தோழர் றொபேட் த.சுபத்திரன் அவர்களின் 22 ஆவது நினைவு தினம்

தலையங்கம் தவிர்ந்த விடயங்கள் அவரது கையெழுத்தில் உள்ளன. வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடா..யாழ் மாநகராட்சியின் முதல்வராக இருந்து பாராளுமன்ற உறுப்பினராகியிருக்கும் இந்த விழாவின் நாயகனை வரவேற்பதற்காகவும் பாராட்டுவதற்காகவும் இங்கு கூடியிருக்கிறோம்.

அவரை பாராட்டுவதற்கு இன்று பல்வேறு கட்சியிலும் இருந்து உறுப்பினர்கள் இங்கு கூடியிருக்கிறார்கள்.

98 தையில் நடந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் கைப்பற்றப்பட்ட இந்த மாநகராட்சி பெயருக்கேற்றாற்போல் ஜனநாயக நிறுவனமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது.

சரோஜினி அம்மையாரின் காலத்திலிருந்து மேயர் சிவபாலன் அவர்களின் காலத்திலும் திரு. ரவிராஜ் அவர்களின் காலம் வரை ஏனைய மாநகர சபை உறுப்பினர்களையும் கௌரவித்து, மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளித்து இன்று இறுதிக் கட்டம் வரை அது வந்திருக்கிறது.

முன்னைய இரு முதல்வர்களுக்கும் நாங்கள் பாராட்டு விழா நடத்த முடியவில்லை. இறுதிக் கிரியைகள் தான் நடத்த முடிந்தது. காலமும் கருத்தும் அன்று அவ்வாறுதான் இருந்தது. அதிஷ்டவசமாக இன்று நிலமை மாறியுள்ளது. உறுப்பினர்களை பொறுத்தவரை அவர்களது மரணவீடுகள் எங்களுடைய மரணவீடுகளாகவே உணரப்பட்டது. மாநகர சபையும் எங்கள் சபையாகவே கருதப்பட்டது.

ஏனென்றால் மாற்றுக்கட்சி உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட கௌரவமே காரணமாகும். நானும் திரு. ரவிராஜ் அவர்களும் ஒரே ஊரவர்களாக இருந்தாலும் பேசிப் பழகியது இந்த சபை உறுப்பினராக வந்த பின்புதான்.

திரு. சிவபாலன் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்திற்கெதிராக நான் மாற்றுக்கருத்து வைத்த போது “எங்களுக்குள் உடன்பாட்டுடன் தான் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். அத் தீர்மானத்தை கைவிட வேண்டும்” என கூறியவர் திரு. ரவிராஜ் அவர்கள்.

அப்போதே அவரின் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தன்மை வெளிப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அந்த நிலைமை இங்கு பேணப்பட்டிருக்கிறது. குடாநாட்டில் இருந்த உள்ளுராட்சி சபைகளிலேயே இது ஜனநாயகம் மிக்கதாக இருந்தது என்பது எனது கருத்து.

எல்லா உறுப்பினர்களின் வேலைத்திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டது. அவர்களுடைய உறுப்பினர்களும் சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான ஜனநாயக செயற்பாடுகளை கொண்டிருந்ததனால் தான் இச்சபையின் நோக்கங்களில் இது வெற்றிகண்டிருக்கிறது. இந்தச் சபைகளை தங்கள் சுயநலத்துக்காக இயங்குகின்றன என்பது போல் கருத்துத் தெரிவித்த பத்திரிகைகள் கூட இன்று வாய்மூடி நிற்கின்றன.

இந்த சபையை பார்த்த ஒரு பத்திரிகையாளர் ஒரு குட்டி பாராளுமன்றமாக இது இருந்ததாக கூறியிருந்தார். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்கள் தனித்துவங்களை விட்டுவிடாமல் கூட்டாக மாநகராட்சி விடயங்களில் செயற்பட்டிருக்கிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை காண நாம் பழகிக்கொள்ள வேண்டும். வேறுபட்ட நிலைப்பாடுகள் எங்களுக்குள் இருந்த போதும் அவற்றுக்கு மதிப்புக் கொடுத்து இந்தச் சபை ஒரு ஜனநாயக நிறுவனமாக செயற்பட காரணமாயிருந்த முன்னாள் முதல்வருக்கு வாழ்த்துக்ளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.