அன்று சீனா… இன்று இந்தியா… – இலங்கை நெருக்கடியும் ‘அரிசி’ அரசியலும்!

இதுகுறித்து மும்பையை சேர்ந்த பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண ராவ் கூறும்போது, ‘முதல்கட்டமாக இந்தியாவில் இருந்து 40,000 டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் இலங்கையின் உணவுத் தட்டுப்பாடு குறையும். மேலும் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு தேவையான சர்க்கரை, கோதுமையும் அனுப்பி வைக்கப்படும்” என்றார்.

அரிசி அரசியல்:

கடந்த 1950 முதல் 1953 வரை கொரிய போர் நடைபெற்றது. அப்போது அமெரிக்காவின் எச்சரிக்கையால் மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கான ரப்பர் ஏற்றுமதியை நிறுத்தின. இந்த கால கட்டத்தில் இலங்கையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட சீனா, இலங்கையுடன் கடந்த 1952 டிசம்பர் 18-ம் தேதி ரப்பர்- அரிசி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இதன்படி இலங்கையிடம் இருந்து கூடுதல் விலைக்கு ரப்பரை கொள்முதல் செய்த சீன அரசு, குறைந்த விலையில் இலங்கைக்கு அரிசி வழங்கியது.

இதன்காரணமாக சீனா, இலங்கை இடையிலான நெருக்கம் அதிகரித்தது. கடந்த 1982-ல் ஒப்பந்தம் ரத்தான நிலையிலும் இரு நாடுகளின் உறவு வளர்ந்து வருகிறது. அண்மையில் இலங்கைக்கு சென்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தை மீண்டும் முன்னெடுத்துச் செல்ல உறுதி அளித்தார்.

கரோனா, உக்ரைன் போரால் இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு 3 லட்சம் டன் அரிசியை வழங்க இந்தியா உறுதி அளித்துள்ளது. இதில் முதல்கட்டமாக 40,000 டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த 1952-ம் ஆண்டில் இலங்கைக்கு சீனா உதவியது. தற்போது முதல் நாடாக இலங்கைக்கு இந்தியா அரிசியை அனுப்ப உள்ளது. இந்த “அரிசி அரசியலால் இந்திய, இலங்கை உறவு மேலும் வலுவடையும். சீனா பின்னுக்கு தள்ளப்படும்” என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

(The Hindu)