செழியன் என்ற மனிதநேயன்

(தோழர் சேகர் – பாஸ்கரன்)

உள்மனதை எழுத்தில் வடிக்கும் உண்மையான கவிஞன். உழைக்கும் மக்களின் விடிவுக்காகத் தன்னையே தேய்த்துக்கொண்டவன். தன் வாழ்வுக்கும், எழுத்துக்கும் கருத்துவழிப்பட்ட அர்த்தத்தைத் தேடியவன். அநீதிகளுக்கு எதிராக ஒரு சிறுகல்லைத்தன்னும் இறுதிவரை எறிந்துகொண்டே இருந்தவன். அமைதியாகத் தூங்கிவிட்டான்.

அவனிடம் ஒரு கனவு இருந்தது. ஒடுக்குமுறைத் தழைகளிலிருந்து விடுதலை பெற்ற சுபீட்சகரமான சமூகத்தை அவன் தன் கண் மடல்களின் உள்ளே நித்தியமாக வரைந்து வைத்திருந்தான். வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, சமூக ஒடுக்குமுறை, பெண் அடிமைத்தனம், மடமை என்பன ஒழிந்த ஒரு சமூக மாற்றத்;துக்காக நின்றான். அதற்கான சித்தாத்தத் தேடுதலில் தன்னை ஆழப் புதைத்துக் கொண்டான். அதை நோக்கிய செயற்பாட்டில் தன் கருத்தொத்த தோழர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டான். தவறுகள் கண்ட இடமெல்லாம் கேள்வி எழுப்பினான். அவனின் இருப்பு மறுக்கப்பட்டு ஒரு சருகாயாய் தூக்கி எறியப்பட்டாலும், சென்று விழுந்த இடத்தில் நின்றும் தன் எதிர்ப்பைப் பதிவுசெய்தான்.

போராட்டம், புரட்சி, சமூக மாற்றம் என்பனபற்றி அக்கறையற்றிருந்த எழுபதுகளின் கடைப்பகுதி, அல்லது எண்பதுகளின் தொடக்கத்தில் மாணவப் பராயத்திலிந்த செழியன் என்ற எம் சிவகுமாரனின் நாட்டம் சற்று விதிவிலக்கானதாக இருந்தது. அவன் கருத்தியல் கல்வி வட்டமொன்றில் தத்துவார்த்த விவாதங்களில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். கிராமியக் கூலி விவசாயிகள்மீதான ஒடுக்குமுறைகளிலிருந்து அவர்களது மீட்சிக்கான போராட்ட வழிமுறைகள், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மலையத் தொழிலாளர்களது தொழிற்சங்க இயக்கத்தின் மந்த நிலையில்; மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய அவசியப்பாடு போன்றவற்றை எடுத்துப் பேசினான். வர்க்கப் போராட்டம், பொருளாதார சமத்துவம், சமூகப் புரட்சி பற்றியெல்லாம் மார்க்ஸ், லெனின், மாவோ போன்ற சித்தாந்த மூலவர்கள் கூறியவற்றை நம் நாட்டு யதார்த்தத்தில் எப்படிப் பயன்படுத்துவதென்பதுபற்றியும் விவாதித்தான். இன விடுதலைப் போராட்டம், வர்க்கப் போராட்டம் என்பனவற்றுக்குள் உள்ள முரண்நிலைகளை விவாதித்தான்.

இலங்கையில் தேசிய முரண்பாடு கூர்மை பெற்று, அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டை மேவி, இன முரண்பாடு பிரதான முரண்பாடாகிவிட்ட நிலையில் இனப் பிரச்சினையைத் தீர்க்காமல் வர்க்க விடுதலை சாத்தியமாகாதென்ற நிலைப்பாட்டை அவன் சற்றுத் தயக்கத்துடனேதான் அங்கீகரித்தான். எனினும் வர்க்க விடுதலையை நோக்கி தேசிய விடுதலையை முன்னெடுப்பது என்ற பணியில் தன்னை அமைப்பு ரீதியாக ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்தான். வர்க ஒடுக்குமுறையாளர்களான நில உடமையாளர்களும், தமிழ் தேசிய முதலாளி வர்க்கமும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முன்னிலை வகிக்கும்போது அவர்களை நட்புசக்திகளாக வரித்துக்கொள்வதில் பாரிய மனத்தயக்கம் அவனுக்கிருந்தது. இதே சக்திகள்தான், சாதாரண சிங்கள மக்களை எதிரிகளாகச் சித்திரித்து, சிங்கள முற்போக்கு சக்திகளுடன் நட்புறவுக்குத் தடையாக இருக்கின்றனவென்று எச்சரிக்கை கொண்;டிருந்தான். அத்தோடு, மலையகத் தொழிலாளர்களின் அவல நிலைக்கும், முஸ்லிம் மக்களின் அச்சங்களுக்கும், இத் தேசிய விடுதலைக்குள் அத்தபூர்வமான தீர்வுகள் காண்பதுபற்றி இவர்களுக்கு அக்கறையில்லை என்ற விசனம் கொண்டிருந்தான். பெண்விடுதலைக்கு இப் போராட்டம் கொடுத்த விளக்கத்தில் முரண் கண்டான்.

இதனூடே தன் போராட்டத் தளத்தை அவன் தேடியபோது அவனுக்கிருந்த தேர்வாக ஈழ மாணவர் பொதுமன்றம் அமைந்தது. அதன் வாயிலாக மாணவர் சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வூட்ட விழைந்தான். அதற்காக வீடு வீடாகச் சென்று நிதிசேகரித்து “ஈழமாணவர் குரல்” என்ற பத்திரியை வெளிக்கொணர்வதில் முன்நின்றான். பத்திரிகை மட்டுமன்றி, கல்வி வட்டங்கள், கருத்தரங்குகள், பொதுக் கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் என்று எல்லா வகையிலும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த இடையாறாது உழைத்தான்.
போராட்டம் தலைமறைவு இயக்கங்களாக பரிணமித்ததையடுத்து, ஈழமாணவர் பொதுமன்றத்துக்குப் பாதிப்பேற்படாவண்ணம், அதனை திரு. டேவிற்சன் தலைமையிலான கமிட்டியிடம் பாரப்படுத்திவிட்டு, 1981ல் இந்தியாவில் நிகழ்ந்த அமைப்பாளர் மாநாட்டிற்குச் சென்று அங்கு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உருவாக்கத்தில் பங்காற்றினான். அதன் யாழ் பிராந்தியப் பொறுப்பாளராக கடமையேற்று மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி மக்களை அரசியல்மயப் படுத்துவதற்கும், சமூக ஜனநாயகக் கருத்துக்களை வலுப்படுத்துவதற்கும் பாடுபட்டான். அவனது அர்ப்பணமிக்க செயற்பாட்டுக்கு அங்கீகாரமாக 1984ல் இந்தியாவில் நிகழ்ந்த இபிஆர்எல்எப் இன் முதலாவது காங்கிரஸில் அவன் மத்திய கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டான்.
ஜுலைக் கலவரத்தின்பின் ஏற்பட்ட வேகமான ஆயுதமோக அலையில் ஈழவிடுதலைப் போராட்டத்திலிருந்து அன்னியப்பட்டு விடாதிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவனது கட்சிக்கு எழுந்த நிலையில், கட்சிக்குள் இராணுவவாதம் எதேட்சாதிகாரம் தலைதூக்கிவிடாதிருக்க உட்கச்சிப் போராட்டங்கள் நடாத்தினான். பாட்டாளிவர்க்கக் கொள்கையில் நிலைகொண்டே ஈழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப் படவேண்டுமென்று வலியுறுத்தி நின்றான். ஈழ விடுதலை இயக்கங்களில் தலைதூக்கிய அராஜகப் போக்குகளுக்கெதிரான ஜனநாயகப் போராட்டங்களைப் பகிரங்கமாக முன்னெடுத்தான். ஆனால் மாற்றுக் கருத்துத்தாளர்களின் போராடும் உரிமையே மறுக்கப்பட்டு, அவன் சொந்த மண்ணைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் எழுத்தபோது, அவன் தன்னை இப் போராட்டப் போக்கின் திசைவழியிலிருந்து விடுவித்துக்கொண்டான். இருந்தும் அவனது போர்க்குரல் வேறு தளங்களில் தொடர்ந்தும் ஒலித்தது. கவிதை, சிறுகதை, நாவல் இலக்கியம், நாடகம் என அவன் பயணித்துக்கொண்டே இருந்தான். அவன் தன் கவிதையொன்றில் எழுதியதுபோல், மரணம் ஒரு முடிவல்ல, என்பதை தன் வாழ்வில் நிரூபித்தான்.

அவன் இயல்பில் ஒரு கவிஞனாக இருந்ததால், அவனது விமர்சனப் பார்வைகளில் கலைஞனுக்குரிய மிகையூட்டம் மற்றும் பரிமாண விகாரங்கள் தொனித்தாலும் அவனது கோணத்திலான அடிப்படை உண்மைகள் அங்கு பொதிந்தே இருக்கும். மக்கள் சார்பான சத்திய ஆவேசம் அவனை சமநிலை கடந்து உச்ச உணர்வுத் தளத்தில் சஞ்சரிக்க வைத்திருந்தாலும் அவனது கோபம் ஒரு நியாயத்;தை வேண்டிநிற்பதை எவராலும் மறுக்க முடியாதிருக்கும். அவனது கேள்விகளின்முன் விடைகள் இன்னும் மண்டியிட்டே நிற்கின்றன.

அவன் எம் போராட்டத்தில் வழங்கிய பங்களிப்புகளில் சில:
– ஈழ விடுதலைப் போராட்டத்திற்குள் வர்க்க விடுதலை சிந்தனையை நிலையூன்ற அவன் முன்னெடுத்த சிறுப்பிட்டி மக்களின் கூலி உயர்வுப் போராட்டம். கோரிக்கை மறுக்கப்பட்ட அம் மக்களின் வாழ்வாதரத்துக்காக அவன் உருவாக்கிய ஜனசக்தி சவர்க்காரத் தொழிற்சாலை, மற்றும் கல்வி விழிப்புணர்சிக்கான நூல்நிலையம். மத்தாளோடை கல்லுடைக்கும் தொழிலாளர் போராட்டம். பரந்தன் இரசாயணத் தெழிற்சாலை தொழிலாளார்களின் போராட்டத்திற்கான ஆதவு, ஈழத் தொழிலாளர் சங்க உருவாக்கத்தில் ஆரம்பகர்த்தாவாக அவனது பாத்திரம்.
– ஈழமாணவர் பொதுமன்றத்தின், கல்வி வெள்ளையறிக்கைமீதான போராட்டம், மேதினக் கூட்டங்கள், பாதயாத்திரை ஆகியவற்றில் அவனது பங்கு.
– ஈழப் பெண்கள் விடுதலை முன்னணியூடாக பெண்ணுரிமைக் கருத்துக்களை முன்நிறுத்தியமை.
– தெருநாடங்கள், மேடை நாடகங்கள், கவிதா நிகழ்வுகள்இசினிமா விமர்சனக் கூடங்கள் ஆகிய அவனது கலையிலக்கிய முன்னெடுப்புகள்.
– அரசியல் கருத்தரங்குகளிலும், நூல்; சேகரிப்பிலும் அவன் மேற்கொண்ட காத்திரமான முயற்சிகள்.
– போராட்டத்தின் போக்கில் தலைதூக்கிய அராஜகங்களுக்கு எதிராகவும் உட்கட்சி ஜனநாயகத்துக்குமான அவனது குரல்.
– சிங்கள முற்போக்கு சக்திகளுடன் உறவுப்பாலமமைத்து எமது போராட்ட நியாயங்களைப் புரிய வைப்பதில் அவனது ஈடுபாடு.
இன்னும் எவ்வளவோ…