைகளை மறைத்துப் பேசிக் கொண்டிருந்தாலும் சரித்திரம் காட்டும் இந்த உண்மை ஒரு நாள் முழுமையாக வெளிப்பட்டே தீரும். மக்கள் தலைவர் தோழர் எம்.கல்யாணசுந்தரம் அவர்கள் காட்டிய வழியில், தோழர் க. பத்மநாபாவின் EPRLF இயக்கத்திற்கும், தோழர் வரதராஜ பெருமாளின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசிற்கும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி(UCPI) தனது முழு ஆதரவை வழங்கி வந்தது.இதன் அடிப்படையில் தோழர் தலித் சண்முகம் அவர்களும் நானும் இந்துமாக்கடல் அமைதிக்கான சர்வதேச அமைப்பு (IMPIO) என்ற அமைப்பினை உருவாக்கி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் நாடு முழுவதும் இந்திய அமைதிப்படைக்கான ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தோம்.

அதன் ஒரு பகுதியாக Who’s game is Mr.Premadossa playing என்று தலைப்பிலான கருத்தரங்குகளை நாடு முழுவதும் பல பகுதிகளில் நாங்கள் நடத்தினோம். புதுடெல்லியில் எனது தலைமையில் நடைபெற்ற மிகப்பெரும் கருத்தரங்கில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்த திரு நட்வர்சிங், தோழர் மொகித்சென், தோழர் தா. பாண்டியன், திரு. சுப்பிரமணியன் சுவாமி, பத்திகையாளர் நடிகர் சோ ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து ஹைதராபாத் நகரிலும் பின் மும்பையிலும் இது போன்ற கருத்தரங்குளை நடத்தினோம். மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் மொகித் சென், தோழர் தா.பாண்டியன், EPRLF இயக்கத்தின் சார்பில் திரு. வளவன் ஆகியோருடன் நடிகர் திரு. ராஜேஷ் அவர்களும் கலந்து கொண்டார்.

கருத்து ரீதியாக எமது பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாத எல்டிடிஈ ஆதரவாளர்கள் மும்பையில் நடந்த கூட்டத்தில் கல் வீசித் தாக்கியது தனி கதை. இக்கூட்டம் நிமித்தமாக நாங்கள் மூன்று நாட்கள் மும்பையில் தங்கி இருந்தபொழுது தோழர் தா பாண்டியன் அவர்கள் என்னையும் தோழர் தலித் சண்முகம் அவர்களையும் அழைத்து நாம் ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் Taxi ஏற்பாடு செய்யுங்கள் எனக் கூறினார்.

அவர் எங்களை எங்கு அழைத்துச் செல்கின்றார் என்பது அப்போது எங்களுக்கு தெரியாது. மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு எங்களை அழைத்துச் சென்றார். எங்களை வரவேற்ற ஒரு பணியாளர் எங்களுக்கு தேநீர் தந்து உபசரித்து வரவேற்பு அறையில் அமரச் செய்தார்.

சிறிது நேரத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது மகள் துணையுடன் அறையிலிருந்து வெளிப்பட்டு ஹலோ பாண்டியன் ஹவ் ஆர் யூ என்றவாறு உற்சாகத்துடன் சிரித்த சற்றே குள்ளமான அந்த மாமனிதரை பார்த்தவுடன், நான் காண்பது கனவா அல்லது நனவா என உணர்ச்சிப் பெருக்குடன் கைகூப்பி நின்றேன்.

எந்தச் சூழலிலும் தன் உணர்வுகளை சுலபத்தில் வெளி காட்டாத தோழர் தலித் சண்முகம் அவர்களின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

ஆம் எங்கள் முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர் இந்திய கம்யூனிச இயக்கங்களின் பிதாமகன், எங்கள் தலைவர்கள் மொகித் சென்னாலும், எம் கல்யாணசுந்தரம் அவர்களாலும் தங்களது வழிகாட்டுதலுக்குரியத் தலைவர் என்ற போற்றப்படும் தோழர் S.A.டாஙகே அவர்கள்.

ஆம் நான் தோழர் டாங்கே அவர்களை சந்திக்கும் பேறு பெற்றவன். இது என்ன தனி மனித துதி பாடல் என சிலர் கேட்கலாம். ஆனால் உழைக்கும் மக்களுக்காக தன் வாழ்நாளெல்லாம் தன் சிந்தனையாலும் செயலாலும் உழைத்த அந்த மாமனிதரை கண்ணுற்றதும் இரண்டொரு நிமிடங்கள் அவரிடம் பேசியதும் என்னை பொறுத்தவரை என் வாழ்வில் கிடைத்தற்கரிய பொன்னான நேரம் தான்.

நாங்கள் சற்று தள்ளி அமர்ந்திருக்க UCPI கட்சியின் Chairman ஆக அன்றிருந்த தோழர் டாங்கே அவர்கள், தோழர் தா.பா அவர்களிடம் இயக்கம் குறித்து சில நிமிட நேரம் பேசிவிட்டு எங்களை ஏறிட்டுப் பார்த்தார்.

தா.பா அவர்கள் எங்களை அறிமுகம் செய்துவைத்தார். தோழர் பத்மநாபா அவர்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த தோழர் டாங்கே அவர்கள் தனது வாழ்த்துக்களை அவரிடம் தெரிவிக்கும்படி எங்களிடம் கேட்டுக் கொண்டார்.(நாங்கள் அறைக்குத் திரும்பியதும் நடிகர் ராஜேஷ் அவர்களிடம் தோழர் டாங்கே அவர்களை சந்தித்து பற்றித் தெரிவித்தேன்.

டாங்கே அவர்கள் மீது அளப்பரிய மதிப்பும், அன்பும் வைத்திருந்த ராஜேஷ் அவர்கள் டாங்கேயின் இல்லத்திற்கு தன்னை அழைத்துச் செல்லாதது குறித்து மிகவும் கோபம் அடைந்தார். இதில் என் தவறு ஏதும் இல்லாவிட்டாலும் அவர் என் மீது கடும் கோபத்துடனும் மனத்தாங்களுடனும் கடைசி வரை இருந்தார்.இது குறித்து பிரிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்).

அன்புத் தலைவர் தோழர் டாங்கே அவர்களின் தியாக வரலாறு குறித்தும், அவரது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தீர்க்கதரிசனங்களையும் புறந்தள்ளியதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் ஏன் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டிற்கும் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்தும், பாதிப்புகள் குறித்தும் பேசவும் எழுதவும் ஆயிரம் விடயங்கள் இருந்தாலும், அந்த மாமனிதரை நான் சந்தித்த, செவிமடுத்த அந்த இரண்டொரு நிமிடங்கள் குறித்து உங்களிடம் பகிர வேண்டும் என தோன்றியது பகிர்ந்து கொண்டேன்.

இன்று தோழர் டாங்கே அவர்களின் 126வது பிறந்தநாள். அவரை வணங்குகிறேன். அவரது கொள்கை வழி நின்று, தோழர் எம் கல்யாணசுந்தரம் காட்டிய வழியில் எங்களது இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (M.K) யின் மக்கள் பணி என்றும் தொடரும் என உறுதி கூறுகிறேன்.

(Bhaskaran Sankaralingam)