சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம்

தம்முடைய ஆட்புல எல்லையை விஸ்தரிப்பதற்காக, நாடுகள் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் போக்கு, இன்னும் அவதானிக்கப்பட்டு வருகின்ற சமகாலத்தில், தாம் வாழ்வதற்கான ஒரு துண்டுக் காணிக்காக, மக்கள் போராடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இலங்கையிலும் காணி இழந்த மக்களின் கோரிக்கைகள், வெகுஜனப் போராட்டங்களாக மேற்கிளம்பத் தொடங்கியுள்ளதைக் காண முடிகின்றது. தமிழர் தரப்பில், இவ்வாறான நிறையப் போராட்டங்கள் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டிருக்கத் தக்கதாக, இப்போது வடபுலத்தின் சிலாவத்துறை முஸ்லிம்களால், காணிமீட்புப் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட, சிலாவத்துறை பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து, சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், மீளக் குடியேறிய மக்களின் பூர்வீகக் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படை முகாமை அகற்றுமாறு, இத்தனை நாள்களாகக் கோரிவந்த முஸ்லிம் மக்கள், இப்போது காணி விடுவிப்புக்கான தொடர் போராட்டத்தை, 23 நாள்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

கேப்பாப்புலவு தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும் கூட, சிலாவத்துறை முஸ்லிம்களின் 34 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான நல்ல சமிக்ஞைகளோ, காத்திரமான அரசியல் நகர்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், தொடர் வெகுஜனப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, இன்று வெள்ளிக்கிழமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டில், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தக் காலப் பகுதியில், சிலாவத்துறையில் வாழ்ந்த சுமார் 220 குடும்பங்கள், அங்கிருந்து வெளியேறி, வேறு இடங்களில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், யுத்தம் முடிந்த கையோடு, அதாவது 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், அம்மக்கள் தங்களது குடும்பங்கள், வாரிசுகளோடு திரும்பி வந்து, மீளக் குடியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

220 குடும்பங்களாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள், 19 வருடங்களுக்குப் பிறகு, சொந்த மண்ணுக்குத் திரும்பிய போது, 625 குடும்பங்களாகப் பெருகியிருந்தனர். எனவே, அவர்களுக்குக் காணி மேலும் அதிகமாகத் தேவைப்பட்டது.

ஆனால், ஏற்கெனவே இம்மக்களுக்குச் சொந்தமாக இருந்த 34 ஏக்கர் நிலப்பரப்பில் கூட, குடியேற முடியாதவாறு, அங்கு கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

அன்று தொடக்கம் இன்று வரை, தமது காணிகளை விடுவிக்குமாறும் கடற்படை முகாமை வேறோர் இடத்துக்கு மாற்றுமாறும், சிலாவத்துறை மக்கள் பல வழிகளிலும் குரல்கொடுத்து வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், கட்டம் கட்டமாகப் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், பலனேதும் கிடைக்கவில்லை என்ற நிலையிலேயே, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதியில் இருந்து, கூடாரமடித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது மண்ணுக்கு மீளத் திரும்பியிருந்த சுமார் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான காணி எனக் கூறப்படுகின்ற 34 ஏக்கர் காணியிலிருந்து, கடற்படை முகாம் அகற்றப்பட்டு, அக்காணியை விடுவிக்காமல் இழுத்தடித்து வருகின்றமையால் அல்லது அதைச் செய்யக் கூடாது என்று அரசாங்கம் நினைத்து இருக்கின்றமையால், மேற்படி இருநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள், தமது பூர்வீகக் காணியில் மீள்குடியேற முடியாமல், இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.

ஆனபோதும், ஒரு சில அரசியல்வாதிகளைத் தவிர, ஏனைய அரசியல் தலைமைகளோ, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ, தமது போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை என்று அப்பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

முத்துக்குளிப்புக்குப் பெயர்போன இடம் என்பதற்கு மேலதிகமாக, பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் மிக்கதும் பழைமை வாய்ந்ததுமான சிலாவத்துறை, வடமாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட முசலியின் பிரதான ஊராகக் கருதப்படுகின்றது.

அத்துடன், சுற்றியுள்ள 25 இக்கும் மேற்பட்ட கிராமங்கள், குக்கிராமங்களின் பிரதான நகர் போலவும் சிலாவத்துறை திகழ்கின்றது. இருப்பினும், அங்கு பூர்வீகமாக வாழ்ந்த ஒரு தொகுதி மக்களின் காணிகளில், அவர்கள் மீளக் குடியேற முடியாத நெருக்கடி, கடந்த 10 வருடங்களாக நீடித்து வருகின்றமை கவலைக்குரியது.

தமது காணிகளில் இருந்து கடற்படை முகாமை அகற்றி, மீள்குடியேற்றத்துக்கு வழிவிட்டுத் தருமாறு, பல வருடங்களாக இம்மக்கள் கோரி வருகின்றனர்.

இதற்காகத் ‘தபாலட்டைப் போராட்டம்’, கூட்டங்கள், பேரணிகள், மகஜர் கையளிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் என, எல்லா வடிவிலான போராட்ட முன்னெடுப்புகளையும் மேற்கொண்டனர்.

அதேநேரம், அரசியல் தலைவர்களால் மட்டுமன்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கூட, வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், ஆன பயன் எதுவுமில்லை என்று, இம்மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இந்த 34 ஏக்கரில் ஆறு ஏக்கரை விடுவிப்பதாக முன்னரே பிரதமர் கூறியிருந்ததற்கு அமைவாக, ஆறு ஏக்கர் காணியை மட்டும் விடுவித்தால் கூட, அது போதாது என்று, இதற்காகக் குரல் கொடுப்போர் கூறுகின்றனர். 34 ஏக்கர் காணியும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருக்கத்தக்கதாக, ஆறு ஏக்கர் காணியில் 200 குடும்பங்கள் வாழ்வதென்பது சாத்தியமற்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே, எல்லாக் காணிகளும் விடுவிக்கப்படுவதுடன் அருகிலுள்ள வேறோர் இடத்துக்குக் கடற்படை முகாமை நகர்த்துமாறு, பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய இன மக்களும் கோரி வருகின்றனர்.

இவ்வாறிருக்கையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள பிரதேச மக்கள் பிரதிநிதியும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கடந்த வாரம் போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றிருக்கின்றார். அத்துடன், இது தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்றும் அவர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில், மக்கள் தமது மனக் கிடக்கைகளை முன்வைத்தனர். “பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த, எமக்குச் சொந்தமான காணிகளை, நாங்கள் பறிகொடுத்துப் பரிதவிக்கின்றோம். 10 வருட‍ங்களாக நாங்கள் இந்தக் காணி விடுவிப்புக்காகப் போராடி வருகின்றபோதும், இதுவரை எமக்கு நீதியோ, நியாயமோ கிடைக்கவில்லை. எனவேதான், தற்போது கடற்படை முகாமை அகற்றச் சொல்லி வருகின்றோம். நீங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, எமது காணியை மீட்டுத்தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இக்கூட்டத்தில், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் புள்ளிவிவர அடிப்படையிலான தரவுகளை முன்வைத்தனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், “மொத்தமாக 34 ஏக்கர் காணி, கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், ஆறு ஏக்கர் பொதுமக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது.

இரண்டு ஏக்கர் காணி, பாதைகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர், எஞ்சிருப்பது 26 ஏக்கர் ஆகும். இந்த 26 ஏக்கரில், 35 பேருக்கு வருடாந்த பெர்மிட், 18 பேருக்கு எல்.டி.ஓ. (காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழானது), நான்கு பேருக்கு கிராண்டும் (நன்கொடை அல்லது அளிப்பு), 13 பேருக்கு உறுதியும் இருக்கின்றன” என்று தெரிவித்ததாக அறிய முடிகின்றது.

அத்துடன், “12 பேர் காணிகளை அடாத்தாகத் தமக்குச் சொந்தமாக்கி உபயோகப்படுத்தினர்” என்று சுட்டிக்காட்டிய அவர், “ஏற்கெனவே பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில், கடற்படையினருக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டு, அவர்கள் அங்கு இடமாறிச் செல்வதற்கான உறுதிமொழிகளும் தரப்பட்டன. இவை தீர்மானமாகவும் உள்ளன” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, கடற்படை முகாமை இடம்மாற்றுவதற்காக, மேத்தன்வெளி என்ற இடத்தில் காணி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, காணி அதிகாரிகள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலாவத்துறையில் மேற்படி சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில், 18 வருடங்களாக முஸ்லிம்கள் வாழவில்லை. இந்தக் காலப் பகுதியிலேயே யுத்த மேகம் சூழ்ந்திருந்தது. கடற் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குப் பொருத்தமான இடமாகக் கருதப்பட்டே, இங்கு கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன், ஒரு படை முகாமை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அகற்றுவது என்பது, சிறிய விடயமல்ல. அது, அங்கு இருக்கின்ற ஆயுத தளவாடங்களையும் படையினரையும் இடம்மாற்றுதலுடன் தொடர்புடைய செயற்பாடு மட்டுமல்ல, முகாமின் அமைவிடம், பாதுகாப்பு, முன்னைய முகாமில் காணப்படுகின்ற வசதிகளைப் புதிய இடத்தில் ஏற்படுத்தல், கடலைக் கண்காணிப்பதற்கு ஏதுவான கேந்திர மய்யம் என்பவை உள்ளிட்ட, நாமறியாத இன்னும் எத்தனையோ விடயங்களைக் கவனித்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இவை எல்லாவற்றையும் ஓர் இரவில், ஒரு வாரத்தில் செய்து முடிக்கக் கூடிய பணியல்ல என்பதை, ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால், சிலாவத்துறை மக்கள் இன்று நேற்று இப்போராட்டத்தில் இறங்கவில்லை. ஒரு வாரத்துக்குள், மாதத்துக்குள் படை முகாமை அகற்ற வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கவும் இல்லை.

மாறாக, கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாகத் தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி வருகின்றனர். கடந்த நான்கு வருடங்களாக, கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைத்து வருகின்றனர். எனவே, அரசாங்கம் கட்டம் கட்டமாக நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், இப்போது 34 ஏக்கர் காணியையும் விடுவித்திருக்கலாம் என்பதையும் மறுதலிக்கக் கூடாது. எனவே, சிலாவத்துறை மக்களின் நியாயமான கோரிக்கையை, அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

கேப்பாப்புலவு பிரதேசத்தில் படை முகாமை அகற்றி, தமது காணியைத் தருமாறு தமிழ் மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக, கேப்பாப்புலவுக் காணிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளதாக, சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஆனால், சிலாவத்துறை மக்களின் கோரிக்கையை, ஜனாதிபதியிடம் கொண்டு செல்வதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதும், அதில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, கேப்பாப்புலவு தமிழர்களுக்கு கிடைத்த ‘சந்தோஷமான’ செய்தியை, சிலாவத்துறை முஸ்லிம்களுக்கும் பெற்றுத்தர முஸ்லிம் தலைமைகள் முன்னிற்க வேண்டியது தார்மீகமாகும்.

காணியற்ற மக்கள் கூட்டம்

காணிகள் மனித வாழ்வுக்கும் பௌதீக ரீதியான இருப்புக்கும் அடிப்படையான தேவைப்பாடாகக் காணப்படுகின்றன.

சனத்தொகையின் பரம்பலுக்கு அமைவாக, காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனச் சர்வதேச சட்டங்களும் சமவாயங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால், நிதர்சனம் வேறு விதமானதாக இருக்கக் காண்கின்றோம்.

2017ஆம் ஆண்டு, உலக வங்கி நடத்திய நிலம் மற்றும் வறுமை மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் பிரகாரம், காணி உரிமையைப் பாதுகாத்தல் என்பது வறுமையைக் குறைப்பதற்கும் நாட்டிலும் சமூகத்திலும் குடும்ப மட்டத்திலும் பகிரப்பட்ட செழிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கும் மிக அவசியமானது எனக் குறிப்பிடப்பட்டது.

உலக சட்டங்கள் மட்டுமன்றி, உரிமைசார் அமைப்புகளும் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காகப் பாடுபட்டு வருவது போல, சனத்தொகைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினர் (குறிப்பாக பெண்கள், சுதேசிகள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்கள் பிரிவினர்) தமக்குரிய காணி உரிமையை உறுதி செய்வதற்கான பங்களிப்புகளை, உலக வங்கியும் வழங்கி வருகின்றது.

எது எவ்வாறிருப்பினும், உலகெங்கும் பெருந்தொகையான, காணியற்ற மக்கள் மட்டுமன்றி நாடற்ற மனிதர்களும் உள்ளனர். உலக வங்கியின் தரவுகளின் படி, உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் மிகக் குறைவான மக்களே தமது பெயரில் காணிகளைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்தவர்களாக இருக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் மூன்று மாகாணங்களிலேயே செறிவாக வாழ்கின்றனர். ஆனால், மொத்த நிலத்தில் 23சதவீதமே அம்மக்களுக்கு உள்ளது என்று மத்திய வங்கி கூறுகின்றது.

அத்துடன், இலங்கையில் சொந்தமாகக் காணிகளே இல்லாத மக்களுக்கு அரசாங்கம் அவ்வப்போது காணிகளைப் பகிர்ந்தளித்து வருகின்றது என்றாலும், காணியற்ற இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் இருக்கின்றனர்.

இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன. இலட்சக்கணக்கான ஹெக்டேயர் காணிகளின் உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளன.

அதுமட்டுமன்றி, முஸ்லிம்களின் சனத்தொகைக்கு ஏற்ப, காணிகளும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. எனவே, காணிப் பிரச்சினையே இன்று முஸ்லிம்களுக்கு முதன்மையானது என்பது கவனிப்புக்குரியது.

இடம்பெயர்ந்த மக்களின் உரித்துக்கள் பற்றி, ஐக்கிய நாடுகள் பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ந்து ‘பின்ஹெய்ரோ கோட்பாடுகள்’ என்ற தலையங்கத்தின் கீழ் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களினதும் அகதிகளினதும் வீடுகள், காணிகள் போன்றவற்றைத் திரும்பப் பெறுவது பற்றிச் சில கோட்பாடுகளை இயற்றியுள்ளார்கள்.

பொருட்கோடல் உள்ளடங்கலாக 23 கொள்கைக் கருத்துகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. அவற்றில் இருந்து முக்கியமான, இரண்டாவது கொள்கைக் கருத்து பின்வருமாறு அமைகின்றது:

2.1. ‘எந்த ஒரு வீட்டில் இருந்தோ காணியில் இருந்தோ ஏதேனும் ஆதனத்தில் இருந்தோ எதேச்சாதிகாரமாகவோ அல்லது சட்டத்துக்கு மாறாகவோ எந்தவோர் அகதியோ அல்லது இடம்பெயர்ந்த நபரோ வெளியேற்றப்பட்டிருப்பின் அவர்கள் அவ்வீட்டிலோ காணியிலோ அல்லது ஆதனத்திலோ மீளக் குடியமர்த்தப்படுவதற்கு உரித்துடையவர் ஆவார். அத்துடன், ஏதேனும் ஒரு சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைச்சபை ஒன்றால் வீடோ, காணியோ, ஆதனமோ உண்மையில் திரும்பப் பெற முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதாகக் காணப்படுமிடத்து அதற்கான நட்ட ஈட்டை அவர் பெற உரித்துடையவராவார்.’

2.2. ‘இடம்பெயர்வுக்குத் தக்க நிவாரணமாக அரசாங்கங்கள் ஆதன மீளளிப்பையே முன்னுரிமைப்படுத்த வேண்டும். இதனையே மீளளிக்கும் நீதியின் மிக முக்கியமான கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மீளளிப்புப் பெறும் உரித்தானது துல்லியமான ஒரு தனியுரித்து. வீடு, காணி, ஆதனம் ஆகியவற்றுக்கு உரிமையுடைய அகதிகளோ, இடம்பெயர் நபர்களோ திரும்ப வந்தால் என்ன, வராதிருந்தால் என்ன மேற்படி உரித்தானது எந்த விதத்திலும் பாதிப்படையாது’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைக் கருத்தானது மீள்க்குடியிருப்பு என்ற தனியுரித்து எந்தளவுக்குச் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.