விதைகளுக்கு உயிர்கொடுத்தவர்: ‘நெல்’ ஜெயராமனுக்கு பிரபலங்கள் இரங்கல்

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் சென்னையில் வியாழன் அன்று காலை காலமானார். புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஜெயராமன் தன் வாழ்நாள் முடியும் வரை விவசாயிகள் நலன் மீது அக்கறை கொண்டிருந்தார். அவருக்கு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ட்விட்டரில் நெல் ஜெயராமன் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த பிரபலங்கள் சிலரின் பதிவுகள் இதோ:இயக்குநர் சசிகுமார்

நெல் மணி நமக்கு உயிர் கொடுக்க.. அந்த நெல் மணிக்கே புத்துயிர் கொடுத்தவர் நெல் ஜெயராமன் அவர்கள். இயற்கையைப் போற்றிய அவரை நாம் என்றென்றும் போற்றுவோம்,பாரம்பரிய விதைகளைக் காப்போம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்த ‘நெல் ஜெயராமன்’ மறைவெய்திய செய்தியறிந்து அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினேன். இயற்கையை சீர்கெடச் செய்யாமல் அதனை மேம்படுத்தும் வழிகளை நாம் மேற்கொள்வதே நெல் ஜெயராமனுக்கு என்றென்றும் புகழ் சேர்க்கும் பணியாக அமையும்!

இயக்குநர் சேரன்

நமது பாரம்பரிய நெல்விதைகளை பாதுகாத்து இயற்கைவிவசாய முறையை மீண்டும் பரவச்செய்ய தன் வாழ்வை அர்ப்பணித்த அய்யா ஜெயராமன் அவர்களுக்கு என் ஆழ்ந்த அஞ்சலி….

ஒளிப்பதிவாளர் வெற்றி

தமிழகத்தின் வழக்கொழிந்த 174 நெல் ரகங்களை மீட்டெடுத்து பெருஞ்சாதனை செய்தவரும் நம்மாழ்வார் சீடராக இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் சேர்க்க பெரும் உழைப்பை கொடுத்தவருமான திரு நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்தாருக்கே இழப்பாகும்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

நம்முடைய பாரம்பரிய நெல் ரகங்களை காக்க வாழ்நாள் எல்லாம் போராடிய திரு.நெல் ஜெயராமன் அவர்கள் இன்று காலை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன், சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன்.

நடிகர் கமல்ஹாசன்

தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா

நமது பாரம்பரிய நெல் வகைகளைப் பாதுகாத்து அதை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மூலம் பயிரிடச்செய்த நெல் ஜெயராமன் அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்