இலங்கை: அரசியல் களம் பாராளுமன்றத்திற்குள்ளாகச் சுருக்கப்பட்டுள்ளது

இனி வரும் ஒரு வாரகாலத்திற்கு, பாராளுமன்றத்திற்குட்பட்ட அதுவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தீர்மானிக்கின்ற அரசியல் செயற்பாடுகளே ஊடகங்களின் கவனத்தைப் பெறும். எனவே, ஒருவார காலம் காலிமுகத்திடலைப்பற்றி எந்தக் கவனிப்புக்களும் இருக்காது. இதுகூட ஒருவகையில் மக்களின் போராட்டத்தை, கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தை அதன் எல்லையைத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.

மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்கும் ஜனாதிபதித் தேர்தல் இது. இங்கே மக்களுக்கு எந்த வேலையுமில்லை. சிறுபான்மைக் கட்சிகளுக்கு மிக முக்கியமானதொரு வாய்ப்பு இது. தங்கள் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பகிரங்கமாக முன்வைக்கவும், ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளவும், முக்கியமான தருணம்.

அதே நேரம் சிறுபான்மைச் சமூகங்களின் கோரிக்கைகளை அனைத்து முகாமைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர்களும், கட்சிகளும் எப்படி ஏற்கின்றன? மறுக்கின்றன? அல்லது என்னவகையான பதில்களைத் தருகின்றன என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தச் சிறந்த சந்தர்ப்பம் இது. அதையும் தாண்டி சிறுபான்மைச் சமூகங்களின் கோரிக்கைகளைப் பாராளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறார்கள்? அவற்றை ஏற்கக் கூடிய உள்ளடக்கம் அவர்களிடமிருக்கின்றனதா என்பதைக் கூட பரிசீலிக்க முக்கியமான வாய்ப்பாக இந்தத் தருணத்தைப் பார்க்கலாம்.

ஏன், காலிமுகத்திடல் போராட்டக் குழுக்களோடு கூட சிறுபான்மைக் கட்சிகள் பேச்சுவார்த்தைகளில் இறங்கி, தமது கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் இணங்கிப்போனால் அவர்களோடு இணைந்து போராட்டத்திலும் ஈடுபடலாம். ஏன் சிறுபான்மைக் கட்சிகள் போராட்டக் குழுக்களோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை?

மதச்சார்பற்றதும், பெண்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களையும் அக்கறைகொள்ளும் அரசியல் யாப்பு, அதிகாரப் பகிர்வு போன்ற அம்சங்கள் குறித்து மாத்திரமே, ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக் குழுக்கள் போன்றவற்றோடு சிறுபான்மைச் சமூகங்கள் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதைவிட்டு விட்டு சஜீத்துக்குப் பின்னாலோ, ரணிலுக்குப் பின்னாலோ பொட்டிதுாக்கிக்கு போக வேண்டியதில்லை.

இந்த சந்தர்ப்பத்தைச் சிறுபான்மைச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் பயன்படுத்துமா?

ரணிலைப் பொதுஜனப் பெரமுன ஆதரிக்க இருக்கிறது. அந்த முகாமிலிருந்து டலஸ் அழகப்பெருமவும் போட்டியிட இருக்கிறார் என்று செய்திகள் கிடைக்கின்றன. ஆயினும், இவருக்கு மிகக் குறைவான வாக்குகளே கிடைக்கும்.

எதிர்க்கட்சிகளின் முகாமிலிருந்து மூன்று பேர் களத்தில் குதிக்க இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. சரத் பொன்சேகா, சஜித்,அநுர.பிரதமராக வாய்பிருந்த தருணத்தை கைவிட்டு தோற்கப் போகிறோம் எனத் தெரிந்த ஒரு போட்டியில் களமிறங்குவது எத்தனை பிற்போக்குத் தனமாக அரசியல் நகர்வு?

அநுர களத்தில் இறங்கியிருப்பது பாராளுமன்றத்திற்குள் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக இருப்பதற்கல்ல. அது சாத்தியமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள காலிமுகத்திடல் போராட்டக் குழுக்கள் சாதகமாகப் பயன்படுத்திய மக்களின் வாழ்வியல் நெருக்கடியைத் தனது கட்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நோக்கிலானது மட்டுமே. ரணிலையும், சஜித்தையும் ஏற்கத் தயங்கும் பொதுமக்களைத் தனது வலைக்குள் சிக்கவைப்பதே அன்றி வேறில்லை.

அநுரவின் இந்த நகர்வு மிகவும் பாராட்டத்தக்கது. சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பிரதிநிகளும் காலிமுகத்திடல் போராட்டக் குழுக்களுடனும், ஜனாதிபதி வேட்பாளர்களைக் கொண்ட முகாம்களுடனும் பேச்சுவார்த்தையைத் தொடங்கி, அங்கிருந்துதான் தங்கள் அரசியல் போக்கை மாற்றியமைக்க வேண்டும். அதற்கான சிறந்த தருணம் இதுவே. அதிருப்திகொண்ட மக்களுடனும், மக்களுக்கான அரசியல் பிரதிநிகளுடனும் ஒரே நேரத்தில் தங்கள் சமூகங்களின் அரசியல் எதிர்பார்ப்பை முன்வைப்பதற்கு இதைப் போன்ற மற்றுமொரு தருணம் இனிக் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

இதுவரை அரசியல் பிரதிநிதிகளுடன் மட்டுமே ஏதோ பேச முடிந்திருக்கும் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளை, மக்களுடனும் பேசிக்கொள்ளவும் (கிளர்ச்சிக் குழுக்களுடன்) , அவர்களின் கோரிக்கைகளில் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளையும் இணைத்துக்கொள்ள மிகச் சிறந்த தருணமிது.

சுமந்திரன்,ஹக்கீம் உள்ளிட்டவர்கள் இதைக் கவனத்தில் எடுத்து காய்களை நகர்த்துவார்களா?

(Riyas Qurana)