விடுமுறைக்கு யாழ். வந்தவர் இளைஞன் மீது தாக்குதல்

ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளதுடன் குறித்த நபர், தனது சகோதரியின் குடும்பத்தினருடன் மற்றும் சகோதரியின் கணவனுடன் முரண்பட்டுள்ளார். 

குறித்த நபர் , தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் திங்கட்கிழமை (14) அன்று  மது அருந்தியுள்ளார்.

அவ்வேளை , ஏற்கனவே முரண்பட்ட சகோதரியின் கணவனின் நண்பர் அவ்வழியே சென்ற போது  நிறை போதையில் இருந்த கும்பல் அவ்விளைஞனை வம்புக்கு இழுத்து தர்க்கம் புரிந்து , மண்வெட்டி பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். 

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

தாக்குதலாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,  ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் மீண்டும் ஜேர்மன் நாட்டுக்கு தப்பி செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.