சீதன சீரழிவுகள்!!!

அன்புள்ள மருமகனுக்கு,

எனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை காலமும் எனது நெஞ்சிலும் தோளிலும் சுமந்த எனது மகளை உங்களின் பொறுப்பில் இனி விட்டுவிட்டேன். ஒரு தந்தை என்ற ரீதியில் எனது கடமையை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என நம்புகிறேன். ஒரு கணவனாக உங்கள் கடமையைச் செய்வீர்கள் என மனமார எதிர்பார்க்கிறேன். இப்பொழுது நேரம் இரவு பத்து மணி. அதிகாலையிலேயே நானும் உங்கள் மாமியாரும் இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவோம். ஏனெனில் இனி இது எங்கள் வீடல்ல.உங்கள் வீடு. பரம்பரையாக வாழ்ந்த வீட்டை பாதியில் விட்டுப் போக நேர்ந்ததில் பெட்டி படுக்கைகளைக் கட்டும் கயிறெல்லாம் உங்கள் மாமியாரின் கண்ணீராலேயே கழுவப்படுகிறது.

நானும் உங்கள் மாமியாரும் இன்னும் எட்டு மணி நேரங்கள்தான் இந்த வீட்டில் இருப்போம். உள்ளம் அமைதியில்லாமல் உலாவிக்கொண்டிருக்கிறது. இனம் தெரியாத ஏதோ ஒன்று இதயத்தைப் பிசைந்து எடுக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் நான் எழுத ஆரம்பிக்கின்றேன். வேகா வெயிலில் வியர்வை சிந்தி நான் கட்டிய இந்த இரண்டு அடுக்கு மாடியின் பிரமாண்டமான படுக்கையறையின் பஞ்சு மெத்தையில் நீங்கள் உல்லாசமாய் உறங்கிக் கொண்டிருக்க அதே வீட்டில் யாருமில்லாத ஒரு மூலையில் பழைய பாயில் கிழிந்த தலையணையில் என்னைத் தூங்க வைத்திருக்கும் இந்த சமூக நீதியைப் பார்த்து நான் சிரித்துக் கொள்கிறேன். வீட்டின் சொந்தக்காரனே விருந்தாளியாய்ப் போன நிலையை எண்ணி வெட்கப்படுகிறேன். தான் கட்டிய சொர்க்கத்தில் தானே வாழமுடியாத திருசங்குவை விட என்னைக் கேவலமாக்கிவிட்ட இந்த சமூகத்தை எண்ணி நான் சிரித்துக் கொள்கிறேன்.

அன்பின் மருமகனே, இந்த வீட்டின் ஒவ்வொரு கல்லுக்குப் பின்னாலும் ஒரு கதையும். ஒரு வேதனையும்,ஒரு வியர்வையும் இருப்பது உங்களுக்கு விளங்காது. உங்களுக்கு வெயில் படாது செய்த இந்த கூரைக்குப் பின்னால் நான் வெயிலில் நின்று வெட்டிய வேளாண்மை இருக்கிறது. நீங்கள் காலாற நடக்கும் இந்த “டைல்” தரைக்குப் பின்னால் எனது மனைவிக்கு நான் செய்த நகைகள் இருக்கிறது. நீங்கள் தூங்கி விழும் அந்தத் தேக்குமரக்கட்டிலுக்குப் பின்னால் நான் எனது மகனுக்கென்று மிச்சம் வைத்த வளவொன்று விற்றகதை இருக்கிறது. நீங்கள் சுகமாகக் கழிக்கும் கழிப்பறைக்குப் பின்னால் கையிலிருந்த சேமிப்பெல்லாம் கரைந்து கிடக்கிறது. நீங்கள் உண்டு பருக குளிர் சாதனப் பெட்டி,கண்டு களிக்க கலர் டீவி,கழுவித் துடைக்க வோஷின் மெஷின். இவற்றிற்குப் பின்னால் இந்த ஏழையின் கடன் இருக்கிறது.மனிதாபிமானம் என்பது மருந்துக்கும் இல்லாத சமூகமா இது மருமகனே?

முதுமையின் பலவீனமும், தனிமையின் மறதியும் என்னை முடியாதவனாய் ஆக்குகின்றன. மூலையில் இருந்து முழங்கால் வலியால் முனகிக்கொண்டிருக்கும் உங்கள் மாமியாரோடும், இருந்தால் எழும்பமுடியாத இடுப்பு வலியோடும் எனது காலங்கள் மெதுவாய்க் கழிகின்றன. எனக்கு அதிகமான நாட்கள் எதிரில் இல்லை என்பதை எனது உடம்பு எனக்கு அடிக்கடி ஞ்சாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நாளை ஒரு வருத்தம் வாதம் வந்தாலும் கடன் பட்டுக் காலம் கழிக்கும் நிலைக்கு வந்திருக்கிறேன். நான் செய்த தவறு என்ன என்று சிந்தித்துப் பார்க்கிறேன். ஒரு பெண்ணைப் பெற்றதா? எனது மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கனவு கண்டதா? படித்தவர் கையில் பாதுகாப்பாகக் கொடுக்க வேண்டும் என நினைத்ததா? சந்தோஷமாய் வாழ்வதற்கு அடுக்கு மாடி எதற்கு மருமகனே? ஒரு ஓலைக் குடிசை போதுமே?

நாளை மாமாவுக்கு ஏதாவது கடன் இருக்கிறதா என்று அன்புருகக் கேட்பீர்கள்? மச்சான் எத்தனை கருணையுள்ளவர் என்று எனது மகளும் உங்களில் மயங்கி விடுவாள். அறைந்துவிட்டு வலிக்கிறதா? தடவிவிடவா? எனக் கேட்பது போல்தான் இது இருக்கிறது. இதற்கு நீங்கள் அறையாமலே இருந்திருக்கலாமே. இந்த வேதனையில் நான் விழுவேன் என்று தெரிந்த பின்னும் நீங்கள் என்னைத் தள்ளிவிட்டுவிட்டு கைகொடுத்து காப்பாற்ற நினைப்பது எத்தனை கபடத்தனம். இத்தனை அதிருப்தி இருந்தும் ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தேன் தெரியுமா?அந்த ஏலத்தில் இலகுவாகக் கிடைத்தது நீங்கள் மாத்திரம்தான். அப்துஸ்ஸமதின் மகன் ஐந்து மாடி வீடும் ஆறு கோடிப்பணமும் கேட்டார். கூரைக்கும் டைல் போடச் சொன்னார் குத்தூஸின் மகன். கௌரவமான குடும்பமாம் கார் ஒன்று வேண்டும் என்றார் காதரின் பேரன்.

வெளிநாட்டு டிகிரியாம் வேனொன்று இருந்தால் நல்லம் என்றார் நபீலின் தம்பி. கட்டாரில் எஞ்சினியராம் கை நிறைய சம்பளமாம் காணி நாலு ஏக்கர் தந்தா குறைஞ்சா போகும் என்றார் சொழுக்கரின் சின்ன மகன். கொம்பியூட்டர் ஸ்பெசலிஸ்டாம்,கொழுத்த சம்பளமாம் கொழும்பில் ஒரு வீடு தாருங்கள் என்றார் தம்பிலெப்பையின் மூத்த மகன். மார்க்கமான பொடியனாம் வீடு மட்டும் போதுமாம் என்று நீங்கள் வந்தீர்கள். லாபமாக வருகிறது உடனடியாக வாங்கிப் போட்டுவிடுங்கள் என்றார் உங்கள் மாமியார். உங்கள் வீட்டாரிடம் விலை பேசினேன்.உங்களை வாங்கிவிட்டேன். என்றாலும் மருமகனே, இதைப் போன்ற வியாபாரத்தில் எனக்கு இஷ்டம் இல்லை. வந்த இடத்தில் வாழ்ந்தவனை விரட்டி ஓரத்தில் வைத்து ஒய்யாரமாக உறங்கும் உங்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வேறுபாடு தெரியவில்லை. அடிமை உள்வீட்டுக்குள், எஜமான் அரச மரத்தடியில்.இந்த சகவாசம் எனக்குச் சரிவராது.

உங்களை யார் விரட்டியது? நீங்களாகப் போக விரும்பிவிட்டு என்னை ஏன் குறை கூறுகிறீர்கள் என்று கேட்காதீர்கள். எனது நியாயம் என்னோடு. வெளியில் இருந்து வியர்வையோடு வருவேன்.எனது சாய்மணையில் நீங்கள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருப்பீர்கள். என்னைக் கண்டதும் அரைவாசி எழும்பி “இருக்கப்போகிறீர்களா” என்று கேட்பீர்கள்.நான் “இல்லை நீங்கள் இருங்கள்” என்று சொல்லப் போவது உங்களுக்குத் தெரியும். அந்த நிலை எனக்கு வேண்டாம். உங்களைத் தேடி யாரும் வரும்போது உள்ளே இருக்கும் என்னைத் தேடிவந்தவர்களை எழுப்பிக்கொண்டு நான் வாங்கிய ‘குஷன் செட்டை’ உங்கள் நண்பருக்குக் கொடுத்துவிட்டு வெளிவிராந்தையில் ரப்பர் கதிரை போட்டு பேசிக்கொள்ளும் கேவலம் எனக்கு வேண்டாம்.

சொந்த வீட்டில் சற்று சத்தமாகப் பேசினாலும் மருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள் என்ற உங்கள் மாமியாரின் அதட்டலின் அசிங்கம் எனக்கு வேண்டாம்.
நான் வாங்கிய டீவியில் செய்தி பார்த்துக்கொண்டிருப்பேன். ”அவர் மெச் பார்க்கவேண்டுமாம்” என்று எனது மகளை தூது அனுப்புவீர்கள். எழும்பிச்செல்லும் ஏமாற்றம் எனக்கு வேண்டாம். வீட்டுவாசலில் உங்கள் சைக்கில் சத்தத்தைக் கேட்டு எனது சாரனைச் சரிசெய்யும் சுதந்திரம் இல்லாத கோழைத்தனம் எனக்கு வேண்டாம். 25 வயது உங்களோடு தோற்றுப் போவதற்கு 65 வயது சுதர்மம் இடம் தரவில்லை. ஒரு மகளைப் பெற்ற பாவத்திற்காக இந்த வீட்டில் நான் அடிமையாய் இருப்பதை விட ஒரு வாடகை குடிசையில் ராஜாவாய் இருந்து விட்டுப் போகிறேன்.

வாழ்க்கையில் சொந்தக் காலில் வாழப் பழகிக்கொள்ளுங்கள். சொந்தக்காரர்களிடமே சுரண்டி வாழாதீர்கள்.ஒற்றைப் பெண்ணைப் பெற்ற ஓரளவு வசதியுள்ள நானே ஓட்டாண்டியாகிவிட்டேன் என்றால் நாலு பெண்ணைப் பெற்ற ஏழையின் நிலையை என்னவென்று சொல்வது. ஒரு தந்தையின் பாசத்தை துரும்பாகப் பயன்படுத்தி எங்களைத் துவைத்து துருவி எடுக்கிறீர்கள். பெண்ணைப் பெறுவது பரகத் என்பதைப் பொய்யாக்கிய பாவம் உங்களோடுதான். கடையில் இருந்ததையெல்லாம் உங்களுக்கு இறைத்துவிட்டு கடனாளியாய் கைவிரித்தபடி செல்கிறேன்.இது ஆயுள் கடனல்ல,பரம்பரைக் கடன்.எப்போது கழிக்கப்போகிறேனோ தெரியாது.

ஆனால் பயப்படாதீர்கள் மருமகனே, இதை யாரிடமும் சொல்லமாட்டேன். எனது உள்ளத்தில் உறுமும் எதையும் உங்களுக்கு காட்டமாட்டேன். உங்களைப் பார்க்கும் போதெல்லாம் பரவசமாவதுபோல் பல்லிழித்துக்கொள்வேன். சொந்தக்காலில் நிற்கத்தெரியாத சோம்பேறி என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வேன். உங்கள் வீட்டார் வந்தால் விழுந்து விழுந்து கவனிப்பேன். என்னை வங்குறோத்தாக்கியவர்கள் வெட்கமில்லாமல் வருகிறார்கள் என்று உள்ளே நினைத்துக்கொள்வேன். எனது மருமகன் போல் உலகில் யாருமில்லை என்று எல்லோரிடமும் சொல்லிக் கொள்வேன். ஒரு பெண்ணை வைத்து வாழ வழியில்லாதவன் என்று வாய்க்குள் முனகிக்கொள்வேன். வெள்ளாமை நெல் அனுப்பிவைத்தால் என்ன கவனிப்பு எனது மருமகன் என்று வண்டிக்காரனிடம் சொல்லிவிடுவேன். எனது விளைச்சலில் எனக்கே நெல் அனுப்புகிறான் என்று எனக்குள் நானே எண்ணிக்கொள்வேன்.

எனது மகளோடு மருமகனுக்குத்தான் எத்தனை இரக்கம் என்று அயல் வீட்டுக்காரர்களிடம் கூறி வைப்பேன். வீடு கொடுக்காவிட்டால் வந்திருப்பானா என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்வேன். நான் உங்களோடே இருப்பேன். உங்களோடே சிரிப்பேன். கடைசிவரைக்கும் எனது வெறுப்பை நீங்கள் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் இவ்வாறுதானே ஒவ்வொரு மாமனாரும் உலகத்தில் வாழ்கிறார்கள். இக்கடிதத்தை உங்களிடம் நான் காட்டவும்மாட்டேன். கிழித்துப்போட்டும் விடுவேன். வாசித்த கையோடு எனது மகளை விட்டுவிட்டு ஓடிவிடுவீர்களே. எனது மகள்தானே எனது பலவீன்மும் உங்கள் பலமும். சரி மருமகனே நேரமாகிவிட்டது. செல்லவேண்டும்.நான் கட்டிய வீட்டை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நாளை முதல் அழுத உள்ளத்தோடும் சிரித்த முகத்தோடும் அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்வோம். வாழ்கையே ஒரு தற்காலிக நாடகம்தானே.

மதிப்புக்குரிய மாமனார்?!

[ சுபீட்சம் இணையம் ]