அந்தத் தேசப்பற்றாளர்கள் எங்கே?

அக்குழுக்கள் பெரும்பாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களாக இருந்தமையால், அப்பிரசாரத்தில் ஓர் அரசியல் நோக்கமும் தென்பட்டது.

எதிர்வரும் தேர்தல்களின் போது, முஸ்லிம்கள் தம்மை ஆதரிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டில், அந்த மக்களின் வாக்குகள் அவசியமில்லை என்றதோர் எண்ணத்தில், இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவே அப்போது கருதப்பட்டது.

எனவே, அந்த முஸ்லிம் விரோத பிரசாரம், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரையில், அடுத்த பொதுத் தேர்தல் வரை நீடிக்கும் என்றும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது, அது தீவிரமடையும் என்றும் கருதப்பட்டது. இந்த இனவாதப் பிரசாரம், அரசியல் நோக்கம் கொண்டது என்றும் எனவே, அது ஜனாதிபதித் தேர்தல் வரை நீடிக்கும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு கூட்டத்தின் போது கூறியிருந்தார்.

ஆனால், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய நிலையில், தற்போது நிலைமை மாறியிருக்கிறது போல் தெரிகிறது. வெற்றி பெறுவதற்காகவே போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, தாம் தேசப்பற்றாளர்கள் என்று பறைசாற்றிக் கொண்டு, சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களைச் சீண்டியும் அச்சுறுத்தியும் இஸ்லாத்தை நிந்தித்தும் வந்த பௌத்த தீவிரவாதிகள், அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, நாட்டின் தென் பகுதிகளில் சிறுபான்மையினரின் வாக்குகளை மொத்தமாக பெற்றுக் கொண்டும், ஐக்கிய தேசிய கட்சி சுமார் 36 இலட்சம் வாக்குகளையே பெற்றது. பொதுஜன பெரமுன, சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை அவ்வளவாகப் பெறாத நிலையிலும், 49 இலட்சம் வாக்குகளைப் பெற்றது.

எனவே தான், பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளின்றியே தமக்கு, ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என ஆரம்பத்தில் கருதியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால், பின்னர் அவர்கள் வேறு விதமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஏனைய தேர்தல்களைப் போல் ஜனாதிபதித் தேர்தலின் போதும், வெற்றி பெறுபவர் தோல்வியடைபவர்களை விடக் கூடுதலாக வாக்குகளைப் பெற்றால் மட்டும் போதாது. அவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். அவ்வாறு இல்லாவிட்டால், இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணியே, வெற்றி பெறுபவர் தீர்மானிக்கப்படுவார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன 62 இலட்சம் வாக்குகளையும் மஹிந்த ராஜபக்‌ஷ 58 இலட்சம் வாக்குகளையும் பெற்றனர். எனவே, இம்முறை வெற்றி பெறுபவர் குறைந்த பட்சம் 65 இலட்சம் வாக்குகளைப் பெற வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது, சாத்தியமா என்று எழுந்துள்ள சந்தேகமே, மொட்டு கட்சியினர் என்றழைக்கப்படும் பொதுஜன பெரமுனவினர் சிறுபான்மையின வாக்குகளை நாடக் காரணமாய் இருக்கிறது என்று கருதலாம்.

இந்த நிலையில், கடந்த காலத்தில் அந்த முஸ்லிம் விரோதிகள் தூக்கிப் பிடித்த சில விடயங்கள், காணாமற் போயுள்ளதை அவதானிக்க முடிகிறது.

4,000 பௌத்த பெண்களை மலடிகளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குருநாகல் மருத்துவர் முஹம்மத் ஷாபியை, அவர்கள் முற்றாக மறந்து விட்டனர் போலும். 4,000 பெண்களை மலடிகளாக்குவது என்றால் இலேசான விடயமா? அதனை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா? ஆனால், மறந்துவிட்டார்கள்.

எனவே, இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியவர்களின் இனப் பற்று, உண்மையான இனப்பற்றாக இருக்குமா? அல்லது, இது பொய்க்குற்றச்சாட்டு என்பதை அறிந்தும், இனவாதத்தால் சுயதிருப்பதி அடைவதற்காக, அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்களா என்பதை, இப்போது நன்றாக விளங்கிக் கொள்ள முடியும்.

அதேபோல், ஐ.தே.க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, கடந்த காலங்களில் செயற்பட்டமையை பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் ஏதோ தேசத் துரோகமாகக் கருதுவதாகவே தெரிந்தது. எதற்கெடுத்தாலும் ஐ.தே.க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைப்படி செயற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

கூட்டமைப்பும் குறிப்பாக, அதன் தலைவர் இரா. சம்பந்தன், அதன் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், நாட்டை பிளவுபடுத்த கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படும் பயங்கர சக்திகளாகவே, அவர்கள் சித்திரித்தனர்.

ஆயினும், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கவே நிலைமை மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பது இப்போது பாவமாகக் கருதப்படுவதில்லை.

தமது கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்ததை நடத்தவிருப்பதாகவும் ராஜபக்‌ஷவின் கோரிக்கையின் பேரிலேயே அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் அண்மையில் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இது எவ்வாறு சாத்தியமாகும்? இது சாத்தியமாவதற்கு ஒன்றில் கூட்டமைப்பு மாறியிருக்க வேண்டும். அல்லது பொதுஜன பெரமுன மாறியிருக்க வேண்டும்.

இது சாத்தியமாவதாக இருந்தால், ஒன்றில் கூட்டமைப்பின் பார்வையில் பொதுஜன பெரமுன இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைகளைச் செய்த தலைவர்களின் கட்சியல்ல; அதேபோல், பொதுஜன பெரமுனவின் தலைவர்களின் பார்வையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலிகளுடன் இணைந்து நாட்டைத் துண்டாட முயற்சித்த கட்சியல்ல.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்தார். ஆனால், இறுதியில் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முற்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியால், ஐ.தே.க ஆட்சி காப்பாற்றப்பட்டது.

தமிழர்களுக்கு நாட்டைத் தாரைவார்த்துக் கொடுக்க வாக்குறுதி அளித்தே, மஹிந்தவின் அரசாங்கத்தை, ரணில் விக்கிரமசிங்க கவிழ்த்ததாக, அப்போது பொதுஜன பெரமுனவினர் கூறினர்.

அந்தத் தமிழ்க் கூட்டமைப்புடன் தான், இப்போது பேச்சுவார்த்தை நடத்த கோட்டா அழைப்பு விடுத்துள்ளார். ஓரிரு மாதங்களுக்கு முன்னர், கடும் தேசப்பற்றாளர்களாக இருந்தவர்கள், அந்த அழைப்புக்கு எதிராகக் குரல் எழுப்புவதாகத் தெரியவில்லை.

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் இலக்குகளாகினர். அந்தப் பௌத்த தீவிரவாதிகளின் பின்னணியில், பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளே இருந்தனர்.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வும் அவ்வாறு இலக்கானவர்களில் ஒருவராவர். அவரும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் நோக்கம் எதுவாக இருந்தாலும், அதனால் கோட்டாபய பயனடையப் போகிறார் என்பது தெளிவானதாகும்.

ஹிஸ்புல்லாஹ்வுக்குத் தமிழர்களோ, சிங்களவர்களோ வாக்களிக்கப் போவதில்லை; ஓரிருவர் ஆங்காங்கே வாக்களிக்கலாம். அவர் பெரிதாக வாக்குகளைப் பெறாவிட்டாலும் முஸ்லிம்களே அவருக்கு வாக்களிப்பர்.

முஸ்லிம்களில் ஒரு சிலரைத் தவிர்ந்த ஏனைய அனைவரும், சஜித்துக்கு வாக்ளிப்பர் என்றே தெரிகிறது. அந்த வாக்காளர்களில் சிலர், ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால், அதன் பயன் கோட்டாவையே சென்றடையும்.

எனவே, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகக் குரல் எழுப்பிய பௌத்த தீவிரவாதிகள், அவர் ஜனாதிபதியாவதற்கு போட்டியிடுவதைப் பற்றி எதுவுமே கூறுவதில்லை.
இது தான், தேசப்பற்றின் இலட்சணம்.

தேசப்பற்று: மேலும் சில உதாரணங்கள்

ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநராகவிருந்த அஸாத் சாலி, வர்த்தக வணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர், பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றே கடந்த மே மாதம் 31 ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், ‘சாகும் வரை’ உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த மூவரும், ‘முஸ்லிம் பயங்கரவாதிகள்’ என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஹிஸ்புல்லாஹ்வின் ‘பற்றிகலோ கம்பஸ்’ எனப்படும் பல்கலைகழகத்துக்கு எதிராக, ரத்தன தேரர் பெரும் போராட்டத்தையே நடத்தினார்கள். ஆனால், ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவொரு சதித் திட்டமோ, குறுகிய நோக்கமோ இருப்பதாகக் கோட்டாவை ஆதரிக்கும் ரத்தன தேரர் காணவில்லை.

அவர் இப்போதும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதோ, ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதைப் பாவித்து, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைத் தூண்ட வேண்டும் என்பதோ, இதன் அர்த்தம் அல்ல.

ஆனால், ரத்தன தேர் போன்றோர்களின் தேசப்பற்றின் உண்மையான சுபாவத்தைப் புரிந்து கொள்ள, இது நல்லதொரு சந்தர்ப்பமாக இருக்கிறது என்பதே எமது வாதமாகும்.

மதுமாதவ அரவிந்த என்பவர், ஒரு சிங்களப் பாடகர், நடிகர். அதேபோல், அவர் கடந்த வாரம் வரை, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரதித் தலைவராக இருந்தார். அண்மையில், கோட்டாவுக்கு ஆதரவாக நடைபெற்ற சிறிய கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், முஸ்லிம்களைப் பற்றி மிக மோசமாகக் கருத்துத் தெரிவித்தார். இந்த உரை, சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, தமது உரையால், தமது கட்சி அசௌகரியத்துக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறி, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து அவர் இராஜினாமாச் செய்தார்.

தாம், இனக் குரோதச் சொற்களைப் பாவித்தமை பிழை என, மதுமாதவ கூறவில்லை. மாறாக, அந்த உரையால், கட்சி அசௌகரித்துக்கு உள்ளாகியதாலேயே அவர் பதவி துறந்துள்ளார்.

இந்த விடயத்தை விளக்குவதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது, கட்சித் தலைவர் கம்மன்பிலவும் அவர் பாவித்த சொற்கள் பிழையானவை என்று கூறவில்லை. மதுமாதவ பாவித்த சொற்கள், முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறாக ‘அமைந்திருக்கக் கூடும்’ என்பதால், அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக ஒரு கட்டத்தில் கூறினார்.

அவர் பாவித்த சொற்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சாக ‘அமைந்திருக்கக் கூடும்’ என்பதால், அந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக, மற்றொரு கட்டத்தில் அவர் கூறினார்.

இந்த உரையை அடுத்து, ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மதுமாதவவைத் தொலைபேசி மூலம் திட்டித் தீர்த்ததாகவும் அதனாலேயே அவரைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்விக்க கம்மன்பில நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மறுபுறத்தில், இது தேர்தல் காலமாக இல்லாதிருந்தால், பொதுஜன பெரமுனவினரும் கம்மன்பிலவும் அந்த உரையை நியாயப்படுத்தி இருப்பார்களேயல்லாமல், இவ்வாறான நடவடிக்கை எதுவும் எடுக்கப் போவதில்லை.

கடந்த காலத்தில், ஞானசார தேரர் போன்றோர்கள் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் மிகவும் மோசமாக நிந்தித்த சந்தர்ப்பங்களில், அது பௌத்தத்துக்கு அவப் பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கும் செயல் என எவரும் கூறவில்லை.

ரத்தன தேரர், இரசாயன உரப் பாவனையைக் கடுமையாக எதிர்ப்பவர். தேசிய விவசாயத்தை அழிக்க ஏகாதிபத்தியவாதிகள் இரசாயன உரத்தைப் பாவிக்கிறார்கள் என்பதே அவரது வாதமாக இருக்கிறது. கோட்டாவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம், அநுராதபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற போது, தமது ஆட்சியின் கீழ் இலவசமாகவே விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்கப்படும் என கோட்டா வாக்குறுதியளித்தார். ரத்தன தேரரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தார். தாம் ‘ஏகாதிபத்தியவாதிகளின் சதிக்கு’ சாதகமாகச் செயற்படுவதாக, கோட்டா அந்தக் கூட்டத்தின் போது கூறிய போதிலும், ரத்தன தேரர் அதனை விமர்சிக்கவில்லை.
தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளுக்காக ஐ.தே.க நாட்டை அவர்களிடம் அடகு வைத்திருப்பதாகவே பொதுஜன பெரமுனவினர் கடந்த காலங்களில் கூறி வந்தனர். அதே வாக்குகளுக்காக, இப்போது அவர்களும் தாம் தேசப்பற்றாக எடுத்துரைத்ததை வேண்டுமென்றே புறக்கணித்துச் செயற்பட்டு வருகிறார்கள். உண்மையான தேசப்பற்றை அவ்வாறு புறக்கணிக்கவோ, மறக்கவோ, உதாசீனப்படுத்தவோ முடியுமா?