இந்திய இலங்கை ஒப்பந்தம்…..ஆய்வுக்கணோட்டம்! (Part 1)

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருட நிறைவுதினம் ஜூலை மாதம் 29ம் திகதியாகும். இவ் ஒப்பந்தத்தின் நோக்கம், இதன் பங்குதாரர்கள், வெற்றி-தோல்விகள், காலத்தில் அதன் முக்கியத்துவம் பற்றி 2007 ம் வருடம் கனடிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானலையிலவ் நான் படைத்த ஆய்வுக்கணோட்டத்தின் பகுதி 1/10

இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்டது. ஏறத்தாள 20 ஆண்டுகளின் பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஒப்பந்தத்தின் நோக்கம், இதன் பங்குதாரர்கள், வெற்றி, தோல்விகள், 20 வருட காலத்தில் அது தொடர்பான நிகழ்சிப் போக்குகள் என்பன பற்றிய ஆய்வுக்கண்ணோட்டமாக இத் தொடர் கட்டுரை அமைகின்றது.

ஈழத்தமிழர் பிரச்சனைக்கும் இந்தியாவுக்கும் உள்ள அண்மைக்காலத் தொடர்புக்கு அத்தாட்சியாக, அரசு ஆவணங்களிலும், ஊடகத்துறைகளிலும், உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட பெரிய நிகழ்வுகள் என்றால் இரண்டைக் கூறலாம். ஓன்று இந்திய இலங்கை ஒப்பந்தம், இரண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கு.

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் திகதியுடன் 20 வருடங்கள் பூர்தியாகன்றது. இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டவுடன் எதிர்பார்கப்பட்ட அளவுக்கு வெற்றியைக் கொடுக்காமைக்குக் காரணம் ஈழத்தமிழர் பிரச்சனையை இந்தியா சரியாகப் புரிந்து கொள்ளாமல் பெரியண்ணன் மனோபாவத்துடன் செயற்பட்டமையே ஆகும் என்பது பெரும்பான்மையான அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இவ் ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கம், புவிசார் அரசியல், ஒப்பந்தத்தின் காரணகர்த்தாக்கள், பங்காளிகள், எதிராளிகள், மற்றும் அரசியல் பின்ணனிகள் பற்றி ஆதியோடு அந்தமாக இவ் ஆய்வுக்கண்ணோட்டத்தில் பார்ப்போம்.

1970பதுகளின் பிற்பகுதியில் இலங்கையின் வடகிழக்குப்பகுதிகளில், ஐனநாயக நடைமுறைகளில் விரக்தியுற்ற தமிழ் இளைஞர்களின் வன்முறை இயக்கங்கள் பரவலாக முளைவிட ஆரம்பித்தன. அக்கால கட்டங்களிலேயே இந்திய அரசின் வெளிநாட்டு உளவுத் துறையான ரா ( RAW ) ஈழத்தமிழர் பிரச்சனையில் ஈடுபாடுகாட்டத் தொடங்கிவிட்டது. எந்த ஓர் அரசியல் நடவடிக்கையும் தனது சொந்த லாபங்களைக் கருத்தில் கொள்ளாமல் இடம்பெறாது என்பது யதார்த்த அரசியல் நியதி. ஐரோப்பிய அரசியல் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவுக்கும் இதற்கு விதிவிலக்கல்ல.

அன்றைய பனிபோர் காலகட்டத்தில், சோவியத்யூனியனுக்கும் அதன் சார்பு நாடாகிய இந்தியாவுக்கும், இலங்கை இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்தது. தமிழ் இளைஞர்களின் வன்முறை நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, இலங்கையில் அமெரிக்காவும் மேற்கத்தைய நாடுகளும் காலுன்றிவிடக்கூடாது என்பதில் இந்தியா அவதானமாக இருந்து கொண்டது. அப்படி நடைபெற்றால் அது தனது பாதுகாப்புக்கு குந்தகமாக அமைந்து விடும் என்பதினாலும் தமிழர் பிரச்சனையின்பால் தனது ஈடுபாட்டை இந்தியா 1970களின் பிற்பகுதிகளில் தனது வெளியக உளவுத் துறையான ரா ( RAW ) மூலமாக ஏற்படுத்திக் கொண்டது. அதுவும் அன்றைய இலங்கை ஐனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கையும், தமிழ் இளைஞர்களின் வன்முறை நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக அமெரிக்க, பிரட்டிஷ் இஸ்ரேல் போன்ற நாடுகளின் உளவுத் துறையின் உதவியை ஜே. ஆர் ஜெயவர்தனா பெற்றுக் கொண்டதும் இந்தியாவின் ஈடுபாடு இலங்கiயில் அதிகமாகியமைக்குக் காரணமாகும்.

அமெரிக்காவும், மற்றும் ஐரோப்பிய நாடுகளும் சோவியத் சார்பு நாடான இந்தியாவுக்கு வடபுறத்தில் பாக்கிஸ்தானுடாக நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டு தென்புறத்திலும் நெருக்கடியைக் கொடுக்கக் கூடிய சந்தர்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. இந் நிலையில் தமிழ் இளைஞர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஜே. ஆர் அரசாங்கத்திற்கு உதவுவது என்ற போர்;வையில் தமது நலன்களை இலங்கையில் பலப்படுத்தும் வேலையையும் அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளாகிய மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஆரம்பித்திருந்தன.

1983ம் ஆண்டு இலங்கையில் எற்பட்ட தமிழர் படுகொலை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நிலமைகள் கட்டுமீறிச் சென்று கொண்டிருந்த நிலையில் இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி இலங்கை நிலமையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய வகையில் செயற்படுவதற்கு ஏதுவாக தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவதற்கான முடிவை எடுத்தார்.

1983ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனஅழித்;தொழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழ்மக்கள் பொங்கியெழுத்த காரணத்தாலும், பெருமளவு இலங்கை மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குச் சென்றமையாலும், இலங்கையில் தனது தலையீட்டை சர்வதேச அரங்கில் இந்தியா நியாயப்படுத்திக்கொண்டது,

எனவே இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தனது ஈடுபாட்டைத் தெரிவிப்பதற்கு மிகமுக்கிய காரணியாக இருந்தது தனது பிராந்திய பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனையே ஆகும். அதே நேரம் ஒர் ஐனநாயக நாடு என்றவகையிலும் இந்திய மத்திய அரசை உருவாக்குவதில் தமிழ்நாட்டின் 40 பாரளுமன்ற உறுப்பினர்களின் பலம் மிகவும் முக்கியமானது என்றவகையிலும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழக மக்களினதும், அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஈழத்தமிழ்மக்களின் பிரச்சனைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான கடமையும் இந்திய அரசுக்கு இருந்தது என்பதை மறந்துவிடாலாகாது. ஆனால் அது இந்தியாவின் முன்னுரிமை பட்டியலில் இரண்டாவது இடத்திலேயே இருந்தது.

எனவே ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா தனது கொள்கைகளை வகுக்கும்போது ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வுகான்பது என்பது முதன்மைப் படுத்தப்பாடாமல் தனது பிராந்தியப் பாதுகாப்பு என்பதற்கே முன்னிரிமை கொடுத்துச் செயற்பட்டிருக்கும் என்பது அரசியல் அவதானிகள் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

தனது பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் இந்திய அரசு இலங்கைத் தமிழ் போராளிகள் அனைவருக்கும் ஆயுதப்பயிற்சியும், ஆயுதமும் வழங்கியது. தமிழ் போரளிகளின் ஆயதப்போராட்டத்தின் மூலமாக இலங்கை அரசின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து, மேற்கத்தைய சார்பு நிலையை கொண்டிருந்த ஜே.ஆர் ஜெயவர்தனா அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டு;குள்; கொண்டு வருவதே இந்திய அரசின் நோக்கமாக இருந்தது.

இதே போலத்தான் தனது எதிரியாகிய பாக்கிஸ்தானைப் பலவீனப்படுத்தும் தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கிழக்குப் பாகிஸ்தானில் முஜிபுர்ரஹ்மான் தலமையிலான முக்திவாகினி படைகளுக்கு அன்று இந்தியா ஆயுதங்களும், பயிற்சியும் வழங்கின. அதன் தொடர்சியாக பங்களாதேஷ் என்ற புதியதொரு நாடும் உலக வரைபடத்தில் உருவாக்கப்பட்டது. இது போன்றதொரு நிலையே இலங்கையிலும் உருவாகும் தமிழீத்தை இந்தியாவே உருவாக்கிக் கொடுக்கும் என்றே பலரும் எதிர்பார்தனர்.

ஆனால் பங்களாதேஷ் நிலமைகளும் இலங்கை நிலமைகளும் வௌ; வேறானவையாகும். தமிழ்நாட்டில் நாட்டில் பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்த திராவிட இயக்கங்;களின் செல்வாக்கும், ஆளுமையும், அதிகமாக இருக்கின்ற நிலையில், இலங்கையில் தமிழீழம் ஒன்றை இந்தியா உருவாக்குவது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக தனது ஒற்றுமைக்கும் இறையான்மைக்கும் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதியமையினால் ஆரம்ப காலம் முதலே தமிழீழக் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு சுயாட்சியுள்ள அரசு ஒன்றே இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என இந்தியா உறுதியாகக் கூறிவந்தது. இதன் அடிப்படையில் ஒர் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் விஷேட தூதுவர் ஜி. பார்த்தசாரதி கொழும்புக்குப் பலமுறை சென்று பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். பூட்டான் தலைநகர் திம்புவில் தமிழ் போரளிக்குழுக்களுக்கும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இலங்கை தொடர்பாக இந்தியப் பிரதமர் இந்திராக காந்தி அவர்களால் வகுக்கப்பட்ட இக்கொள்கை 1984ம் ஆண்டு அவரது மரணத்தின் பின்னர் அவரது மகன் ராஜீவ் காந்தி தலமையிலான இந்;திய அரசிலும் தொடர்ந்தது.

1980 பதுகளின் நடுப்பகுதியில் இலங்கைத்தமிழர்கள் மத்தியில் தமிழீழவிடுதலைப்புலிகள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழமக்கள் விடுதலைக்கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழப்புரட்சி அமைப்பு ஆகிய ஐந்து விடுதலை இயக்கங்கள் செல்வாக்குச் செலுத்தி வந்தன. இவை ஐந்துக்கும் இந்திய அரசு தனித்தனியாக ஆயுதப்பயிற்சி அளித்து வந்தது. திம்புப் பேச்சுவார்தையின் போது இவ் ஐந்து போராளி இயங்கங்களின் பிரதிநிதிகளும், தமிழர்விடுதலைக் கூட்டணியினரும் தமிழ்மக்கள் சார்பில் பங்கு பற்றினர். இதில் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலைப்புலிகள், ஈழப்புரட்சி அமைப்பு ஆகிய நான்கும் ஈழத்தேசிய விடுதலை முன்னணி என்ற கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியிருந்தன. தமிழீழ மக்கள் விடுதலை கழகம் இக்கூட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான முயர்சிகளும் பல தரப்பாலும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இக்கால கட்டத்திலேயே திம்பு பேச்சுவார்தையும் நடைபெற்றது. ஆனால் திம்புப் பேச்சுவார்த்தை எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு வெற்றியைக் அளிக்கவில்;லை. இலங்கை அரசு தமிழ்மக்களுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு எள்ளளவும் சம்மதிக்கவில்லை, பழைய உழுத்துப்போன மாவட்டசபைகளைப் பற்றியே பேசி வந்தது.

திம்புப் பேச்சுவார்தையைத் தொடர்ந்து தமிழ் போராளி இயக்கங்களுக்கிடையேயான முரண்பாடுகள் கூர்மையடையத் தொடங்கின. அதன் உச்சக்கட்டமாக 1986ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழத்தேசி விடுதலை முன்னணி என்ற கூட்டமைப்பில் இருந்த சக போராளி இயக்கமாகிய தமிழீழ விடுதலை இயக்கத்;தைத் தடை செய்து அதன் தலைவர் சிறி சபாரட்ணம் உட்பட நூற்றுக் கணக்காண போராளிகளை கொலை செய்தது. பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தையும் தடை செய்தது.

இந்தியா தனது அரசியல் நோக்கமாகிய பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், தமிழர் பிரச்சனைக்கர்ன அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கும் தமிழ் போரளிக்குழுக்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் நன்று என்றே சிந்தித்தது. அதே நேரம் பிரிவினைக் கோரிக்கையை வைத்து ஆயதப்போராட்டத்தை நடாத்தும் இப் போராளிக் குழுக்களுக்கிடையேயான ஒற்றுமை பலமாக ஏற்படுவது நீண்டகால நோக்கில் தனது நலன்களுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் சிந்தித்தது, உண்மையில் பலமான ஒற்றுமை தமிழ்போரளிக்குழுக்களுக்கிடையே உருவாகுவதை இந்தியா விரும்பவில்லை.

(தொடர்சி நாளை …..)

(யோகா வளவன் தியா)