ஜனநாயக ரீதியாக போராடுவது மக்கள் உரிமை! மக்கள் விரோத ஒடுக்கு முறைச் சட்டங்களை உடனே நீக்கு !

கடந்த 17.07.2022 ம் திகதி பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் மூலம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளாவிய ரீதியில் அவசர காலச்சட்டம் பிரகனடப்படுத்தப்பட்டு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நிறைந்த மக்கள் விரோத அரசுக்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் போராடுபவர்களை கைது செய்தல், இரகசியமான முறையில் கடத்தல், தடுத்து வைத்தல், சித்ரவதைக்குள்ளாக்குதல், ஒப்புதல் வாக்குமூலம் பெறல், உடல் மீதியின்றி அழித்தல், காணாமல் ஆக்குதல் போன்ற மனித குலத்திற்கு விரோதமான செயல்பாடுகளைச் செய்வதற்கு இவ்வகையான சட்டங்கள் வழிவகுக்கும் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே. ஆர் ஜெயவர்த்தனா, சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியாகத் தன்னை மாற்றிக் கொண்டார். அவரால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட அவசர காலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் மூன்று தசாப்த காலமாக இலங்கையில் பேரழிவுகளையே ஏற்படுத்தியது. அது சிறுபான்மையின மக்களின் போராடும் உரிமைகளை மறுத்து அடக்கி ஒடுக்கியது.

வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையக மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் கைதுகள், சித்ரவதைகள், காணாமல் ஆக்கப்படல், படுகொலைகள் போன்றவைகள் இக்கொடூரமான சட்டங்களைப் பயன்படுத்தி, மனித நாகரீகமே தலைகுனியுமளவுக்கு நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.

மனித குலத்திற்கு விரோதமான இக்கொடூரச் செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் இச்சட்டங்களை, உண்மையில் மக்கள் நலன்சார்ந்து இயங்குவதாகக் கூறும் அரசியல் கட்சிகள், மனிதவுரிமைச் செயல்பாட்டாளர்கள், ஊடகப்பரப்பினர், கல்விமான்கள், புத்திஜீவிகள் கண்டிக்க வேண்டும், இச்சட்டங்களை நீக்குமாறும் கோர வேண்டும்.

அதிலும் குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மலையக சார்ந்த சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளும் அமைப்புக்களுமே இத்தகைய ஒடுக்குமுறைச் சட்டங்களின் பாதிப்புக்களை நன்கு உணர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். அவர்களே இவற்றை உடனடியாக கண்டிக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுகின்றோம்.

சுதந்திரத்திற்குப் பின்பாக இலங்கையில் ஆட்சி செய்த அரசியல்வாதிகள் இன, மத வாதங்களைத் தூண்டிவிட்டு தங்களுடைய குறுகிய நலன்களுக்காக மக்களைப் பிரித்து வைத்து ஆட்சி செய்ததன் விளைவாக நாடு குட்டிச்சுவாராகி விட்டது. இதன் விளைவாக ஊழலும் அதிகாரார துஷ்பிரயோகமும் எங்கும் பரந்து விரிந்து காணப்படுகின்றது.

இந்த மக்களுக்கு விரோதமான செயல்பாடுகளை ஒழிக்கவும், மக்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் போராடுபவர்களை பாதுகாப்போம். தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் போன்றவைகளுக்கு எதிரான அனைத்துவகை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்போம்! மக்களைப் பாதுகாப்போம்!!

புலம்பெயர் இலங்கைத் தமிழர் கூட்டமைப்பு

එතෙර ශ්‍රී ලාංකික දෙමල ප්‍රජා එකමුතුව

Federation of Sri Lankan Tamil Diaspora

For contacts: Selliah Manoranjan ( selliahy@gmail.com) Canada.

Pathmapraba Mahalingam (prpraba@hotmail.com) Switzerland.

Newton Mariyanayagam (ndpnewton@gmail.com) Norway.

Tharmalingam Sivapalan (t.sivapalan@hotmail.com) United Kingdom.

Yogarajah Murugavel (murugavelyogarajah@gmail.com) France.

Selvadurai Jeganathan (jeganathan@web.de) Germany.

Nixon Baskaran Umapathysivam (load4mfci@gmail.com) Canada