எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி 1

இருந்த ஆட்சியை மாற்றி புதிதாக அதிகாரக் கதிரைகளில் அமர்ந்த ஒவ்வொருவரும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான தத்தமது திட்டங்களை அறிவிக்கின்ற பொழுது நாட்டிலுள்ள மிகப் பெரும்பான்மையான மக்களின் நலன்கள் சார்ந்த வகையாகவே அவை மேற்கொள்ளப்படும் என்றனர். ஆனால், இலங்கையின் பொருளாதாரத்தில் இந்த ஆட்சியாளர் எவரும் தாம் கூறிய வகையாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை – முன்னேற்றங்களை ஏற்படுத்தவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும். 

மீண்டும் ஆட்சிபீடத்தில் அமர்ந்துள்ள ராஜபக்ஷாக்கள் ஆட்சிக்கு வருவதற்கான தேர்தலின் போதும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடனும் தங்களது ஆட்சியின் போது நாட்டில் வறுமை ஒழிக்கப்படும், வேலையின்மை என்பது இல்லாமற் போகும், பொருளாதாரம் அனைத்துத் துறைகளிலும் அதிசயிக்கத் தக்க வளர்ச்சிகளை அடையும் என்றெல்லாம் கூறினார்கள். ஆட்சிக்கு வந்து ஓரிரு மாதங்களில் முந்தைய ஆட்சியாளர்களால்த்தான் நாடு குட்டிச் சுவராகப் போய்விட்டது என்றார்கள்.

ஆட்சிக் கட்டிலேறி சரியாக நாலாவது மாதம் கொரோணா கிருமிகள் நாட்டுக்குள் புகுந்து விட்டன. அதைத் தொடர்ந்து வீழ்ந்து கிடந்த பொருளாதார நிலையை மீளச் சரிப்படுத்துவதற்கான தமது முயற்சிகளையெல்லாம் கொரோணா தடை செய்துவிட்டது என அதன் மீது பழியைப் போட்டார்கள். நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சி நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்காக என்னவெல்லாம் செய்தாலும் அவை ஒவ்வொன்றும் பிழைக்கிறதே என தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

கோளாறு கொரோணாவால் ஆனதல்ல 

சுதந்திரம் பெற்ற நாள் தொட்டு மாறி மாறி ஆட்சிக்கட்டிலேறிய ஒவ்வொரு கூட்டத்தினரும் நாட்டின் அரசியற்பொருளாதார அடித்தளங்களை கட்டியெழுப்புவதில் கடைப்பிடித்து வந்துள்ள கோளாறான கொள்கைகளும் குழறுபடியான நடைமுறைகளுமே இன்றைய அளவுக்கு இலங்கையின் பொருளாதாரத்தின் கூறுகள் மோசமான கட்டத்தை அடைந்திருப்பதற்குக் காரணங்களாகும். ஆட்சியாளர்கள் கோளாறான கொள்கைகளையும் ஒன்றுக்கொன்று இசைவற்ற வகையிலான நடைமுறைகளையும் கடைப்பிடித்தால் நாட்டின் அரசியற் பொருளாதாரம் எதிர்பாரா நெருக்கடிகளையும் விலக்க முடியா சிக்கல்களையும் கொண்டதாகவே அமையும் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

நாட்டின் அனைத்து பாகங்களுக்கும், அனைத்து இன மக்களுக்கும், மக்களிடையே உள்ள அனைத்து சமூக பொருளாதார பிரிவினருக்கும் உரிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை இதுவரை இலங்கையை ஆண்ட எந்த ஆட்சியாளராவது கடைப்பிடித்திருக்கிறார்களா என்று கேள்வி கேட்டால் – இந்த நாட்டின் நியாயமான பிரஜைகள் அனைவருமே இல்லையென்றுதான் பதில் சொல்லுவார்கள். 

இலங்கைக்கான அரசியற் சுதந்திரத்தை காலனித்துவ பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையின் சமூக பொருளாதார கட்டமைப்பின் மேற்தட்டிலிருந்த குழாத்தினரிடமே ஒப்படைத்தார்கள். பிர்த்தானிய காலனித்துவ ஆட்சிப் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கப் போராடியவர்களின் கைகளுக்கு இலங்கையின் ஆட்சியதிகாரம் சென்று விடக் கூடாது என்பதில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் மிக முன்னெச்சரிக்கையுடனேயே செயற்பட்டனர். 

ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் சுதந்திர இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு சுயசார்பு பொருளாதாரமாக கட்டியெழுப்பும் சிந்தனையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, மேற்கத்தைய முதலாளித்துவ ஆட்சியாளர்களினதும் அவர்களது பொருளாதார நிறுவனங்களினதும் தயவில் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தாங்கள் அனுபவித்த அரசியல் பொருளாதார சுகங்களை தொடர்வதிலேயே குறியாக இருந்தார்கள். அதற்குரிய வகையில் தமது அதிகார வாய்ப்பு வளங்களை குவிப்பதிலேயே அக்கறையாக செயற்பட்டார்கள். 

இலங்கையின் பிரதானமான அரசியற் கட்சிகள் அனைத்தும் நாட்டு மக்களிடையே சந்தேகங்களையும், பிளவுகளையும் வெறுப்புகளையும், விரோதங்களையும் விரக்திகளையும் வளர்த்து விட்டுள்ளன. அதன் மூலம் நாடாளுமன்றக் கதிரைகளை சுலபமாக கைப்பற்றலாம் – இலகுவாக ஆட்சியைப் பிடிக்கலாம் – பிடித்த ஆட்சியைத் தக்க வைக்கலாம் – மீண்டும் தேர்தலில் வெல்லலாம் – ஆட்சியைத் தொடரலாம் என்பதே இங்கு செல்வாக்கு மிக்க அனைத்து அரசியல்வாதிகளினதும் சூத்திரமாக உள்ளது. 

கடைப்பிடிக்கப்பட்ட கோளாறான பொருளாதாரக் கொள்கைகளோடு, குறிப்பிட்டவாறான தேர்தல் அரசியற் தந்திரங்களுமே நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மேலும் மிக மோசமான கட்டத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. பொதுவாக அரச அதிகாரத்தில் ஏற்படும் குழப்பங்கள், அரச நிர்வாகத்தில் இடம் பெறும் ஊழல் மோசடிகள், அரசியற் கட்சிகள் மற்றும் தேர்தல்கள் போன்ற விவகாரங்களே இலங்கையின் அரசியற் பொருளாதாரம் பற்றிய விவாதங்களிலும், கலந்துரையாடல்களிலும் சூடான சுவாரசியமான விடயங்களாக உள்ளன.

இலங்கையின் பொருளாதார விவகாரங்களினுடைய அடிப்படையான அம்சங்கள் அவ்வாறான முக்கியத்துவத்தைப் பெறுவதில்லை. அரசியல் விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான குறிப்புகள் ஆங்காங்கே அவ்வப்போது உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவை விரிவாகவோ அல்லது ஆழமாகவோ நோக்கப்படுவதுமில்லை – ஆய்வு செய்யப்படுவதுமில்லை.

ஆட்சிக் கதிரைக்கு ஆட்களை மாற்றி விட்டால்; மக்களின் வாழ்வு நிலையின் காட்சிகள் மாறுமா?

அரசின் ஆட்சி மாற்றம் பற்றி அவரவர் தீர்க்க தரிசனங்களை உரத்த குரலில் உறுதிபடக் கூறுபவர்கள், தாம் எதிர்வு கூறுகின்ற அல்லது விரும்புகின்ற ஆட்சிமாற்றத்தினால் நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வகையான முன்னேற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி திட்டவட்டமாக எதனையும் கூற முடியாதவர்களாகவே உள்ளனர். 

இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களை மாற்றி மற்ற ஆளும் வர்க்கக் குழுவினரை அதிகாரத்தில் அமர்த்தி விட்டால், பொருளாதார விடயங்களில் முன்னேற்றங்கள் தானாக நடைபெறும் என சிந்திப்பது எந்த வகையிலும் சரியானதாகாது. அடுத்த தேர்தலில் ஆட்சிக் கட்டிலேறி விட வேண்டுமென துடிப்பவர்கள் முன்னரும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்தான். 

மூன்றாவதான ஒரு குழுவினர் ஆட்சிக்கு வந்து விட்டால் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா எனக் கேள்வி எழுப்பி அறிவுபூர்வமாக பதிலைத் தேடினால் அப்போதும் நம்பத்தகுந்த காட்சிகள் எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை. நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார அம்சங்களும், நாட்டு மக்களின் அனைத்துப் பிரிவினரும் முன்னேற்றங்களை அடையும் – அநுபவிக்கும் நிலைமைகளை ஆக்குவதென்பது அவ்வளவு சுலபமாக ஒற்றைப்பாதைப் பயணத்தினால் சாதித்து விடக் கூடியதல்ல என்பது தெளிவான ஒன்றாகும். 

உள்நாட்டில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது “யுத்தத்தின் காரணமாகத்தான் நாட்டினுடைய பொருளாதாரம் முன்னேற முடியாமல் இருக்கிறது. யுத்தம் முடிவடைந்தால் நாடு பொருளாதார செழிப்பை நோக்கி பாய்ச்சலில் செல்லும் என்றார்கள்”. யுத்தம் முடிந்தும் 12 ஆண்டுகள் ஆகியும் அவ்வாறு நடைபெறவில்லை. இப்போது கொரோணாவைக் காரணம் காட்டுகிறார்கள். 

இங்கு அரச அதிகாரத்தில் உள்ளவர்களிடையே நிலவும் குழப்பங்கள் ஒருபுறமிருக்க, அரச நிர்வாகத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் நிறைந்துள்ளன – இலங்கையின் எட்டுத் திசைகளிலும் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன – கட்டுப்படுத்த முடியா வகையில் விலைவாசியேற்றம், வேலைவாய்ப்பில்லை என இலட்சக்கணக்கான இளைஞர்கள் – எட்டு மணி நேரம் வேலை செய்தாலும் வறுமைக் கோட்டைத் தாண்ட முடியவில்லையே என நாட்டில் அரைவாசிக்கு மேற்பட்ட குடிமக்கள் – நாட்டில் அத்தியாவசிய பண்டங்களுக்குத் தட்டுப்பாடு, அதனால் கள்ளச் சந்தைகளின் பெருக்கம் – கையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணி மிக மோசமான அளவுக்கு குறைந்திருக்கின்றமை, வெளிநாடுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டியும் கடனும் வளர் நெருப்பு போல் தொடர்ந்து உயர்கின்றமை என இன்னும் பல. இவ்வாறாக நாட்டின் பொருளாதார நிலைமை அலங்கோலமாகவும் நெருக்கடிகள் நிறைந்ததாகவும் உள்ளது.

 கொரோணாக் கிருமிகளின் பரவலால்த்தான் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துள்ளது என பேசிக் கொள்பவர்களும் நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் நாட்டின் பொருளாதாரம் தற்போது கொண்டிருக்கும் நெருக்கடிகளும் சிக்கல்களும் கொரோணாக் கிருமிகளின் பரவலுக்குப் பின்னர்தான் ஏற்பட்டவையல்ல. கொரோணாவின் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் பரவிக் கிடந்த அவலங்களையும் நெருக்கடிகளையும் குறிப்பிட்ட அளவு உக்கிரப்படுத்தியுள்ளமை வெளிப்படையான ஒன்றே. கொரோணா கிருமிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் இந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளும் சிக்கல்களும் தானாக முடிவுக்கு வந்து நாட்டின் பொருளாதாரம் சீராகி விடும் என எவர் நம்பினாலும் அது தவறாகும். 

அரசாங்கம் அவ்வாறாக பொதுமக்கள் நம்பும் வகையாக பிரச்சாரம் செய்யலாம், ஆனால் அதனை அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் மனச்சாட்சிப்படி நம்புபவர்களாக இருக்கமாட்டார்கள். அவற்றையெல்லாம் ஆட்சியாளர்களின் அரசியற் தந்திரோபாயங்களின் முகாமைத்துவ யுக்திகளாகவே கருதிக் கொள்ள வேண்டும்.

எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை கொள்ளவும் முடியவில்லை – கொடுக்கவும் முடியவில்லை 

 இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையான வார்த்தைகளைத் தெரிவிக்கின்ற எவரையும் அரசியற் கட்சி சாரா அறிஞர்களிடையே காண முடியவில்லை. மாறாக அவர்கள் பெரும்பாலும் தமது கவலை தோய்ந்த மனங்களையே – விரக்திகளையே வெளிப்படுத்துகிறார்கள். 

அரசாங்கத் தரப்பினர் தமது ஆட்சிக் காலத்திலான பொருளாதார சாதனைகள் பற்றி அடுக்கினாலும் அவர்களின் வார்த்தைகளில் பதட்டங்களும் குழப்பங்களுமே தெரிகின்றன. அத்துடன் தமது பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் பலயீனங்களையும் தோல்விகளையும் மறைக்க தமக்கு வசதியாக ஒரு பக்கமான தரவுகளைக் காட்டுகிறார்கள் அல்லது தப்பான தகவல்களை வெளியிடுகிறார்கள். 

தேசங்களின் பொருளாதார அம்சங்கள் தொடர்பான அடிப்படை அறிவு கொண்டவர்கள் மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் கடந்தகால வரலாற்று ஓட்டத்தை அறிந்தவர்களிற் பெரும்பான்மையினர், இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக பகிரங்கத்தில் தமது ஆத்திரங்களையும் விரக்திகளையுமே காட்டுகின்றனர். அத்துடன் அரசாங்கங்கள் மாறினாலும் இலங்கையின் பொருளாதார நிர்வாகத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் எதுவும் நடைபெறுவதில்லை என கண்டன பூர்வமான விமர்சனங்களை வெளிப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்கின்றனர். 

அரசாங்கத்தில் உள்ள மற்றும் அதற்கு சார்பாக உள்ள அறிவார்ந்தோர் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட நடைமுறைகள் மீது தவிர்க்க முடியாது கண்மூடித்தனமான நம்பிக்கைகளை வெளிப்படுத்த முனைகிறார்களே தவிர, அவர்களால் இலங்கைப் பொருளாதாரம் தொடர்பாக வெளிப்படுத்தப்படும் விமர்சனரீதியான கருத்துக்களையும் கேள்விகளையும் திட்டவட்டமாக மறுக்கவோ அல்லது மாற்றான பதில்களை உறுதிபட தெரிவிக்கவோ முடியாதுள்ளது. 

முன்னர் ஆட்சியில் இருந்த கட்சியினர் – அணியினர் இப்போதுள்ள பொருளாதார நெருக்கடிகள் பற்றி முறையற்ற ஒப்பீடுகளை மேற்கொண்டு தமது கால ஆட்சியில் நிலவிய பொருளாதார நிலைமைகள் பற்றி பெருமையடிக்கிறார்கள். இப்போதுள்ள ஆட்சியாளர்களால்த்தான் நாட்டின் பொருளாதாரம் மோசமாகியுள்ளதாக அறிக்கை விடுகிறார்கள் – விபரிக்கிறார்கள். 

இப்போதுள்ள ஆட்சியாளர்களோ கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட தப்பான பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாக விளைந்த பாதகங்களின் சுமைகளையே தாங்கள் இப்போது சுமப்பதாகக் கூறி தப்பிக் கொள்ளப்பார்க்கிறார்கள். 

இவ்வாறாக ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த கட்சியின் – அணியின் ஆட்சி அமைந்தால் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும் – முன்னேற்றங்கள் நிகழும் என பிரகடனம் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறான முன்னேற்றங்களை உண்மையில் சாத்தியமாக்கக் கூடிய மூல உபாயங்களையோ செயற்திட்டங்களையோ மக்கள் அறியும் வகையில் வெளியிடுபவர்களாக இல்லை. ஒவ்வொரு தடவையும் “முன்னைய ஆட்சியினர் பரவாயில்லை” என்று நினைக்கும் வழக்கத்தையே பொது மக்கள் தொடர வேண்டியவர்களாக உள்ளனர். 

அடிப்படையில் இலங்கை கொண்டுள்ள பொருளாதாரக் கட்டமைப்பு, மாறிமாறி வரும் அரசாங்கங்கள் கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள், நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அரச நிறுவனங்கள் ஆகியன தொடர்பாக பாரபட்சமற்றரீதியில், பகுத்தறிவு பூர்வமான முறையில் நோக்குகையில் எவராலும் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக திருப்திப்படவோ, பாராட்டவோ அல்லது எதிர்காலம் நிச்சயமாக முன்னேற்றகரமாக அமையும் என நம்பிக்கைகளை வெளிப்படுத்தவோ முடியாதுள்ளது என்பதே உண்மையாகும். 

 தொடரும் பகுதி 2