தமிழ் கைதிகள்: புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம்

“தமிழ் அரசியற் கைதிகளை அரசாங்கம் விடுவிப்பதற்குச் சிந்திக்க வேண்டும்”என்று கேட்டிருக்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ. “வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 10 – 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். இந்தக் கைதிகள் தங்களுக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலோ நீண்டகாலமாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் மீதான வழக்குகளை விரைவாக்குவதற்கும் விசாரணைகளை எடுத்துக் கொள்வதற்கும் ஒரு பொறிமுறையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்” என்று கேட்டிருக்கிறார் நாமல்.

இதைப்பற்றி அவர் மேலும் சொல்லியிருக்கும் விசயங்கள் நம்முடைய கவனத்திற்குரியவை. அரசியற் காரணங்களுக்காகத் தான் சிறையில் இருந்தபோது பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதாகிச் சிறை வைக்கப்பட்டிருந்தவர்களைச் சந்தித்த அனுபவங்களை விவரித்த நாமல் மேலும் சொன்னது, “புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் பலர் சிறைகளில் உள்ளனர். ஆனால் தமது முந்திய ஆட்சிக்காலத்தில் அவர்களில் 12,500 பேர் வரையில் விடுதலை செய்யப்பட்டுச் சமூக வாழ்வில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் 3500 பேர் தற்போது சிவில் பாதுகாப்புப் பிரிவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

சிறைகளில் உள்ளோரில் வழக்கு விசாரணைகளின் பின்னர் 35 பேரே தண்டனை பெற்றவர்கள். இவர்கள் பெற்ற தண்டனைக்கும் அதிகமாக “தண்டனை கிடைக்கும் முன்னர்” சிறையில் கழித்து விட்டனர். சிலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளனர். எந்த வழக்குமே தொடரப்படாத நிலையில் 13 பேர் உள்ளனர். வழக்கு விசாரணை நிறைவு பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் 116 பேர் உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்பட வேண்டும். அல்லது விடுவிக்கப்பட வேண்டும். அல்லது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தைக் கவனத்திற் கொண்டு நீதி வழங்க வேண்டும். இது ஒரு மன உளைச்சலை உண்டாக்குகின்ற விடயம். ஆகவே சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்பதாகும்.

இந்த உண்மை அல்லது இந்த விசயம் இப்போதுதான் நாமலுக்கோ அவருடைய அரசாங்கத்துக்கோ தெரிந்ததா? என்று யாரும் அதிரடிக் கேள்வியை கோபத்தோடு எழுப்பலாம். அதில் நியாயமும் இருக்கலாம். ஆனால், இப்போதாவது இதைப்பற்றி உரிய தரப்பினர் பேசியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வதே பொருத்தமானது. ஏனென்றால் இந்த அரசாங்கத்தில் முக்கியமான ஒருவர் நாமல். குறிப்பாக அதிகாரத்தில் உள்ள ராஜபக்ஸ குடும்பத்தின் முக்கியமான நபர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்.

நாமலின் இந்த நிலைப்பாட்டை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சரத் பொன்சேகா உட்படப் பலரும் வரவேற்றுள்ளனர். அதாவது எதிர்த்தரப்புகள் ஒருமித்து வரவேற்றுள்ளன எனலாம்.

இதேவேளை, இந்தக் கைதிகளில் ஒரு தொகுதியினர் பொசன் முழுமதி தினத்தில் (24.06.2021) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மரணதண்டனை விதிக்கப்பட்ட –சர்ச்சைக்குரிய துமிந்த சில்வாவாகும். துமிந்த சில்வாவின் விடுதலையை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட வெளித்தரப்புகளும் இதையிட்டுக் கவலை வெளியிட்டுள்ளன.

ஏனைய 16 பேரும் தமிழ் அரசியற் கைதிகள். ஆனால் இந்தத் தமிழ் அரசியற் கைதிகளுக்கான தண்டனைக் காலம் சட்டபூர்வமாக முடிவுறும் தறுவாயில் இருக்கும்போது இந்த விடுதலை ஏன் வழங்கப்பட்டது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. பொது மன்னிப்பு வழங்கப்படுவது எனில் ஆயுள் தண்டனை அல்லது பெருந்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அதை வழங்கியிருக்கலாம் என்பது பலருடைய அபிப்பிராயம்.

ஆக மொத்தத்தில் துமிந்த சில்வாவின் விடுதலையை சிங்களக் கட்சிகளும் சர்வதேச சமூகமும் கண்டித்துள்ளன. தமிழ்க் கைதிகளின் விடுதலையை அனைத்துத் தரப்பும் வரவேற்றுள்ளது.

ஆகவே, அரசியற் கைதிகளுக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றே தெரிகிறது. இதில் யாருக்கு அதிர்ஸ்டம்? யாருக்கு அதிர்ஸ்டத் தேவதை காலை வாருகிறாள் என்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலை கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியற் கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் அரசாங்கம் சில நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மக்களுக்கும் இதனால் நன்மைகள் உண்டு.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு நல்லெண்ண சமிக்ஞையை தமிழ்த் தரப்புக்குக் காண்பிப்பதாக அமையும். இனப்பிரச்சினைக்கான தீர்வைக்குறித்துப் பேசுவதற்கும் இது ஒரு தூண்டலையும் நம்பிக்கையையும் அளிக்கும். கூடவே நீண்டகாலமாகத் துயரத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் கைதிகளின் உறவினர்களுக்கும் இவர்களையிட்ட கவலைகளைக் கொண்டிருக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் ஒரு ஆறுதலை அரசாங்கம் வழங்குவதாக இருக்கும். அத்துடன் நீண்டகாலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விவகாரம் முடிவுக்கும் வந்து விடும். அரசின் மீதான தமிழ் மக்களின் கசப்பையும் இது குறைக்கும்.

சனங்களைப் பொறுத்தவரையில் மீண்டும் தங்கள் உறவுகளோடு இணைந்து பொதுவாழ்வில் ஈடுபடக் கூடியதாக இருக்கும்.

ஆகவே இரண்டு பக்கத்திலும் பரஸ்பரம் நன்மையளிக்கும் ஒரு விசயம் இது. அதிலும் அரசாங்கத்துக்கே அனுகூலங்கள் அதிகமுண்டு.

ஆனால் இதை எந்தளவு தூரத்துக்கு தமிழ் அரசியலாளர்கள் விசுவாசமாக விரும்புவர் என்று ஒரு கேள்வியும் உண்டு. ஏனென்றால் அவர்கள் விவகாரமாக்கிக் கொண்டிருக்கும் விடயமொன்றுக்குத் தீர்வு கிட்டிவிட்டால் பின்னர் எதை வைத்துப் பேசுவது என்ற நிலை ஏற்படுமல்லவா!

இதனால்தான் எதிர்த்தரப்புகளின் வரவேற்பை – ஆதரவைப் பெறுவதற்காகத்தான் நாமல் இப்படிச் சொன்னாரா? அதாவது அரசாங்கம் இப்படி ஒரு உத்தியைப் பயன்படுத்துகிறதா? எனச் சிலர் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இவர்கள் எதிலும் நிறைவைக் காணவே முடியாதவர்கள். மாற்றமேதும் நிகழ்வதை விரும்பாதவர்கள்.

ஆனால், இந்த மாதிரிச் சிக்கலான விடயங்களுக்குத் தீர்வு காண முற்படும்போது வழமையாக எதிர்த்தரப்புகள் அதை எதிர்ப்பதுண்டு. இப்போது அதற்கான வாய்ப்பில்லாமல் போயுள்ளது. அப்படியென்றால் அரசாங்கம் இனி இந்த விடயத்தில் பின்னிற்க முடியாது. சாட்டுப் போக்குகள் சொல்ல முடியாது. ஒன்று அரசாங்கம் அரசியற் கைதிகளை உண்மையாகவே விடுவிக்க விரும்பினால் அதற்கான தடைகள் குறைவு. அதனுடைய நோக்கம் நிறைவேறும். அல்லது இதை ஒரு பொறியாக கையாள முற்பட்டிருந்தால் –அதாவது தான் சுத்தமாக – அக்கறையாக கைதிகள் விடயத்தில் இருக்கிறேன், எதிர்த்தரப்புகள்தான் தவறாக நிற்கிறார்கள் என்று யோசித்திருந்தால் அதற்கு ஆப்படிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறியில் அரசாங்கமே சிக்கியுள்ளது.

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

இதேவேளை நாமல் தொடக்கி வைத்த விடயத்தில் சரத் பொன்பேசா சொன்ன விடயங்களும் குறிப்பிடத்தக்கன. “2006ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி இராணுவத்தலைமையகத்தின் முன்னால் என் மீது தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலே 12 கொல்லப்பட்டனர். 27 பேர் காயமடைந்தனர். நானும் காயப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டேன். பின்னர் நான் அரசியற் காரணங்களுக்காகச் சிறையில் இருந்தபோது இந்தத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சந்திக்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் மீதான வழக்கும் தொடர்ந்து நடக்கிறது. அதில் ஒருவர் மொறிஸ் என்பவர். அவருடன் உரையாடியுள்ளேன். வழக்கிலும் சாட்சியமளித்துள்ளேன். ஆனால் அவர்கள் மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்” என்று கூறியிருக்கிறார் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா.

ஆக மொத்தத்தில் எல்லாத் தரப்பிலிருந்தும் ஒரு நல்ல சமிக்கை இந்த அரசியற் கைதிகளின் விடுதலை விடயத்தில் தெரிகிறது. இது இழுத்தடிக்கப்படாமல், மேலும் அரசியற் சூழ்ச்சிகளுக்குள் சிக்குண்டு போகமுன்பு தீர்க்கப்பட வேண்டும். ஆகவே இதையிட்டு அதிகம் கவனமாக இருந்து இந்த விடயத்தைக் கையாள வேண்டிய பொறுப்பு அதிகமாகத் தமிழ்த்தரப்பினருக்குண்டு.

தற்போது அரசாங்கத்துக்கு ஒரு சிறிய வெளி அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை முன்னேற்றம் எதையும் காட்டவில்லை என்ற ஐ.நா மனித உரிமைகள் தரப்பின் அறிக்கையும் அமெரிக்காவின் கண்டனங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை பற்றிய அறிவிப்பும்தான் இந்த மாதிரி அரசியற் கைதிகள் விடயத்தைக் குறித்து அரசாங்கத்தைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கை உண்மையாகவும் இருக்கலாம்.

ஆனால், இலங்கை அரசாங்கத்துக்கு இதைப்போன்ற நெருக்கடிகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கின்றன. இனியும் தொடரத்தான் போகின்றன. அவற்றை அரசாங்கம் எதிர்கொள்ளத்தான் போகிறது. ஆகவே இந்த மாதிரிச் சிறிய காரணங்களை பெரிதாக்கி அரசாங்கம் பொறிக்குள் சிக்கியிருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்கான துருப்புக் கயிறு இது அது என்றெல்லாம் வீரப்பிரதாபங்களைக் கதைத்துக் காரியத்தைப் பழுதாக்காமல் மிக அவதானமாக இருந்து கைதிகளை விடுவிப்பதே இப்போது அவசியமாகும்.

இதை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்துக்கும் எமக்கும் இது ஒரு நீடித்த பிரச்சினையாக – தீர்வை எட்டக் கடினமான விவகாரமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதே நல்லது. கிடைக்கின்ற இது போன்ற அரிய வாய்ப்புகளை தமிழர்கள் சொதப்பிப் பாழாக்குவதே நடப்பதுண்டு. இந்தத் தடவையாவது அந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் அரசியற் கைதிகளுக்கு தமிழ்த்தரப்பே இழைக்கின்ற துரோகமாக இது அமையும். அரசாங்கமும் இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர விரும்பியிருக்கலாம்.

எனவே இந்தக் கோணத்தில் அரசாங்கம் சிந்தித்திருக்கவும் கூடும். இதை அரசாங்கம் ஆழமாக உணர்ந்துள்ளது என்பதை நாமலின் புள்ளிவிவரங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான உரை எடுத்துக்காட்டுகிறது. எதிர்த்தரப்புகள் கூட இணங்கிக் கொள்ள வேண்டும் என்றவாறாக அவர் தன்னுடைய உரையை வடிவமைத்திருக்கிறார். இதனால்தான் நாமலையும் விட வயதில் மூத்தவரும் தாக்குதல் ஒன்றை நேரடியாகவே சந்தித்து அதிலிருந்து மீண்டவருமான சரத் பொன்சேகா கூட மறுப்புச் சொல்லாமல் இதை ஏற்றிருக்கிறார். ஆகவே சிங்களத் தரப்பில் ஏட்டிக்குப் போட்டியாக இதை மறுக்கும் நிலைமை குறைவாகவே உள்ளதாகத் தெரிகிறது.

காலம் செல்லுமாக இருந்தால் முந்திய அரசாங்கம் (ரணில் – மைத்திரி ஆட்சி) இந்தக் கைதிகளை விட்டிருக்கலாம்தானே. அப்போது என்ன செய்தீர்கள்? என்றவாறான கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு மேலும் சிக்கலான நிலைமை தோற்றுவிக்கப்படக் கூடும். இதைப்போல தமிழ் அரசியற் தரப்பிலும் நாம்தான் முதலில் இதைப்பற்றிச் சிந்தித்தோம். நாமே அரசாங்கத்தோடு இதைப்பற்றி கதைத்தோம். இப்படி அரசாங்கம் சிந்திப்பதற்கான சூழலை உருவாக்கினோம் என்ற அரசியல் ஆதாயப் போட்டிகள் கிளம்பி எல்லாவற்றையும் பாழாக்கி விடவும் கூடும். இதற்கான ஒரு அடையாளத்தை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று தெளிவாகக் காட்டியுள்ளது.

கைதிகளின் விடயத்தைத் தொடக்கி விரிவாக உரையாற்றிய செய்தியை இரண்டாம் நிலைக்குத் தள்ளிய அந்தப் பத்திரிகை சுமந்திரனின் ஆதரவு உரைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மட்டுமல்ல, இதற்கு முன்பே இந்த விடயம் அரசாங்கத்தரப்போடு உத்தியோக பூர்வமற்ற முறையில் பேசப்பட்டுள்ளதாகவும் அந்தப்பத்திரிகை நிரூபிக்க முற்பட்டிருக்கிறது. அதனுடைய செய்திகளின் நம்பகத்தன்மையை இங்கே நாம் கேள்விக்குட்படுத்தவில்லை. அது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் இப்படிச் சொல்ல முற்படுவதன் மூலம் இது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒரு இரசிய உடன்படிக்கையின் விளைவு என்ற தோற்றப்பாட்டை சிங்களக் கடும் தேசியாதத் தரப்புகளிடம் உருவாக்கி விடக் கூடும். ஆகவே அரசியற் கைதிகளின் நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்த மாதிரி விடயங்களைக் கொஞ்சம் அடக்கி, பொறுதியுடன் வாசிப்பதே நல்லது.

மேலும் பாராளுமன்றத்தில் இந்த விடயம் பேசப்பட்ட கையோடு இதை வெளிப்படுத்திய தமிழ் ஊடகங்களிலேயே இந்த அரசியற் போட்டிக்கான வேறுபடுத்தல்களை இனங்காணக்கூடியதாக இருந்தது. உண்மையில் அப்படிச் சில அரசியற் தரப்பினர் அல்லது சில அரசியலாளர்கள் இதைக்குறித்து பேசியிருக்கலாம். முயற்சித்திருக்கலாம். அதற்காக அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால், அது ஒரு அரசியற் போட்டிக்கான விதையாக மாறி வாய்ப்புகளை இழக்க வைக்கக் கூடாது. வேண்டுமாக இருந்தால் கைதிகளின் விடுதலை சாத்தியமாகிய பின்னர் இதன் பின்னால் நடந்த உண்மைகளை –நடவடிக்கைகளை – அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை – அவர்களுடைய உழைப்பையும் நல்லெண்ணத்தையும் பின்னர் பகிரங்கப்படுத்தலாம். அதுவே சிறப்பு.

ஆகவே வெண்ணெய் திரண்டு வரும் தாழியை தயவு செய்து யாரும் உடைத்து விடாதீர்கள். இது கண்ணீரோடும் கவலைகளோடும் உள்ளே கைதிகளும் வெளியே அவர்களுடைய உறவுகளும் அந்தரித்துக் கொண்டிருக்கும் உத்தரித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை வென்றெடுக்க வேண்டிய தருணம். மீட்டெடுக்க வேண்டிய விசயம்.

இங்கே இன்னொரு விசயத்தையும் சொல்ல வேண்டும். ஒரு படிப்பினையின் விளைவாகச் சில விடயங்களைச் சிங்களத் தரப்பு செய்ய முயற்சித்திருக்கிறது. காலம் பிந்தினாலும் அவர்களிடம் அப்படியொரு மாற்றத்துக்கான சூழல் இருந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

இரு வேறு சந்தர்ப்பங்களில் அரசியற் கைதிகளாக நாமலும் சரத் பொன்சேகாவும் சிறையிருக்க நேர்ந்தபோதே அங்கே இருக்கின்ற தமிழ் அரசியற் கைதிகளைப் பற்றியும் அவர்களுடைய நிலைமையைப் பற்றியும் அறியக் கூடியதாக இருந்திருக்கிறது. அதுவே இப்போது இந்தக் கைதிகளுக்குப் பயனளிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. அதிலும் தன்னைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலோடு தொடர்பு பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டவரையே மன்னித்து விடுவித்து விடலாம் என்றிருக்கிறார் சரத் பொன்சேகா. இதைப்போல முன்பு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தன் மீதான தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தவரை மன்னித்து விடுவித்து விடலாம் என்றார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தன்மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்களை தான் மன்னித்து விட்டேன். இனிச் சட்டம் அவர்களை மன்னிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதெல்லாம் ஒரு புதிய சூழலை நோக்கி நாம் செல்லக் கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதையே உணர்த்துகின்றன. இதைப் புரிந்து கொள்வது அவசியம். அப்படிப் புரிந்து கொண்டால் ஏராளம் மாற்றங்களை நாம் காண முடியும். பல மாற்றங்களை நாமே நிகழ்த்த முடியும்.

அரசியற் கைதிகளுக்குப் பொது மன்னிப்பளிப்பது ஒன்று. அதைப்போல மேலும் சில விடயங்களுக்கும் நீதி பரிகாரம் காண வேண்டும். அதையும் செய்யலாம். ஒன்றுமே கடினமானதில்லை. உதாரணமாக யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் 1981இல் எரிக்கப்பட்டது. இதற்கு அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் பின்னணியில் இருந்தது எனப் பகிரங்கமாகவே குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இதை 1994 இல் பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்கவும் அவருடைய அரசாங்கமும் மாற்றியமைத்தது. எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு மன்னிப்புக் கோருவதுடன், அந்த நூலகத்தை மீள் புனரமைப்புச் செய்வதற்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செங்கல்லும் 10 ரூபாய் பணமும் பெறப்பட்டது. அப்படிச் சேகரித்தவற்றைக் கொண்டு நூலகத்தைப் புனரமைத்து அதை மீள் நிலைக்குக் கொண்டு வந்தனர். இது ஒரு முன்மாதிரியான செயற்பாடு.

ஆனால் இதைக் கடந்து செல்ல முடியாமல் தொடர்ந்தும் தமிழ்த்தரப்பு இந்த நூலக எரிப்பை இன்னும் திரும்பத்திரும்பச் சொல்லிச் சொல்லி எரியூட்டிக் கொண்டேயிருக்கிறது. இப்படிச் செய்தால் மன்னிப்பு என்பதன் பொருள் என்னவாகும்? அடுத்த கட்ட முன்னேற்றம் எப்படி நிகழும்? எதைச் செய்தாலும் அதைப் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் எதிர்த்துக் கொண்டிருப்பவர்களுடன் எதைப் பேச முடியும்? எதைச் செய்ய முடியும்? என்ற எண்ணமே எதிர்த்தரப்பிடம் உருவாகும்.

ஆகவே இதைக் குறித்து தமிழ்த்தரப்பினர் மிகக் கவனமாகப் பொறுப்புணர்வோடு நடக்க வேண்டும்.

ஏனென்றால் இலங்கையின் இனமுரண்பாடும் அது உண்டாக்கியிருக்கும் மனநிலையும் அதனால் உண்டாகியிருக்கும் சிக்கல்களும் சாதாரணமானவை அல்ல. ஒரு நீண்ட போரை பேரிழப்புகளுடன் நடத்தும் அளவுக்கு வலுவானவை. ஆகவே இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டே சமாதானத்திற்கான வேலைகளை நாம் செய்ய வே்ண்டும். கிடைக்கின்ற நல்லெண்ணச் சமிக்ஞைகளை மேலும் துலக்கமாக்க வேண்டுமே தவிர, அவற்றின் மேல் மலத்தை அள்ளிக் கொட்டி இருளாக்கி விடக் கூடாது. அப்படிச் செய்தால் அந்த நாற்றத்துக்குள்ளும் இருளுக்குள்ளும்தான் இருக்க வேண்டியிருக்கும்.

இப்பொழுது விடுவிக்கப்பட்ட அரசியற் கைதிகளை வரவேற்பதோடு இதற்கு அரசாங்கத்தைப் பாராட்டி, மேலும் சிறையில் உள்ள அரசியற் கைதிகளை விடுவிக்க முயற்சிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து காணாமலாக்கப்பட்டோருக்கான விவகாரத்துக்கும் ஒரு சரியான –தெளிவான – யதார்த்தமான தீர்வுக்கு நகரலாம். எதையும் செய்ய முடியாது என்றில்லை. அதற்கு நாம் நம்மை உரிய முறையில் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்த்தரப்பு தன்னை முதலில் பலவற்றுக்கும் ஏற்ற மாதிரித் தகவமைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வாயை அதிகமாகப் பயன்படுத்தும் மரபை விட்டுத் தொலைத்து விட்டு மூளையைப் பயன்படுத்தும் பழக்கத்துக்கும் பாரம்பரியத்துக்கும் வரவேண்டும்.

இந்த உலகம் மூளையால்தான் இயக்கங்கொள்கிறது. அதனால்தான் புத்திமான் பலவான் என்று சொல்கிறார்கள்.

தமிழர்கள் தங்களுடைய மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்க வேண்டிய காலச் சூழல் இது.