காங்கிரஸும் பவாரும் வளர்ந்து தேய்ந்த கதை

காங்கிரஸின் செல்வாக்குக்குப் பல காரணிகள் உண்டு. சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த கட்சி என்ற அடிப்படையில் இயல்பாகவே அமைந்துவிட்ட செல்வாக்கு பிரதான காரணம். அதை அடுத்து மாநிலத்தின் சர்க்கரைக் கூட்டுறவு அமைப்புகள், பால் பண்ணைப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றைச் சந்தைப்படுத்தும் பிற கூட்டுறவு அமைப்புகள் என்று பல்வேறு அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு. முக்கியமாக, சர்க்கரைக் கூட்டுறவு அமைப்புகளின் ஆதரவு அரசியல் என்பது வலுவானதாகப் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், மாநிலத்தின் முக்கியமான நிலவுடைமைச் சமூகமான மராத்தாக்களின் ஆதரவு.

சமீப காலத்துக்கு முன்புவரைகூட காங்கிரஸின் மிகப் பெரிய ஆதரவுத் தளம் மராத்தாக்கள்தான். மாநிலத்தின் மக்கள்தொகையில் 32% இருக்கும் இவர்கள்தான் இங்கு மிகப் பெரிய சமூகம். காங்கிரஸின் கேஷவ்ராவ் ஜேதே, யஷ்வந்த்ராவ் சவான், ஷங்கர்ராவ் சவான், விலாஸ்ராவ் தேஷ்முக் கூடவே தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் உள்ளிட்ட பலரும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். சரத் பவார் தனித்து தேசியவாத காங்கிரஸை உண்டாக்கியபோது, மராத்தாக்களின் ஆதரவு இரண்டாகப் பிளந்தது. விளைவாகத்தான், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தவிர்க்க முடியாததாக அங்கே நிலவுகிறது.

காங்கிரஸ் பலமும் பலவீனமும்

மகாராஷ்டிர மாநிலம் உதயமான 1960 முதலான வரலாற்றில் தொடங்கி 2014 வரையிலேயே இதுவரை 13 சட்டமன்றங்கள் அங்கே அமைந்திருக்கின்றன. 18 பேர் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் 14 பேர் காங்கிரஸ் முதல்வர்கள். ஒட்டுமொத்த முதல்வர்களில் தங்கள் ஆட்சிக் காலத்தை முழுவதும் நிறைவுசெய்தது காங்கிரஸின் வசந்த்ராவ் நாய்க், தற்போது தேவேந்திர ஃபட்நவீஸ் இருவரும்தான். ஏன் மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருப்பவருக்கும் எப்போதும் தலை மேல் கத்தி தொங்குகிறது என்றால், அங்கே நிலவும் அதிகாரப் போட்டிதான். காங்கிரஸில் தேசியத் தலைவர்களுடனான பிணைப்பைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளூரில் நடக்கும் கோஷ்டிப்பூசல்கள்தான் காங்கிரஸின் முதல் எதிரி.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தரீதியாக இரு களங்களை இங்கே தன் கையில் வைத்திருக்கிறது. ஒன்று, மத அடையாள அரசியல் சக்தியான பாஜக. மற்றொன்று, இன அடையாள அரசியல் சக்தியான சிவசேனை. இவை இரண்டையும் ஒருசேர வைத்திருந்தும்கூட 2014 வரை காங்கிரஸ் ஆட்சி இங்கே நடந்தது என்பதும், இப்போதும் மாநிலத்தில் அது முக்கியமான சக்தி என்பதும் காங்கிரஸின் உண்மையான பலம், பலவீனம் இரண்டும் எது என்பதை நமக்குச் சொல்லிவிடும்.

நெருக்கடிநிலைக்குப் பிறகு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை 1990-ல் முதன்முறையாக காங்கிரஸுக்கு வந்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 141 தொகுதிகளை காங்கிரஸ் அப்போது வென்றிருந்தது. சிவசேனையும் பாஜகவும் முறையே 52, 42 தொகுதிகளை வென்று எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தன. சுயேச்சைகளின் உதவியுடன்தான் அப்போது காங்கிரஸ் ஆட்சியமைத்தது. ‘மகாராஷ்டிரம் மராத்தியர்களுக்கே!’ என்ற கோஷத்துடனும் இந்துத்துவக் கொள்கைகளுடனும் வளர்ந்த சிவசேனை, 80-களில் காங்கிரஸுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது. சிவசேனைக்கு இணையாக பாஜகவும் மாநிலத்தில் வளர்ந்துகொண்டிருந்தது. 1992 பாபர் மசூதி இடிப்பும், அதைத் தொடர்ந்து மும்பை குண்டுவெடிப்புகளும் இக்கட்சிகள் வளர்வதற்கு மேலும் வலுவான காரணங்களாகின.

சரிவு மேலும் சரிவு

1995-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லை. சிவசேனை 73 இடங்களையும் பாஜக 65 இடங்களையும் வென்று இரண்டும் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்தன. நெருக்கடிநிலைக் காலம் தவிர்த்து, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுக்குக் கிடைத்த முதல் பெரும் அடி அது. 1999 தேர்தலில் காங்கிரஸும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் தனித்தே களம் கண்டன. காங்கிரஸ் 75 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 58 இடங்களையும் வென்றன. சிவசேனை 69 இடங்களையும் பாஜக 56 இடங்களையும் வென்றன. தேர்தலுக்குப் பின்பு தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் ஆட்சியமைத்தது.

2004 தேர்தலை காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்து எதிர்கொண்டன. அதில் காங்கிரஸ் 69 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 71 இடங்களையும் வென்றன. சிவசேனை 62 இடங்களையும், பாஜக 54 இடங்களையும் வென்றன. காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்தது. 2009 தேர்தலிலும் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்து, காங்கிரஸ் 82 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 62 இடங்களிலும் வென்றன. மொத்தமுள்ள இடங்களில் சரிபாதி. சிவசேனை 45 இடங்களிலும் பாஜக 46 இடங்களிலும் வென்றன.

சரத் பவார் எனும் உள்ளூர் உதாரணம்

காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களை எப்படி அணுகியது, அதன் அணுகுமுறை எப்படி அதனுடைய சரிவுக்குக் காரணம் என்பதை சரத் பவார் எனும் உள்ளூர் உதாரணத்தைக் கொண்டே விளக்கலாம். ஒருபுறம், சரத் பவாரை அதனால் முழுமையாகத் தக்கவைத்துக்கொள்ளவும் முடியவில்லை. மறுபுறம், அவருடைய செல்வாக்கு இல்லாமல் அதனால் பயணிக்கவும் முடியவில்லை. அதேபோல, சரத் பவாரும் அதிகாரமே பிரதானம் என்று வாழ்வை அமைத்துக்கொண்டாரே தவிர, மக்கள் நல சித்தாந்தமோ, கொள்கைப் பிடிமானமோ அவருக்குப் பிரதானமாக இல்லை. இந்த இரண்டும் ஒருங்கிணைந்திருந்தால் இன்றைய மகாராஷ்டிர காங்கிரஸின் விதி வேறாக இருந்திருக்கும்.

செல்வாக்கு மிகுந்த மராத்தா குடும்பத்தில் 1940-ல் பிறந்த சரத் பவார், 18 வயதிலேயே இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். 1962-ல் 22 வயதில் பூனா மாவட்டத்தின் இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். 1964-ல் மகாராஷ்டிர இளைஞர் காங்கிரஸின் செயலாளர்களில் ஒருவரானார். இதன் மூலம் கட்சியில் பெரும் செல்வாக்கு அவருக்கு வந்துசேர்ந்தது. மகாராஷ்டிரத்தின் முதல் முதல்வரான யஷ்வந்தராவ் சவானுக்கு நெருக்கமானவராக பவார் ஆனார். 27 வயதில் பாரமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1969-ல் இந்திரா காந்தியின் இந்திய தேசிய காங்கிரஸ் (ஆர்) பிரிவில் சேர்ந்தார். இதற்கிடையே கரும்பு ஆலைகள், கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற வட்டாரத்தில் தனது செல்வாக்கையும் அதிகரித்துக்கொண்டார்.

1970-களின் தொடக்கத்தில் சரத் பவாருக்கு உள்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. நெருக்கடிநிலைக்குப் பிறகு சரத் பவார், இந்திரா காங்கிரஸ் (யூ) கட்சியில் இணைந்தார். மகாராஷ்டிரத்தில் அக்கட்சியின் சார்பில் ஜனதாவின் ஆதரவோடும், காங்கிரஸிலிருந்து 40 எம்எல்ஏக்களின் ஆதரவோடும் 1978-ல் சரத் பவார் ஆட்சியமைத்தார். அப்போது அவருக்கு வயது 38-தான். மகாராஷ்டிரத்தில் மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெயரை இன்றுவரை சரத் பவார்தான் தக்க வைத்திருக்கிறார். ஆனால், 1980-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தியின் அரசு, மகாராஷ்டிர மாநில அரசைக் கலைத்துவிட்டது. எதிர்க்கட்சி வரிசையில் சிலகாலம் உட்கார்ந்து பார்த்த பவார், தனக்கான வாய்ப்புகள் மங்கிக்கொண்டுவருவதை உணர்ந்து, 1987-ல் மறுபடியும் காங்கிரஸுடன் இணைந்துகொண்டார்.

1988-ல் மீண்டும் முதல்வரானார். 1990-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மைக்கு ஒருசில இடங்கள் குறைவாக இருந்தாலும், சுயேச்சைகளின் ஆதரவால் சரத் பவார் ஆட்சியமைத்தார். 1991 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இல்லாவிடினும் தனிப்பெரும்பான்மையை காங்கிரஸ் கொண்டிருந்தது. தன்னைப் பிரதமராக்குவார்கள் என்று சரத் பவார் எதிர்பார்த்தார். ஆனால், நரசிம்ம ராவைப் பிரதமராக்கினார்கள். பவார் ராணுவத் துறை அமைச்சரானார். 1993-ல் மும்பை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் சுதாகர்ராவ் நாய்க் ராஜினாமா செய்தார். ஆகவே, மகாராஷ்டிரத்தின் முதல்வர் பொறுப்பை நான்காவது முறையாக ஏற்கும்படி சரத் பவார் பணிக்கப்பட்டார்.

1999 தேர்தலின்போது, பிரதமர் வேட்பாளராக சோனியா காந்தியை முன்னிறுத்துவதில் காங்கிரஸ் விருப்பம் கொண்டிருந்தது. ‘இத்தாலியில் பிறந்தவர் இந்தியாவுக்குப் பிரதமர் ஆவதா’ என்ற பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்தது. காங்கிரஸுக்குள்ளும் இது எதிரொலித்தது. சோனியாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சரத் பவார், சங்மா, தாரிக் அன்வர் மூவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் விளைவாக, சரத் பவாரும் சங்மாவும் சேர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை 1999-ல் உருவாக்கினார்கள். இதுதான் தேசியவாத காங்கிரஸ் பிறந்த கதை. காங்கிரஸை எதிர்த்துக்கொண்டு பிறந்தாலும் தேசியவாத காங்கிரஸின் அரசியலானது பெரிதும் காங்கிரஸைச் சார்ந்தே அமைந்திருக்கிறது.

எதிர்த் தாக்குதல்

மகாராஷ்டிர வரலாற்றில் காங்கிரஸ் முழுமையான எதிரணித் தாக்குதலை எதிர்கொள்கிறது என்றால், அது இப்போதுதான். 2014 தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பாஜக, சிவசேனை ஆகிய கட்சிகள் கூட்டணி சேராமல் தனித்தே களம் கண்டன. காங்கிரஸ் 42, தேசியவாத காங்கிரஸ் 41, பாஜக 122, சிவசேனை 63 இடங்களில் வென்றன. தனிப்பெரும்பான்மை கொண்ட பாஜக, சிவசேனையுடன் இணைந்து ஆட்சியமைத்து அதுவரையிலான காங்கிரஸ் ஆதிக்கத்துக்குப் பெரும் முட்டுக்கட்டை போட்டது.
2014-ல் ஆட்சிக்கு வந்த தேவேந்திர ஃபட்நவீஸ் மோடியின் சிற்றுருவாக மாறித் தனது கட்சியில் உள்ள தன் எதிர்ப்பாளர்களையும் எதிர்க்கட்சியினரையும் கபளீகரம்செய்ய ஆரம்பித்தார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இரண்டிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கியத் தலைவர்கள் பாஜகவை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். தேர்தல் சமயத்தில் இந்த வேகம் அதிகரித்தது. காங்கிரஸிலிருந்தும் தேசியவாத காங்கிரஸிலிருந்தும் வந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, இக்கட்சிகளுக்கு ஃபட்நவீஸ் கடும் நெருக்கடியை அதிகரித்திருக்கிறார்.

காங்கிரஸைப் போலவே தேசியவாத காங்கிரஸின் பலமும் கரும்பு, சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு அமைப்புகள் போன்றவைதான். இவற்றில் பெரும்பாலானவை மராத்தாக்களுக்குச் சொந்தமானவை. எனினும், தற்போதைய மராத்தாக்களுக்கான 16% இடஒதுக்கீட்டால், காங்கிரஸைப் போலவே தேசியவாத காங்கிரஸின் வாக்கு வங்கிக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. கூடவே, தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் பாய்ந்திருப்பது, முக்கியமான தலைவர்கள் சிலர் பாஜகவுக்குத் தாவியிருப்பது போன்றவையெல்லாம் சரத் பவாருக்குப் பெரும் தலைவலி.

50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையைப் பார்த்திருக்கும் சரத் பவார் குடும்ப அரசியல், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறார். மிக பலவீனமான நிலையிலேயே அது இத்தேர்தலை எதிர்கொள்கிறது. அதன் ஒரே நம்பிக்கை ஃபட்நவீஸின் ஆட்சி எந்த வகையிலும் நல்லாட்சி என்ற பெயரைக் கொண்டிருக்கவில்லை என்பது மட்டும்தான்!

  • ஆசை,