எத்தனைபேர் மக்களுடைய பிரச்சினைகளுக்காகத் துணிவோடு குரல்கொடுக்கின்றனர்?

கேப்பாப்பிலவு, இரணைதீவு, வலி வடக்கு, சம்பூர், வடமராட்சி கிழக்க போன்ற பல இடங்களில் மக்கள் தங்கள் சொந்த நிலத்துக்குச் செல்வதற்காகப் போராடியபோது இவர்களில் ஒருவரைத்தன்னும் நான் கண்டதில்லை. இதைப்போலவே அரசியற் கைதிகள் என்ற சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களுக்கான போராட்டம், குடிநீருக்கான போராட்டம், அவசரகாலச் சட்டத்துக்கு எதிரான போராட்டம், காணாமலாக்கப்பட்டோருடைய உறவினர்களின் போராட்டம், மலையகத் தொழிலாளர்களுடைய சம்பள உயர்வுக்கான போராட்டம், சூழற்பாதிப்புக்கெதிரான போராட்டம், மரபுரிமை மீறலுக்கான எதிர்ப்பு என நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற எந்தப் போராட்டத்திலும் இவர்கள் பங்கேற்றதாகச் சரித்திரமே இல்லை. மட்டுமல்ல மீண்டும் மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் அல்லது மேற்கிளம்பிக் கொண்டிருக்கும் சாதிய, பால்நிலை, பிரதேச ஒடுக்குமுறைகளைக் குறித்தும் இவர்களில் எவரும் எதுவுமே பேசுவதில்லை.

ஆனால், மேடைகளிலும் எழுத்திலும் தம்மைத் தீவிரப் போராளிகளாகவும் இன மாண்பினை வலியுறுத்துவோராகவும் தமிழ்த்தேசியப் பற்றாளர்களாகவும் காண்பித்துக் கொள்கின்றனர். களத்தில் நின்று போராடுவதற்குப் பதிலாக, ஏனைய அத்தனை அசமத்துவங்களையும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்துக் கொண்டே அவற்றை மறைப்பதற்காக “தமிழ்த்தேசியம்” என்ற ஒரு பெருந்திரைக்குப் பின்னால் ஒழிந்து கொள்கின்றனர். அதேபோல தேவைப்படும்போது அந்தத் திரைக்கு முன்னே வந்து நின்று தேசியப்பற்றாளராக நாடகமாடுகின்றனர்.

இப்படி இரு நிலைப்பட்டுச் செயற்படுவதை எப்படி, எந்தப் பெயரைக் கொண்டு அழைப்பது? மெய்யாகவே தமிழ்த்தேசிய அரசியலை ஆதரிப்பவர்களாக இருந்தால் அது வலியுறுத்துகின்ற நிலைப்பாட்டுக்கும் கோட்பாட்டுக்கும் தம்மை ஒப்புக்கொடுத்துப் போராட வேண்டும். அந்தப் போராட்டங்களோடு தங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டும். அதுவே அழகு. அதுவே நியாயம். அதுவே தகுதியான செயற்பாடு. ஒடுக்குமுறையினாலும் அதற்கெதிரான தமிழ்த்தேசியம் என்ற எண்ணக்கருவுடைய அரசியலின் விளைவுகளாலும் நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்ற, பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களோடு தம்மைப் பிணைத்துக் கொள்ளத் தயாரில்லாதபோது அது இழிவன்றி வேறென்ன? ஒரு சிறிய உதாரணம் அல்லது கேள்வி, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஓராண்டுக்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய போராட்டத்தில் என்றாவது அதிதீவிரப் புனிதர்களாகத் தம்மைக் கட்டமைத்துக் கொண்டு தேசியப்பற்றைப் பற்றிப் பேசுவோரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? இந்தப்போராட்டமும் இதில் ஈடுபடும் மக்களும் இவர்களுடைய கண்களுக்குத் தெரிவதில்லையா? அல்லது இவற்றைப் பற்றித் தாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்கிறார்களா? சரி, இதுதான் கிடக்கட்டும். அரச ஒடுக்குமுறைச் செயற்பாடுகள், பௌத்த விரிவாக்கம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு, அவசரகாலச்சட்டம், படையாதிக்கம் என இவர்களே வலியுறுத்துகின்ற சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இவர்கள் எங்கும் கிளர்ந்தெழுந்ததாக இல்லையே.

ஆனால், இந்தப் போராட்டங்களிலெல்லாம் மக்களோடு கலந்து கொள்ளும் எழுத்தாளர்களும் கலைஞர்களுமுண்டு. தங்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு விசுவாசமாக நின்றுகொண்டே அவர்கள் இதைச் செய்கின்றனர். அப்படிக் கலந்துகொள்ளும் இலக்கிய அமைப்புகளுமுண்டு. உதாரணம், தேசியகலை இலக்கியப் பேரவை. எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்றால் க. தணிகாசலம், சோ.தேவராஜா, தனுஜன், ஸ்ரீபிரகாஸ், மு. மயூரன், க. சத்தியசீலன், கிரிஷாந்த், யதார்த்தன், பா. அகிலன், சனாதனன், தமயந்தி, எனப் பலர் இந்த வரிசையில் வருகின்றனர். இவர்கள் தம்மைச் சூழ நடக்கும் அனைத்து ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடுகின்றனர். அனைத்துவகையான மானுட விரோத, சூழல் விரோத, பண்பாட்டு விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தம்மை முன்னிறுத்துகின்றனர். இதுதான் உண்மையில் அழகு. இதுதான் மாண்பு. இதுதான் உண்மையான சிறப்பு. இதுவே மெய். சொல்லுக்கும் செயலுக்குமிடையில் இடைவெளியும் மாறுபடுதலும் இல்லாத, பொய்மையும் போலியுமில்லாத தூய நிலை.

எழுத்தின் மாண்பென்பது அதற்கு மாறாகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளாமையாகும்.
இவர்களுடைய அரசியல் மக்களின் நன்மையைக் குறித்தது. சூழலின் பாதுகாப்பைக் குறித்தது. பண்பாட்டின் பேணுகையைப் பற்றியது. நீதியையும் ஜனநாயக விழுமியத்தையும் அடிப்படையாகக் கொண்டது. உலகளாவிய இயற்கை நேசிப்பையும் மானுட விருப்பையும் தழுவியது. இதையெல்லாம் அறிவியல் நோக்கிலும் பன்மைத்துவ நோக்கிலும் ஜனநாயக அடிப்படையிலும் நோக்குவது. அத்தகைய நோக்கே இவ்வாறு இவர்களை இந்தப் போராட்டங்களிலும் இந்த மேலான நன்மைகளிலும் பிணைத்துள்ளது எனலாம்.