இனப்பரம்பலை மாற்றவா சிங்களக் குடியேற்றம்?

திட்டமிட்ட வகையில் நடைபெறும் குடியேற்றங்களால், தமிழர்களின் வடக்கு – கிழக்கு பூர்வீக தாயகம் என்ற நிலைப்பாட்டில், நிரந்தரமாக மாற்றத்தை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற விடாப்பிடியே இதிலிருந்து புலப்படும்.

இந்த வகையில்தான், இலங்கையின் சிங்கள பெரும்பான்மை அரசுகள், தமிழர்களின் மரபுவழித் தாயக நிலப்பரப்புகளில் தமிழர்களின் மரபுவழி உரிமைகளைச் சிதைக்கும் வண்ணம், திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றன என்ற தமிழ்த் தரப்பின் குற்றச்சாட்டும் பலமுடையதாக இருக்கிறது.

அதன் ஓர் அங்கமே, கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணியில் சிங்கள குடியேற்றம் செய்ய நடைபெறுகின்ற முயற்சியாகும். ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போன்று, அண்மைய உதாரணமாக இந்தக் காரமுனையைக் கூறமுடியும்.

இந்த வாரத்தில் நடைபெற்ற காராமுனை பகுதியில் சிங்கள மக்களை குடியேற்றும் செயற்பாட்டுக்கு எதிராக, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி கிராம சேவையாளர் பிரிவின் காராமுனை பகுதியில், 1982ஆம் ஆண்டுக்கு முன்பாக சிங்கள மக்கள் குடியிருந்ததாக கூறி, அவர்களுக்கான நடமாடும் சேவையொன்று புனாணையிலுள்ள வனஇலாகா திணைக்களத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதன் போதே இந்த எதிர்ப்பு இடம்பெற்றுள்ளது.

இதில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா. அரியநேத்திரன், ஞா. சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ்.சர்வானந்தன், மாநகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கு கொண்டுள்ளனர்.

அதனால், அப்பகுதிக்கு பெருமளவான பொலிஸார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறித்த காணி நடமாடும் சேவைக்கும் சிங்கள மக்களது குடியேற்றத்துக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், குறித்த பகுதியில் எதுவித குடியேற்றமும் செய்யப்படாது எனவும் காணி ஆவணங்களை மட்டும் பரிசோதனைகள் செய்து, பின்னர் அவர்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி ஆணையாளரால் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இங்கு வருகை தந்திருந்த சிங்கள மக்கள், “1976ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால், எங்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு ஐந்து ஏக்கர் காணியும் குடியிருப்பதற்கு ஓர் ஏக்கருமாக மொத்தமாக ஆறு ஏக்கர் ஒரு குடும்பத்திற்காக, 190 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் காரணமாக, நாங்கள் இடம் பெயர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்தோம். யுத்தம் முடிந்த பின்னர், நாங்கள் எங்களுக்கான காணியை வழங்குமாறு, அரச திணைக்களங்களுக்கு முறையிட்டதன் பயனாக, காணிகளை அடையாளப்படுத்துமாறு காணி திணைக்களத்தால் அழைக்கப்பட்டதற்கிணங்க வருகை தந்தோம். எமது காணிகள் வேறு நபர்களால் பராமரிக்கப்பட்டு வருமாக இருந்தால் எங்களுக்கு மாற்றுக் காணி வழங்குமாறு தெரிவித்துள்ளோம்” என்றனர்.

“வாகரைப் பிரதேசம், தமிழ் பேசும் மக்களின் பிரதேசம்; இங்கு அரசாங்கத்தால் திட்டமிட்டு சிங்கள மக்களை குடியேற்றம் செய்ய நடவடிக்கைகள் நடக்கின்றன. அதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“காரமுனை பிரதேசத்தில், சிங்களக் குடும்பங்களைக் குடியேற்ற முயற்சிக்கப்படுகின்றது. இதற்கு அதிகாரிகள் பதவியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக துணைபோகக் கூடாது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்திருந்தார். அதே போன்று பல்வேறு அரசியல்வாதிகளும் தமது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான திட்டங்கள், நிலமற்ற சிங்களவர்களுக்கு நிலம் தரும் திட்டங்களாக அரசால் பரப்புரை செய்யப்பட்டாலும், காலங்காலமாக அப்பிரதேசங்களிலேயே வாழ்ந்துவரும் தமிழர்களின் உரிமைகளை, கருத்துகளைப் பொருட்படுத்துவதேயில்லை என்பதுதான் இதிலுள்ள பெரும் குறையாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது பெரும்பான்மை மக்களின் பலவந்தமான குடியேற்றங்களே! இருந்தாலும் இதனை ஏற்றுக் கொள்வதற்கு அரசாங்கங்கள் தயரில்லை என்பதே கசப்பான உண்மை.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. ஆனால், அரசு இலங்கையில் தமிழ் மக்களின் நிலங்கள் சிங்களமயமாக்கப்படுவதையும் ஆக்கிரமிக்கப்படுவதையும் தடுக்க எந்தவிதமான நடவடிக்கையையும் எடுப்பதில்லை. அதற்கு ஆதரவு வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தி, வரப்பிரசாதங்களையும் வழங்குவதே தமிழ் மக்களை கவலைக்குள் தள்ளிவிடுகிறது.

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து 12 ஆண்டுகளுக்குப்பின்னும், இன்னமும் பெரும்பான்மை மக்களுக்கு சாதகமானதாகவே அரசு செயற்பட முனைந்து கொண்டிருப்பது பல இடங்களிலும் பிரஸ்தாபிக்கப்பட்டாலும் பயனில்லை.

வடக்கையும் கிழக்கையும் புவியியல் ரீதியாகப் பிரிக்கும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கத்துடன் சிங்கள குடியேற்றம், பௌத்த விகாரைகள், யுத்த வெற்றி நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் நில ஒதுக்கீடுகள், வனவிலங்குகள் சரணாலயங்கள், வனப்பகுதி ஒதுக்கங்கள், விசேட பொருளாதார வலயங்கள் என்ற போர்வையில், தமிழ்க் கலாசாரத்தையும் வரலாற்றையும் திட்டமிட்டு அழிக்கும் செயற்றிட்டங்கள் முன் நகர்த்தப்படுகின்றன. இதற்கு அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் கூட உடந்தையாகவே இருக்கின்றனர்.

வன பரிபாலனம், வன விலங்கு பாதுகாப்பு போன்ற காரணங்களின் ஊடாக, தமிழர்களது பிரதேசங்களுக்குள் நடைபெறும் கால்நடை வளர்ப்பு, சேனைப் பயிர்ச்செய்கை போன்றவை தடுக்கப்படுகின்றன. அதேவேளையில் சிங்கள மக்களுக்கு, இராணுவம், சிவில் பாதுகாப்பு தரப்பினர் என நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், தொடர்ச்சியாக பெருந்தொகையான சிங்கள மக்களை, தமிழர்களது பகுதிகளில் குடியேற்ற முயல்வது, பாதகமானதாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து, தற்போது செயற்படுத்தத் தொடங்கப்பட்டிருக்கின்ற நீர்ப்பாசன திட்டங்கள், இராணுவ குடியேற்றங்கள், தொல்பொருள் இட ஒதுக்கீடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், வனப்பகுதி, சிறப்பு பொருளாதார வலயங்கள் போன்றவைகள் மூலம், ஏற்கெனவே சூறையாடப்பட்டுவிட்ட கிழக்கின் பல பகுதிகள், மேலும் அபகரிக்கப்படுவதாகவே கொள்ள முடிகிறது.

தமிழர்கள் அவர்களது பரம்பரை நிலங்களைப் பயன்படுத்த அனுமதி மறுப்பது, கிராமங்களின் பெயரை மாற்றுவது, சிங்கள மேலாண்மையை நிலைநாட்டும் நினைவுச்சின்னங்களை நிறுவுவது போன்றவை தமிழர் வரலாறு, கலாசாரத்தை அழிக்கும் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய தமிழரின் தாயகத்தை, புவியியல் ரீதியாகத் துண்டாட வேண்டும் என்பதும் அரசாங்கத்தின் உத்தி என்ற வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்ததனியாகப்பிரிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அரசாங்கத்தின் பெரும்பான்மைத்தனத்துடனான செயற்பாடுகளுக்கு நாட்டில் வலுவான சட்டங்களைக் கொண்டவைகளான மகாவலி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கையில் இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக உருவாகுவதற்கு முன்னர் நடைபெற்றுக் கொண்டிருந்த குடியேற்றங்கள், யுத்த காலத்தில் ஒய்ந்திருந்த போதும், ஆக்கிரமிப்புத் தனம் யுத்தத்துக்குப்பின்னர் தீவிரமடைந்துகொண்டே இருக்கிறது. அத்துமீறல்களாகவும் அதிகாரத்துடனும் ஆவணங்களுடனும் என உருமாற்றங்கள் செய்யப்பட்டு வந்தவண்ணமே இருந்து கொண்டிருக்கிறது.

யுத்தம் முடிந்த கையோடு தமிழர்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வரும் மட்டக்களப்பு எல்லையிலுள்ள மாதவணை, மயிலத்தமடு பிரதேசங்களில் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் அப்பிரதேசங்களில் குடியேறினர். அது ஓரளவுக்கு சரி செய்யப்பட்டு ஒரு போக பயிர்ச்செய்கையுடன் நிறுத்தப்பட்டது.

பின்னர், பொது ஜன பெரமுன ஆட்சி உருவானதன் பின்னர், மீண்டும் தொடங்கப்பட்டு பண்ணையாளர்கள் பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அதே போன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் பல பிரச்சினைகள் நடந்த வண்ணமேயிருக்கின்றன.

இப்போதைய நிலையில், காரமுனை ஓர் அண்மைய உதாரணமே! இது போன்றே வடக்கையும் கிழக்கையும் இணைக்கும், தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான புல்மோட்டையில், தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில், இரண்டு புதிய சிங்கள குடியேற்றங்கள், சட்டவிரோதமான முறையில் உருவாக்கபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் வரும் இரண்டு தமிழ் கிராமங்களை ஆக்கிரமித்து, பௌத்த பிக்குகளின் ஆதரவுடனும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்புடனும் வீடமைப்பு அதிகார சபையால், வீடுகள் அமைக்கப்பட்டு குறித்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது போன்று பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.

காரணங்கள் தெளிவாகத் தெரிந்தாலும், அதற்கான எதிர்வினைகளின் போதாமை சீர் செய்வதே, இன்றைய காலத்துக்குப் பொருத்தமாகும்.