தமிழ் அரசியலும் தெரிவுச் சுமையும்: யாரைத்தான் தெரிவு செய்வது?

ஒரு நபரின் வாக்களிக்கும் உரிமையானது, அந்த நபர், அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்ற தெரிவை மேற்கொண்டாலும், அந்த நபரை, நமது ஜனநாயக சமூக ஒழுங்கு, தன்னோடு இணைக்கிறது. வாக்களிப்புத்தான் நமது ஜனநாயகத்தின் ஆரம்பப்புள்ளி. நிற்க!

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைப் பொறுத்தவரையில், மிக முக்கியச் சவாலொன்றைத் தமிழ் மக்கள் எதிர்கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது. அதுதான் ‘தெரிவுச் சவால்’.

இம்முறை தமிழர் பிரதேசங்களில், குறிப்பாக வடக்கு, கிழக்கில் பல கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் களம் காண்கின்றன. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மட்டும், 19 கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அதாவது, ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்காக 330 பேர் போட்டியிடுகிறார்கள்.

தெரிவுகள் பற்றிப் பேசும் போது, அல்வின் ரொஃப்லர் ‘அதிக தெரிவுகள்’ அல்லது ‘தெரிவுச் சுமை’ என்ற விடயம் பற்றி, 1970களில் குறிப்பிட்டிருந்தார். அதாவது, மக்கள் முன்னால் அதிக தெரிவுகள் இருக்கும் போது, முடிவெடுப்பதில் அவர்கள் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கும், அறிவாற்றல் செயல்முறைச் சவாலையே அவர் ‘தெரிவுச் சுமை’ அல்லது ‘அதிக தெரிவுகள்’ என்று குறிப்பிடுகிறார்.

ஒன்றுக்கொன்று ஒத்ததும் சமமானதுமான பல தெரிவுகள் இருக்கும் போது, ‘தெரிவுச் சுமை’ ஏற்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பத்தில், தவறான தெரிவொன்றைத் தெரிவு செய்வதன் விளைவாக, ஏற்படக்கூடிய விளைவுகள், அபாயங்கள் பற்றிய சிந்தனை காரணமாக, முடிவெடுப்பது என்பது மிகக்கடினமானதாக மாறுகிறது.

ஏனென்றால், தெரிவுகள் ஒன்றுக்கொன்று ஒத்ததும் சமமானதுமாக உள்ள போது, ஒவ்வொன்றையும் மற்றொன்றுக்கு எதிராக எடைபோட வேண்டிய தேவை இருக்கிறது. வித்தியாசங்கள் மிகச் சிறியதாக இருக்கும். இதில் எதைத் தெரிவு செய்வது, எதைத் தவிர்ப்பது என்பது, உளரீதியில் எடுப்பதற்குக் கடினமானதொரு முடிவாகும்.

ஆனால், ‘தெரிவுச் சுமை’ உருவாவதற்கு வெறுமனே அதிக தெரிவுகள் இருப்பது மட்டுமே காரணமல்ல; மாறாக, அதற்கு இன்னும் சில காரணங்கள் உடனமைய வேண்டும் எனத் தமது ஆய்வுகளில் ஷெபஹென், கிரேஃபெனெடர், டொட் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள்.

முதலாவதாக, தெரிவு செய்கிறவர்களுக்குத் தௌிவானதொரு முன்விருப்பமோ, முற்சார்போ இருக்கக்கூடாது. தெரிவு செய்கிறவர்களுக்கு முன்விருப்பமொன்று இருக்கும் போது, எத்தனை தெரிவுகள் இருக்கின்றன என்பது அவரது முடிவின்மீதோ, அந்த முடிவின்மீதான திருப்திப்பாட்டின் மீதோ அதிக தாக்கம் செலுத்தப்போவதில்லை.

இரண்டாவதாக, அங்கு செல்வாக்கு மிக்கதொரு தெரிவு காணப்படக்கூடாது. அதாவது, அனைத்துத் தெரிவுகளும் ஒத்ததாகவும் சமமானதாகவும் காணப்பட வேண்டும். செல்வாக்கு மிக்கதொரு தெரிவு காணப்படும் போது, ஏனைய தெரிவுகள் அவ்வளவு முக்கியத்துவம் மிக்கதாக அமையாது.

மூன்றாவதாக, தெரிவுகள் பற்றிய பரிச்சயம் குறைந்தவர்களுக்குத்தான் அதிக தெரிவுகள் பெருஞ்சுமையைத் தருகின்றன. தமது தெரிவுகள் பற்றிய அறிவும் நிபுணத்துவமும் உள்ளவர்களுக்கு அதிக தெரிவுகள் பெரும் சவாலாக அமையாது என்று, ஷெபஹென், கிரேஃபெனெடர், டொட் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள்.

இந்த உளவியல் நடத்தைசார் ஆய்வு, அரசியலுடன் எவ்வாறு பொருந்திப்போகிறது? குறிப்பாக, இடம்பெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்களின் முன்னுள்ள அதிக தெரிவுகள், அவர்களுக்குத் தெரிவுச் சுமையை ஏற்படுத்துகிறதா, என்ற கேள்வி பற்றிச் சிந்திக்கலாம்.

அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட கட்சி மீதான முன்விருப்பத்தையோ முற்சார்பையோ கொண்டவர்களுக்கு, அதிக தெரிவுகள் என்பது ஒரு பிரச்சினையல்ல. தென்னிலங்கையில், “கபுவத் கொள, மறுவத் கொள” (வெட்டினாலும் பச்சை, கொன்றாலும் பச்சை) என்று விளிக்கப்படும் வகையறாக்கள், இந்த முற்சார்பு கொண்ட பட்டியலுக்குள் வருவார்கள். கட்சி உறுப்பினர்கள், கண்மூடித்தனமான கட்சி விசுவாசிகள், தனிநபர் வழிபாடு செய்யும் இரசிகர்கள் இதனுள் அடங்குவார்கள்.

ஆகவே, வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விசுவாசிகள், கூட்டமைப்பை என்னதான் விமர்சித்தாலும், அதன் தலைமைகளின் நடவடிக்கைகள் மீது என்னதான் அதிருப்தி கொண்டாலும், தேர்தலென்று வந்துவிட்டால், வாக்குச்சீட்டில் அவர்களது சின்னத்துக்குப் புள்ளடியிட்டுவிட்டு வந்து, மீண்டும் அவர்களை விமர்சிக்கத் தொடங்குவார்கள்.

அதுபோலவே, தமிழ்க் காங்கிரஸ் விசுவாசிகளும் டக்ளஸ் தேவானந்தாவின் விசுவாசிகளும் ஏனைய தனிநபர்களின் இரசிக விசுவாசிகளும் நடந்துகொள்கிறார்கள்.

அடுத்தாக, குறித்த கட்சியொன்று, ஏனையவற்றிலும் பலமானதாகவும் செல்வாக்கானதாகவும் இருக்கும்போது, தெரிவுச் சுமை என்பது ஏற்படுவதில்லை. குறிப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மிகப் பலமானதாக இருந்த காலகட்டத்தில், அதற்கு மாற்றாக யார் தேர்தலில் நிற்கிறார்கள், எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்பவற்றை எல்லாம் கருத்தில் எடுப்பதற்கு அவசியம் இல்லாமலே இருந்தது. ஏனென்றால், அது பலமான தரப்பாகவும் அதற்கு ஒத்ததும் சமமானதுமான போட்டிச் சக்திகள் காணப்படவில்லை.

ஆனால், இன்றைய சூழல் அவ்வாறாக இல்லை. இன்றும் கூட்டமைப்பே செல்வாக்கான கட்சியாக இருந்தாலும், முன்னரைப்போல வாக்குகளை ஏகபோகமாக வாரியள்ளி, ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சியாகவோ, தமிழ்த் தேசியத்தின் ஏகபோக குரலாகவோ அது இல்லை. மேலும், அத்தகைய சமமான போட்டியில்லாத கட்சியென்ற ஒன்றே, இந்தத் தேர்தலில் இல்லை எனலாம்.

தமிழ்த் தேசிய கட்சிகளைப் பொறுத்த வரையில், பிரதானமாக முத்தரப்புப் போட்டியொன்று, குறிப்பாக வடக்கில் காணப்படுகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற மூன்று தரப்புகளும் போட்டியிடுகின்றன. வழமையாகத் தனது வாக்குவங்கியை ஏகபோகமாக வைத்திருக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கூட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுபவர்களிடமிருந்து, கணிசமான போட்டி உருவாகியிருக்கிறது.

கடந்த சில நாடாளுமன்றத் தேர்தல்களில், ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சிக்கும், இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியுடனான சவால் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, இம்முறை தத்தமது செல்வாக்குக் கொத்துகளில் கூட, ஒத்ததும் சமமானதுமான போட்டியை, மரபு ரீதியாகச் செல்வாக்கு மிக்க கட்சிகள் கூடச் சந்தித்து நிற்கின்றன.

அடுத்ததாக, தமது தெரிவுகள் பற்றி நிபுணத்துவம், புலமைத் தேர்ச்சியுடன் அணுகுபவர்களுக்கு, அதிக தெரிவுகளால் தெரிவுச் சுமை ஏற்படாது. ஆனால், வாக்காளர்களில் இவர்கள் மிகச் சொற்பப் பங்கினரேயாவர். வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்கள், எந்தக் கட்சியையும் சாராதவர்களாகவும் பெரும் முற்சார்புகள் இல்லாதவர்களாகவும் அதேவேளை, அரசியல் பற்றியும் தமது அபிலாசைகள் பற்றியும் அடிப்படைப் புரிந்துணர்வு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

“பெரும்பாலான வாக்காளர்கள், அரசியல் புரிதல் இல்லாதவர்கள்” என்று சிலர் கூறக்கூடும். இது தவறானதும், அடிப்படை அற்றதுமான புரிதலாகும். குறிப்பாக, வடக்கு, கிழக்கு தமிழ் வாக்காளர்களுக்கு, தமது அரசியல் பற்றியும் அரசியல் அபிலாசைகள் பற்றியும் மிகுந்த பிரக்ஞையுண்டு. அவர்கள், அரசியல் நிபுணத்துவம் அற்றவர்களாக இருக்கலாம்; ஆனால், தமது அரசியல் பற்றிய பிரக்ஞையும் புரிதலும் உள்ள மக்களாக​வே காணப்படுகின்றார்கள்.

மிக நீண்ட காலமாக, இந்த வாக்காளர்களின் வாக்குகள், ஒரு மய்யத்தில் குவிந்திருந்தன. இதற்குத் தமிழ்த் தேசிய அரசியல், ஒரு மய்யப் புள்ளியில் குவிந்திருந்ததும் முக்கியக் காரணமாகும்.

ஆனால், இந்த வாக்குகள் ஒரு கட்சிக்குரிய வாக்குகள் அல்ல. யதார்த்தத்தில், இதில் பெரும்பான்மையான வாக்குகள் ‘ஊசலாடும் வாக்கு’களாகும். இவை, ‘ஊசலாடும் வாக்குகள்’ என்பதை, கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் கடைசியாக நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலிலும் மாற்றுக் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்கு சதவீதத்தின் அதிகரிப்புச் சுட்டிக்காட்டி நிற்கின்றது.

இந்த இடத்தில், ஒரு முக்கிய புரிதல் அவசியமாகிறது. இங்கு பெரும்பான்மையான ‘ஊசலாடும் வாக்குகள்’ தமிழ்த் தேசிய அரசியலைத் தாண்டி ஊசலாடுவதில்லை. அதனால்தான், தமிழ்த் தேசிய அரசியல் ஒரு புள்ளியில் குவிந்திருந்தபோது, இவை நிரந்தரத் தன்மையுடன் அந்தப் புள்ளிக்கான வாக்குகளாக இருந்தன.

ஆனால், இன்று தமிழ்த் தேசிய அரசியலினுள்ள ஒத்ததும் சமமானதுமான மாற்றுத் தெரிவுகள் உருவாகி இருக்கிற பொழுது, இந்த வாக்குகள், ‘ஊசலாடும் வாக்கு’களாகவே கருதப்பட வேண்டியவை ஆகின்றன. ஆகவே, இன்று இந்தத் தமிழ்த் தேசிய வாக்கு வங்கி, பெரும் தெரிவுச் சுமையைச் சந்தித்து நிற்கிறது.

இங்கு, தமிழ்த் தேசிய கட்சிகள், தமது கொள்கையாக முன்வைப்பவற்றில் பெரும் வித்தியாசங்களைக் கண்டுபிடித்துவிடுவது கடினம். தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம், அதன் பாலான சுயாட்சி என்ற அடிப்படை அபிலாசைகளை எந்தத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சியும் மறுக்கவில்லை. அவை தத்தமது நடவடிக்கையில், யதார்த்தத்தில் எப்படி நடந்துகொண்டாலும், பதிவுகளில், தமிழ்த் தேசியத்தின் அபிலாசைகளையே முன்னிறுத்துகின்றன.

ஆகவேதான், கட்சி, தனிநபர் சாரா பெரும்பான்மைத் தமிழ்த் தேசிய வாக்குவங்கிக்கு இது, இன்று ஒரு ‘தெரிவுச் சுமை’யாக மாறியிருக்கிறது. இன்று பிரிந்து நிற்கும் இந்தத் தரப்புகள், இதே மக்கள் ஆதரித்த அந்த ஒற்றைப் புள்ளியில் குவிந்திருந்த தரப்புகள்தான்.

அப்படியானால், யாரைத்தான் தெரிவு செய்வது?

அதிகரித்த தெரிவுகளால் எழும் தெரிவுச் சுமை குறித்து, சுவாரசியமானதொரு கருத்தை, உளவியல் ஆய்வாளர் இவான் போள்மன் சுட்டிக்காட்டுகிறார். அவரது கருத்தின்படி, ஒருவர் தனக்காக முடிவெடுக்கும் போதும், பிறருக்காக முடிவெடுக்கும் போதும் வேறுபட்ட உளவியல் அடிப்படைகள் காணப்படுகின்றன என்று குறிப்பிடுகிறார். இதன்படி, தனிநபர்கள் மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் நிலையில், அதிகரித்த தெரிவுகள், ‘தெரிவுச் சுமை’யை ஏற்படுத்துவதில்லை என்கிறார்.

எது எவ்வாறாயினும், எந்தவொரு விடயத்தையும் உணர்வெழுச்சி, பழக்கதோஷம், முற்சார்புகள் என்பவற்றைத் தாண்டி, பகுத்தறிந்து சிந்திப்பதன் மூலம், அந்த விடயம் தொடர்பான தௌிவானதொரு பார்வை கிடைக்கும்.

ஒத்ததும் சமமானதுமான தெரிவுகள் நிறைந்துள்ள இந்தச் சூழலில், ஒவ்வொரு வாக்காளரும் உணர்வெழுச்சி காரணமாகவோ, பழக்கதோஷம், முற்சார்பு காரணமாகவோ ஒரு தெரிவை மேற்கொள்வதை விட, காரணகாரியங்களைப் பகுத்தறிந்ததொரு தெரிவை மேற்கொள்வதே சாலச்சிறந்ததாகும். நீங்கள், இன்னொருவருக்குத் தெரிவொன்றைப் பரிந்துரைக்கப்போகிறீர்கள் என்ற மனநிலையில், இதனை அணுகும்போது, ஒருவித புறஉண்மை நிலையிலிருந்து விடயங்களை அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். அதன்போது, உணர்வெழுச்சி, பழக்கதோஷம், முற்சார்புகள் ஆகியவற்றுக்குப் பின்னால் மறைந்துள்ளவற்றைக் காணும் வாய்ப்புக் கிடைக்கும் போது, பகுத்தறிந்ததொரு முடிவு கிடைக்கும். அது, தெரிவுச் சுமைக்கான பொருத்தமான தீர்வாக அமையும்.

ஒரு வாக்குக்காக, இத்தனை அக்கப்போரா என்று நீங்கள் கேட்பீர்களேயானால், நீங்கள் உண்ணும் அரிசியிலிருந்து, சுவாசிக்கும் காற்றிலிருந்து, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் ஆதிக்கம் செலுத்துவது, ‘அரசியல் அதிகாரம்’ ஆகும். இந்த அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் அடிப்படை அலகு, உங்கள் வாக்கு என்பதை மறந்துவிடாதீர்கள்.

சிந்தித்துச் செயற்படுவீர்!