பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல்: குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது

குறித்த வழக்கானது, திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமாரைப் பற்றியதாகும். பேஸ்புக்கில் பெண்களின் நட்புப் பட்டியலில் இணைந்ததைத் தொடர்ந்து, அவர்களை பாலியல் ரீதியாக இவர்கள் துன்புறுத்தியுள்ளனர். இதில், திருநாவுக்கரசு, இம்மாதம் ஐந்தாம் திகதியே கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரின் தடுப்புக்காவல் இன்னும் முடிவுக்கு வந்திருக்கவில்லை.

மேற்குறித்த சம்பவமானது, இவர்களிடமிருந்து தப்பித்த பெண்ணொருவர், கடந்த மாதம் 24ஆம் திகதி, பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்தே வெளிச்சத்துக்கு வந்திருந்தது.

திருநாவுக்கரசு, சபரிராஜனை நண்பர்களாகக் கொண்ட குறித்த பெண், சம்பவம் இடம்பெற்ற அன்று, தனது நண்பர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துவதற்கென சபரிராஜனால் அழைக்கப்பட்ட இடமொன்றுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், காரொன்றுக்குள் குறித்த பெண்ணை வருமாறு சபரிராஜன் கூறியதுடன், அதன்பின்னர் வேறு இருவரும் காருக்குள் ஏறியுள்ளனர். அவர்கள், குறித்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறித்தியதோடு, தங்களது செல்லிடத் தொலைபேசிகளை பயன்படுத்தி புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் குறித்த பெண் கைவிடப்பட்டதுடன் கார் சென்றுள்ளது. இதையடுத்து, குறித்த பெண்ணுக்கு குற்றஞ்சாட்டப்பட்ட்வர்களிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்து, இணையத்தில் காணொளியை தரவேற்றுவதாக அச்சுறுத்தி பணம் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, சித்திரவதையைத் தாங்க முடியாத குறித்த பெண், தனது பெற்றோர்களுக்கும் குடும்பத்துக்கும் இவ்விடயத்தை தெரிவித்ததுடன், பொலிஸில் முறைப்பாடொன்றையும் மேற்கொண்டுள்ளார்.

அந்தவகையிலேயே, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கடந்த மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஆரம்பகட்ட விசாரணையைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முதற்தடவையாக குற்றம் புரியவில்லையெனவும் கடந்த காலத்தில் பல தடவைகள், பணத்துக்காக பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குறித்த குழுவால் பாதிக்கப்பட்டால் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் கோரியபோதும் நேற்று முன்தினம் வரையில் வேறெவரும் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.

இந்நிலையில், குறித்த நபர்கள், பாலியல் துன்புறுத்தலை குறைந்தது ஏழு ஆண்டுகளாக மேற்கொள்வதாக, தாங்கள் சந்தேகிப்பதாகவும் ஆனால் பெண்கள் முறைப்பாடுகளுடன் தங்களை அணுக வேண்டும் என பொள்ளாச்சி உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.