கிழக்கின் அரசியலுக்கான நேர்மைத்தனம்

நமது கிழக்கைப் பொறுத்தவரையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைப்பு, அதனூடான செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புகள் குறித்து நடைபெற்று வருகின்ற வேலைத்திட்டங்களுக்கு, நேரெதிராகக் கிழக்கைப் பிரித்து வைக்கின்ற, பிரிந்து நிற்கின்ற வகையிலான, குழப்பகரமான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டவாறே இருக்கின்றன.

இருதரப்பு, முத்தரப்பு, பல தரப்பு என நடைபெற்று வரும் இவ்வாறான ‘சுற்றிவளைப்பு’களின் நோக்கங்கள், நிறைவேறுமா என்பதுதான் கேள்விக்குரியது.
இப்போதைக்கு, கிழக்குத் தமிழர் ஒன்றியம், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு, கிழக்கின் தமிழர் கூட்டணி என மூன்று தரப்புகளின் முயலுகைகள் வெளிப்படையாகவே நடைபெறுகின்றன. தொடர்ந்தும் இதற்கான முயலுகைகள் நடைபெற்றாலும், பயன் என்ன கிடைத்திருக்கிறது என்றால், ஒன்றுமில்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கிறது.

இந்த நிலையில், மட்டக்களப்பில் கடந்து ஞாயிற்றுக்கிழமை (14) கிழக்கில் ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில், ‘ஈழத் தமிழர் பேரவை’ எனும் புதியதோர் அமைப்பு இறங்கியிருக்கிறது. இதன் தொனிப்பொருள், கிழக்கு மாகாணத்தில் பலமில்லாத தமிழர் தலைமைத்துவத்தின் இடைவெளிகளை நிரப்புதல் ஆகும்.

ஈழத் தமிழர் பேரவையின் தலைவர், பிலிப் முருகையா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழவர் ஜனநாயகக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், முற்போக்குத் தமிழர் அமைப்பு, மக்கள் முன்னேற்றக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முக்கியமாக, இக்கலந்துரையாடலில் பங்கு கொண்டவர்கள் பற்றிப் பார்ப்போமானால், ஈழத் தமிழர் பேரவையின் தலைவர் பிலிப் முருகையா, திருகோணமலையில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றி, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுவதற்காகப் பணியைத் துறந்தவர். ஆங்கிலப் புலமையும் பேச்சுத்திறமையும் நிதிகளைப் பெறுவதற்காக திட்டங்களைத் தயாரிப்பதிலும் கெட்டிக்காரர். திருமலையை விட்டு மட்டக்களப்புக்கு வந்து, கிழக்குக்கு புதியதொரு கூட்டணியைத் தொடக்க, ஏன் முயல்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

அடுத்து, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தை உருவாக்கிய செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், ‘தமிழர் மகா சபை’ என்னும் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கப்பல் சின்னத்தில் போட்டியிட்டுத் தோல்விகண்டவர். இதற்கு முன்னரும் பல தடவைகளில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பல தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிக் கொண்டவர். கிழக்கில் அரசியலுக்கான முயற்சியில், ஏற்கெனவே பலரும் இணைந்து உருவாக்க முனைந்த அழுத்தக் குழுவொன்றை முன்னெடுக்க முடியாமல் போனதைத் தொடர்ந்து, சில வருடங்களின் பின்னர், ‘கிழக்குத் தமிழர் ஒன்றியத்தை’ சட்டத்தரணி சிவநாதனுடன் இணைந்து உருவாக்கினார். அந்த முயற்சியில் உருவான கட்சியாக, கிழக்குத் தமிழர் கூட்டமை’ப்பைச் சொல்கிறார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி’யின் பொதுச் செயலாளர் வ.கமலதாஸ், அடிப்படையில் சிறப்பானதோர் ஆங்கில ஆசிரியராக இருந்து, மட்டக்களப்பில் ‘அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம்’ என்ற அமைப்பை ஆரம்பிப்பதில் மும்முரமாக இருந்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றி, பல தடவைகள் தேர்தலில் போட்டியிட்டு, இப்போது கருணாவின் கட்சியில் இருக்கிறார்.
அருண் தம்பிமுத்து, ‘மக்கள் முன்னேற்றக் கட்சி’ என்ற புதிய கட்சியொன்றை உருவாக்கியிருக்கிறார். இவருடைய தந்தையின் அரசியல் பாரம்பரியத்தில் இவருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் காரணமாக, மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தவேளை, அவருடைய கட்சியில் அமைப்பாளராக இருந்து, பல்வேறு பிரச்சினைகளுக்கு உட்பட்டு, இப்போது மீண்டும் புதியதொரு கட்சியைத் தொடங்கி, நகர்த்த முயல்கிறார். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சுயேட்சைக் குழுவொன்றைப் போட்டியிட வைத்து, மண்முனை மேற்கு பிரதேச சபையில் ஓர் உறுப்பினர் தெரிவாகி இருக்கிறார்.

டெலோ சார்பில், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயர் சத்தியசீலன், உறுப்பினர்களான ஜெயந்திரகுமார், முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், அது தவிர நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின், முற்போக்குத் தமிழர் அமைப்பின் பிரதிநிதி என்று, பலர் பற்றிய விபரிப்புகள் இருக்கின்றன.

இந்த இடத்தில்தான், கிழக்கு மாகாணத்தில் பலமில்லாத தமிழர் தலைமைத்துவம் ஒன்று காணப்படுகிறது என்று அடையாளம் காணலும், அதன் இடைவெளியை நிரப்புவது என்பதும் ஒரு புதிய கூட்டமைப்பின் ஊடாகத்தான் நடைபெறவேண்டுமா என்ற வினா எழுகிறது.

தற்போதைக்கு கிழக்கு மாகாணத்தின் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதில், யாருக்கும் இருவேறு கருத்து இருக்கப்போவதில்லை. ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சொல்வது போன்று, “ஒரே இரவுக்குள் ஒன்றும் நடக்கப் போவதுமில்லை; கேட்டுக் கேட்டு கட்டியிருந்த வேட்டியும் போய், கோவணமும் இல்லா நிலைக்குத் தமிழர்கள் வந்துவிடவும் மாட்டார்கள்”.

கடந்த வருடத்தில், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தால், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்ற போது, ஐந்து கட்சிகள் இணையவுள்ளதாகத் தெரிவித்து, கடைசியில் எல்லாம் கையை விரித்த நிலைமை ஏற்பட்டிருந்தது. ஆனால், அதன் ஏற்பாட்டாளர் கோபாலகிருஷ்ணனுடன் இப்போது சில இணைந்துள்ளன. ஏனையவை எதிர்காலத்தில் இணையலாம். ஆனால், கட்சி பதிவுக்குச் செல்கிறது என்று அறிவித்திருந்தார்.

கிழக்கின் தமிழர் அரசியல் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற ஒரு கட்சி அமைக்கப்பட்டுள்ள போது, மேலுமொரு கூட்டமைப்பு என்ற பெயருடன் கட்சியொன்றைப் புதிதாக அமைப்பது, மக்கள் மத்தியில் சலிப்புத் தன்மையை ஏற்படுத்தும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், இதுவும் வலுவானதாக முடியவில்லை என்பது புலப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட வேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வி. ஆனந்தசங்கரி, தமது உதயசூரியன் சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் என்ற கருத்தை வெளியிட்டது போன்றே, இந்த முடிவும் இருக்கிறது.

இலங்கையில், விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், உருவான ஜனநாயகச் சூழல், சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று சந்தேகப்படுகின்ற அதேநேரத்தில், மக்களுக்கு வீணான மனஉழைச்சலை ஏற்படுத்தும் வேலைகள் நடைபெறுவது கவலையை ஏற்படுத்துகின்றது.

அரசியல் கொள்கைகள், மக்களின் நலனுக்கானவை என்றாலும், அதைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு ஆயிரம் கட்சிகள் முளைப்பது எதற்காக என்ற கேள்வியை இந்த இடத்தில் முன்வைத்தால், மேலே சொன்னதற்கு மேலதிகமாக பணம் சம்பாதிக்கும் மனப்பான்மையே தலைவிரித்தாடுவது தௌிவாகத் தெரிகிறது.

ஆரம்ப காலங்களில் மக்களின் நலனும் சமூக சேவைகளும் அரசியல்வாதிகளின் நோக்கங்களாக இருந்த நிலையில், இப்போது பிரபலமும் வருமானம் ஈட்டும் முயற்சிகளும் பழிவாங்கல்களுமே மிஞ்சியிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாகியிருக்கின்ற அரசியல் அலை, அதனை வீழ்த்திவிட வேண்டும் என்பதே தவிர, எல்லோரும் சொல்வது போன்று, கிழக்குத் தமிழர்களுக்கான பலமான அரசியல் அதிகாரம் இரண்டாம் பட்சம்தான் என்ற கருத்து நிலை, தமிழர்கள் மத்தியில் இப்போது பொதுமைப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பு சார்பாகப் பட்டியலில் இணைந்து, பல்வேறு செயற்பாடுகளின் மூலம் தேர்தலில் வென்று, நாடாளுமன்றத்துக்குத் தெரிவான எஸ்.வியாழேந்திரன், அமைச்சுப் பதவிக்காக ஆரம்பத்திலிருந்தே முயன்றார்; அது நடைபெறவில்லை. திடீரென மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக அறிவிக்கப்பட்டவுடன் கிழக்கு அபிவிருத்திப் பிரதி அமைச்சராகப் பதவியை ஏற்றார். ஆனால் ஒரு வாரத்திலேயே அது இல்லாமல் போனது. அதனையடுத்து, தேர்தல் பட்டியலில் அவரை உள்ளடக்கும் வாய்ப்பு, மட்டக்களப்பில் எந்தக் கட்சியிடமும் சாத்தியப்படவில்லை. அதற்கு, வியாழேந்திரனுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு மட்டும் காரணமல்ல; அக்கட்சிகளின் மீதான நம்பிக்கையீனங்களும் காரணம் தான்.

இவ்வாறான நிலைமையில், தமிழ்த் தேசிய எதிர்ப்புச் சிந்தனையுடன், தமிழ்த் தேசிய எதிர்ப்புக்காகவே முயலுகின்ற நிதியளிப்பாளர்களின் சிந்தனைகளுக்குள் சென்று செயற்படும் அமைப்புகளை யார் நம்பிக்கை கொள்வது என்பது புரியாத புதிராக இருக்கிறது. அதேநேரத்தில் ஒவ்வொருவருடைய பின்புலங்களும் தமிழர்களது நம்பிக்கையைச் சிதைப்பவையாகவே இருக்கின்றன என்பதும் உண்மை.

ஜனநாயக வெளியில் நாம் எல்லோரும் எண்ணங் கொள்வதைப் போன்றல்லாது, யுத்தத்தின் முடிவுக்குப் பின்னர் ஏற்பட்ட ஜனநாயகச் சுதந்திரம் தமிழர்களைப் பொறுத்தவரையில் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை. வெளிநாட்டுச் சக்திகளின் உந்துதல்களும், பெரும்பான்மைக் கட்சிகளின் முயற்சிகளும் பெரியளவான நிதி வழங்கல்களும் தமிழர்களைப் பிரித்தாழும் முயற்சிக்கு தொடர்ந்தும் நீர் ஊற்றிக்கொண்டே இருக்கும்.

கடந்த யுத்த காலத்திலும் சரி, சுனாமிக்குப் பின்னரான காலங்களிலும் சரி இலங்கையில் இயங்கிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், தேசிய, உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைத்த நிதிகள் அவ்வளவும் முழுமையாக மக்களின் அபிவிருத்திக்காகச் செலவு செய்யப்பட்டிருந்தால், நமது நாடு செல்வச் செழிப்புடன் ஜொலித்திருக்கும்.

ஆனால், பணம் விழுங்கிகள் காரணமாக, அது இன்னமும் நிறைவேறவில்லை. அதே போன்றதுதான் அரசியலும்! ஆனால், ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்பது மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி. இதன் தொக்கல்தான், கிழக்கின் அரசியல் நேர்மைத்தனத்தை மக்களுக்குச் சொல்லும். சாதாரண மக்களின் சிந்தனைகளைப் புரிந்து, அவர்களுக்கான தேவைகளை நடுத்தர மக்கள் நிறைவேற்ற முயல்வதில்லை. அதே போன்றுதான், செல்வந்தர்கள் எனும் மேல் நிலையினரும்; இது அரசியலுக்கு அப்பாற்பட்டதா என்ன?

கிழக்கின் தமிழர் கூட்டணி

தாயகத்தின் இதயபூமியான கிழக்கு என்றும் இல்லாதவாறு இடர்பாடுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தின் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, காரியமாற்றாவிடின் கிழக்கில் பரந்துவாழும் ஈழத்தமிழரின் இருப்பு, கேள்விக்குறியாகி விடும். நாம் அதிகமாய் நேசித்த இந்த இதயபூமி, அரசியல் பகடையாட்டங்களுக்குப் பலியாவதை எம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியாது.

கிழக்கின் அரசியல் யதார்த்தமும் கலாசாரமும் தமிழர் அபிலாஷைகள் ஊடான செல்நெறிப்போக்கில் நின்று தடம் புரண்டுள்ளன. தமிழரின் பண்பாட்டியலும் மூத்த குடியின் நிலங்களும் அவர்கள் பொருண்மியமும் அபகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் கிழக்கிலே பலமான தமிழர் அரசியல் கூட்டமைப்பு தேவைப்படுவதை உணர்ந்து, கிழக்கில் உள்ள புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூக அமைப்புகளை இணைத்து அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை ஈழத் தமிழர் பேரவை நிறைவேற்றியுள்ளது.

ஈழப்போர் ஓய்வடைந்ததின் பின்னரான ஒரு தசாப்த காலத்துக்குள் கிழக்கின் தமிழர்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை மனதில் இருத்தியும் கடந்த ஒரு தசாப்த காலமாகக் கிழக்கின் தமிழர் சார் சமூகப் பொருளாதார, பண்பாட்டியல் மற்றும் அரசியல் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான நிலைமைகளைக் கவனத்திற்கொண்டும்,

கிழக்கில் தமிழர்களுடைய அரசியல் தலைமைத்துவம் சம்பந்தமாகத் தற்போது ஏற்பட்டிருக்கின்ற விமர்சனங்களை மனதில் வைத்தும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின், ஈழத்தமிழினத்தின் அரசியல் தலைமைகள் என்று தம்மை அழைத்துக்கொள்வோரின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளை இனங்கண்டும் இப்படியானதொரு நிலைமை கிழக்கில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களை மேலும் நிர்க்கதியாக்குவதோ டல்லாமல் தமிழினத்தின் சமூகப் பொருளாதார அரசியல் தளங்களில் ஏற்படுத்தப்போகும் ஏற்றுக்கொள்ளவியலாத விளைவுகளைக் கருத்திற் கொண்டும்,

தனி மனித மற்றும் ஒற்றைக் கட்சி மேலாண்மையானது தமிழரின் ஜனநாயக இயங்குதளங்களில் ஏற்படுத்தியுள்ள பின்னடைவுகளை இனங்கண்டும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டுமானால் அத் தீர்வை நோக்கியதான செல்நெறிப் போக்கில் காத்திரமாக பயணிக்கக்கூடிய ஒரு தமிழ்த்தேசிய கட்டமைப்பை கிழக்கில் உருவாக்கும் நோக்கத்துடனும்,

பல்லாண்டு காலமாக கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் நில ஆக்கிரமிப்பு, அரசியல் ஓரவஞ்சனை காரணமாக நிலவும் அபிவிருத்தி யின்மை, வேலைவாய்ப்பின்மை, பண்பாட்டியல் சிதைப்பு போன்ற இடர்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடனும், கிழக்கில் இடருற்ற மக்கள், முன்னாள் போராளிகள், அங்கவீனமுற்றவர்கள் போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் இன்னலுற்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு கருதியும்,

கிழக்கில் சமகால தமிழர் அரசியலின் செல்நெறிப்போக்கு மற்றும் அரசியல் கலாசாரத்தை தீர்க்கமாகப் புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக் கூடிய தமிழர் பரப்பின் அரசியல் கட்சிகளை இணைத்து, கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் சமூகப் பொருளாதார, பண்பாட்டியல் இலக்குகளை அடைவதற்கான ஒரு பாரிய அரசியல் கூட்டமைப்பை உருவாக்கி, காத்திரமாகப் பயணிப்பதற்கான ஒர் பூர்வாங்க கலந்துரையாடலுக்காக தமிழர் தரப்பின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கின் ஈழத்தமிழரின் அரசியற் போக்கை நெறிப்படுத்த தேசப்பற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து கொள்ளும் என கிழக்கின் தமிழர்கள் நம்புகிறோம். கிழக்கின் தமிழர் கூட்டணி தொடர்பில் மட்டக்களப்பில் 14.07.2019 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பான அறிக்கை தேவை கருதி பிரசுரிக்கப்படுகிறது.