சீமான் எனும் தமிழ் சாவர்க்கர்

இந்த புரட்சிகர கருத்துக்களும் சீமானுடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்பதே பிரச்சனை. அவர் கல்வி, வேலை வாய்ப்பு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு வைக்கும் மாற்றுகள் பற்றி பேசும் போது அவருடைய போதாமை, அவருக்குள் ஒளிந்திருக்கும் சமூக, பொருளாதார அறியாமை வெளிப்படுகிறது என்பதே பிரச்சனை. அதை விட ஆகப்பெரிய பிரச்சனை ஜனநாயக ஆட்சிமுறையில் அவருக்கு அடிப்படையிலேயே நம்பிக்கை இல்லை என்பது. இந்த சுவாரஸ்யமான வெறும் பேச்சால் அவர் இளந்தலைமுறையினரில் அரசியல் புரிதலோ சமூக வரலாற்று வாசிப்போ முதிர்ச்சியோ இல்லாதவர்களை ஈர்த்து வருகிறார், அவர் எதிர்காலத்தில் ஒரு கவனிக்கத்தக்க சக்தியாக வளர்ந்து விடலாம், (கமலைப் போன்றே) எதிர்காலத்தில் பாஜகவுக்கான கலாச்சார களத்தை அவர் தயாராக அமைத்திடலாம் என நினைக்கும் போது எனக்கு நிஜமாகவே கவலை ஏற்படுகிறது.

சீமானின் கல்விக் கொள்கைக்கு முதலில் வருகிறேன். அவர் அரும்பு, மொட்டு, மலர் என ஒரு திட்டத்தை வைக்கிறார். இது மேம்போக்காக கேட்க ஏதோ மனிதாபிமான சிந்தனை கொண்ட புரட்சித் திட்டம் எனத் தோன்றும். ஆனால் அவருடைய பேச்சுக் கவர்ச்சியில் இருந்து வெளிவந்து என்னதான் அவர் சொல்ல வருகிறார் என ஊன்றி கவனித்தால் இது எவ்வளவு அபத்தமான ஆபத்தான கல்விக் கொள்கை என புரியும்.

ஐந்தாம் வயது முதல் ஒரு குழந்தை முறையான கல்வியை ஆரம்பித்தால் போதும் என்கிறார். சரி தான். அடுத்து தான் விவகாரமே துவங்குகிறது – ஆங்கிலம், தமிழ், வரலாறு, அறிவியல், கணிதம் போன்ற அடிப்படை பாடங்கள் எவையும் கட்டாயமாக கற்பிக்க தேவையில்லை, இவற்றில் தேர்வு எழுதவும் அவசியம் இல்லை என்கிறார். அதாவது இந்த பாடங்களை electivesஆக மாற்றலாம் என்கிறார். அதுவும் தேர்வில்லாத தேர்வுப்பாடங்கள். கேட்க நன்றாக இருக்கிறதல்லவா, ஆனால் இங்கே தான் சிக்கலே. ஒரு குழந்தைக்கு ஆங்கிலம் வேண்டாம் என்றால் தமிழ் மட்டுமே படிக்கலாம். கணிதம், அறிவியல் கூட தவிர்த்து விடலாம் என்பது சீமானின் கொள்கை. எனில் நாளை இந்த குழந்தைக்கு வாழ்க்கையின் அடிப்படைகள் எப்படி புரியும்?

நியூட்டனின் மூன்றாவது விதி என்றால் பெயரளவில் கூட புரியாமல் போய் விடும். கேல்குலேட்டர் இல்லாமல் சின்ன பெருக்கல் போட தெரியாமல் போய் விடும். வரலாறு படிக்காத ஒரு குழந்தைகளிடம் நாம் அனைவரும் ஆரியர்கள் என சங்கிகள் சொன்னால் அதை மறுத்துப் பேசும் அறிவு கூட இராது. தமிழ் மொழியின் வளர்ச்சியில் மாற்று மொழியை தாய்மொழியாய் கொண்டவர்களின் பங்களிப்பு என்னவென்று தெரியாது. பொன்னியின் செல்வன் படித்தால் அதில் ஏன் ஆழ்வார்க்கடியான் நம்பி மதப்போர் புரிகிறான் எனப் புரியாது.

ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ தெரியாத ஒரு குழந்தைக்கு இந்த உலகின் அறிவுச்செல்வங்கள் எப்படி போய் சேரும்? இதை ஏன் சீமான் வலியுறுத்துகிறார் என்றால் தன்னை கேள்வி கேட்காத ஒரு மூடக் கூட்டத்தை அவர் உருவாக்க விரும்புகிறார் என்பதும், அவருக்கு போதுமான முறையான கல்வி கிடைக்காததன் போதாமை இருக்கிறது என்பதையுமே காரணங்களாக காண வேண்டி உள்ளது. ஏனென்றால் மண்டையில் மசாலா உள்ள எந்த கல்வியாளனுமே இந்த அரும்பு, மொட்டு பின்னாத்தல்களை ஏற்க மாட்டான்.


சீமான் அடுத்து சொல்வதைப் பாருங்கள்:
சின்ன வயதிலேயே என்ன திறனை, ஆர்வத்தை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறதோ அதில் மட்டுமே அக்குழந்தைக்கு பயிற்சி அளிக்க வேண்டும், வேறு விசயங்களில் அதை ஈடுபடுத்த அவசியமில்லை என்கிறார். இதற்கு அவர் உதாரண்மாக காட்டுவது சச்சினையும் ஏ.ஆர். ரஹ்மானையும். ரஹ்மான் அடிப்படை பள்ளிக்கல்வி பெற்றவர். நவீன காலத்தின் அனுகூலங்களை அனுபவித்து தன் இசையை விரிவுபடுத்தியவர். அவரும் சரி, சச்சினும் சரி விதிவிலக்குகள். ஒரு குழந்தை சின்ன வயதில் பாட்டில் ஆர்வம் காட்டுகிறது என்பதற்காக பாட்டு மட்டுமே பயின்றால் போதும் என வளர்ப்பது ஆபத்தானது – ஏனென்றால் ஒருவருடைய திறன் என்பது வெளிப்பட்டு, அதில் முழுமையான ஈடுபாடும் தோன்ற ஒரு குழந்தைக்கு பதின்வயதைத் தாண்ட வேண்டி வரலாம் என உளவியல் கூறுகிறது. எட்டு வயதில் இசையில் ஆர்வம் காட்டும் ஒரு குழந்தை பதிமூன்று வயதில் விமானப் பயணியாக விரும்பலாம். பதினாறு வயதில் நிர்வாகவியல் படிக்க விரும்பலாம். அப்போது என்ன செய்வீர்கள்? அதுவரை வேறெதையுமே படிக்காத அந்த குழந்தையின் நிலை என்னவாகும்? அம்போவென தெருவில் விட்டு விடுவீர்களா?

இதே பரிந்துரையைத் தான் பாஜகவின் புதிய கல்விக்கொள்கையும் வைக்கிறது – என்ன தேர்வுகளை சீமான் தவிர்க்கிறார், அதைத் தவிர அவருக்கும் சங்கிகளின் கல்விக் கொள்கைக்கும் வித்தியாசமில்லை. இதை அவர் குறிப்பிட்டு பெருமைப்பட்டு வேறு கொள்கிறார். கேவலமாக இல்லையா? மேலும் சங்கிகளின் குலக்கல்வி பரிந்துரையையும் சீமான் வேறுவடிவில் (தொழிற்கல்வி) முன்வைக்கிறார்.

அடுத்து சீமானின் வேலை வாய்ப்பு, வணிக, உற்பத்தி கொள்கைகளுக்கு வருவோம். இங்கு தான் அந்த பிரசித்தமான ஆடு, மாடு வளர்ப்பு கொள்கை வருகிறது. தமிழர்களின் பூர்வீக தொழில்களுக்கு நாம் மீள வேண்டும் என்கிறார். அது என்ன? கடலை மிட்டாய் செய்வதில் இருந்து பயிர்களை விளைவிப்பது வரை குறிப்பிட்டு இவற்றை செய்து வெளிநாட்டுக்கு உற்பத்தி செய்தால் நாம் பல மடங்கு வளர்ச்சியை பெறலாம் என்கிறார். இதற்கெல்லாம் சீமானுக்கு எந்த புள்ளிவிபர ஆதாரமும் இல்லை. தமிழ் நாட்டில் இருந்து பல லட்சம் கோடிகளுக்கு கடலை மிட்டாய், நீராகாரம், வேம்புக்குச்சி போன்றவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய எந்த வெளிநாட்டு எம்.என்.சியும் இன்னும் அவரை அணுகியதாக தெரியவில்லை. அவர் பாட்டுக்கு அடித்து விடுகிறார். யாரும் அறிவுசார் வேலைகளுக்கு போக வேண்டியதில்லை, கார் தொழிற்சாலைகளை வெளியேற்றுவோம், இங்கு எந்த அயல் தொழில்களுக்கும் இடமில்லை, “அண்ணாமலை”, “சூரிய வம்சம்” பாணியில் பால்விற்றும், பேருந்து ஓட்டியும் நாம் பெரும்பணக்காரர்கள் ஆகி விடலாம் என்கிறார். எந்த பொருளாதார, சமூக அறிவும் இல்லாத ஒரு மாக்கானால் மட்டுமே இப்படியெல்லாம் தனக்கு நிபுணத்துவம் இல்லாத துறைகளை சீர்திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை தயக்கமின்றி சொல்ல முடியும். அதனால் தான் சொல்கிறேன் – சீமானுக்கு (நமது ஜியைப் போன்றே) சொந்த அறிவு இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதை கடன்பெற்று கண்ணை உருட்டி, மீசையை முறுக்கி, அங்கிங்கு திரும்பி போஸ் கொடுத்து, கையை நீட்டி முழக்கி நடித்துக் காட்டி பேசி கைதட்டு வாங்கத் தெரியும். அவருடைய சொந்த சரக்கை எடுத்து விடும் போது தான் இவர் ‘மிக ஆபத்தான ஒரு பேதை’ என நமக்குப் புரிகிறது.

அடுத்து, அவருடைய ‘வடுகர்களை ஒழிப்போம்’ கொள்கைக்கு வருவோம் – தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தபட்ட சாதிகளின் பட்டியல் இணையத்தில் கிடைக்கிறது. அதைத் திறந்து பாருங்கள். நம்மிடைய வாழும் பற்பல சாதி மக்களின் தாய்மொழி தமிழ் மட்டுமல்ல, அது தெலுங்காக, சௌராஷ்டிராவாக, கன்னடாவாக, உருதுவாக வேறு மொழிகளாக உள்ளது. இவர்கள் பல தலைமுறைகளாக இங்கு இருப்பவர்கள். இங்கே உழைத்து, வரி செலுத்தி, வாக்களித்து நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு, கலாச்சார, அரசியல் எழுச்சிக்கு பங்களித்தவர்கள். இவர்களா வந்தேறிகள்?
சீமான் இயக்குநராக இருந்த போது அவர் தமிழர்களிடம் மட்டும் தான் பணியாற்றினாரா? அவருக்கு பெயர் பெற்றுத் தந்த “தம்பி” படத்தின் தயாரிப்பாளர் ஒரு கன்னடியர். “எவனோ ஒருவனை” தயாரித்தது வட இந்தியர். சீமானின் பட நாயகிகள் அனேகமாக வேற்று மொழிப் பெண்கள். வட இந்தியர்களை அடித்து துரத்தும் சீமானுக்கு சினிமா என்று வந்தால் மட்டும் அவர்களுடைய தயவு தேவைப்பட்டதா? கீர்த்தி ரெட்டி, சிவரஞ்சனி எல்லாரும் வடுகர்கள் அல்லவா? சினிமாவில் மட்டும் தனித்தமிழ் கொள்கை கிடையாதா? இல்லை, நீங்கள் வட இந்தியர்களை ஓட விடும் போது கோடம்பாக்கத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பீர்களா?

இவர்கள் அந்நியர்கள், எந்த அதிகாரத்துக்கும் வரக் கூடாது என சீமான் சொல்வதை நிறைவேற்றினால் தமிழ்நாட்டின் கதி என்னவாகும்? ஒன்று சீமானுக்கு இங்கு வாழும் பலதரப்பட்ட மக்களின் மொழிப்பின்னணி பற்றி, அவர்களுடைய தாய்மொழி குறித்த புள்ளிவிபரங்கள் தெரியாது. அல்லது அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக உளறுகிறார். ஆனால் ஒருவேளை சீமானைப் போன்றவர்களிடம் ஆட்சி போனால் பாஜக ‘இஸ்லாமிய வந்தேறிகளுக்கு’, ‘இந்து விரோதிகளுக்கு’ சி.ஏ.ஏ முகாம்களை அமைப்பது போல சீமான் மொழிசார்ந்த வந்தேறிகளின் அடிப்படை உரிமைகளை பறித்து, அவர்களுக்கு முகாம்கள் அமைத்து சிறைவைப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. பல பேச்சுகளில் அவர் இத்தகைய மக்களை சிங்களவருடன் ஒப்பிடுவதை கவனியுங்கள். சிங்களவர்கள் தமிழரை அழித்ததற்கு பழிவாங்குவோம் என்கிறார். எவ்வளவு ஆபத்தான பேச்சு இது.

“வடமாநில தொழிலாளர்கள் நான் ஆட்சிக்கு வந்தால் பெட்டியை தூக்கிக் கொண்ட ஓட வேண்டியது தான்” என்று சிரிக்கிறார். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? அவர்கள் குறைந்த கூலிக்கு நமது பொருளாதார வளர்ச்சிக்கு நல்கும் பங்களிப்பு முக்கியமில்லையா? உழைக்கும் வர்க்கத்தை ஏதோ கொள்ளைக்காரர்களைப் போன்றா வர்ணிப்பது? சரி நீங்கள் இவர்களை துரத்திய பின் இதையே வேறு மாநில அரசுகள் அங்கு பணி செய்யும் தமிழர்களுக்கு செய்தால் என்னவாகும்? தாராவியில் உள்ள தமிழர்களை சிவசேனா ஆட்கள் சட்டமியற்றி வெளியேற்றினால் அவர்கள் எங்கு போவார்கள்? அவர்களுக்கு நீங்களா வேலை கொடுப்பீர்கள்? அவர்களுக்கு நீங்களா இங்கு வீடு கட்டித் தருவீர்கள்? வெளிமாநிலங்களில் இருந்து துரத்தப்படும் தமிழ் மென்பொருளாளர்களுக்கு, மருத்துவர்கள், வியாபாரிகளுக்கு என்ன வேலை தருவீர்கள்? கருப்பெட்டி, கடலைமிட்டாய் உற்பத்தியா? பால் கறப்பதா? இல்லை நீங்களே பரிந்துரைப்பது போல டீக்கடை வைப்பதா? ஏஸியில் உட்கார்ந்து, வசதியாக வேலை செய்து லட்சங்களில் சம்பாதிக்கிறவர்கள் எதற்கு பால்கறந்து, சாணி அள்ளி, டீ அடித்து அதே பணத்தை ஈட்ட வேண்டும்? உங்கள் ஆட்சியில் உண்மையில் அப்படி ஒரு புலம்பெயர்வு நடந்தால் வேலை இழந்து இங்கு வரும் நிலை ஏற்பட்டால் ஒரு பெருங்கூட்டத்துக்கு உடனடி வேலையளிக்க நமக்கு எந்த கட்டமைப்பும் இல்லை, அவர்கள் கடைசியில் சோறின்றி சாலையில் கிடந்து இரப்பார்கள் என்பதே உண்மை.

மேடைக்கு மேடை பாஜகவை, மோடியை சீமான் விமர்சித்தாலும் அவர் மோடியை போன்றே ஆபத்தான, மனதளவில் ஹிட்லருக்கு இணையான ஒருவர் என்பதில் எனக்கு இப்போது சந்தேகமில்லை. மோடி ஒரு கற்பிதமான ஆதி இந்து தேசத்தை கனவு காண வைத்தால், அந்த அடையாள பெருமிதம் மூலம் வடமாநில வாக்குகளை வென்றால், சீமானோ அதே மாதிரி ஒரு கற்பிதமான பழந்தமிழ் நிலச்சுவாந்தார் சமூகத்தை மீளமைக்க முயல்கிறார், அது ஒரு பரிசுத்தமான உயர்வான சமூக நிலை என கதை விடுகிறார், அப்படி கதைவிட்டு வாக்குகளை வெல்லலாம் என கனவு காண்கிறார். இருவருமே நடைமுறைக்கு பொருந்தாத விசித்திர திட்டங்களை முன்வைத்து அரசியல் பண்ணுகிறார்கள்; இத்திட்டங்களின் விளைவுகள் குறித்த தொலைநோக்கு பார்வை இல்லாமல் இருக்கிறார்கள். இருவருமே மாற்றுத்தரப்புடன் விவாதம் செய்கிற, எதிர்கருத்துக்களை பரிசீலிக்கிற ஜனநாயக மாண்பு இல்லாதவர்களாக இருப்பதுடன் தமது தொண்டர்களையும் அவ்வாறே பயிற்றுவிக்கிறார்கள். இருவருமே பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். இருவருமே அறிவியல், வரலாற்றுப் புரிதல் சற்றும் இல்லாதவர்கள். இருவருமே, முக்கியமாக, தன்னை சதா முன்னிறுத்துகிற தன்விருப்ப மனநிலை கொண்ட சர்வாதிகாரிகள். ஒரு உதாரணம் தருகிறேன்:

ஒரு உரையில் சீமான் தன்னுடைய ஆட்சியில் நா.த.க செயல்படுத்தும் (தோன்றித்தனமான) முடிவுகளுக்கு எதிராக சிலர் நீதிமன்றம் போவார்கள் எனறு சொல்லி விட்டு “ஹா ஹா ஹா” என சிரிக்கிறார். அடுத்து அத்தகையோரை நாங்கள் ரோட்டில் வைத்து வெட்டுவோம் என்கிறார். அதாவது இவர்களை விமர்சிக்கும், கேள்வி கேட்கும், எதிர்த்து போராடும் யாரையும் படுகொலை செய்வார்களாம். இவருக்கு கைதட்டி ஆதரவு தரும் இளைஞர் கூட்டம் எவ்வளவு கொடூரமானவரக்ளாக இருக்க வேண்டும்? இப்போது ஆளும் அரசை விமர்சித்ததற்காக அந்த ஆளுங்கட்சியின் தொண்டர்கள் உங்கள் சகோதரனை, சகோதரியை, தாய், தந்தையை ரோட்டில் வைத்து வெட்டினால் இப்படி கைதட்டி மகிழ்வீர்களா?

ஒரு காலத்தில் சீமானுடன் நெருக்கமாக இருந்த அமீர் அண்மையில் ஒரு பேட்டியில் பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நா.த.கட்சியில் ஊடுருவி உள்ளதாக குறிப்பிட்டதை, சீமானும் பொன்.ராதாகிருஷ்ணனும் மறைமுக புரிந்துணர்வுடன், நட்புடன் அரசியல் செய்து வருவதாக சொன்னதை இங்கு குறிப்பிட வேண்டும். எனில் ஏன் நா.த.கட்சி பாஜகவை எதிர்க்கிறது?

சீமான் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் மோடியை திட்டுவதும், ஒரு மனிதகுல விரோதி என அவரை வர்ணிப்பதும் ஒரு ஈடிபல் காம்பிளக்ஸ் என நினைக்கிறேன் – தந்தை உருவாக உள்ள மோடி மீது மகன் உருவான சீமானுக்கு உள்ள பொறாமையும், தந்தை உருவின் பிம்பத்தை மறுத்து அவரது அதிகாரத்தை தான் கைப்பற்ற வேண்டும் எனும் இச்சையே இங்கு வெளிப்படுகிறது. உள்மனத்தில் அவர் ஒரு ‘தமிழக மோடியாக’ உருவாகவே ஆசைப்படுகிறார். ஆனால் தந்தையின் இடத்தை அடைய விரும்பும் எந்த மகனையும் போல அதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் கசப்பாக வெளிப்படுத்துகிறார்.

சீமானுக்கெல்லாம் இவ்வளவு சீரியஸான பதிவு தேவையா என சிலர் கேட்கலாம் – நா.த.க ஒரு வளர்ந்து வரும் கட்சி, அது தன்னுடைய தொண்டர்களை விரிவுபடுத்தி வருகிறது, அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் வளரும் என்று புரிந்தே இதை எழுதுகிறேன். இதைப் போன்ற அபத்தமான கருத்துக்கள் அன்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்ஸால் பேசப்பட்டு பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டன அல்லவா! ஆனால் அவை இன்று வளர்ந்து பாஜகவின் சித்தாந்தமாகி நம்மை அடிமைப்படுத்தவில்லையா? சீமான் ஒரு தமிழ் சாவர்க்கர். அவரை நாம் இப்போதே அடையாளம் கண்டு கிள்ளி எறிய வேண்டும்!

பின்குறிப்பு: சீமான் குறித்து நான் இங்கு சொல்லி உள்ளவை தமிழ் தேசிய இயக்கம் மீதான என் விமர்சனம் அல்ல. தமிழ் தேசியம் மீது எனக்கு மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. அதன் ஒரு சீரழிந்த பாசிச வடிவம் மட்டுமே சீமான் உளறிக் கொட்டுவது.