மறக்கப்பட முடியாத 1983 ஆடிக் கலவரம்…

ஈழ மக்களின் வாழ்வில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய பேரினவாதத்தின் செயற்பாடாக அடையாளப்படுத்தப்படுவது 1983 ம் ஆண்டு ஆடிக் கலவரம். இந்த செயற்பாட்டிற்கான சிந்தனை நாஜி ஹிட்டலரின் செயற்பாட்டிற்கு குறைவில்லாமல் பார்க்கப்பட்டாலும் இதில் உள்ள தவறான செயற்பாடு இந்த சிந்தனையின்பால் உள்ளவர்களால் இன்று வரை உணரப்பட்டதாகவும் அறிய முடியவில்லை.

இதற்கு முன்பும் 1915 ஆண்டிலிருந்து பேரினவாதத்தின் செயற்பாடுகளாக இலங்கையில் கலவரங்கள் நடைபெற்றாலும் 1983 ஆடிக் இன அழிப்புக் கலவரம் அதிகம் அடையாளப்படுத்தப்படுவதற்கு இந்த கலவரத்தின் பின்னரான செயற்பாடுகளும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.

இதற்கு முன்பு 1977 ம் ஆண்டு நடைபெற்ற கலவரம்தான் அதிகம் தமிழ் மக்களை தென் இலங்கையில் இருந்து வட பகுதி நோக்கி அகதிகளாக அதிகம் இடம் பெயர வைத்த கலவரமாக இருந்தது.

இதில் ஜே.ஆரின் இன விரோதக் கருத்தான ‘போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்’ என்ற ‘பிரகடனம்’ அப்பட்டமான இனவாத கருத்தாக அதுவும் ஒரு நாட்டின் அதி உயர் பதவியில் இருக்கும் தலைவரின் செயற்பாடாக பார்க்கப்படுகின்றது.

கூடவே 1983ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி, லண்டன் ‘டெய்லி ரெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஒரு செவ்வியில் ‘யாழ்ப்பாண மக்களின் (தமிழ் மக்களின்) அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை நாம், அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்” என்று அப்பட்டமான இனவெறி அரசியலை, வெளிப்படையாக உலகுக்கு அவர் சொல்லியிருந்தார்.

ஆனால் இவை ஜேஆரின் மேற்குல செல்லப் பிள்ளையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற வெற்றியும் தமக்கான ஆடுகளமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் தாம் விரும்பு அரசு அமைந்ததிருந்தபடியால் இதனை இன்று மனித உரிமைகள் போர் குற்றம் என்று பேசும் அமெரிக்க மேற்குலகக் கூட்டாளிகள் அதிகம் அன்று அலட்டிக் கொள்ளவில்லை.

அன்று உலகம் இரண்டு முகாங்களாக சோவியத்யூனியன், அமெரிக்கா என்று பலமாக இருந்த நிலையில் சிறீமாவோ பண்டார நாயக்காவின் இடதுசாரி அரசையும் அவர்களுடன் நட்பாக சோவியத்தின் நட்பு நாடாக இருந்த இந்தியாவையும் எதிர்த்து தமக்கான களம் அமைக்க உருவான அரசாகவும் திறந்து பொருளாதாரக் கொள்கைகளை ஏற்படுத்த உதவும் சுரண்டல் அதிமான ஜேஆர் அரசு அமைந்தபடியால் அதனை மேற்குலக முதலாளித்துவம் தனது நிபந்தனை அற்ற ஆதரவுகளை மௌனத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

அன்று இலங்கை அரசின் இந்த இன அழிப்புச் செயற்பாட்டை உலக நாடுகள், ஐ.நா, அமெரிக்க கூட்டாளிகள் கண்டு கொண்டிருந்தால் 1983ம் ஆண்டு கலவரம் இன்று பேசப்படும் அளவிற்கு அதி கொடூரமாக வளர்ச்சியடைந்து இருக்குமா என்பது இங்கு பேசு பொருளாகி நிற்கின்றது.

கூடவே இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெலிக்கடைச் சிறைப் படுகொலையும் அதில் அதிகம் பிரபல்யமான ஈழவிடுதலை தனிநாடு கோரி போராடும் குட்டிமணி, தங்கத்துரை, தேவன் போன்றவர்களின் கண்கள் புடுங்கப்பட்டு புத்தனின் காலடியில் போட்டு மிதிக்கப்பட்ட செயற்பாடுகளும் கறுப்பு ஜுலை என்று இன்றுவரை மறக்கப்படாத அவலங்களாக தொடர்கின்றது.

இதனை தனது அரசியலுக்கும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பிராந்திய வல்லரசு செயற்பாட்டை கேள்விக் குறியாக்கிய ஜேஆர் அமெரிக்காவின் செயற்பாடுகளை இலங்கையில் இந்திய அரசின் கண்டிப்பான மறுப்பையும் மீறிச் செயற்பட்ட செயற்பாட்டிற்கு பாடம் புகட்ட அன்றை இந்திய அரசு அதன் தலைவர் இந்திரா காந்தி கையில் எடுத்துக் கொண்டார்.

சரி பிழைகளுக்கு அப்பால் பாராளுமன்ற மிதவாதத் தலமைகளின் செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்து தமிழ் இளைஞர்கள் தமிழ் மக்களுக்கான உரிமைகளை தனியாக பிரிந்து சென்று தனி நாடு அமைத்தல் அதுவும் ஆயுதப் போராட்ட மூலம் சாத்தியப்படுத்தலாம் என்ற செயற்பாடுகள் 1970 களின் நடுப்பகுதியில் இருந்து கருகொண்டு மெதுவாக வளர்ச்சியடைந்து நிலையில ஒரு விழுங்கிப் பெருக்கும் செயற்பாட்டிற்கு இந்திய அரசின் ஆதரவு பயிற்சி தளங்களை அமைத்தல் என்பன காரணிகள் ஆகிற்று.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஓட்டத்தில் இருந்த இடதுசாரித்தன்மையும், வலதுசாரித் தன்மையுமான இரு முகாங்களில் இடதுசாரி முகாம் வீழ்த்தப்பட வேண்டும் வலதுசாரி முகாம் பலம் பெறுவது பரவாய் இல்லை தேவை இல்லாத போது அதனை வெட்டித் தறிக்கலாம் என்ற மேற்குல பார்வையும் இங்கு வெற்றி பெறுவதற்கு இந்த 1983ம் ஆண்டுக் கலவரம் காரணம் ஆயிற்று.

படிமான, பரிமாண வளர்ச்சியும் மக்கள் இயக்கமாக அரசியல் மயப்படுத்தப்பட்ட விடுதலை அமைப்புகளாக தம்மை முழுமையாக வளர்த்துக் கொள்ளவதற்குரிய அவகாசத்தை கலைத்ததாக அமைந்த 1983ம் கலவரம் இறுதியில் 1986 இற்கு பின் ஈழவிடுதலை அமைப்பிற்குள் வலதுசாரித் தலமை மேலோங்கி அது இறுதியில் பாசிசமாகி வெட்டித் தறிக்கப்பட்டது. அதனை அவர்களை நீரூற்றி வளர்த்துவிட்டர்களின் ஆசீர்வாதத்துடனும் நிறைவேற்றி முடிக்கப்பட்டது.

1983ம் ஆண்டு இனக்கலவரம் ஏற்படாவிட்டால் இன்று இலங்கையில் ஒரு பலம் மிக்க இடதுசாரிக் கருத்தியல் சக்தி தமிழர் தரப்பில் பலம் பெற்றிருக்கும்….

1977 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜேஆரின் முதன்மை செயற்பாடாக இலங்கையில் பலம் பெற்றிருந்த தொழிற்சங்க செயற்பாடுகளும் இடதுசாரிக் கருத்தியல்களையும் அழிப்பது அல்லது பலவீனப்படுத்துவது.. தொழிற்சங்களை கருவறையில் அறுத்து பலவீனமாக்கிய செயற்பாட்டில் இருந்து இன்று வரை 1977 இற்கு முன்னரான அளவிற்கு பலமாக தொழிற்சங்கங்களால் பலமாக எழுந்து வர முடியவில்லை என்பதை நாம் அண்மையில் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிரான ஜோசப் ஸ்டாலின் தலமையிலான தொழிற்சங்க செயற்பாடுகளில் அவதானிக்க முடியும்.

நாஜிகளின் போலந்து ‘ஒஷ்விட்ஸ்’ சித்திரவதை முகாமின் நினைவுகளை தாங்கிய வண்ணம் பேணப்படும் ஒரு கட்டடத்தின் நுழைவாசலில் ‘வாழ்வுக்கான காரணம்’ (The Life of Reason) எனும் நூலின் ஆசிரியர் ஜோர்ஜ் சன்ரயானா, தனது நூலில் எழுதியிருந்த, ‘வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், வரலாற்றை மீள அரங்கேற்றுவதற்குச் சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்’ என்ற வாசகம், எழுதப்பட்டிருக்கின்றது.

இதற்கு ஒத்த கருத்தியலுடன் 83 ஆடிக்கலவரத்திற்கான நினைவலைகளை அதற்கான பொறுப்பை ஏற்று இலங்கை அரசு மேற்கொள்ளும் என்று நம்பிய நாம் இன்று வரை ஏமாற்றங்களையே கண்டுவருகின்றோம்.

1983இல், இலங்கையில் அரங்கேறிய ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் அடிப்படை வேற்று இனங்கள் மீதான வெறுப்புத்தான் காரணம். அதற்கு உதாரணமாக அன்றைய பிரபல்ய ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் 1983 மே 19 ஆம் திகதி, டி சில்வா என்ற ஒரு வாசகர் எழுதிய கடிதமானது…. ‘வடக்கு, கிழக்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும். பொலிஸ், இராணுவம் ஆகிய படைகள் மேலதிகமாக அனுப்பப்பட்டு, பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட வேண்டும். அவர்களைக் கண்டவுடன் சுட வேண்டும். பாரம்பரிய தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் பிரதேசங்களில், சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ஈழம்’ என்ற ஒன்று வழங்கப்படாது என்ற பிரகடனத்தை வெளியிட வேண்டும். வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படைகளை வைத்திருப்பதற்கான மேலதிக செலவானது, அங்கு வசிக்கும் தமிழர்களிடம் விசேட வரியொன்றை விதிப்பதனூடாக ஈடுசெய்யப்படலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதிக்கப்படுவோருக்கு எந்த நட்டஈடும் வழங்கக் கூடாது’ பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்த வெறுப்பு அரசியலை சிந்தனையே இன்றுவரை கடைப்பிடிகப்படுவதும் அதற்கான உறுதியான கட்டடம் அமைக்கப்பட்டதாக 1983ம் ஆண்டு ஆடிக் கலவரத்தை பார்க்க வேண்டி இருக்கின்றது.

டி.எஸ். சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமிட்ட குடியேற்றம் இங்கினியாகலையில் ஆரம்பித்து சேருவாலை என்ற பெரும்பான்மை மக்களின் குடியேற்றமும் போர்காலத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட பதவியா டொலர் கென் பாம் குடியேற்றங்களும் என்று இன்று வரை புற்று நோயாக தமிழ் மக்களை அவ்வப் பிரதேசங்களில் சிறுபான்மையாக்குவதும் வடக்கு கிழக்கு என்று தொடர்ச்சியாக இருந்து நிலப்பரப்பை பல துண்டுகளாக தொடர்ச்சியற்று உடைப்பதாக அமைக்கும் செயற்பாடுகள் இன்று வரை தொடர்நது கொண்டுதான் இருக்கின்றது.

இதற்கான வேகப்படுத்தல் 1983ம் ஆண்டு ஆடிக் கலவரம் அதனுடன் வேகம் எடுத்த ஆயுதப் போராட்ட காலமும் ஆகி யுத்தம் முடிந்த 2009 பின்னரான காலத்திலும் இவை தொடரவே செய்கின்றன.

பல்லினங்கள் சேரந்து வாழும் சகோதரத்துவம் வளர்ம் கப்டுவதற்கு பதிலாக 1983 ம் ஆண்டு ஆடிக்கலவர வெறுப்புணர்வுச் செயற்பாட்டின் எச்சங்களை காவித்திரியும் பேரினவாதச் செயற்பாட்டில் அரசை கட்டமைக்க முயலும் அழிவுப் பாதையிலதான் இலங்கை சென்று கொணடிருக்கின்றது.

இந்த வகையிலேயே இந்த வருட 1983ம் ஆண்டு ஆடிக் கலவரத்தை நாம் நினைவு கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளோம்.

ஆனாலும் 1983 ம் ஆண்டு ஆடிக் கலவரமும் இதனைத் தொடர்ந்த வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் உலக அரங்கில் ஏற்படுத்திய எதிர்பலைகளால் இன்றுவரை ‘போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்’ என்று ‘போர்ப் பிரகடனம்’ செய்து இலங்கையில் இனவழிப்பை பகிரங்கமாகச் செய்ய முடியவில்லை. இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக ஈழவிடுதலைப் போராட்டமும் அமைந்திருந்தது என்பது விடுதலைப் போராட்டத்தின் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பால் உண்மையானது.

ஆனால் ‘மௌனித்த’ இனவழிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது பேரினவாதம். வேறு வேறு வடிவங்களில் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

‘வாழ்ந்தால் எல்லோரும் வாழ்வோம் அன்றேல் எல்லோரும் வீழ்வோம்” என்பது சிறுபான்மை மக்களுடன் பெரும்பான்மை மக்களையும் இணைத்ததான உண்மை நிலை என்பதை இலங்கை ஆளும் அரசுகள் ஆளும் வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த புரிந்துணர்வு சகோதரத்துவம் உருவாகாது விட்டால் வீழ்வது நாம் எல்லோருமாகத்தான் இருப்போம் அது இலங்கையராக…? தமிழ் பேசுபவர்களாக…. சிங்களம் பேசுபவர்களாக….