கோட்டா ஏன் சிங்கப்பூருக்கு சென்றார்?

இந்நிலையில், அரசியலமைப்பின் 37(1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சை என்ற அடிப்படையிலேயே சிங்கப்பூரை நோக்கித் தற்போது பயணம் செய்துள்ளார் எனவும் அத்தகைய மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை சிங்கப்பூர் ஏற்றுக் கொள்ளும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்ற பிறகு, அதற்கான ஆவணங்களை சபாநாயகருக்கு அனுப்புவதன் ஊடாக, அவர் மருத்துவ விடுமுறையை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ விடுமுறைக்கான கோரிக்கையை மூன்று மாத காலத்துக்குள் கையளிக்க வேண்டும் என்பதுடன், அதன் பின்னர் அந்த விடுமுறையை நீடித்துக்கொள்வதற்கான நடைமுறையும் உள்ளதாகவும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மருத்துவ சிகிச்சைகளுக்காக செல்லும் போது, பதில் ஜனாதிபதி, நாட்டின் ஜனாதிபதியாக செயல்படுவார் என்பதே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சரத்தாகும்.

”ஜனாதிபதி பதவியை அவர் உதறி விட்டு நாட்டை விட்டுப் போனதாக இதுவரை கூறவில்லை. தான் நாட்டை விட்டுச் செல்வதாக மட்டுமே சபாநாயகர் மற்றும் பிரதமரிடம் கூறியுள்ளார். ஜனாதிபதி வெளியேறியுள்ளதால், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்கப்பட்டமை தொடர்பில் வர்த்தமானி வெளியாகியுள்ளது.

“அப்படி என்றால், பதவியை விட்டு விலகி அவர் வெளிநாடு சென்றதாகக் கருத முடியாது.

“எனினும், ஜனாதிபதி பதவியை விட்டு, விட்டுச் சென்றதாக அரசியலமைப்பின் ஊடாக ஏற்றுக்கொள்ளகூடிய சில சரத்துகள் உள்ளன. அது ஜனாதிபதி எந்தவொரு விடயத்தையும் அறிவிக்காமல், காணாமல் போனதாக இருக்க வேண்டும்.

“எனினும், இப்போது ஜனாதிபதி அரசியலமைப்புக்கு விதிகளுக்கு உட்பட்டு, உரிய தரப்பிடம் தெரிவித்த பிறகே அவர் நாட்டை விட்டுச் சென்றுள்ளார்” என அரசியலமைப்பு நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான இளையதம்பி தம்பையா, பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.