சுவாமி ஞானப்பிரகாசரின் மறுபக்கம்

ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ மத ஆதிகத்தை எதிர்த்து சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர் என்பர். அதனால் அவருக்கு “நல்லைநகர் காவலர்” என்ற பட்டமும் உண்டு. ஆனால் அவர் அவற்றுடன் பிற்போக்கு சனாதன சாதி அமைப்பையும் பேணிப்பாதுகாத்ததால் “நாவலன் சாதிவெறிக் காவலன்” என்ற பொதுமக்களால் வழங்கப்பட்ட பட்டமும் உண்டு.

மற்றவர் ஞானப்பிரகாச சுவாமிகள் (1875 ஓகஸ்ட் 30 – 1947 ஜனவரி 22). யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த ஆறாவது பரராசசேகரன் மன்னனின் வழித்தோன்றலான இவரது இயற்பெயர் வைத்திலிங்கம் என்பது. கிறிஸ்தவத்துக்கு மாறித் தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். தமிழ், ஆங்கிலம், சிங்களம், லத்தீன், கிரேக்கம் என பன்மொழிப் புலமையாளரான இவரும் தமிழையும் கிறிஸ்தவத்தையும் அரும்பாடுபட்டு வளர்த்தவர் எனப் பெருமை பேசப்படுவபர்.

இந்த இருவரும் தமிழையும், சைவசமயம் – கிறிஸ்தவம் இரண்டையும் வளர்த்தாலும் இலங்கையைக் கைப்பற்றித் தமது காலனியாக வைத்திருந்த அந்நியர்களை எதிர்த்து கிடையாது. மாறாக முற்போக்குச் சிந்தனைகளைத்தான் எதிர்த்து வந்திருக்கின்றனர். அதிலும் ஞானப்பிரகாசர் “சமதர்மத்தின் தப்பறை (Fallacy of Communism)” என்ற பெயரில் கம்யூனிசத்துக்கு எதிரான நூல் ஒன்றையே குரு – சிஸ்யன் சம்பாசணை வடிவத்தில் பகிரங்கமாக எழுதி 1938ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள் இதோ –

சிஸ்யன்:
எத்திசையிலும் சத்தியத்தைப் போதித்து வரும் உத்தம குருவே, நமஸ்காரம்! இன்று நான் தேவரிடம் ஒரு புதுக் கேள்வியைக் கேட்க உத்தரவு தரவேணும்….

குரு:
“வீண் தர்க்கமில்லாமல் ஏதாவது ஒரு உண்மையை அறிந்துகொள்ள வருகிறவர்களுடைய சந்தேகங்களை ஆராய்வாகக்கேட்டு, அப்படிப்பட்ட கேள்விகளுக்கு, தேவ கிருபையால், நல்ல மறுமொழி சொல்ல எப்போதும் ஆயத்தம்…..”

சிஸ்யன்:
இந்த நாட்களிலே சமதர்மம் அல்லது பொதுவுடைமைக்கட்சி என்று ஒரு பேச்சு அங்கங்கே கேட்கப்படுகிறது. சமதர்மக்காரர் என்றால், எல்லாத்தையும் சமம் ஆக்குகிறவர்களாம். இனி உலகத்திலே பணக்காரர், பிச்சைக்காரர் என்ற வித்தியாசம் இராதாம். மேல் கீழ் என்ற பேதம் காணப்படாதாம். படித்தவர்கள் படியாதவர்கள், உத்தியோகத்தர்கள் கூலிக்காரர், எல்லாரும் ஒரு மட்டத்திற்கு வந்துவிடுவார்களாம். இனி, தொண்டனுமில்லை, தோட்டியுமில்லையாம். எல்லாருக்கும் காணி பூமிகள், பணம் பண்டங்கள் சரிசமனாக இருக்குமாம். ஒருவருக்கும் தனி உடைமை வேண்டாமாம். பொதுவுடைமையே போதுமாம். சுருக்கத்திலே சொல்லிவிடுகிறது என்றால் உலகத்திலே கயிலாயம் வரப்போகிறதாம். இதை மூடச் சனங்கள் அங்கங்கே திறந்தவாயோடே கேட்டுப் பொச்சடித்துக் கொள்ளுகிறார்கள்.

குரு:
“சமதர்மம் அல்லது பொதுவுடைமைக் கொள்கை என்றது புதிதல்ல, வெகுநாட்பட்ட பழஞ்சரக்கு. உலகத்திலே, அங்கங்கே, பல காலங்களிலே, பலர் வறுமை முதலிய இடைஞ்சல்களினாற் திருத்தியீனப்பட்டவர்களைக் கிள்ளிக் கிளப்பிவிட்டு, உள்ளவர்களிடத்திலே கொள்ளையடிப்பித்திருக்கிறார்கள். இக்காலத்துச் சமதர்மக் கிளர்ச்சியும் ஒரு பெரும் பகற்கொள்ளைதான். எவருக்குந் தனியுடைமை ஆகாது என்று சொல்லி, ஒருவன் பாடுபட்டுத்தேடி, அல்லது பெற்றாரால் உரிமையாகப் பெற்று வைத்திருக்கிற பொருளை, பண்டத்தை, காணியை அப்பிக்கொண்டு பொதுவுடைமைக் கணக்கிலே வைப்பது நீதியா? இல்லாதவர்கள் நல்ல முயற்சி பண்ணி உழைத்து, அல்லது, வேண்டுமானால், உள்ளவர்களிடத்தில் பிச்சை வாங்கிச் சீவிப்பதல்லவோ நீதி? அப்படி இல்லாமல், வைத்திருக்கிறவனிடத்தில் தட்டிக்கொட்டி அவனையும் தன்மட்டம் ஆக்கிவிடுவது சரிப்படுமா? அல்லாமலும், சகலத்தையும் சமம் ஆக்குகிறோம் என்றது பதர்ப் பேச்சு. கடவுள் உலகத்தை சமமாக உண்டாக்கவில்லை…..(அவரது உதாரணங்கள் மிக நீளமாக இருப்பதால் இத்துடன் நிறுத்தி விடுகிறேன்)
சமதர்மம் சரியாய்ப் போதிக்கப்பட்டது ருசியாவிலே அல்லவா? அங்கே நடந்திருக்கிறது என்ன? இலட்சக்கணக்கான நாட்டவர்கள் பிச்சைக்காரர்களாய் போய்விட்டார்கள். பொதுசன எழுச்சிகளிலே பதினாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் சிறைப்பட்டிருக்கிறார்கள். அங்கே சோவியற் என்ற கூட்டக்காரர் மட்டும் குசாலாய்ச் சீவிக்கிறார்கள்….”
(கம்யூனிசத்தின் மீது எவ்வளவு பொய்யானதும் வெறுப்பானதுமான வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார் பாருங்கள்! இன்று யாழ்ப்பாணத் தமிழர்களில் பெரும்பாலோர் கம்யூனிசத்தின் மீது வெறுப்புணர்வு கொண்டு இருப்பதற்கு இத்தகையவர்கள் செய்த அவதூறுப் பிரச்சாரங்களும் ஒரு காரணம்)
இந்த நூலை வெளியிட்டவர்கள்:
The Jaffna Diocesan Literature Committee
வெளியிட்ட ஆண்டு: 1938