ஈழத்தமிழருக்காக உலகிடம் கையேந்துவோரிடம் சில கேள்விகள்

இன்றும் இந்தியா ஈழத்தமிழர்களைக் கைவிடாது என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள்.

சர்வதேசம் இலங்கையை சீனாவிடம் இருந்து மீட்டெடுக்க, தமிழ் மக்களின் பக்கமே நிற்கிறது என்று நம்பச் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இவ்விரண்டு பற்றியும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர்கள் மத்தியில் மலிந்து போய் கிடக்கிறார்கள். இவர்களிடம் இரண்டு அடிப்படையான கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

முதலாவது, இவர்கள் சொல்லும் சர்வதேசம் என்பதும் இந்தியா என்பதும் அந்தந்த நாட்டின் ஆட்சியாளர்களையா அல்லது அந்த நாட்டின் சாதாரண மக்களையா பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது முக்கியமானது.

அது ஆட்சியாளர்களின் மீதான நம்பிக்கை எனில், அது ஈழத்தமிழர்கள் பற்றியதல்ல என்பதை உறுதியாகச் சொல்லலாம். ஏனெனில் ஈழத்தமிழருக்காக ஆட்சிபீடத்தில் இருக்கின்ற சர்வதேச சமூகமோ, இந்தியாவோ குரல் கொடுக்க எந்த ஓர் அவசியமும் இல்லை.

அவ்வாறன்றி இவர்கள் கோரும் உதவியானது, அந்நாடுகளின் மக்களிடமிருந்து என்றால், அம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் குரல் கொடுத்து வந்துள்ளார்களா என்பது இதிலிருந்து எழுகின்ற கேள்வி.

இந்திய அரசாங்கம் இப்பொழுது கொண்டு வந்திருக்கின்ற குடியுரிமை சட்டத் திருத்தமானது அங்குள்ள சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய அநீதியை இளைத்துள்ளது. இதற்கு எதிராக இன்றுவரை எந்த தமிழ் அரசியல் தலைவர்களும் குரல் கொடுக்கவில்லை. அனைவரும் வாய் பொத்தி மௌனம் காக்கிறார்கள். இந்த மௌனம் ஆபத்தானது.

உலகில் ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள சமூகம் என்ற வகையில் ஏனைய ஒடுக்குமுறைக்கு ஆளான சமூகங்களின் ஆதரவு தமிழ் மக்களுக்குத் தேவையானதும் பயனுள்ளதும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளை அச்சமூகங்களில் வாழும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அதற்கெதிராகக் குரல் கொடுக்க நாம் முன்வர வேண்டும். அவ்வாறு குரல் கொடுக்கத் தயங்குகிற ஒரு சமூகம் ஏனைய ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தமக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தம்.

இன்று இந்தியாவில் மிகப்பெரிய ஜனநாயக மறுப்பும் சிறுபான்மையினர் மீதான வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது. அநீதிகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள், அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தாக வேண்டும். எவ்வாறு நீதியில் பாரபட்சம் பார்க்கக்கூடாதோ அதேபோலவே அநீதியும். அநீதிகளில் பாரபட்சம் இல்லை.

இந்தியா அண்மைய உதாரணம், இதற்கு முன்பும் இவ்வாறான பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் ஈழத்தமிழ்ச் சமூகம் அமைதி காத்தது என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். குர்துகள், பலஸ்தீனியர்கள் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்காளாகும் போதெல்லாம் எமது குரல்கள் எங்கே போயின?

ஜல்லிக்கட்டுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வந்த வாய்வீரர்கள் எங்கே? இன்று இந்தியா பாசிச அபாயத்தை எதிர்நோக்கி நிற்கிறது. அதற்கெதிராக அங்குள்ள மக்கள் குறிப்பாக இளந்தலைமுறையினர் ஒவ்வொரு மாநிலத்திலும் போராடுகிறார்கள். அண்டை நாட்டு மக்களாக அல்லது அவர்களது மொழியில் ‘தொப்புள்கொடி உறவு’ என்பதற்காகவாவது ஆதரவுத் தெரிவித்திருக்க வேண்டாமா? எமது பிரதிநிதிகள் எங்கே, குத்தகைக்காரர்கள் எங்கே?

ஒரு சமூகத்தின் விடுதலை என்பது, அறத்தின் அடிப்படையில் செயற்படுவது. ஒரு நியாயத்தை ஆதரிக்கின்றவர்கள், எல்லா நியாயத்தையும் ஆதரிக்கிறார்கள், ஓர் அநீதியை ஆதரிக்கின்றவர்கள் எல்லா அநீதிகளுக்கும் துணைபோகிறார்கள். இந்த உண்மையை ஈழத்தமிழர்கள் மறந்து போகக் கூடாது.

டெல்லிக்குக் காவடி எடுப்போரை விட்டுவிடுவோம், அமெரிக்காவின் எல்லா அசைவுகளும் தமிழ் மக்களின் நன்மைக்கானது என்றுரைக்கும் புலுடாக்காரர்களை ஒதுக்குவோம். நாம் மக்களின் விடுதலை பற்றிப் பேசுவோம். அநீதிகளுக்கு எதிராகத் திரண்டெழுவோம் போராடுவோம்.

ஒடுக்கப்பட்டவர்கள் என்ற வகையில் எமக்கிடையே ஒற்றுமை அதிகம். பலஸ்தீனியனுக்கு மறுக்கப்பட்ட நிலமே இங்கு தமிழனுக்கும் மறுக்கப்படுகிறது. தென்னாபிரிக்கனை உள்ளே வராதே என்று சொன்ன நிறவெறியே சாதியச் சுடலைகளாக இலங்கையில் விரிகின்றன. காஸ்மீரியனுக்கு மறுக்கப்பட்ட நீதியே எமக்கும் மறுக்கப்படுகிறது.

யாரிடம் கையேந்தினோமோ அவர்களே நடந்து முடிந்த அவலத்துக்குப் பொறுப்பானவர்கள் என்ற கசப்பான உண்மையை நாம் விளங்க வேண்டும். நமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை நாமறிவோம். இதுவே விடுதலைக்கான பாதையும் நோக்குமாகும்.

(Tamil Mirror)