இந்திய இழுவைப் படகு பிரச்சினை

நீண்டகாலமாக முடிவற்றுத் தொடர்கின்ற பிரச்சினை இது. இந்த நெருக்கடி, பல்பரிமாணங்களைக் கொண்டது. அரசியல் ரீதியாக இரு நாடுகளும் பேசித் தீர்க்கக்கூடிய பிரச்சினை. ஆனால், அதற்கு இரண்டு நாடுகளும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியாவுடன் பேசித்தீர்க்கவேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளன. அந்த வரிசையில், இந்திய மீனவர்களால் வடபுலத்து மீனவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், முன்னிலையில் இல்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை, “பெரியண்ணன்” ஏன் பேசவேண்டும் என்பதே நிலைப்பாடு. இதில் பாதிக்கப்படுவது, இரண்டு நாடுகளிலும் உள்ள அப்பாவி மீனவர்களே.

இந்தப் பிரச்சினையின் கதை, கொஞ்சம் நீண்டது. அதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம். பாக்கு நீரிணை மீன்பிடித் தொடர்பாக, இலங்கை-இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இருந்துவந்த மோதல், இப்போது புதிய தளத்தை எட்டியுள்ளது.

இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின் முடிவும் அண்மைய ஆட்சி மாற்றத்தின் பின்னரான கள நிலைமைகளும், இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியைப் புதிய பரிமாணத்துக்குக் கடத்தியுள்ளது. இலங்கைக் கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய பிரவேசமும் மீன்பிடியும், வளங்களின் சூறையாடலும், அவற்றுக்கு இந்திய அரசாங்க ஆதரவும், இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைகளின் கள்ள மௌனமும் ஒன்றோடொன்று இணைந்துள்ளமை தவிர்க்கவியலாதது.

கவனிக்க வேண்டிய இன்னோர் அம்சம் யாதெனில், இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்களுக்காக, இந்த வளக்கொள்ளை, நடைமுறையில் சாதாரண இலங்கை, இந்திய மீன்பிடித் தொழிலாளருக்கிடையினதாகத் தோற்றம் பெறுவதாகும்.

இரண்டு பகுதிகளாக அமைகின்ற இந்தப் பத்தி, இப்பிரச்சினையை மூன்று அடிப்படைகளில் அணுகுகிறது.

முதலாவதாக, இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப் பிரச்சினைக்குள்ளானது எவ்வாறு என்பதையும் அதன் காரணங்களையும், வரலாற்று நோக்கில் ஆராய்கிறது.

இரண்டாவதாக, அங்கு நிகழும் ஒவ்வாத மீன்பிடிச் செயற்பாடுகள், எவ்வாறு கடல் வளத்தையும் நீண்டகாலத்தில் மீன்வளத்தையும் பாதிக்கின்றன என்பதையும் நோக்குகிறது.

மூன்றாவதாக பிரச்சினையின் பின்னால் உள்ள அரசியல் நலன்களை, குறிப்பாக இந்திய அரசின் பிராந்திய நலன்களும் இலங்கை அரசினதும் தமிழ் அரசியல் தலைமையினதும் மௌனங்கள் பற்றிய ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தர முனைகிறது. இவற்றின் அடிப்படையில், எதிர்காலத்தில் இலங்கையின் வடக்கு மீன்வளத்தைப் பாதுகாக்க உகந்த காப்பு நடவடிக்கைகளையும் அவற்றின் சாத்தியங்களையும் ஆராய்கிறது.

இந்தியாவில் 1960களில் அறிமுகமான இழுவைப் படகுகள், புதிய மீன்பிடிமுறையை அறிமுகப்படுத்தின. இது, “நீலப் புரட்சி” என அழைக்கப்பட்டது. சாதாரண மீன்பிடி முறைகட்குப் பழக்கப்பட்டிருந்த மீனவர்கட்கு, இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளும் பின்னர் தனியார் தொண்டு நிறுவனங்களும், கடன்களையும் உதவிகளையும் வழங்கி, இழுவைப் படகுகளின் பயன்பாட்டை ஊக்குவித்தன. இதனால், மீன்பிடியில் பெருமுதலாளிகளின் பங்கு வலுத்ததுடன், சுயதொழிலாக மீன்பிடியை மேற்கொண்ட சாதாரண மீனவர்கள், நெருக்கடிகளை எதிர்நோக்கினர். காலப்போக்கில், அவர்கள் முதலாளிகளின் இழுவைப் படகுத் தொழிலாளிகளாக வேலை செய்வதற்கே அது வழிவகுத்தது.

1980க்கும் 1996க்கும் இடையில், தமிழ்நாட்டில் இழுவைப் படகுகளின் பாவனை பாரியளவு அதிகரித்தது. இக்காலப் பகுதியில், மீன்பிடியின் அளவு இருமடங்காகியது. அதனால், இழுவைப் படகுகளின் தொகை மேலும் அதிகரித்தது.

2015ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, தமிழ் நாட்டில் தற்போது 5,500 இழுவைப் படகுகள் உள்ளன. அவற்றில், கிட்டத்தட்ட 2,800 மீன்பிடிக்கு, இலங்கைக் கடற்பரப்பையே நம்பி இருக்கின்றன. அதேவேளை, இலங்கையில் இழுவைப் படகுப் பாவனை, முற்றாகத் தடைக்குட்பட்டுள்ளது என்பதை நினைவிற் கொள்வது தகும்.

மறுபுறம், 1974ஆம் ஆண்டு இலங்கை-இந்திய உடன்படிக்கைப்படி, சர்வதேச கடற்பரப்பு எல்லைக்கோடு (IMBL) தீர்மானிக்கப்பட்டது. இது, பாக்கு நீரிணையை இறைமையுள்ள இரண்டு நாடுகளின் கடற்பரப்புகளாகப் பிரித்தது. இரு நாட்டு மீனவர்களும், தொடர்ந்தும் குறுகிய காலத்துக்குப் பாரம்பரியக் கடற்பரப்பில் மீன்பிடிக்க உடன்பாடு அனுமதித்தது. எனினும், மீன்பிடிப்பு அந்தக் காலவரையறைக்குப் பின்னும் தொடர்ந்தது.

பாரம்பரிய மீன்பிடி முறை தொடர்ந்தளவும், அந்த மீன்பிடிப்பு பற்றி இரு தரப்பு மீனவர்கட்கும் தகராறு இருக்கவில்லை. இழுவைப் படகுகளின் வருகையுடனேயே முரண்பாடு எழுந்தது. எனினும் இன்று, பாரம்பரிய மீன்பிடி முறையிலில்லாமல், இழுவைப் படகுமுறையில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், அந்த எல்லைக்கோடு சட்டவிரோதமானது என்று அதை ஏற்கமறுத்து தமது பாரம்பரிய மீன்பிடிக் கடற்பரப்பை விட்டுத்தர முடியாதென்றுக் கூறுகிறார்கள்.

1980களில், இலங்கையில் வலுத்த யுத்தம், இலங்கை மீனவர்களின் வாழ்க்கையைப் பாதித்தது. குறிப்பாக, மீன்பிடிக்கு விதித்த தடைகளும் கட்டுப்பாடுகளும், வடபகுதி மீனவர்களின் மீன்பிடியைக் கிட்டத்தட்ட இல்லாமலாக்கியது. அதை, இந்திய மீனவர்கள் வாய்ப்பாக்கினர். ஒரு சிக்கலுமின்றி இந்தியப் படகுகள் இலங்கைக் கடலில் கோலோச்சின.

1990ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, இலங்கை அரசாங்கம், வடக்கில் ஆழ்கடல் மீன்பிடியை முற்றுமுழுதாகத் தடை செய்தது. மேலும், உயர் பாதுகாப்பு வலயங்கள் மீன்பிடிக்கு வாய்ப்பான பாரம்பரிய மீன்பிடிக் கடற்கரைகளை உள்வாங்கியமையும், வடக்கில் பாரிய மீன்பிடி வீழ்ச்சிக்கு உதவியது. 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2005 வரை, போர்நிறுத்த உடன்பாடு நடைமுறையிலிருந்த காலத்தில் மட்டும், வடபகுதி மீனவர்கட்குக் குறையளவான ஆழ்கடல் மீன்பிடி அனுமதிக்கப்பட்டது.

1982ஆம் ஆண்டு, வடபகுதி மீன்பிடியின் அளவு, இலங்கையின் மொத்த மீன்பிடியில் இருபத்தைந்து சதவீதமாகும். இது, 2011ஆம் ஆண்டு, வெறும் ஆறு சதவீதமாகக் குறைந்து, 2015ஆம் ஆண்டளவில் பதினொரு சதவீதமாகி யுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தமே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இந்நிலை, வடபகுதி மீனவர்களின் மீன்பிடியை இல்லாமல் செய்ததுடன், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி மீன்பிடிக்க வழிசமைத்தது.

இலங்கை-இந்திய மீனவரிடையான சிக்கலுக்கு, பல பரிமாணங்கள் உள்ளன. அவற்றில் பிரதானமானது, இலங்கைக்குரிய கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதாகும். குறிப்பாக, உள்நாட்டு யுத்தம் முடிந்து, ஆழ்கடல் மீன்பிடிக்கு விதித்திருந்த தடைகள் நீங்கிய நிலையில், இலங்கையின் ஆட்புல எல்லைக்குட்பட்ட, வடபகுதி மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில், இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது பாரிய பிரச்சினையாகும்.

பிரச்சினையை இரு பகுதியினரும் நோக்கும் விதம் வேறுபடுகிறது. இந்தப் பிரச்சினை குறித்து, இந்திய அயலுறவுகளுக்கான அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜிடம் கேட்டபோது, “மீனவர்கள் மீன்களைத் தேடிச் செல்வோர். எங்கே மீன் உண்டோ அங்கே அவர்கள் மீன் பிடிப்பார்கள்? அவர்களுக்குத் தேச அரசுகளின் எல்லை பற்றிய கவலையோ அக்கறையோ கிடையாது” என்றார். இந்தியாவின் பொதுவான நிலைப்பாடு இதுவே.

பாக்கு நீரிணை மீன்பிடியில் உள்ள சிக்கல்களை ஆராயும் இந்திய ஆய்வாளர்களும், இந்த நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள். இது, மிக ஆபத்தானதும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதுமான நிலைப்பாடு என்பதை நாம் மறக்கலாகாது.

இலங்கையில் தடைக்குட்பட்ட இழுவைப் படகுகளை, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் பயன்படுத்துவதால், இலங்கை மீனவர்கள் கடலின் மேற்பரப்பை அண்டி விரிக்கும் வலைகளை, இந்திய இழுவைப் படகுகள் வாரிச்சென்று கடலடிக்கு அமிழ்த்துகின்றன. அடிக் கடலுக்குள் இழுபடும் வலைகள், பெரும்பாலும் தொலைந்து போகின்றன. எஞ்சுகிற வலைகளும் பாவனைக்குதவாது போவதோடு, மீனவர்களது அன்றாட வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடிக்கும் போது, வடபகுதி மீனவர்கள் மீன்பிடிக்க முடிவதில்லை. இதனால், இழுவைப் படகுகள் மீன்பிடிக்கும் நாள்களில், வடபகுதி மீனவர்கள் பெரும்பாலும் மீன்பிடிப்பதில்லை.

இந்திய மீனவர்களின் பெரும் இழுவைப் படகுகள், நாட்டின் பவளப் பாறைகளையும் கடற் படுக்கையையும், மீன்களையும் அழிக்கின்றன. இது குறித்து ஆய்வு செய்யும் பேராசியர் ஒஸ்கார் அமரசிங்க, கடல் அட்டைகளையும் பிற கடல்வாழ் உயிரிகளையும் இந்தியாவுக்குக் கொண்டுசெல்வதால், இலங்கைக்கு வருடத்துக்கு ஐநூறு கோடி ரூபாய் நட்டம் எற்படுவதாகக் கணித்துள்ளார். இது, 2011ஆம் ஆண்டுத் தரவுகளின் அடிப்படையிலான கணிப்பீடு. இத்தொகை, இப்போது இன்னும் அதிகமாக இருக்கலாம்.

இருதரப்பு மீனவர்கட்குமிடையில் தொடர்ச்சியாக நடைபெறும் பேச்சுகள், சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் உடன்பாட்டையும் எட்டியுள்ளன. ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2010ஆம் ஆண்டு, இரண்டு தரப்புகளும் அடைந்த உடன்படிக்கை முக்கியமானது. அதில், வருடத்தில் 70 நாள்கள் இலங்கைக் கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பதென்றும் ஓராண்டுக்குள் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் பாவனையை முற்றாக நிறுத்த வேண்டும் என்றும் கண்ட உடன்பாடு, இலங்கை, இந்திய அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்திய அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது.

இந்தப் பிரச்சினை வெறுமனே பொருளாதாரப் பிரச்சினையோ அல்லது வாழ்வாதாரப் பிரச்சினையோ மட்டுமல்ல. இது மிகப்பெரிய கடல் வள, சூழலியல் பிரச்சினை.

(இது குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்)