‘உலக முடிவு’ மலையின் அடிவாரத்தில் துரத்தும் பூதம்

நன்பெரியல் பிரம்டண் தோட்ட மக்களின் தொழில், அத்தோட்டத்தில் கொழுந்து பறிப்பது மட்டுமேயாகும். வேறு எந்த வாழ்வாதாரத்துக்கான வளங்களும் இந்தத் தோட்டத்தில் கிடையாது. எனவே, தோட்டத்தில் வேலை இல்லாத சமயங்களில், நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று, கூலி வேலை செய்து பசியைப் போக்கும் நிலையில் இந்தத் தோட்ட மக்கள் வாழ்கிறார்கள்.

தற்போது நாடு முழுவதும் பயணத்தடை அமல்படுத்தப்பட்டு, வாழ்வாதாரத்துக்கான அனைத்து வழிகளும் முடக்கப்பட்டுள்ளதால் இந்தத் தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள், கொழுந்து பறிக்க முடியாமலும் நாட்டுப் பகுதிக்கு வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானத்தை இழந்து, பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் தற்போது வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்தத் தோட்ட பிரச்சினைகள் தொடர்பாக, அங்கு வாழும் மக்களிடம் கேட்டபோது, தொழில் வாய்ப்புகள், வாழ்வாதாரங்கள், அடிப்படை வசதிகள் இன்மை ஒருபுறமிருக்க, பெரும் பூதம்போன்ற பிரச்சினை ஒன்றும் தம்மைத் துரத்துவதாகத் தெரிவித்தார்கள்.

இது குறித்து அந்தத் தோட்ட பெண்கள் கருத்துத் தெரிவிக்கும் ​போது கூறியதாவது: அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்ற போதிலும், சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால், இரவு நேரங்களில் பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதுடன் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் இதனால் அச்சத்துடன் வாழவேண்டிய சூழ்நிலை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக, பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட பின்னர், அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சமுகமளித்து, விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து,விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிப்பதால், அவர்கள் மீண்டும் அதே தவறைச் செய்து வருகிறார்கள்.

எனவே, இரவு நேரங்களில் இந்தத் தோட்டத்துக்கு பொலிஸார் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று அத்தோட்டத்தில் வாழும் பெண்கள் தெரிவித்தார்கள். இது, அத்தோட்ட மக்களின் பிரதான கோரிக்கையாகவும் இருக்கிறது.

இந்தத் தோட்ட மக்கள், நகருக்குச் செல்ல வேண்டுமாயின், தோட்டத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து, பதுளை – கொழும்பு பிரதான வீதிக்கு வர வேண்டும். அவ்வாறு வந்தாலும், அத்தோட்ட மக்கள் நகருக்குச் செல்வதற்கான பஸ்கள் கிடைப்பதில்லை.

மேலும், தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகளும் தொழிற்சங்க காரர்களும் வாக்குகளை பெறுவதற்காக இங்கு வந்து சென்று போவதாகவும் அதன் பின்னர் அவர்களைக் காணமுடிவதில்லை.

அத்துடன், சில தொழிற்சங்கங்களுக்கு மாதாந்தம் சந்தா பணங்களை செலுத்துவதில் தவறுவதில்லை எனவும் ஆனால், தமது துன்பங்கள் குறித்து அவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்வருவதில்லை எனவும் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

தோட்டத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற தோட்டத் தொழிலாளர்கள் பலர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில், எவ்வித வருமானமும் இன்றி ஆதரவற்ற நிலையில் பலர் இருக்கும் போது, அவர்களில் சிலருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சமுர்த்தி, ் ஓய்வூதியம் ஆகிய கொடுப்பனவுகள் கிடைக்கின்ற போதிலும் பலருக்கு அவ்வாறான கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை.

அத்துடன், அத்தோட்டத்தில் உள்ள சுமார் 25 மேற்பட்ட மாணவர்கள், பாடசாலை செல்ல வேண்டுமாயின் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பலாங்கொடை நகரில் உள்ள பாடசாலைகளுக்கு வர வேண்டும். இதன் காரணமாக அத்தோட்ட மாணவர்கள் அங்கிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஹல்தமுல்ல நகரில் உள்ள பாடசாலைகளுக்கு செல்கின்றார்கள். அப்படியும் முடியாத சில மாணவர்கள் மிக அருகில் உள்ள சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு சென்று வருகின்றதனால் பல சமூக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

அத்தோட்டத்தில், பாடசாலை செல்லும் வயதில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை செல்வதற்கான வசதியின்மையால் அத்தோட்ட நிர்வாகத்தில் பேர் பதிந்து வேலை செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.