இலங்கை: கொரோனா விபரம்

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 740 பேர் பூரண குணமடைந்து, வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 64,141 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் 19 தொற்றாளர்களாக அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் நேற்று(07) அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் பதிவான 772 தொற்றாளர்களில் 245 பேர் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக கம்பஹாவில் 214 பேரும் இரத்தினபுரியில் 53 பேரும் ஏனைய மாவட்டங்களில் 260 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கல்முனை சுகாதாரப் பிராந்தியத்திலுள்ள காரைதீவில் ஏழு மாணவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மூடப்பட்ட மூன்று பாடசாலைகளும் இன்று (08) திறக்கப்பட்டதாக காரைதீவுப் பிரதேச சுககாதார வைத்தியஅதிகாரி டொக்டர் தஸ்லிமா பசீர் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கையாகவே இப்பாடசாலைகள் மூடப்பட்டதாகவும் அதன்பிறகு எந்தவொரு மாணவருக்கும் தொற்று ஏற்படவில்லை எனவும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் யாரும் அஞ்சத்தேவையில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

குறித்த பாடசாலைகளுக்கு நேற்று (07) சுகாதார வைத்திய அதிகாரிபணிமனையால் தொற்று நீக்கி வீசப்பட்டது.ஜனவரி மாதம் 29ஆம் திகதி தொடக்கம் ஒருவார காலத்துக்கு இம்மூன்று பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நாளை(09) எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார். நாளை முற்பகல் 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் கூறியுள்ளார்.