அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஆறு வாரங்களாகத் தொடுத்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தான் பிரதமரின் முன்னிலையில் காய் நகர்த்தல்கள் பலமாக நடக்கின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு, அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை சந்தித்தது.
மறுபுறம், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழுவும் ஷெரீப்பை சந்தித்தது. இந்தத் தனித்தனி சந்திப்புகளுக்குப் பிறகு, அமெரிக்கா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் பங்கேற்கும் நேரடி முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை இரவு இஸ்லாமாபாத்தின் செரீனா ஹோட்டலில் (Serena Hotel) தொடங்கின.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்காவும் ஈரானும் ஒரே அறையில் அமர்ந்து பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், இந்தப் பேச்சுவார்த்தைகள் இப்ப பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கு ஒரு படிக்கல்லாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதே நேரத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், இரு தரப்பும் ஆக்கப்பூர்வமாக ஈடுபட வேண்டும் என்றும், அமைதிக்குத் தொடர்ந்து வசதிகளைச் செய்து கொடுக்க இஸ்லாமாபாத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
பேச்சுவார்த்தைகளின் நிலை:
சனிக்கிழமை 15 மணி நேரம் நீடித்த மாரத்தான் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப், “எங்களுக்கு நல்ல எண்ணம் உள்ளது, ஆனால் அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை,” என்று கூறினார். ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் எப்படிப் போகும் என்று தமக்குத் தெரியாது என்றும், ஈரான் உண்மையான எண்ணத்துடன் செயல்படுகிறதா என்பதைச் சில நாட்களில் தெரிந்து கொள்வேன் என்றும் கூறினார்.
இஸ்ரேல்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கை ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை “நசுக்கிவிட்டது” என்று கூறினார். மேலும், துருக்கிய அதிபர் எர்டோகன் மற்றும் ஹெஸ்பொல்லாவின் நேரடிப் பேச்சுவார்த்தை மறுப்பு ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்தார். ஸ்பெயினில் நெதன்யாகுவின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்தது.
இஸ்லாமாபாத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்தத்தை நோக்கிச் செல்கிறதா அல்லது ட்ரம்ப்பின் அதிரடி மிரட்டல்கள் ஈரானை மேலும் தூண்டிவிடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
“இது ‘மேக் ஆர் பிரேக்’ (Make or Break) நிலை,” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் கூறியது போல, இந்தப் பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் உலகிற்கு அமைதி கிடைக்கும், இல்லையெனில் அடுத்த போர் இன்னும் பயங்கரமானதாக இருக்கும்.