இலங்கையில் மாகாணசபைகள்: இருக்கின்றன….. ஆனால் இல்லை(தொடர் – 2)

அதன் பிரகாரம் அதற்கான தேர்தற் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான குழு நியமிக்கப்பட்டு, அந்தக் குழு சட்டப்படி நான்கு மாதத்துக்குள் அதனது அறிக்கையை உரிய அமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி அந்தக் குழு உரிய காலத்துக்குள் தனது கடமைகளை நிறைவு செய்து 2018ம் ஆண்டு மாசி மாதம் 19ந் திகதி அதனது அறிக்கையை உரிய அமைச்சரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை சட்டப்படி இரண்டு வாரத்துக்குள் அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அமைச்சர் 2018ம் ஆண்டு பங்குனி மாதம் 6ம் திகதி அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பாராளுமன்றம் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அந்த அறிக்கையை முற்று முழுதாக நிராகரித்தது. அடுத்த ஐந்தாவது நாள் அதாவது 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ந் திகதி சபாநாயகர் பிரதமரின் தலைமையில் தொகுதிகள் நிர்ணய மீளாய்வுக் குழுவை நியமித்தார்.

இங்கிருந்துதான் மாகாண சபைத் தேர்தலை காலவரையறியின்றி தள்ளிப் போடுவதற்கான ஆட்சியாளரின் திட்டமே நடைமுறையாகத் தொடங்கியது. சட்டப்படி, தேர்தல் தொகுதி நிர்ணயக் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஒரு மாத காலத்துக்குள் பாராளுமன்றம் அந்த அறிக்கையை அங்கீகரிக்காவிட்டால்,உடனடியாக சபாநாயகர் பிரதமரின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஒரு மீளாய்வு குழுவொன்றினை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் மீளாய்வுக் குழு அது மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் அது மீளாய்வு செய்த தேர்தற் தொகுதி நிர்ணய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

முதலில்;; பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தேர்தற் தொகுதி நிர்ணய குழுவின அறிக்கையை பாராளுமன்றம் அங்கீகரிப்பதையோ அல்லது நிராகரிப்பதையோ சட்டப்படி ஒரு மாதத்துக்குள்ளே நடைபெறுவதை சபாநாயகர் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு ஐந்து மாதங்கள் ஆனது. உண்மையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை கால வரையறையின்றி தள்ளிப் போடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் முதல் சட்ட மீறலை சபாநாயகரே தொடக்கி வைத்தார். 2018 ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் தொகுதி நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் நிராகரித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்காரரும்,அப்போதைய ஜனாதிபதி மைத்திரி பக்கமிருந்த சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களும் மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சேர்ந்தே அந்த அறிக்கைக்கு எதிராக வாக்களித்தார்கள்.

அந்த அறிக்கையை பாராளுமன்றம் நிராகரித்த உடனேயே, பிரதமரின் தலைமையில் அந்த அறிக்கையை மீளாய்வு செய்வதற்கான குழுவை சபாநாயகர் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி நியமித்திருக்க வேண்டும். சபாநாயகரால் நியமிக்கப்பட்ட அந்த மீளாய்வுக் குழு அது மீளாய்வு செய்த அறிக்கையை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.அது சட்டப்படி ஜனாதிபதியிடமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கையை பெற்றதும் ஜனாதிபதி அந்த மீளாய்வு அறிக்கையின்படி மாகாண சபைகளுக்கான புதிய தேர்தற் தொகுதிகள், அவற்றின் எல்லைகள், ஒவ்வொரு தொகுதிக்குமான பெயர்கள் ஆகியனவற்றை தனது பிரகடனமாக வெளியிடல் வேண்டும். அதைத் தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்தத் தடையும் இருந்திருக்காது.

முதலாவது தொகுதி நிர்ணய அறிக்கையை பாராளுமன்றம் நிராகரித்த போதிலும் சபாநாயகர் சட்டப்படி உடனடியாக மாற்று ஏற்பாடாக பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட மீளாய்வுக் குழு சட்டப்படி தனது கடமையை உடனடியாக மேற் கொண்டிருந்தால்; மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்கான எல்லா சட்டபூர்வமான ஏற்பாடுகளும் 2018ம் ஆண்டு முடிவடைவதற்குள்ளேயே தயாராகியிருக்கும்.

பொதுவாக, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் நபரே சபாநாயகர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் ஆனதும் அவர் கட்சி சார்பற்றவராகிறார் என சொல்லப்பட்ட போதிலும் இலங்கையின் வரலாற்றில் சபாநாயகர்கள் ஆட்சியாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். எனவே சபாநாயகர் அவரது கடமையை சட்டப்படி உடனடியாக நிறைவேற்றவில்லையென்றால், பிரதமர் அதனை வலியுறுத்தி அதனை செய்வித்திருக்க முடியும். ஆனால் பிரதமரே தனது தலைமையில் அமைக்கப்பட்ட மீளாய்வுக்குழுவின் கட்மையே நிறைவேற்றவேயில்லை.பாராளுமன்றம் சட்டப்படி நடந்து கொள்ள வில்லையென்றால், அங்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டியது ஜனாதிபதியின் கடமை. அதனை ஜனாதிபதியும் செய்யவில்லை. அன்றைக்கு இருந்த கூட்டாட்சியின் குடும்பிப்பிடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமே இருந்தது. ஆனால் அவர்களோ, மாகாண சபைத் தேர்தல்களை உரிய நேரத்தில் நடக்கச் செய்வதற்கான எந்த செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. மாறாக,தேர்தற் தொகுதி நிர்ணய அறிக்கையை நிராகரித்ததோடு மாகாண சபைத் தேர்தல்களை தள்ளிப் போடுவதற்கான தமது நோக்கத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தனர் என்றே சொல்லத் தோன்றுகிறது.

மாகாண சபைகளை ஒழிப்பது – அல்லது
அதன் அதிகாரங்களை வெட்டிக் குறைப்பது

மாகாண சபைத் தேர்தல்களை நடாத்தி இலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்றியது தாங்களே என்று மார் தட்டிக் கொண்ட ராஜபக்சாக்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தி மாகாண சபைகளுக்கான ஜனநாயக உரிமையை தாங்கள் மீண்டும் நிலை நிறுத்துவார்கள் என்று 2019 ஜனாதிபதித் தேர்தலி;ன் போதும், 2020 பாராளுமன்றத் தேர்தலின் போதும் நாடு முழுவதுவும் மக்களுக்குபகிரங்க வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் ராஜபக்சாக்கள் அரசியல் யாப்பில் 20வது திருத்தம் மூலம் ஜனாதிபதி மீண்டும் எதேச்சாதிகாரியாக ஆட்சி நடாத்துவதற்கான ஏற்பாடுகளை ஆக்கிக் கொண்டதோடு, மாகாண சபை முறையையே அரசியல் யாப்பில் இருந்து இல்லாமலாக்கி விடுவது என்ற கனவோடு செயற்படத் தொடங்கினர்.

இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் இந்தியா சிறிதளவேனும் அக்கறை காட்டும் வரை மாகாண சபை முறையை முற்று முழுதாக இல்லாமற் செய்து விட முடியாது என்பதனால், ராஜபக்சாக்கள்; அரசியல் யாப்பு பூர்வமாக மாகாண சபைகள் கொண்டிருக்கும் அதிகாரங்களை வெட்டி சிதைத்து அவற்றை அதிகார சாரங்கள் அற்றதாக ஆக்கும் எண்ணத்துடன் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குதல் என்ற போர்வையில் தமது முயற்சிகளை ஆரம்பித்தமை அனைவரும் அறிந்ததே.

சுனாமி போல திடீரென எழுந்த அறகலய எழுச்சி, ராஜபக்சாக்களை அதிகாரக் கதிரைகளில் இருந்து கடாசி எறிந்தது. ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கா அவர்களை ஜனாதிபதிக் கதிரையிலும் தினேஸ் குணவர்த்தனா அவர்களை பிரதமர் கதிரையில் உட்கார வைத்து இப்போதும் ராஜபக்சாக்களே பின்னாலிருந்து ஆட்சி அதிகாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்போது ராஜபக்சாக்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை எவ்வளவு காலம் பின் தள்ளிப் போட முடியுமோ அவ்வளவு காலம் பின் தள்ளிப் போடுவதற்கான வேலைகளையே செய்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் 2025ல் நடக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முதலில் தமது அரசியல் தளங்களை மீண்டும் உறுதியாகக் கட்டியெழுப்பி விடும் திட்டத்துடனேயே ராஜபக்சாக்கள் செயற்பட்டு வருகிறார்கள் எனவே அதற்கு முதலில் நடைபெறும் எந்தவாரு தேர்தலும் தமது அரசியல் அதிகார வாழ்வுக்கு நிரந்தரமான முடிவை ஏற்படுத்தி விடும் என்பதே அவர்களின் அச்சம். அதேபோன்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரை வேறு எந்தத் தேர்தலும் நடக்கக் கூடாது என்பதையேதாகமாகக் கொண்டிருப்பதுவும் வெளிப்படையான ஒன்றே.

தேர்தல்கள் மட்டும் ஜனநாயகமல்ல – அதேவேளை
தேர்தல்கள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை

வெறும் தேர்தல்கள் மட்டுமே ஜனநாயகத்தை நிலைநாட்டி விடமாட்டா என்பது சரியேயாயினும் ஜனநாயகத்தின் தொடர் இருப்புக்கு தேர்தல்களும் ஆட்சி மாற்றங்களும் அவசியமானவை என்பதுவும் உண்மையாகும். 1982ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் உரிய வேளையில் நடைபெற்றிருந்தால், அன்றைய நிலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியே அந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் அந்தப் பெரும்பான்மையானது ஒரு சிறு எண்ணிக்கையைக் கொண்டதாகவே இருந்திருக்கும். அன்றைக்கு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீரித்திருந்த ஜே.வி.பியும் அப்போதே பாராளுமன்றத்தில் இடம் பிடித்திருக்கும். திருமதி சிறிமா பண்டாரநாயக்காவின் தலைமையிலான சிறி லங்கா சுதந்திரக் கட்சி,திரு அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி,திரு பீட்டர் கெனமன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, திரு கொல்வின் ஆர் டி சில்வா அவர்களின் தலைமையிலான லங்கா சமஜமாசக் கட்சி, திரு ரோஹண விஜேவீராவின் தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி என ஒருங்கு திரண்ட ஒரு பலமான எதிரணி இருந்திருக்கும். அது ஜே. ஆரின் எதேச்சாதிகாரத்துக்;கு முடிவு கட்டியிருக்கும். 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான அரசின் திட்டமிட்ட படுகொலைகள் நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. இப்படியாக பல விடயங்களை எண்ணிப்பார்க்க முடிகிறது.

வரலாற்றை “ஆல்” போட்டு ஆராயக் கூடாது என்பார்கள். ஆனால் வரலாற்றில் நடந்து முடிந்த போர்கள், மனிதர்களின் பிழைகளால் ஏற்பட்ட பெரும் அழிவுகள், நாடுகள் அனுபவித்த பொருளாதார நெருக்கடிகள், உலகின் பல்வேறு பாகங்களிலும் ஏற்பட்ட புரட்சி முயற்சிகள் சந்தித்த தோல்விகள்போன்றவற்றை ஆராயும் போது அவற்றுக்கான முதல் மற்றும் மூல காரண காரியங்களை கண்டறிய முயல்கையில் “ஆல்” போட்டு சிந்தித்துப் பார்ப்பது தவிர்க்க முடியாததாகிறது.

இங்கு முக்கியமான விடயம் என்னவெனில்,
• மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாதது. அதனால் மாகாண சபைகள் இருந்தும் அவை இல்லாதவை போல ஆக்கப்பட்டுள்ளன.
• ஒவ்வொரு மாகாண மக்களினதும் அடிப்படை அரசியல் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
• மாகாண, மாவட்ட மற்றும் உள்ளுர் மட்டங்களிலிருந்து சமூக அரசியற் தலைமைகள் புதிய தலைமுறைகளிலிருந்து மேலெழுந்து வருவதை அது தடை செய்கிறது.
• மத்திய ஆட்சியாளர்களிடம் அதிகாரங்கள் குவிந்து போகின்றன. இதனால் அவர்களது ஜனநாயக விரோத போக்குகளை நிறுவனரீதியில் கேள்விக்கு உள்ளாக்க முடியாமல் உள்ளது. மத்திய ஆட்சியாயினும் மாகாண ஆட்சியாயினும் சரி அதிகார துஸ்பிரயோகங்களின் போது அவற்றினால் ஒன்றையொன்று தடுத்து நிறுத்த முடியும், ஒன்றையொன்று சட்ட ரீதியில் கேள்விக்கு உள்ளாக்க முடியும்.
• பாராளுமன்றமானது சிறுபான்மை எண்ணிக்கை கொண்ட தேசிய இனங்களைப் பொறுத்த வரையில் பெரும்பாலும் ஒரு பேச்சுமேடையே. ஆனால் மாகாண சபைகள் அரசியல் பொருளாதார அதிகார பீடங்கள். எனவே மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் காலதாமதமின்றி நடைபெறுவதுவும் அவை சிறப்பாக செயற்படுவதுவும் சிறுபான்மையான தேசிய இனங்களுக்கான அடிப்படைத் தேவையென்பதோடு, அவை ஜனநாயகம் முன்னேற்றகரமாக செயற்படுவதற்கு அவசியமான அடிப்படைத் தூண்கள், அத்தோடு, நாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களும் ஒரு சமநிலையான சமூக பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு அவசியமான அரசியல் நிறுவன அமைப்பு என்பதனை முற்போக்கு ஜனநாயக அரசியல் சமூக சக்திகள் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.

(நாளை தொடரும்)