சிலையை தகர்க்கலாம், சித்தாந்தத்தை அல்ல! – பிருந்தா காரத்

திரிபுராவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாஜக அரசாங்கம் லெனினின் சிலையைச் சரிசெய்து, அதனை அகற்றிய இடத்திலேயே திரும்பவும் வைக்க வேண்டும். இடதுசாரி ஆதரவாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

திரிபுரா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் புது தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி மற்றும் ஆளும் கட்சியின் தலைவர் பேசிய பேச்சுக்களில், இந்தியாவை கம்யூனிஸ்டுகளிடம் இருந்து விடுவித்து “கம்யூனிஸ்ட்கள் இல்லாத பாரதம்” கொண்டு வருவோம் எனஉறுதியேற்றார்கள்…

கம்யூனிஸ்டுகள் மீதான “சித்தாந்த ரீதியான வெற்றி” என்று மோடி அதனை அறிவித்தார். திரிபுராவில் இருந்த பாஜகவினர் தங்களுடைய தலைவர்களின் இந்த கொக்கரிப்பை தெளிவாகக் கேட்டனர்.திரிபுராவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் இடதுசாரிகளுக்கு, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக தொடர் தாக்குதல்களை பாஜக நடத்தியது. தாக்குதல்கள் இன்னும் தொடர்கின்றன. திரிபுரா காவல் துறையினரிடமும், மத்திய அரசாங்கத்திடமும் இந்த தாக்குதல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் அலுவலகங்களை எரிப்பது, கைப்பற்றுவது, அவர்களுடைய ஆதரவாளர்களைத் தாக்குவது என்றுஇப்போது நடைபெறுவதைப் போன்ற ஒரு நிகழ்வுகூட இந்த 25 வருட கால இடது முன்னணி ஆட்சியில் திரிபுராவில் காணப்பட்டதில்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக தாங்கள் மட்டுமே இருப்பதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அதுபோன்ற நம்பிக்கை எதுவும் இல்லை என்கிற பாஜக தலைவர்களின் கூற்றுகள் அர்த்தமற்றதாகவும், பாசாங்குத்தனம் நிறைந்தவையாகவும் இருப்பதையே இது காட்டுகிறது.

கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத பாரதமா?

பாஜக – ஐபிஎப்டி கூட்டணி திரிபுராவில் 43 இடங்களை வென்றது. பாஜக 43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், அதன் கூட்டாளியான ஐபிஎப்டி உடன் இணைந்து 50 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கடந்த காலத்தில் வெற்றி பெற்ற 50 இடங்களில் 16 இடங்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தலா ஒரு இடத்தில் போட்டியிட்ட மூன்று இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து 45 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு செய்து தோல்விக்கான காரணங்களைக் கண்டறியும். பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தங்களுடைய ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலேயே இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்தி பயமுறுத்துவதன் மூலம் அச்ச உணர்வு கொண்ட சூழலை ஏற்படுத்தும் வகையில் இறங்கியிருப்பது, கணிசமான அளவிற்கு இருக்கின்ற இடதுசாரித் தளத்தை அடிபணிய வைத்து அதனை முக்கியத்துவமற்றுப் போகச் செய்யும் முயற்சியாகவே தோன்றுகிறது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துவது “கம்யூனிஸ்டுகள் இல்லாத பாரதத்தை” அடைவதற்கான ஒரு வழிமுறை என்று பாஜக நினைக்கிறது போலும்.

கோமாளிக் கூட்டம்

2013ஆம் ஆண்டு தெற்கு திரிபுராவில் உள்ள பெலோனியா நகரில் நிறுவப்பட்ட லெனின் சிலையை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியதன் மூலம், மோடிகூறிய கம்யூனிஸ்டுகள் மீதான சித்தாந்த வெற்றி என்பதை அடைய அவர்கள் முற்பட்டனர். சிலை இடிப்பு ஒன்றும் தன்னிச்சையான செயலாக இருக்கவில்லை. பாஜகவைச் சேர்ந்த சிலர் புல்டோசர் ஒன்றைப் பயன்படுத்தியே சிலையைக் கீழே தள்ளினர். சிலையின் தலையை தனியே எடுத்து அதனை கால்பந்து போன்று உதைத்து விளையாடியதாக கூறப்படுகிறது. நாஜி ஜெர்மனியின் புகழ் பாடி, அதனை சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக் கொண்ட இவர்களுடைய சித்தாந்த முன்னோடிகளான சாவர்க்கர், கோல்வால்கர் ஆகியோரின் நூல்களைப் படித்த இவர்கள் தங்களுடைய கோமாளித்தனமான அருவருக்கத்தக்க நடவடிக்கைகளுக்கு தங்களுடைய தலைவர்களின் ஆதரவு இருக்கும் என்பதை உணர்ந்தே தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சிகளின்படி நடந்து கொண்டனர். இதுகுறித்து முதன்முதல் ட்வீட் செய்தவர் ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான ராம் மாதவ் ஆவார். அதற்குப் பிறகு “ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஜனநாயகமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு அரசு செய்ததைஇல்லாமல் செய்து விடலாம் அல்லது ஒரு அரசாங்கம் செய்யாததை இந்த அரசாங்கம் செய்து விடலாம்” என்று திரிபுராவின் ஆளுநர் கருத்து தெரிவித்தார். ஆக சிலைகளை வீழ்த்திய குண்டர்களை “ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின்” பிரதிநிதிகளாக, சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய அரசியலமைப்பு சார்ந்த பதவியில் இருக்கும் ஒருவரே கூறுகின்றார். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் பாஜகவின் உயர்மட்டமே ஆதரவாக இருப்பதை நிரூபிக்க இதற்கு மேலும் சான்றுகள் தேவைப்படாது.

லெனினும் இந்தியாவும்

சில பாஜக தலைவர்கள் லெனின் ஒரு வெளிநாட்டவர், தீவிரவாதி என்றுகூறி சிலை இடிப்பை நியாயப்படுத்தியுள்ளனர்.1917இல் மாமேதை லெனின் தலைமையில் நடைபெற்றரஷ்யப் புரட்சியானது, ஜார் மன்னரின் ஆட்சியைத் தூக்கியெறிந்து, தன்னுடைய ஆரம்பகாலத்தில் புரட்சியைத் திசைதிருப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் வலிமைக்கு சவால் விடுத்ததுடன் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும், இந்திய சுதந்திரப் போராளிகளான காந்தி முதல் நேரு வரை, பகத்சிங்கிலிருந்து ரவீந்திரநாத் தாகூர் வரை தனது தாக்கத்தைக் கொண்டிருந்தது. ரஷ்யப் புரட்சியினால் மிகவும் ஈர்க்கப்பட்டவராக பகத்சிங் இருந்தார். அவர் தலைமையேற்றிருந்த நவஜவான் சபாவில் இருந்து துவங்கி பின்னர் இந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கழகம் என்று பெயர் மாற்றம் கொண்ட இந்துஸ்தான் குடியரசுக்கழகம் வரை அனைத்து அமைப்புகளின் அறிக்கைகளிலும்அவர் கொண்டிருந்த கருத்து பிரதிபலித்தது. லெனின் பற்றிக் கேள்விப்பட்டு அவருடைய வாழ்க்கை பற்றி படித்து வருவதாகவும், தன்னைத் தூக்கில் இடுவதற்கு முன்பாக அதைப் படித்து முடித்து விட விரும்புவதாகவும் பகத்சிங் கூறியதாக, பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கோபால் தாகூர் ‘தி மேன் அண்ட் ஹிஸ் ஐடியாஸ்’என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். லெனின் மறைந்த பிறகு ரவீந்திரநாத் தாகூர் சோவியத் ரஷ்யாவிற்கு சென்றிருந்தார். லெனின் மீதான மிகப் பெரிய ஆர்வலராக இருந்த அவர் “நான் ரஷ்யாவுக்கு வரவில்லை என்றால்,என்னுடைய வாழ்க்கையின் புனிதயாத்திரை முழுமைபெற்றிருக்காது” என்று எழுதினார். “காந்தியின் தலைமையின்கீழ் வேறொரு பாதையைப் பின்பற்றியிருந்தாலும், லெனினின் தாக்கத்தையும் நாம் பெற்றிருந்தோம்” என்று லெனின் பற்றி நேரு எழுதினார்.ரஷ்யப் புரட்சி என்பது இந்திய சுதந்திரத்திற்காக கனவு கண்டு அதற்கான தியாகங்களைச் செய்தவர்களிடம் எந்த வகையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை அறிந்து கொள்ளும் வகையில், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் அமைப்புகளின் பங்கு இந்த வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை; மேலும் அவை இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்திலும் பங்கு பெற்றதில்லை.ஆர்எஸ்எஸ்சின் ரத்தத்தில் ஊறியிருக்கும் கம்யூனிச விரோதம் என்பதைக் காட்டிலும் லெனின் சிலை அழிப்பு என்பது அதிக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. தனது இருப்பிற்குச் சவால் விடுகின்ற அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற வேறு சித்தாந்தங்களின் மீதுசங்பரிவாரங்களுக்கு இருக்கின்ற தீவிர சகிப்பற்ற தன்மையை வெளிக்காட்டுவதாகவே சிலை இடிப்பு இருக்கிறது.இது லெனின் மற்றும் அவரது வழியைப் பின்பற்றுபவர்களை மட்டுமல்லாது, கருத்துச் சுதந்திரம், அரசியல்விவாதங்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்களையும் கலங்கடிப்பதாக இருக்கிறது. இதற்கெதிரான சீற்றம் போதிய அளவில் இல்லாவிட்டால், அது லெனினோடு நிற்கப் போவதில்லை. ஏற்கனவே மற்ற இடங்களிலும் பாஜக தலைவர்கள் இவ்வாறான செயல்களைச் செய்யத் தொடங்கி விட்டனர். தமிழ்நாட்டில் எச்.ராஜா தன்னுடைய முகநூல் பதிவில், “இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவெரா ராமசாமி சிலை” என்று பதிவிட்டிருக்கிறார். மனுவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சங்பரிவாரத்தின் இந்துத்துவ சித்தாந்தங்களுக்குப் பெரும் சவாலாக திராவிட இயக்கத்தின் சமூக சீர்திருத்தவாதியும், கருத்தியலாளருமான பெரியாரின் மரபுவழி இருக்கிறது என்பதால்தான் இத்தகைய ஆத்திரம் அவரிடம் இருந்து வெளிவருகிறது. சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்காக பிரிட்டிஷாரிடம் தனது விசுவாசத்தை உறுதியளித்த பேர்வழிகள், போலி மனிதநேயத்தின் பெயரால் இந்தியா என்பது ஒரே நாடாக ஒருபோதும் இருக்க முடியாது என்று சொன்னவர்கள், மகாத்மா காந்தியைக் கொன்றவர் … என இந்த ஆட்சி நிறுவ விரும்புகின்ற சிலரது சிலைகளை நாம் அறிவோம். தங்களின் அலுவலகங்களிலும், தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களிலும் நாதுராம் கோட்சேயின் சிலைகளை வைக்க வேண்டும் என்கிற இந்துமகாசபாவின் திட்டத்தை எந்தவொரு பாஜக தலைவராவது பகிரங்கமாக எதிர்த்திருக்கிறாரா? திரிபுராவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாஜக அரசாங்கம் லெனினின் சிலையைச் சரிசெய்து, அதனை அகற்றிய இடத்திலேயே திரும்பவும் வைக்கவேண்டும். இடதுசாரி ஆதரவாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களுக்கு நாம் சொல்வோம்… சிலைகளை வேண்டுமென்றால் நீங்கள் வலிமை கொண்டு இடித்து விடலாம், ஒரு சித்தாந்தத்தை அல்ல!