நன்றியுடன் விடை கொடுப்போம்…. மன உறுதியுடன் முன்னேறுவோம்……

2021 ம் ஆண்டு உலகிற்கு பொதுவான கோவிட்(Covid 19) என்ற பெருந்தொற்றை எதிர் கொண்டது என்று எல்லோருக்கும் பொதுவாக கடந்து சென்றிருக்கின்றது.

இதற்கான தடுப்பூசியை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து அதனை மக்களிடம் கொண்டு சேர்த்த பெரிய அறிவியலும் நடைபெற்றிருக்கின்றது.

அதே வேளை கோவிட் வைரஸ் உம் தனக்கான தன்மைகளை மாற்றி மாற்றி உருமாறி தனது வேறு வேறு விதமான தாக்கங்ளை செய்த வண்ணமே உள்ளது. இதற்கான நிரந்தரத் தீர்வு என்பதற்குள் மருத்துவ விஞ்ஞானம் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. அதே வேளை அது சோரவும் இல்லை.

ஆனாலும் இதுவரை இந்த பெரும் தொற்றை கட்டிற்குள் கொண்டு வருவதற்கான கண்டுபிடிப்புகளை வழமையை விட வேகமாக செய்து சில முன்னேற்றங்களை கண்டிருக்கின்றது விஞ்ஞானம்.

அந்த விஞ்ஞானிகளுக்கு…. மருத்துவர்களுக்கு தொழில் நுட்பவியலாளர்களுக்கு முதலில் பாராட்டு.

மனித குலத்திற்கு தேவையான பொதுவான இந்த விஞ்ஞானத்தை காசாக்கும் ஒரு பெரும் வியாபாரம்… மருத்து அரசியல் இதற்குள் இருந்தாலும் இதற்குள் இருந்த மருத்துவ அறிவியலை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பெரும் தொற்றாளர்களை காப்பாற்றுவதில் முன்னின்று செயற்பட்ட…. செயற்பட்டுக் கொண்டிருக்கும்….. மருத்துவத் துறையினருக்கு நன்றியும் வணக்கமும் செலுத்துகின்றோம்.

கூடவே இந்த உலகின் இயக்கத்தை, அசைவை நகர்த்திக் கொண்டு செல்வதற்கு உணவு உற்பத்தி, விநியோகம், சேவை என்று பலதுறையிலும் விடாப்பிடியாக ஒரு புறத்தில் பெரும் தொற்றில் இருந்து தம்மையும் காப்பாற்றி காத்துக் கொண்டு…

ஏனையவர்களுக்கும் அது பரவாமல் இருப்பதையும் ஓரளவிற்கு உறுதி செய்து கொணடு அர்பணிப்புடன் செயற்பட்ட அனைவரையும் நாம் வரவேற்று நன்றி தெரிவித்தும் கொள்கின்றோம்.

வளர்ச்சியடைந்த நாடுகள்…. வளர்சியடைந்து வரும் நாடுகள்…. வறுமையான நாடுகள்…. என்று எந்தப் பாகுபாடு இன்றியும் எல்லோருக்கும் பொதுவானதாக பணத்தை, பலத்தை மீறிய தாக்குதலாகத்தான் இந்தப் பெரும் தொற்றை நாம் பார்க்க முடியும்.

பணம் இருந்தால்… வசதி இருந்தால்…. பலம் இருந்தால்… இதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்லாம் என்பதை பொய்பித்தும் இருக்கின்றது இந்த பெருந்தொற்று. இது பற்றிய புள்ளி விபரங்கள் அதற்கு சான்று பகர்ந்து இருக்கின்றன.

மூன்றாவது தடுப்பூசி… ஊக்க ஊசியை நான் பெற்று விட்டேன் என்ற திருப்த்தி மகிழ்ச்சியை விட முதலாவது ஊசியைத்தானும் என்னால் பெற முடியவில்லை என்று ஏங்கும் கோடான கோடி கடைக் கோடி மக்களின் உணர்வலையும் அவலங்களுமே எனக்கு இங்கு முக்கியமாக படுகின்றது

உலகின் அதிக வளமுள்ள பலமுள்ள நாடான அமெரிக்கா அதிக தாக்கத்திற்கும், வளர்ச்சியடைந்து வரும் நாடு இந்திய இரண்டாம் நிலையிலும், ஏனைய பல வறுமையான நாடுகள் அதிக எண்ணிக்கை என்று பலதுமாக பெரும் தொற்று பணத்திற்கும் வசதிக்கும் பலத்திற்கும் அப்பால்பட்ட இன்னொறால் தீர்மானிக்கப்படுகின்றது என்பதையும் கட்டியம் காட்டி நிற்கின்றது.

இந்த பெரும் தொற்றின் மிகப் பெரிய தாக்கம் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சரிவு நிலையாகும். அது பல வறுமையான நாடுகளில்…. வளர்ச்சியடைந்து வரும் மூன்றாம் உலக நாடுகளில் பட்டினிச் சாவு வரைக்கும் என்று மக்களையும் தள்ளி இருக்கின்றது.

இங்கு ‘பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்…” என்பது போல் கட்டுப்பாடுகளை உடைத்து வீதியிற்குள் இறங்கி உணவை தேடும் அவலத்திற்குள் மனித குலம் செல்ல முற்பட்டு அதிக தொற்றுகளை வாங்கியதாக நிலமைகள் ஏற்பட்டு இருக்கின்றது.

இது விலங்கினங்களுக்கும் ஏற்பட்டுத்தான் இருக்கின்றது.

இந்த பெரும் தொற்றின் இதுவரையிலான அதி விசேட காவலானாக முகக் கவசத்தை நான் பார்கின்றேன். மருத்துவ உலகும் இதனையே அதிகம் வலியுறுத்தி வந்திருக்கின்றது. சுதந்திரக் காற்றை தடை செய்த சுகாதாரமாக இது செயற்பட்டிருக்கின்றது.

அது ஊக்க தடுப்பூசியாக(Booster Shot) மூன்றாவதை போட்ட பின்பும் வைரஸ் தொற்றுவதை தடுக்கும் முதன்மைக் காரணியாக இதனைப் பார்க்க வைத்துள்ளது.

இதற்கு துணை போவதாக கைகளை சுத்தமாக வைத்திருத்தல், தனி மனித இடைவெளி பேணுதல் என்பன அமைந்திருக்கின்றன.

மருத்துவமும், உணவும் உலகம் ழுழுவதற்கும் ஒரு பொது கட்டமைப்பினால் இந்த பெரும் தொற்றுக் காலத்தில் கையாண்டு பகிர்ந்திருந்தால் இந்த பெரும் தொற்று எண்ணிக்கையை மூன்றாம் அலை நான்காம் அலை என்றளவிற்குள் செல்லவிடாமல் தடுத்திருக்க முடியும்.

உலகம், பயணங்களால்… விமானப் பயணங்களால்… மணித்தியாலங்களுக்குள் இணைக்கும் அளவிற்கு சுருங்கி இருக்கின்றது.

உலகில் ஏலவே உருவான ஸ்பானிஸ் பூளு(Spanice Flu) எபோலா(Ebola) போலன்று இது உலகு முழுவதும் பரவி இருக்கின்றது. அதற்கு அன்றைய கால கட்டங்களில் உலகம் இவ்வளவு நெருக்கமாக கண நேரத்திற்குள் தொடர்பு ஏற்படுத்தும் பயணங்களைக் கொண்டிராததும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

இந்த கோவிட் சீனாவில் முதலில் அறியப்பட்டது. பின்பு அது உருமாறிய வடிவமாக இந்தியாவிலும் பின்பு இன்னொரு வீரிய உரு மாறியாக தென் ஆபிக்கா என்றிருந்தாலும் இந்த மணித்தியாலயத்திற்குள் கட்டுப்பட்ட உலக ஒழுங்கு சில மணித்தியாலயங்களுக்குள்…. நாட்களுக்குள் உலகின் எல்லா மூலைகளுக்கும் அது சென்றடையும் செயற்பாட்டை கொண்டிருக்கின்றது.

அதனால் இது நாளை இன்னொரு நாட்டில் புதிய உருமாறியாக உருவாகி அடையாளப்படுத்தப்படமாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எனவே முதலில் கண்டறிப்பட்ட நாடு உரு மாறிகளை உருவாக்கிய நாடு என்று நாடு, மக்கள் குழாத்திற்கு எதிரான வெறுப்பு மன நிலையிற்குள் எம்மை உள்படுத்திக் கொள்வது மனிதப் பண்பிற்கு சரியானது அல்ல.

எனவே இதனை தடுத்து நிறுத்துவதற்கான பொறி முறையும் பரவுதல் எங்கு ஆரம்பித்து எங்கெங்கும் பரவியதோ அதே பாதையில் எல்லா இடங்களுக்கும் சமச்சீரான தடுப்பூசி வழங்கல்… உணவுத் தேவையை பூர்த்தி செய்தல் என்ற பொதுப் பொறிமுறை மூலமே வெற்றிகரமாக நிறுத்த முடியும் என்பதை புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான அறிவோ, பொருளியல் மேதாவித்தனமோ தேவையாக இருக்கவிலை.

இந்த பொதுப் பொறி முறையைத்தான் உலக சுகாதரா நிறுவனமும் விலியுறுத்தி வருகின்றது.

மனித குலம் ஐக்கியமாக ஒரே குரலில் ஒற்றுமையாக வளங்களை வாய்ப்புகளை சமமாக பகிர்ந்து கொள்ளும் அந்த சமத்துவ மனநிலை கொள்கை உருவாக வேண்டும் என்பதை மாக்ஸ், ஏங்கல், லெனின் போன்ற சமூகவியல் மாமேதைகள் அன்று கூறி நின்றதை இந்த பெருதொற்று இன்று நிறுவி நிற்கின்றது.

மெஞ்ஞானம் இங்கு எதனையும் சாதிக்கவில்லை தடுத்து நிறுத்தவும் இல்லை. நம்பிக்கையுள்ளவர்களின் மன உறுதியை வலுப் பெற உதவிகள் செய்திருக்கலாம்..?

அறிவியலே இந்த மனித குலத்தை காத்து நிற்கின்றது மெஞ்ஞானத்தின் தளங்களும் அது போதக மடமாக இருக்கலாம் ஆலயங்களாக இருக்கலாம் அருள் பாலிப்பவராக இருக்கலாம் எதனையும் இந்த கோவிட் சட்டை செய்யவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும்(Albert Einstein), ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) உம் தமது அறிவியல் ஆராய்சியல் கூறி சென்றவையும் இதுதான்.

மனித குலத்திடம் ஏற்பட்டிருக்கும் நாம் உயிர் வாழ முடியும் மரணத்தில் இருந்து எம்மை காப்பாற்ற முடியும் பட்டினி கிடந்தாலும் முடிந்தளவிற்கு சுயமாக தேட முடியும் உணவை என்று சமுத்திரத்தில் கை பிடிக்க கட்டையின்றி நீச்சல் தெரியாத ஒருவரிடம் ஏற்படும் அதீத நம்பிக்கை, மன உறுதி மனித குலத்தை பார்த்து என்னை வியக்க வைத்த 2021 ம் ஆண்டின் மிகப் பெரிய நம்பிக்கையாக இருக்கின்றது அவ்வாறுதான் என் பார்வை இருக்கின்றது.

ஆட்சி மாற்றங்களும், பதவி ஏற்புகளும், நாடு பிடித்தல்களும், சூரியனை அண்மித்த விண்கலங்களும் என்று ஏதேது நடைபெற்றாலும் எல்லாவற்றையும் பின் தள்ளிய நிகழ்வாக இந்த பெருந்தொற்று எங்கள் குழந்தைகளின் கல்வி, பட்டம் பெறுதல், கல்விக் கூடங்களில் சமூகமாக அளவாளவுதல் பழகுதல், திருமணம் சந்திப்பு, காதல், அபிவிருத்தி என்று பலதையும் தோராயமாக இரண்டு வருடங்கள் பின் தள்ளி உள்ளது. இது புரிது கொள்ளப்பட வேண்டியது ஆகும்.

மக்கள் கட்டுப்பாடுடன் இருத்தல் என்ற ஒரு பொது ஒழுங்கு முறையிற்குள்ளும் வருதல், DNA, RNA என்ற அறிவியலை புரிந்து கொள்ளும் விஞ்ஞான அறிவியலுக்குள்ளும் வருதல் என்பன நடைபெற்றும் இருக்கின்றது.

அது RNA தனது உயிர்வாழ்தலுக்கான கலங்களை நுரையீரலில் தேடி அங்கு ஏற்படுதிய தாக்கம் என்பதில் இருந்து புதிய உரு மாற்றியாகிய ஓமைக்குரோன் தொண்டையுடன் தங்கி நிற்கும் உயிர் வாழத் தேவைiயான கலத்தை தேடுதல் என்பதில் இருந்து விடுபட்ட வைராசாக மாறி இருக்கின்றது என்ற அறிவியல் வரை மக்கள் பேசவும் தொடங்கிவிட்டனர்.

பல விமர்சனங்களுக்கு அப்பால் தமக்கான உணவை தாமே முடிந்தளவிறகு தேடல் என்ற சுயசார்பு பொருளாதார சிந்தனைக்குள் மக்களின் ஒரு சாரர் உள்ளாகி இருப்பதும் இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

இதில் போதியளவு பாய்ச்சல் ஏற்படவில்லையாகினும் இதற்கான விதைகள் விதைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கண்களும் கண்களும் சந்திக்காமல்… ஸ்பரிசம் ஏற்படாமல் காதலா, அன்பா, பாசமா, கலந்துரையாடலா, மேடைப் பேச்சா, திருமணமா, மரண வீட்டுச் சம்பவங்ளா…? என்று புதிய அறிவியலை இணையத்தினூடு பயன்படுத்தலை விமர்சனத்திற்குள் உள்ளாக்கிய நாம் அது தான் மேற்கூறிய பலதையும் ஓரளவிற்கு நடாத்துவதற்கு இந்த பெரும் தொற்றுக் காலத்தில் உதவியும் இருக்கின்றது.

இந்த அறிவியல் தேவை ஏற்படும் இடத்து பாவிக்கப்பட்டால் சந்திப்புகள் இல்லாமல் சத்தங்களுடன் சந்தத்தை இணைத்து காணொளி ஊடாக கல்யாணமும், காதலும், களியாட்டமும், சந்திப்புகளையும் நடாத்தலாம் ஓரளவு மன இறுக்கங்களை குறைக்கலாம் என்பதை இந்த வசதி வாய்புள்ளவர்களுக்கு எற்படுத்தியிருக்கின்றது.

கணனியும், கைத் தொலைபேசியும் அற்ற கோடான கோடி கடை கோடி மக்களுக்கு இன்னமும் இது கிடைத்ததா என்பது கேள்விக் குறிதான். ஆனாலும் அப்படி ஒன்று உள்ளது அது இது போன்ற நெருக்கடியான கால கட்டத்தில் உதவும் என்ற செய்தி அவர்களை அடைந்தும் இருக்கின்றது.

அதுவும் சகலருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கும் ஆண்டாக 2021 முடிந்திருக்கின்றது. 2022 ம் ஆண்டின் பெரும் பகுதி இதனைக் கடந்துதான் போகப் போகின்றது….?

ஆனால் அது ஒரு பழக்கப்படுத்தப்பட்ட ஒன்றாக பயணப்படப் போகின்றது என்பதை காட்டியும் நிற்கின்றது.

இவ்வளவையும் கூறிவிட்டு எமது மக்கள் பற்றி…. இலங்கை தமிழ் மக்கள் பற்றி கூறாவிட்டால் முழுமை பெறுமா இது என்பதினால்….

‘…..மலரும் தமிழ் ஈழம் வரும் புதிய வருடத்தில்…” என்ற உசுப்பு வார்த்தைகள் மீண்டும்….. எமது தலமைகளிடம் இருந்து வந்து கொண்டுதான் இருக்கும்..?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உரக்க வலியுறுத்தியிருக்கும் பெருந்தொற்று செய்தியை பெருவீச்சில் உணர்த்தியிருக்கும் ஆண்டு 2021.

இயற்கையை நாம் வஞ்சித்ததினால் ஏற்பட்ட விளைவே இந்த பெரும் தொற்று என்று பலரையும் விழிப்படையச் செய்திருக்கும் பாடங்களை நாம் இனி வரும் காலங்களில் சரியாக பயன்படுத்தி இந்த பூமிப் பந்தை உயிரினங்கள் வாழும் சுவர்க்க பூமியாக தொடர வழி சமைப்போம் என்று உறுதி எடுப்போம்.