நினைவில் நிற்கும் நாள்-10.4.2004: புலிகளால் மேற் கொள்ளப் பட்ட வாகரைப் படுகொலையும் பாலியற் கொடுமைகளும்

பேராசிரியர் திருமதி மேரி பேர்ட் என்பவரின் பி.பி.சி.சரித்திர டாக்குமென்டரியில்,பெரும்பாலான பழைய சரித்திரங்களில்,பெண்கள் ஆற்றிய செயற்பாடுகளோ அல்லது அரசியல்.பொருளாதார,பாலியல் ரீதியாகஅனுபவித்த துன்பங்களோ சரித்திரத்தில் எழுதப் படவில்லை என்கிறார்.ஆண்களின் பார்வையில் சரித்திரங்கள் படைக்கப்படுகின்றன என்கிறார்.

எங்கள் சரித்திரமும் அப்படியேதான் என்பது எங்கள் பலருக்குத் தெரியும்.

இலங்கை அரசியற் பிரச்சினைகள் பேசுப்படும்போது, பெரிய அளவான தமிழர்கள்; சிங்கள் பேரினவாதத்தால் கொலை செய்யப் பட்டார்கள், கொடுமைக்காளாகினார்கள்,பாலியல் வதைக்குள்ளாகினார்கள்,துரத்தப் பட்டார்கள் என்ற விதமான செய்திகளைப் புலி விசுவாசிகள் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருப்பார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களாற் துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள்.

அத்துடன், புலிகளால் கொலை செய்யப்பட்ட மற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்களும, புலிகளுடனிருந்த மாத்தையா குழுவினரும்; தமிழர்கள்தான் என்பதை அவர்கள் மறைத்துவிடுவார்கள்.அல்லது சொல்வதற்கு மறந்து விடுவார்கள்.

‘கந்தன் கருணை’ போன்ற நிகழ்வுகளில் புலிகளாற் நரபலி எடுக்கப் பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளை அந்த இயக்கத்தினர் ஒவ்வொரு வருடமும் நினைவுகொள்கிறார்கள் அதே போல் புலிகளால் தெருக்களில் பிடித்து வைத்து கழுத்துக்களில்,டையர்போட்டு உயிருடன் கொலை செய்யப் பட்ட 800-900 டெலோ போராளிகளையும் அந்த இயக்கத்தினர் மறக்க மாட்டார்கள்.

புலிகளால் தமிழர்களுக்குச் செய்யப் பட்ட இப்படியான எத்தனையோ கொலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டெ செல்லலாம். ஆனால் 10.4.2004ம் ஆண்டு கிழக்கிலங்கை வாகரைப் பகுதியில், புலிகளிடமிருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து போன குற்றத்திற்காகப் படுகொலை செய்யப் பட்ட நூற்றுக்கணக்கான கிழக்கிலங்கைப் போராளிகளையோ அல்லது அன்று புலிகளால் பாலியல் கொடுமைகள் செய்து அங்கங்களை அறுக்கப்பட்டு மிருகங்கள் மாதிரிக் குத்தி,வெட்டி குரூரக் கொலை செய்யப்பட்ட நூற்றி இருபதுக்கும் மேலான கிழக்கிலங்கை முன்னாள் புலிப்போராளிப் பெண்களையோ இவர்கள் பேசமாட்டார்கள். அநியாயமாக இறந்த இவர்களைப் பற்றிய எந்த ஆவணமும் இருக்காது.

2011ம் ஆண்டு வாகரைப் பகுதிக்கு நான் சென்றபோது அங்குள்ள ஒரு வயது போன தமிழ்க்கிழவர்,அவரின் குரல் தடுமாற, கண்கள் கடலாக, முகம் இருளாக எனக்குச் சொன்ன விடயங்கள் எனது ஆத்மாவை சிலிர்க்கப் பண்ணியது. தமிழ்ப் பெண்ணாக, ஒரு பாட்டியாக.ஒரு தாயாக, ஒரு சகோதரியாக, மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும்; போராளியாக வாழ்ந்து கொண்டு புலிக் கொடியவர்களால் அன்று நடத்தப் பட்ட கொடிய கொலை வெறியை, கிழக்கிலங்கைத் தமிழ்ப் பெண்கள் என்பதால் அவர்கள் அன்று செய்த பாலியல் கொடுமைகளுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று அன்று வந்த வேதனை எனது வாழ்நாள் முழுதும் எனைத் தொடரும்.

அந்த முதியவர் சொன்ன தகவலை இங்கு அப்படியே தருகிறேன். அந்தக் கிழவர் வாகரைக் காடுகளில் சேனை செய்து பிழைக்கும் நூற்றுக் கணக்கான ஏழைத் தமிழர்களில் ஒருத்தர். புலிகளால் நடத்தப் பட்ட கொடுமையை நேரில் பார்க்கும் அவலத்தை எதிர்நோக்கியவர்களில் ஒருத்தர்.அதாவது புலிகள், இந்த ஏழை சேனைத் தொழிலாளர்களைப் பார்வையாளர்களாக வைத்துக் கொண்டுதான்; தங்கள் மிருக வெறியை அரங்கேற்றினார்களாம்.

‘2004ம் ஆண்டின் ஆரம்பத்தில்,புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் கிழக்கிலங்கைப் போராளிகளுக்கும் வந்த கருத்து வேற்றுமையால்,தங்கள் உயிருக்குப் பயந்து காடு வழியாகக் கிழக்கைச் சேர்ந்த பல ஆண்,பெண் புலிப் போராளிகள் கால் நடையாக இருளில் வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் தேடிவந்த பிரமாண்டமான தொகையுள்ள, பிரபாகரன் குழுவினரால் கிழக்குக்குத் தப்பி வந்த பழைய போராளிகள், பெருங் காடுகளால் சூழப்பட்ட வாகரைச் சேனைப் பகதிகளில் வைத்து வளைத்துப் பிடிக்கப் பட்டார்கள். படு பயங்கரமான விதத்தில் சித்திவதை செய்யப் பட்டு, பெட்றோல் டாங்குகளில் அவர்களை உயிருடன் போடப்பட்டு வெடிக்கப் பண்ணி,சிதறி இறக்கப் பண்ணினார்கள்.

சேனைகள் வழிவராமல்,காடுவழியோ ஓடிக்கொண்டிருந்தபோது, மேற்குறிப்பிட்ட சுவாலையைக் கண்ட மிகுதிப் போராளிகளும், தாங்களும் வளைத்துப் பிடிக்கப் படுவோம்,இனித் தப்பமுடியாது என்று முடிவு கட்டிக் கொண்டு, தங்களை வேட்டையாட வந்தவர்களிடம் சரணடைந்தார்கள்.

அவர்களின் நிலை இன்னும் படுபயங்கரமாகத் தொடர்ந்தது. ஒருபோராளியைப் பாவித்து அவனுடன் வந்த சக போராளியைச் சித்திரவதை செய்யச் சொன்னார்களாம்.

பெண்களின் நிலை வாயாற் சொல்ல முடியாத,வார்த்தைகளால் எழுத முடியாத பாலியற் கொடுமைக்காளாக்கப் பட்டு. அவர்களின் அங்கங்கள் வெட்டப்பட்டு காடுகளில் அவர்கள் உடற்பாகங்கள் எறியப்பட்டதாம். அழுகும் பிணத் துண்டுகளின் நாற்றத்தை மோப்பம் பிடித்து மிருகங்கள் வந்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று,சேனை செய்யும் இந்த ஏழைத் தமிழர்கள் பயந்தார்களாம். அடுத்த நாள்,அந்த அழுகிய பிணத் துண்டுகளை எடுத்துப் புதைக்க முயன்றபோது பிரபாகரனின் குழுவினர் வந்து இந்த ஏழைகளை அடித்துத் துன்புறுத்தி, புதைத்த துண்டுகளை தோண்டச் சொல்லி அந்தத் துண்டுகளை,மிருகங்களின் உணவாக காடு முழுதும் எறிந்தார்களாம்.

அந்தக் கொடிய பிணநாற்றத்தால் சேனையில் வாழும் சிறு குழந்தைகள், கர்ப்பவதிகள், வயதுபோன முதியோர் என்போர் வாந்தியெடுத்து அவஸ்தைப் பட்டார்களாம்.

இது நடந்து எட்டு மாதமும் பதினாறு நாட்களும் கடந்தபின்.26.12.2004ம் ஆண்டு, சுனாமிப் பேரலை வந்து, அப்பகுதியிலிருந்த புலிகளின் பிரமாண்டமான பாசறைகளைத் துவம்சம் செய்து அழித்ததுமல்லாமல் நூற்றுக்கணக்கான புலிப்போராளிகளையும் கடலோடு இழுத்துக்கொண்டு போனது.அத்துடன் ஆரம்பித்த புலிகளின் தோல்வி 2009ம் ஆண்டு வைகாசி மாதம் பதினெட்டாம் திகதி முற்றுப் பெற்றது.

தற்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களில் பலவிதமான அரசியல் நோக்குள்ளவர்களும் இருக்கிறார்கள். அந்த நிலைப்பாடுகளின் பிரதிபலிப்பை இங்கு நடக்கும் கலந்துரையாடல்கள்,சர்ச்சைகள் என்பனவற்றில் கண்டுகொள்ளலாம். அதே நேரத்தில்.தங்களைத் தமிழர் மத்தியில் பிரமுகர்களாகக் காட்டிக்கொள்ளத் துடிக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் இன்னும் விடாப்படியாகத் தங்களை ஒரு பிரமாண்டமான அரசியல் சக்தியாகக் காட்டப் பல நடவடிக்கைகளையம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை உலகத்தற்கு ஒரு அப்பாவி இனமாகக் காட்டி அந்தத் தமிழ்த் தேசிய ‘வியாபாரத்தில’; நிறைய உழைக்கிறார்கள்.

இலங்கைத் தமிழரின்; எதிர்கால நன்மைக்கு இந்த அணுகு முறை பிழை என்று சொல்பவர்களை, நேர்மையாக வாழ்பவர்களை, உண்மைகளைச் சொல்பவர்களை,எழுதுபவர்களை,ஒட்டு மொத்த மக்களின் மேன்மையான வாழ்வுக்கும் வளத்திற்கும் உழைப்பவர்களை ஏளனம் செய்கிறார்கள்,அவமதிக்கிறார்கள்.படித்தவர்கள், பண்புள்ளவர்களை அழித்து விட்டார்கள்.

தர்மமற்ற போர்முறை தமிழ் இனத்தின் ஒரு தலைமுறையை அழிந்து விட்டது. எல்லாம் இழந்து ஏனோ தானோ என்று இருப்பவர்களையம் ஒரு மனவியாதிகள் மனப்பானமையில் வைத்திருக்கும் திட்டத்தில் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் செயற்படுகின்றன. தங்கள் தோல்வியை மற்றவர்கள் தலையில் கட்டிவிட்டுப் பழிவாங்கல் செய்யும் திட்டங்கள் தொடர்கின்றன..

அறநெறியை மறந்து,அநியாயத்தை நிலைப்படுத்த முயல்பவர்கள்,அவர்களின் வாழ்க்கையில் பல ‘சுனாமிகளை’ எதிர்நோக்குவது தவிர்க்க முடியாதது.

அன்று நடந்த இந்தக் கொடுமையை ஞாபகத்தில் எடுத்துக் கொண்டு,எங்கள் இளம் தலைமுறைக்கு உண்மைகளைச் சொல்லி அவர்களை நல்வழிப் படுத்தி எங்கள் சமுதாயத்தை மேம்படுத்தத் தயவு செய்து முன்வாருங்கள்.