எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்(பகுதி – 2)

இலங்கையின் கல்வி நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களினுடைய வாழ்வு நிலையின் உயர்ச்சிக்கும் வேண்டிய அனைத்து அறிவையும் இலவசமாக போதிப்பதற்கு உரிய வகையில் பரவிக் கிடக்கின்றன. அதேபோல மக்களுக்கு அடிப்படையான சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கும் நிறுவனங்களும் பரவலாக உள்ளன. ஏனைய தென்னாசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் நகரங்களை மட்டுமல்ல மிகப் பெரும்பாலான கிராமங்களை இங்கு வீதிகளும் போக்குவரத்துக்களும் நன்கு இணைத்துள்ளன.

இவ்வாறெல்லாம் இருந்த போதிலும், ஒரு நாட்டுக்கு அவசியமான அடிப்படையான பொருளாதாரத்துறைகளாகிய விவசாயத் துறையிலும் உருவாக்க உற்பத்தித் தொழில் துறையிலும் (Manufacturing Industries) மிகவும் பின்தங்கிய நாடாகவே இலங்கை உள்ளது. அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவை அடைந்து விட்டது என்று சொல்லப்படுவதை வைத்துக் கொண்டு இலங்கை உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட்டதென அர்த்தம் கொள்ளக் கூடாது. இலங்கையின் பிரதானமான அனைத்து உணவுப் பொருட்களின் தேசிய மொத்த உற்பத்தி அளவுகளைப் பார்க்கையில் இலங்கை அவற்றில் தன்னிறைவு நிலைக்கு அண்மையாகக் கூட இல்லை. இலங்கை சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் இன்னமும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவையான உணவுப் பண்டங்களை பெருந்தொகையில் இறக்குமதி செய்கின்ற நிலையிலேயே உள்ளது.‘

செழிப்பான விவசாயத்துக்கான வளமெல்லாம் இருந்தும்

ஏன் கையை இந்தத் தேசம் ஏந்துகிறது வெளிநாடுகளிடம்!.

3 மில்லியன் மெற்றிக் டன் அரிசியை இலங்கை உற்பத்தி செய்கின்ற அதேவேளை சுமார் 1½ மில்லியன் மெற்றிக் டன் கோதுமையை இறக்குமதி செய்தே அதனை தீட்டிய வெள்ளை மாவைப் பெற்றுக் கொள்கிறது. காலை மற்றும் உணவில் இந்த வெள்ளை மா கணிசமான பங்கை வகிக்கிறது. பாலுணவுப் பொருட்களில் அரைவாசியை இறக்குமதி செய்தே சமாளிக்கிறது. பருப்பு மற்றும் கடலை வகைகளின் தேவைகளுக்கு முக்கால்வாசிக்கு மேல் இறக்குமதி செய்வதாகவே உள்ளது. சீனி, சாப்பாட்டு எண்ணெய் வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு, என உணவுத் தயாரிப்புக்கான பிரதானமான பொருட்களும் துணைப் பொருட்களும் மிகப் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாகக் கூறினால் 2019 ஆண்டுக்கான கணக்கில் 30000 கோடி ரூபாக்களுக்கு மேல் இலங்கை உணவுப் பண்டங்களின் இறக்குமதிக்காகச் செலவளிக்கின்றது. இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்தும் – செழிப்பான விவசாயத்துக்கான எல்லா வளங்களையும் கொண்டிருந்தும் உணவுப் பண்டங்களுக்கான தேவைகளை பெரும் தொகையில் இறக்குமதி செய்வதன் மூலமே ஓரளவுக்கு திருப்திப்படுத்த வேண்டியுள்ளது.

அரிசி, தீட்டிய (கோதுமை) வெள்ளை மாவு, தேங்காய், சிறியவகை மீன்கள், மைசூர் பருப்பு, மரவள்ளிக் கிழங்கு, மலிவாகக் கிடைக்கும் கீரை வகைகள் ஆகிய குறிப்பட்ட சில வகை உணவுப் பண்டங்களிலேயே இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தமக்கான சக்திக்கும் சத்துக்களுக்கும் தங்கியுள்ளனர். இந்த வகை உணவுப் பண்டங்களே பெரும்பான்மையான மக்களால் தமது வருமானத்துக்குள் வாங்கக் கூடிய வகையில் மலிவான விலையில் கிடைக்கின்றன. தேவையான அளவு மரக்கறிகளையோ, சத்து நிறைந்த பருப்பு மற்றும் கடலை வகைகளோ, அடிக்கடி இறைச்சி வகைகளையோ தமது உணவில் சேர்த்துக் கொள்ளும் பொருளாதார வல்லமை இங்கு விகிதாசாரரீதியில் சிறுபான்மையான எண்ணிக்கை கொண்ட மக்களுக்கு மட்டுமே உரியதாக உள்ளது. தேநீருக்கு தவிர பால் அடிப்படையிலான உணவுத் தயாரிப்புகளை நுகர்பவர்கள் இங்கு மிகக் குறைவு. உண்மையில் அவை செலவுச் சுமையான பண்டங்களாகவே உள்ளன.

உடலை சக்தி மிக்கதாகவும் ஆரோக்கியமானதுமாக வைத்திருப்பதற்கு உரிய உணவு வகைகளை வேண்டுவது இங்குள்ள பெரும்பான்மையான மக்களைப் பொறுத்தவரையில் ஆடம்பரமான வாழ்க்கைக்கான விருப்பங்கள் என்று கருதிக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர் – அடுத்த நாள் உயிரோடு இருப்பதற்கும் உழைப்பதற்குமாக சீவிப்பவர்களாக அவர்கள் உள்ளனர். இவற்றைக் கூறுகையில், இலங்கை மக்களின் பொருளாதார வாழ்வு நிலையை மிகவும் எளிமைப்படுத்துவது போல் தெரியக்கூடும். ஆனால் பொருளாதார ரீதியில் இங்கு கீழ்மட்ட நிலையில் பரந்துபட்டு வாழும் மக்களில் 50 சதவீதமானோரின் வாழ்க்கை நிலைமைகளின் உண்மைகளைத் தெரிந்தோர் ஆழமாகச் சிந்திப்பின் இதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கையின் உழைப்பாளர்களில் 25 சதவீதமானோர் விவசாயத்தில் ஈடுபட, 20 சதவீதமானோர் ஆக்க உற்பத்தித் தொழிற் துறையில் உள்ளனர். இதைப் பார்த்து விட்டு இலங்கையில் இத்துறை வளர்ச்சியடைந்த ஒரு துறையாக இருக்குமோ என கேள்வி எழுப்பக் கூடாது. இலங்கை ஆக்கத் தொழிற் துறையில் மிகவும் பின் தங்கிய ஒரு நாடு. பிளாஸ்டிக் பொருட்கள் தொடக்கம் பேப்பர் உற்பத்திகள், இரசாயனங்கள் மற்றும் அவற்றை மூலப் பொருட்களாகக் கொண்ட பண்டங்கள், மருந்து வகைகள், இயந்திரங்கள், அவற்றிற்கான உபகரணங்கள், கருவிகள், உலோகங்கள் மற்றும் உலோக உற்பத்திகள், மோட்டார் வாகனங்கள், சைக்கிள்கள் என பெரும்பாலும் ஆக்க உற்பத்திப் பண்டங்களை இறக்குமதி செய்வதாகவே இலங்கை உள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு ஆக்க உற்பத்திகளில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பண்டங்களின் உற்பத்தியாகவே உள்ளது. மற்றொரு மூன்றில் ஒரு பங்கு ஆடை வகைகளின் உற்பத்தியாக உள்ளது. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால், ஆடைகள் உற்பத்திக்குத் தேவையான துணிகள் தொடக்கம் நூல்கள், பட்டன்கள் என அனைத்தும் இறக்குமதி செய்யப்படுவனவாகவே உள்ளன.

இலங்கையின் சேவைத் துறையிற் கூட இறக்குமதிகளை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகங்களும், அவற்றோடு தொடர்பான போக்குவரத்துகளும், அவற்றிற்குத் தேவையான நிதிச் சேவைகளுமே மிகப் பெரும்பங்கை வகிக்கின்றன. இலங்கையின் 55 சதவீதமான உழைப்பாளர்கள் சேவைத்துறையில் உள்ளனர். இதில் 25 சதவீதத்துக்கு மேற்பட்டோர் அரச ஊழியர்களாக இருக்கின்றமையும் கவனத்திற்குரிய ஒன்றாகும். மொத்தத்தில் இங்கு காணப்படுவது என்னவென்றால் இலங்கையின் இயற்கை வளங்களும் சரி மனித வளங்களும் சரி இலங்கையை ஒரு சுயசார்பான பொருளாதாரமாக கட்டியெழுப்புவதற்கான வகையில் அவற்றின் உழைப்பின் ஈடுபாடு ஒழுங்கமைக்கப்படவில்லை –நெறிமுறைப்படுத்தப்படவில்லை –அதற்கான செயற் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

ஒய்யாரக் கொண்டையிலே தாழம் பூவாம்

அதன் உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம்

‘உலக நாடுகள் ஒவ்வொன்றினதும் தேசிய வருமானங்களை, அவற்றின் கொள்வனவு ஆற்றலின் அடிப்படையில் கணித்து ஒப்பிடுகையில், மத்திய வருமான தராதரம் கொண்ட நாடு எனும் நிலைக்குள் இலங்கை காலடி எடுத்து வைத்து விட்டதாக ஆட்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கூறிவருகின்றனர். இலங்கையின் மத்திய வங்கியின் அறிக்கைகள் அவ்வாறான அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் வகையாகவே பொருளாதார தரவுகளை வெளியிட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே உலக வங்கி உட்பட சர்வதேச அமைப்புக்கள் தமது கணிப்புகளையும் கருத்துக்களையும் வெளியிடுகின்றன. இலங்கையின் பொருளாதார ஆய்வாளர்களில் ஒரு பகுதியினர் இலங்கையை மத்தியதர வருமானம் கொண்ட நாடு என பொதுவாக வரையறுக்காமல் கீழ் மத்தியதர வருமான நாடு எனக் குறிக்கின்றனர். இந்த வகையில் இலங்கையை வறிய நாடுகளில் ஒன்றாகக் கொள்ள முடியாது என்பதில் அனைவருமே பொதுவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையின் தலாநபர் வருமானக் கணிப்பு, நகரங்களின் வளர்ச்சித் தோற்றம், போக்குவரத்து மற்றும் தொடர்பு சாதனங்கள், கல்விநிலை, மருத்துவ நிறுவனங்களின் சேவை, கடைநிலை கிராமத்து பிரஜையும் அரச கட்டமைப்பை அணுகுவதற்கு உள்ள தூரம் போன்றனவற்றின் புள்ளிவிபரங்களை புற நிலையாக நோக்கினால் இலங்கையை கீழ் மத்தியதர நிலை வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றென அடையாளம் காணுவதில் சந்தேகம் எழாது.

ஆனால் நாட்டிலுள்ள மிகப் பெரும்பான்மையான குடும்பங்களின் வருமானம், உடல் ஆரோக்கியம், கிடைக்கின்ற வருமானத்தில் பெறுகின்ற வாழ்க்கைத் திருப்தி, வருமான உத்தரவாதம், தமது அடுத்த தலைமுறையினுடைய எதிர்கால வாழ்க்கைக்கான உத்தரவாதம் பற்றிய அச்சங்கள் போன்ற தனிமனித பொருளாதார அம்சங்களையும் – நாட்டின் பொருளாதாரம் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் அளவு, தேசிய பொருளாதார கட்டமைப்பு உறுதியான அடித்தளங்களைக் கொண்டிருக்காமை, நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் அரசின் மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தியின் அளவு போன்றவற்றை கூர்ந்து நோக்குகையில் இலங்கை வறியநாடு என்ற தரநிலையிலிருந்து விடுபட்டு மத்தியதர வருமான நாடு என்ற நிலைக்குள் காலடி எடுத்து வைத்து விட்டது எனக் கொள்வது எவ்வளவுக்கு சரியானது – உண்மையானது – அர்த்தபூர்வமானது என்ற கேள்வியினை உரத்து எழுப்ப வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கையின் பொருளாதார அம்சங்களை உற்று நோக்குவது அவசியமாகும்.

அரசியல் நலன்கள் மற்றும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே பொருளாதார கணிப்பீடுகள் அமைதல் வேண்டும். ஆட்சியாளர்கள் தமது வெற்றிகளை காட்டுவதற்காக பொருளாதாரம் தொடர்பில் தவறான புள்ளி விபரங்களை வெளிப்படுத்துவார்கள் – அதேபோல எதிர்க் கட்சிக்காரர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரான தமது அரசியலுக்காக பொருளாதார புள்ளிவிபரங்களை தவறான முறைகளில் தெரிவு செய்து பிரச்சாரம் செய்வார்கள். இவற்றின் தொடர்ச்சிகள் நாட்டில் பொருளாதார கல்வியையும் அறிவியற் துறைகளையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். பொருளாதார அறிவியல் மீது தேர்தல் நலன்கள் கொண்ட கட்சி அரசியலின் செல்வாக்குகள் அதிகரித்தால் இங்கு அப்பாவிகள் மட்டுமல்ல அறிஞர்களும் பொய்களுக்கு அடிமையாகி விடுவார்கள்.. எனவே, நேர்மையான பொருளாதார அறிஞர்கள் – ஆய்வாளர்கள் அவ்வாறான பொய்களையும் புரட்டுகளையும் விழிப்போடு புறம்தள்ளி சரியான –உண்மையான தரவுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தெளிவான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் இங்கு மிக அவசியமாக உள்ளது.

நாட்டின் எல்லைக்குள் மக்கள்வெவ்வேறு நிலையில் வருமான அளவுகளைக் கொண்டு வறிய நிலை, கீழ் மத்தியதர நிலை, மேல் மத்திய தர நிலை மற்றும் உயர் நிலை என்பனவற்றைக் கணிப்பிடலாம். ஆனால் சர்வதேச ரீதியில் அவற்றை அப்படியே பிரதியிட முடியாது. சர்வதேசரீதியாக உள்ள நிலைகளோடு இங்குள்ள மக்களின் வாழ்ககைத் தராதர நிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமே மக்களின் வாழ்க்கைத் தராதரத்தின் சரியான –உண்மையான நிலையை மதிப்பிட முடியும். அதன் அடிப்படையிலேயே நாட்டினுடைய பொருளாதாரத்தின் தராதர நிலையையும் முடிவு செய்தல் வேண்டும்.

அதிகாரத்தால் பொய்களுக்கு சாயமடிக்கலாம்

உண்மைகளை ஒளித்து வைக்க முடியாது

நாட்டின் அரச துறைகளில் மற்றும் முறைசார் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் – தொழிலாளர்களே ஒப்பீட்டு ரீதியில் நிரந்தர மற்றும் உத்தரவாதமான வருமானத்தைப்பெறுபவர்கள். இவர்கள் பெறுகின்ற வருமானத்தைக் கொண்டு அடைகின்ற வாழ்க்கைத் தரத்தை உலகின் ஏனைய அதேவகை நாடுகளில் அதே துறைகளில் உள்ளவர்களின் வாழ்கைத் தரத்தோடு ஒப்பு நோக்குதல் வேண்டும். அதன் அடிப்படையில் நோக்குவதன் மூலமே நாட்டின் பொருளாதார தராதர நிலையை அண்ணளவாக அடையாளம் காண முடியும்.

நுகர்வுப் பண்டங்களினது சராசரி சந்தை விலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் வாழ்க்கைச் செலவின் அளவுகளையும், அரச துறைகள் மற்றும் முறையான தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்குகின்ற சம்பள அளவுகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கையில் இலங்கையை சர்வதேச பொருளாதார வகைப்படுத்தலில் மத்திய வருமான தராதரத்தைக் கொண்ட நாடுகளின் வகையை அடைந்து விட்ட ஒரு நாடு என கொள்ள முடியாதுள்ளது.

இலங்கையில் மாறிமாறி வந்த எந்த அரசாங்கமும் தங்களது ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் பொருளாதார வாழ்க்கைத் தராதரத்தில் மெய்யான அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு உரிய வகையில் நாட்டின் பொருளாதார துறைகளில் தேவையான வளர்ச்சிகளை ஏற்படுத்தவில்லை. பொருளாதார வளர்ச்சியின் போது அனைத்து நாடுகளிலும் மக்களின் அடிப்படைத் தேவையான பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படுவது இயல்பே. ஆனால் அந்த அதிகரிப்பு வீதத்தை விட மக்களின் அனைத்து பிரிவினரிடையேயும் வருமான அதிகரிப்பு வீதம் அதிகமாக அமைந்தாலே பரந்துபட்ட பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பது பொதுவாக புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே.

மக்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும் போது மக்கள் வெவ்வேறு பண்டங்களை நுகர்வதிலும் அளவுரீதியாக விகிதாசார மாற்றங்கள் ஏற்படும். அத்துடன் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிது புதிதாக உற்பத்தியாகி சந்தைக்கு வரும் பண்டங்களும் மக்களின் நுகர்வுகளுக்கு உரியனவாகும். இவ்வாறான பொருளாதார செயன்முறைக்கு உரிய வகையில் நாட்டு மக்களில் எவ்வளவு வீதாசாரத்தினரினுடைய மெய்யான வருமானம் உயர்கிறது என்பதைக் கொண்டுதான் அந்த நாடு பொருளாதாரரீதியில் முன்னேற்றமடைகிறதா அல்லது தேக்க நிலையில் இருக்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பதைக் கூற முடியும்.

மக்களின் பணரீதியான வருமான உயர்ச்சியை விட அடிப்படைத் தேவையான பண்டங்களின் தொடர்ச்சியான விலையேற்றம் அதிகமாயின் மக்கள் விரக்திக்கு உள்ளாவார்கள், அரசின் மீது ஆத்திரம் கொள்வார்கள். இதனைப் புரிந்து கொள்ளும் ஆட்சியாளர்கள் மக்களை அமைதிப்படுத்தும் நோக்குடன், அனைத்து வகைப்பட்ட உழைப்பாளர்களினதும் பணரீதியான வருமானம் ஆண்டு தோறும் தொடர்ச்சியாக உயர்ந்து வந்திருக்கின்றமை தங்களது ஆட்சியின் சிறப்பு என அவ்வப்போது அறிக்கைவிடுவதைக் காணலாம். ஆனால் அதைவிட அதிகமாக அடிப்படைத் தேவைப் பண்டங்களின் விலைகள் உயர்ந்துள்ளதையோ, மேலும் முன்னர் இலவசமாக அல்லது குறைந்த செலவோடு பெறப்பட்ட கல்வி மற்றும் மருத்துவ தேவைகள் இப்போது பெரும் செலவுடைய விடயங்களாக மாறிவிட்டதையோ பெரிதுபடுத்த மாட்டார்கள். சில வேளைகளில் அதைப்பற்றிப் பேசினாலும், அதற்கான காரணங்களாக தம்மையும் மீறிய புறக்காரணிகளின் விளைவுகளே என நியாயப்படுத்துவார்கள். தலை விழுந்தால் எனக்கு – பூ விழுந்தால் உனக்கில்லை என்பதே வெற்றிகரமான தேர்தல் அரசியல்வாதிகளின் நியாயம்.

(தொடரும் பகுதி 3)