மேய்ச்சல் தரை இல்லாததால் மடியும் ஆபத்தில் கால்நடைகள்

மேய்ச்சல் நிலம் இல்லாத காரணத்தால் தனது மாடுகள் உணவின்றி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குளங்களும் நிரம்பிக் காணப்படுகின்றன. அத்தோடு காலபோக நெற்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கால்நடைவளர்ப்போர் தங்களது கால்நடைகைள மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு இடத்திலும் மேய்ச்சல் தரை இல்லாததன் காரணமாக கால்நடை வளர்ப்போர் தொடர்ச்சியாக பல சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். அவர்கள் காலபோக நெற்செய்கை காலங்களைத் தவிர ஏனைய காலப் பகுதிகளில் குளங்களின் அயல் பகுதிகளிலும், காலபோகத்தில் மட்டும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற நிலங்களிலும் கால்நடைகள் மேய்ச்சலுக்கு விட்டு வருவது வழக்கம். ஆனால் காலபோக நெற்செய்கை காலத்திலேயே கால்நடை வளர்ப்போர் மேய்ச்சல் நிலமின்றி நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோணாவில் பிரதேசத்தில் 500 மாடுகள் வரை வளர்த்து வரும் ஒருவர் இக்காலத்தில் தனது மாடுகளை பூநகரி கௌதாரிமுனை பிரதேசத்தில் கொண்டு சென்று அங்கு மூன்று மாதங்களுக்கு மேய்ச்சலுக்கு விட்டு வளர்ப்பது வழமையாகும். இதனை அவர் கடந்த மூன்று வருடங்களாக மேற்கொண்டு வருகின்றார். ஆனால் இவ்வருடம் கௌதாரிமுனையில் தனது 500 மாடுகளை மூன்று மாதங்களுக்கு விட்டு வளர்ப்பதற்கு பூநகரி பிரதேச சபை அனுமதி மறுத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

கோணாவில் பிரதேசத்திலிருந்து நீண்ட பயணத்தின் பின்னர் கௌதாரிமுனைக்கு தனது மாடுகளை கொண்டு சென்று அங்கு கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் வழமை போன்று விட்டு மேய்ப்பதற்கு முயன்ற போது, பூநகரி பிரதேச சபையின் செயலாளர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதோடு, உடனடியாக மாடுகளை கௌதாரிமுனையிலிருந்து கொண்டு செல்லுமாறும் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதனால் தனது மாடுகளை எங்கு கொண்டு செல்வது என்று தெரியாத நிலையில் இருப்பதாகவும், மீண்டும் கோணாவில் பிரதேசத்திற்குக் கொண்டு செல்ல முடியாது என்றும் அவர் கூறினார். மூன்று மாதத்திற்கு கால அவகாசம் வழங்குமாறும் தான் கோரிய போதும் பூநகரி பிரதேச சபையின் செயலாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தான் கரைச்சி பிரதேச செயலளர், மற்றும் கால்நடை வைத்தியர் ஆகியோரின் அனுமதிக் கடிதங்களை வைத்திருப்பதாகத் தெரிவிக்கும் கால்நடை உரிமையாளர். கௌதாரிமுனை பிரதேசத்தில் இருந்து மாடுகளை வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்பதில் மாத்திரமே அதிகாரிகள் குறியாக உள்ளனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

கௌதாரிமுனையின் கடற்கரை பிரதேசம் தரிசு நிலமாக இருப்பதனால் அதுவே இக்காலத்தில் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு பராமரிப்பதற்கு பொருத்தமானது என்று தெரிவிக்கும் அவர், கிளிநொச்சியில் இதுவரைக்கும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை ஏற்படுத்திக் கொடுக்காதது அதிகாரிகளின் தவறே எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதனுடன் தொடர்பு கொண்டு வினவிய போது, கௌதாரிமுனையில் உள்ள கமக்காரர் அமைப்பு மற்றும் பொதுமக்கள் குறித்த மாடுகள் அங்கு கொண்டு சென்று விடப்படுவதை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார்.

அங்கு இந்த மாடுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதனால் தாம் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

தனது பிரதேச சபையின் எல்லைக்குள் முன்அனுமதி இன்றி இம்மாடுகளை கொண்டு வந்ததை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

எம்.தமிழ்ச்செல்வன்