திட்டமிடல் இல்லாத இராணுவ நடவடிக்கை:
அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த மார்ச் மாதம் போர் உச்சத்தில் இருந்தபோது, ஈரான் தனது சிறிய ரகப் படகுகள் மூலம் ஹார்முஸ் நீரிணை முழுவதும் ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளைப் பதித்துள்ளது. பொதுவாக, இத்தகைய வெடிகளை வைக்கும்போது துல்லியமான இராணுவ வரைபடத்தைப் பின்பற்ற வேண்டும். ஆனால், ஈரான் அவசர அவசரமாகச் செயல்பட்டதால், எந்தெந்த இடங்களில் கண்ணிவெடிகள் உள்ளன என்பதற்கான முறையான தரவுகள் அந்த நாட்டு இராணுவத்திடமே இல்லை.
இடம் பெயர்ந்த கண்ணிவெடிகள்:
பாரசீக வளைகுடாவின் பலத்த நீரோட்டம் காரணமாக, வைக்கப்பட்ட இடத்திலிருந்து பல மைல் தூரம் இந்தக் கண்ணிவெடிகள் நகர்ந்து சென்றுவிட்டன. இதனால் குறிப்பிட்ட பகுதியைச் சுத்தம் செய்வது என்பது ‘கடலில் ஊசியைத் தேடுவதற்குச் சமம்’ என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அகற்றத் தேவையான நவீன சோனார் கருவிகள் மற்றும் நீர்க்கடி ரோபோக்கள் ஈரானிடம் போதிய அளவு கிடையாது.
கப்பல் போக்குவரத்துக்குக் கடும் நிபந்தனை:
இந்தச் சிக்கலைத் தொடர்ந்து, சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரான் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. லாரக் தீவு வழியாகச் செல்லும் குறுகிய “வடக்கு வழித்தடத்தை” மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் கப்பல்கள் ஈரானிய இராணுவத்தின் வழிகாட்டுதலைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், இதற்காகத் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் தாக்கம்:
- தேங்கி நிற்கும் கப்பல்கள்: சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்தக் கண்ணிவெடி அச்சம் காரணமாகக் கடலில் தேங்கி நிற்கின்றன.
- எரிபொருள் விலை: உலகின் 20 முதல் 30 சதவீத கச்சா எண்ணெய் இந்த வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. போக்குவரத்துப் பாதிப்பால் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்: ஒருவேளை எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடியில் மோதி உடைந்தால், கடலில் கலக்கும் கச்சா எண்ணெய் பவளப்பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை முற்றிலுமாக அழித்துவிடும். இதனைச் சுத்தப்படுத்த பல ஆண்டுகள் ஆகும்.
ஈரான் அமைச்சரின் விளக்கம்:
இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராட்சி கூறுகையில், “தொழில்நுட்பக் காரணங்களால் நீரிணையை முழுமையாகத் திறப்பதில் சில சவால்கள் உள்ளன” எனச் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது பாதுகாப்பிற்காக விரித்த ‘கண்ணிவெடி வலை’, தற்போது சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் அந்த நாட்டுக்கே பேரழிவாக அமையக்கூடும் என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.