கியூபா நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஆளுமை

உலகம் முழுவதும் கம்யூனிச ஆட்சிகள் வீழ்ச்சியடைந்த நிலையில், தன்னுடைய மிக பெரிய எதிரியான அமெரிக்காவின் வாயிலில் செந்நிறக் கொடி தொடர்ந்து பறந்து செய்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ.

ஸ்பெயினில் இருந்து கியூபாவுக்கு குடிபுகுந்திருந்த ஏங்கெல் மரியா பௌடிஸ்டா காஸ்ட்ரோ யி அர்கிஸ் என்பவருக்குமகனாக, ஃபிடல் அலிஜான்டிரா காஸ்ட்ரோ ருஸ் 1926 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி பிறந்தார்.

சன்டியாகோவில் இருக்கும் கத்தோலிக்க பாடசாலைகளில் காஸ்ட்ரோ கல்வி கற்றார். விளையாட்டுக்களில் அதிக நேரத்தை செலவிட்டதால் கல்வியில் சோபிக்க தவறினார். 1940-களின் நடுவில் ஹவானா பல்கலைக்கழகத்தில் அவர் சட்டம் படித்து கொண்டிருந்தபோது, மேடைப் பேச்சாளராக தன்னுடைய திறமைகளை கூர்மைப்படுத்தி ஓர் அரசியல் செயற்பாட்டாளராக மாறினார்.

ஊழல் குற்றச்சாட்டுக்களில் மூழ்கியிருந்த ஜனாதிபதி ராமோன் கராவ் தலைமையிலான கியூபா அரசை சீர்படுத்துவதும் அவருடைய இலக்குகளில் உள்ளடங்கியது.வன்முறை போராட்டங்கள் அன்றாட வழக்கமாயின. ஃபிடல் காஸ்ட்ரோ பொலிசாரால் தேடப்படும் நபரானார்.

டொமினிக்கன் குடியரசின் வலதுசாரி தலைவர் ரபேல் ட்ரஜில்லோவின் ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியானார் காஸ்ட்ரோ.ஆனால், அமெரிக்க தலையீட்டால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டு காஸ்ட்ரோ கியூபாவின் ஒரு செல்வந்த அரசியல்வாதியின் மகளான மிர்டா டயஸ்-பலார்டை திருமணம் செய்தார். நாட்டின் மேல்தட்டு வர்க்கத்தோடு இணைவதற்கு மாறாக அவர் மார்க்ஸிசத்தால் அதிகமாக ஈர்க்கப்பட்டார்.

தடை இல்லாத முதலாளித்துவம்தான் கியூபாவில் தோன்றியிருக்கும் பொருளாதார பிரச்சனைகளுக்கு காரணம் என்றும், மக்களின் புரட்சியால் மட்டுமே இதனை முடிக்கு கொண்டு வர முடியும் என்றும் காஸ்ட்ரோ நம்பினார். பட்டப்படிப்புக்கு பின்னர் வழக்கறிஞராக பணியாற்றிய அவர் தொடர்ந்து கடனில் மூழ்கியதால் அப்பணியிலும் முன்னேற்றம் காணவில்லை.

அரசியல் செயற்பாட்டாளராகவே தொடர்ந்த அவர் வன்முறை போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். 1952 ஆம் ஆண்டு ஃபல்கென்சியொ படிஸ்டா நடத்திய ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பால், அப்போதைய கியூபா ஜனாதிபதி கார்லோஸ் பிரியோ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

அமெரிக்காவோடு நெருக்கிய உறவை கொண்டிருக்கும், படிஸ்டாவின் கொள்கைகளும், சோஷலிச அமைப்புக்களை அடக்கி ஒடுக்குவதும் காஸ்ட்ரோவின் அடிப்படை அரசியல் நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்தன. படிஸ்டாவின் ஆட்சியை அகற்றிவிட மறைமுகமாக வேலைசெய்யும் ‘த மூவ்மென்ட்’ என்ற அமைப்பை ஃபிடல் காஸ்ட்ரோ உருவாக்கினார்.

ஓர் ஆயுதக் கிளர்ச்சிக்கு தேவையான ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக, 1953 ஆம் ஆண்டு சன்டியாகோவுக்கு அருகில் இருந்த மொன்காடா படைத்தளம் மீது தாக்குதல் நடத்த காஸ்ட்ரோ திட்டமிட்டார்.அந்த தாக்குதல் தோல்வியடைந்து, பல புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.அந்த கைதிகளில் ஒருவராக இருந்த காஸ்ட்ரோ, 1953 ஆம் ஆண்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

காஸ்ட்ரோ 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். ஆனால், வெறும் 19 மாதங்கள் கழித்த பின்னர், 1955 ஆம் ஆண்டு பொதுமன்னிப்பின் பெயரில் விடுவிக்கப்பட்டார்.

அவர் சிறையில் இருந்த குறுகிய காலத்தில், தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டு, மார்க்ஸிய சித்தாந்தங்களில் மூழ்கினார். படிஸ்டா தன்னுடைய எதிரிகளை ஒடுக்குவதை தொடர்ந்ததால், கைதாவதில் இருந்து தவிர்க்க காஸ்ட்ரோ மெக்ஸிகோ தப்பிச் சென்றார்.

அங்கு தான் அவர் இளம் புரட்சியாளர் எர்னஸ்டோ சே குவாராவை சந்தித்தார்.1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் படகில், 81 ஆயுதம் தாங்கிய சகாக்களோடு ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா திரும்பி வந்தார்.இந்தக் குழு சியர்ரா மாஸ்டிரா மலைகளில் அடைக்கலமானது. இந்த தளத்தில் இருந்து கொண்டு ஹவானாவில் நடைபெற்று வந்த ஆட்சிக்கு எதிராக அவர் கெரில்லா தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்.

1959 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி, கிளாச்சியாளர் படை கியூபாவின் தலைநகரில் நுழைந்தது. அதிபர் பாடிஸ்டா பதவியை துறந்து ஓடிவிட்டார்.பாடிஸ்டாவின் நூற்றுக்கணக்கான முன்னாள் ஆதரவாளர்கள் விசாரணைகளுக்கு பின்னர் மரண தண்டனை வழங்கப்பட்டனர். இந்த விசாரணைகள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு பார்வையாளர்கள் பலரால் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசியல் கைதிகளாக நூற்றுக்கணக்கான மக்கள் சிறைக்கும், கடுவூழிய முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்க ஆயிரக்கணக்கான கியூபா மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர்.

1960 ஆம் ஆண்டு, கியூபா தீவில் அமெரிக்கா நடத்தி வந்த வர்த்தகங்கள் அனைத்தையும் ஃபிடல் காஸ்ட்ரோ தேசியமயமாக்கினார். இதற்கு பழிவாங்கும் விதமாக, அமெரிக்கா பொருளாதார தடையை கியூபா மீது விதித்தது. இந்த தடை 21 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.1961 ஆம் ஆண்டு, கியூபாவில் இருந்து வெளியேறியோரை வைத்து தனிப்பட்ட படையை உருவாக்க ஆளெடுத்து, அவர்களை வைத்து கியூபா தீவை ஆக்கிரமித்து, ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசை கவிழ்க்க அமெரிக்கா முயற்சித்தது. பிக்ஸ் வளைகுடாவில் வைத்து பலரைக் கொன்றும், ஆயிரம் பேரை கைது செய்தும் ஆக்கிரமிப்பாளர்களை கியூபா படைப்பரிவுகள் பின்வாங்க செய்தன. உலக வல்லரசின் மூக்கை உடைத்த ஃபிடல் காஸ்ட்ரோவை, அமெரிக்கா ஒருபோதும் மன்னிக்காத நிலைமையை இந்த போர் உருவாக்கியது.

இப்போது காஸ்ட்ரோ அமெரிக்காவின் முதல் எதிரியாகிருந்தார். ’ஆப்பரேஷன் மங்கூஸ்’ என்று பெயரிடப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டு அவரை படுகொலை செய்ய அமெரிக்க உளவு துறை முயற்சி செய்தது.அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.உலகத்திலேயே மிகவும் முன்னேற்றம் அடைந்த நாடு என்று ஃபிடல் காஸ்ட்ரோவால் கூறப்பட்ட அந்நாடு, உண்மையில், மாட்டு வண்டிகளின் காலத்திற்கு திரும்பியது. 1990-களின் மத்தியில், பல கியூபா மக்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

முன்னதாக அரசியல் காரணங்களுக்காக நாடு கடந்து சென்றவர்கள், இப்போது, பொருளாதார காரணங்களுக்காக சிறந்த வாழ்க்கையை தேடி ஆயிரக்கணக்கானோர் கடல் கடந்து ஃப்லோரிடாவுக்கு நாடு கடந்தனர். பலர் வழியிலேயே கடலில் மூழ்கினர். ஃபிடல் காஸ்ட்ரோவிடம் நம்பிக்கை இல்லாதை இது வெளிப்படுத்தியது.

பிந்திய ஆண்டுகளில் காஸ்டேரோ மிகவும் தணிவடைந்து இனிமையானவராக தோன்றினார்.

உலகம் எதிர்பார்க்க முடியாத நிகழ்வு ஒன்று 1998 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.அப்போதைய பாப்பரசர்இரண்டாம் ​ேஜான் ​ேபால்,அந்த ஆண்டு கியூபா வந்தார்.

தன்னுடைய தனி சிறப்புமிக்க கரிபியன் கம்யூனிஸத்தை உருவாக்கியிருந்த காஸ்ட்ரோவுக்கு, தன்னுடைய புரட்சியை காத்துக் கொள்ள அவருடைய கடைசி ஆண்டுகளில் சில சுதந்திர வர்த்தக சீர்திருத்தங்களை மேற்கொள்வது கட்டாயமாகியது.

2006 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி தன்னுடைய 80-வது பிறந்த நாளுக்கு சில நாள்களுக்கு முன்னர், அவசர குடல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, அதிகாரத்தை தற்காலிகமாக தன்னுடைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் அவர் வழங்கினார்.

அவருடைய உடல் நலம் நலிவடைய தொடங்கியது. 2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில், அடுத்த தேசிய பேரவை கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் தலைமை தளபதி பதவிகளை ஏற்றுகொள்ள போவதில்லை என்று காஸ்ட்ரோ அறிவித்தார்,

உடல் நலமற்று போன பின்னர், மீண்டும் 2010 ஆம் ஆண்டு முதலாவது முறை பொதுநிகழ்வில் தோன்றிய அவர், தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, தொலைக்காட்சி பேட்டியும் அளித்தார்.மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில் அவர் காலமானார்.

கியூபா மக்கள் பலர் சந்தேகத்திற்கு இடமின்றி ஃபிடல் காஸ்ட்ரோவை வெறுத்தாலும், பிறர் உண்மையிலேயே அவரை நேசித்தனர்.அமெரிக்காவுடனான சச்சரவுகளில் வெற்றி பெற்றவராக ஃபிடல் காஸ்ட்ரோவை அவர்கள் பார்த்தனர்.

அவர்களைப் பொறுத்தமட்டில், காஸ்ட்ரோ என்றால் கியூபா, கியூபா என்றால் காஸ்ட்ரோ என்பதுதான் உண்மை.