இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 142 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 742ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் பல பிரதேசங்களில் கொவிட்19 தொற்றால் உயிரிழந்தோரில் 45 பேரின் சடலங்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை நிலவி வந்த   பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓரிரு சடலங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், அவற்றையும் உரிய முறையில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி பிரதேசத்திலேயே, கொவிட் சடலங்கள் தற்போது அடக்கம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியும், சட்டவிரோத போதைப்பொருள்களைப் பயன்படுத்தியும் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி – அனிவத்த பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த களியாட்டத்தில், கண்டியைச் சேர்ந்த வர்த்தகர்களின் பிள்ளைகளே கைது செய்யப்பட்டுள்ளதோடு, 21 வயதுக்குக் குறைவான இளைஞர்கள் பல்வேறு போதைப்பொருள்களைப் பயன்படுத்தியிருந்ததாகவும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.