நேற்று முழுவதும் மெரீனாவில்…

நேற்று பகலிலும் இரவு 10 மணிக்குப் பின்னரும் இருமுறை மெரீனா சென்று சில மணி நேரம் அங்கு குழுமியிருந்த மக்கள் திரளில் கலந்தேன். உரைவீச்சுகள் நடக்கும் பக்கமாகப் போகாமல் ஆங்காங்கு திரண்டு நின்று இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டும், பறை முழக்கிக் கொண்டும், மோடியை ஏசிக் கொண்டும், நடனமாடிக் கொண்டும், தண்ணீர் பாக்கெட்களை வீசிக் கொண்டும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டும்… நின்றிருந்த மக்கள் திரளிடையே கலந்து திரிந்தேன்.

தன்னெழுச்சியாகவும், முழுமையான மக்கள் பங்கேற்புடனும் நடக்கும் ஒரு பெருந்திரள் அணிவகுப்பின் அனைத்து வண்ணங்களுடனும், பன்முகத் தன்மைகளுடனும் நிறைந்திருந்தது உலகின் அந்த நீண்ட அழகிய கடற்கரை. பள்ளிச் சிறார்கள், குடும்பசகிதம் திரண்டிருந்தோர், தங்களின் அன்புக் காதலர்களுடனும், தனியேயும் திரண்டிருந்த ஏராளமான மகளிர்…

ஜல்லிக்கட்டு ஆதரவு, PETA எதிர்ப்பு என்பன இரண்டு நாட்களாக மத்திய அரசு எதிர்ப்பு, நரேந்திர மோடி எதிர்ப்பு என்பதாக உருப்பெற்றுள்ளது. நான் தொடர்ந்து சொல்லிவருவதைப்போல இது ஒரு federal அரசமைப்பு என்பதை மறந்து எதேச்சாதிகாரத்துடன் செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக இன்று அது வடிவம் பெற்றுள்ளது.

பல்வேறுவிதமான மோடி எதிர்ப்பு முழக்கங்கள், நகைச்சுவையாய், கவிதையாய், அரசியல் கூர்மை மிக்கதாய், சற்றே ஆபாசமாய்… வெகுமக்கள்தன்மையின் அனைத்து பலங்களுடனும், பலவீனங்களுடனும் ஆர்ப்பரிக்கும் முழக்கங்கள் தமிழக பா.ஜ.க தலைமையின் எதிர்கால ஆசைகளில் மட்டும் மண் வார்க்கவில்லை..

பா.ஜ.க பக்கம் சாய்ந்து பதவி, பணச் சுகம் காணலாம் எனத் தரகு வேலை பார்த்துவந்த தூதுவர்களின் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது.

கலாச்சாரத்தின் வன்முறை பற்றிப் பேசிய நீங்கள் எப்படி இப்படி எழுதப் போயிற்று எனச் சிலர் கேட்கின்றனர்.

கலாச்சாரம் பாலியல் அடிப்படியிலும், சாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும்… இன்னொரு சாரரின் மீதும், இன்னோரு கலாச்சாரத்தின் மீதும் வன்முறையாய் இறங்கும் கொடூரத்தைத்தான் என் ‘கலாச்சாரத்தின் வன்முறை’ பேசியது. ஒரு கலாச்சாரத்தை இன்னொரு கலாச்சாரத்தால் அளக்க இயலாது என்கிற அடிப்படையில் இருந்துதான் கலாச்சாரங்களின் வன்முறையை நாம் பேசினோம். இன்றும் பேசுகிறோம். நாளையும் பேசுவோம்.

கலாச்சாரத்தின் பெயரால் மாட்டுக்கறி சாப்பிடாதே, ஜீன்ஸ் அணியாதே, பெண்களாயின் வீதிக்கு வராதே, காதலிக்காதே என வெறுப்பு அரசியல் பேசி எந்த ஒரு கலாச்சாரப் பிரிவின் மீதும் வன்முறையாய் அது விடிவதைத்தான் எதிர்க்கிறோம். எதிர்ப்போம்.

காலாச்சாரத்தை ‘கலாச்சாரம்’ என்பதற்காகவே இன்று ஜல்லிக்கட்டையோ இல்லை எதையுமே ஆதரித்துவிட இயலாது என்பதில் நமக்குத் தெளிவு உண்டு. அப்படியாயின் உடன்கட்டை ஏறுதலும், வைதவ்யம் எனச் சொல்லிப் பெண்களை மொட்டையடித்து வீட்டுக்குள் அடைத்து வைப்பதும் கலாச்சாரங்கள் தான். ஆனால் இவை கலாச்சாரத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள், முகமது அக்லக் கொல்லப்பட்டதும், இங்கே நடக்கும் சாதி மறுப்புத் திருமணத்திற்கெதிரான கொலைகளையும் கலாச்சாரம் என்றெல்லாம் இந்துத்துவவாதிகளைப் போல நியாயப்படுத்திவிட இயலாது.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை வெறும் கலாச்சாரப் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்ப்பது ஆபத்து. அப்படி ஜல்லிக்கட்டு என்பதைத் தமிழ்ப் பண்பாடு என்கிற காரணத்திற்காக மட்டும் ஆதரிக்கவில்லை நான். கலாச்சாரம், பண்பாடு என்பதற்காகவே ஒன்றை ஆதரித்துவிட இயலாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால்…

கலாச்சாரம் என்பதற்காகவே ஒன்றை எப்படி ஆதரித்துவிட முடியாதோ அதேபோல கலாச்சாரம் என்பதற்காகவே ஒன்றை வெறித்தனமாக எதிர்த்துவிடவும் முடியாது.

வேட்டி கட்டித்தான் பொது நிகழ்ச்சிகளில் பங்குபெறுவேன் என ஒரு நீதிபதி சொல்வதற்கு ஆதரவளித்தோம். அவரோடு நின்றோம். அதற்காக சங்க இலக்கியத்தில் பூதப்பாண்டியனுடன் அவன் மனைவி உடன்கட்டை ஏறினாள் எனச் சொல்லி ‘இது தமிழர் பண்பாடு’ என்றால் அதை எதிர்ப்போம்.

சங்க இலக்கியத்தில் ஏறு தழுவுதல் உள்ளது என்பதற்காக இன்று இதை ஆதரிக்கவில்லை.. இன்றும் உயிர்ப்புடன் ஒரு பகுதியில் உள்ள இந்த விளையாட்டு யாருக்கும் எதிரானதல்ல, யார்மீதும் வன்முறையாய் அமைவதும் அல்ல. யார் மீதும் வெறுப்பை விதைத்து மக்களைப் பிளவுபடுத்துவதும் அல்ல. எங்கேனும் ஜல்லிக்கட்டின் பெயரால் ஒதுக்கல்கள் நிகழ்கின்றன எனில் அதைக் கள ஆய்வு செய்து நிறுவுவோம். நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்து அதை மாற்றி அமைப்போம். உத்தபுரம் சுவர் இடியவில்லையா?

விகடன்.காம் இல் PETA பற்றி ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது 2000 ஆண்டில் வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் என்பதையும், இந்த அமைப்பின் இன்னொரு முக்கிய வேலை அசைவ உணவுக்கெதிராக பிரச்சாரம் செய்வதுதான் என்பதையும் அந்த வகையில் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் குழுமத்திற்கு கருத்தியல் அடிப்படையில் மிகவும் நெருக்கமான அமைப்பு இது என்பதையும் அக்கட்டுரை அம்பலப்படுத்தியுள்ளது.