பழங்குடி தமிழ் மக்கள் காப்பாற்றபடுவார்களா?

இவர் மூதூர் கிழக்கு குவேணி பழங்குடி மக்கள் அமைப்பின் தலைவர். அண்மையில் இவரை மூதூர் கிழக்கு நல்லூர் கிராமத்தில் வசிக்கும் இவரை சென்று சந்தித்திருந்தோம். அத்தோடு பாட்டாளிபுரம், சந்தோசபுரம் போன்ற பழங்குடி தமிழ் மக்கள் வாழ்கின்ற கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களையும் சந்தித்திருந்தோம். இதன் போது அவர்கள் தெரிவித்த விடயங்கள் மிகுந்த கவலையினையும், வேதனையினையும் ஏற்படுத்தியது.

மூதூர் கிழக்கு பிரதேசங்களான சீனன்வெளி, உப்புரல்,நல்லூர், நீனாகேணி, வீரமாநகர்,இளக்கந்தை, பாட்டாளிபுரம், சந்தோசபுரம், சீதனவெளி, சாலையூர்,சந்தனவெட்டை, வெந்தக்காட்டுவெட்டை, மலைமுந்தல், கோபாலபட்டனம், பாலகாட்டுவெட்டை, மாவடியூற்று ஆகிய கிராமங்களில் பழங்குடி தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

வாழ்வாதாரம்

பழங்குடி மக்களின் வாழ்வாதார தொழிலாக சேனைப் பயிர்ச்செய்கை, தேன் எடுத்தல், வேட்டையாடுதல் போன்றவற்றை ஆரம்ப காலங்களில் வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டவர்கள் பின்னர் மீன்பிடி, கொல்லி( விறகு) வெட்டி விற்பனை செய்தல், கூலித் தொழில் போன்றவற்றையும் மேற்கொண்டு வந்துள்ளனர். ஆனால் நாட்டின் சட்டத்திட்டங்களால் வேட்டையாடுதல், தேன் எடுத்தல், சேனைப் பயிர்ச்செய்கைக்காக காடுகள் அழிப்பது என்பன தடைசெய்யப்பட இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக தொழிலை மாற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

எனவே இம் மக்கள் விவசாயம் மற்றும் கூலித் தொழிலை பிரதானமாக கொண்டுள்ளதோடு, சிறியளவில் விறகு வெட்டி விற்பனை செய்வதனையும் தொழிலாக கொண்டுள்ளனர். இதனைத் தவிர மிகவும் கவலைக்கும் வேதனைக்கும் உரிய விடயம் என்னவெனில் பிச்சை எடுப்பதனையும் நூற்றுக்கணக்கான பெண்கள் வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ளனர்.

குவேணி பழங்குடி மக்கள் அமைப்பின் தலைவர் நா.கனகரட்ணம்
எமது பயணத்தில் நாம் திருகோணமலை கிண்ணியா பாலம் கடந்து பயணித்துகொண்டிருந்த போது மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து பெண்கள் பலரின் கால்களில் செருப்பு கூட இல்லை, சிலரின் கால்களில் தேய்ந்து கிழிந்து போன செருப்புக்களுடன் இருவர், மூவர், ஐவர் என வந்துகொண்டிருந்தனர். இவர்களை இடைமறித்த யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அவர்கள் எங்கே செல்கின்றீர்கள் என வினவிய போது மூதூர் தோப்பூர் என்றார்கள் ஏன் என கேட்ட போது பிச்சை எடுக்க என்று தயக்கமின்றி தெரிவித்தனர். ஓவ்வொரு நாளும் செல்கின்றீர்களாக என மீண்டும் கேள்வியை கேட்க ஆம் ஒவ்வொரு நாளும் போனால்தான் ஐநூறு, அறுநூறு, சில நாட்களில் ஆயிரம் என கிடைக்கும் அதை கொண்டு வந்தால்தான் வீட்டில சாப்பாடு என்றார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த பெண்கள். கறுத்த மெலிந்த வாடி வதைங்கிய உடலமைக்கொண்ட இந்தப் பெண்களின் வாழ்வாதார தொழில் பிச்சை எடுப்பதுவே. இவ்வாறு நூற்றுக்கணக்கான பெண்கள் இருப்பதாக பின்னர் ஊருக்குள் விசாரித்து அறிந்துகொண்டோம். தினமும் சுமார் முப்பது கிலோ மீற்றர் வரை நடந்து சென்று வருகின்றார்கள். மூதூர் கிழக்கு பிரதேசத்திற்குள் உள் நுழையும் போதே படங்களில் பார்த்த கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றிற்குள் செல்வது போன்ற உணர்வே ஏற்பட்டது.

கண்முன்னே பறிக்கப்பட்ட நிலங்கள்

காணி அனுமதி பத்திரங்கள்
இந்த மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தன. அந்த நிலங்களுக்கு 1950 களில் வழங்கப்பட்ட காணி ஆவணங்களும் உண்டு. ஆனால் காணிகள் மாத்திரம் தற்போது அவர்களிடம் இல்லை. 2015 இற்கு பின்னர் மிக வேகமாக மூதூர் பழங்குடி தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் அரசியல்வாதிகளின் ஆதரவில் ஒரு சமூகம் இந்த மக்கள் காலம் காலமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. பறிக்கப்பட்ட காணிகளுக்கு அதிகாரிகளின் ஆதரவுடன் ஆவணங்களும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குவேணி பழங்குடி மக்கள் அமைப்பின் தலைவர் நடராஜா கனகரட்னம் தெரிவிக்கின்றார்.

பறிக்கப்பட்ட நிலங்கள் அமைந்துள்ள பிரதேசங்களின் பெயர்கள் கூட மாற்றப்பட்டுள்ளது எனவும் அந்த வகையில் பாலக்காட்டுவெட்டை இர்பான்நகர் என்றும், கோபாலபட்டனம் அறபாநகர் எனவும், வெந்தக்காட்டுவெட்டை, மாவடியூற்று, ஆகியன தாய்பூநகராகவும், மலைமுந்தல், உப்பூறல் என்பன சாஹிப் நகராகவும் 2015 மற்றும் 2016 பெயர் மாற்றப்பட்ட தங்களது பூர்வீக நிலங்கள் என கனகரட்னம் அவர்கள் மேலும் தெரிவித்தார். இந்த பெயர்மாற்றப்பட்ட பிரதேசங்களில் சஹ்ரான் கூட சுமார் ஐம்பது வரையான கிணறுகளை அமைத்துக்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் எங்களுக்கு பின்னால் எவரும் இல்லை எனவும், நாங்கள் கைவிடப்பட்டவர்களாள இருக்கின்றோம் எனவும் கவலை தெரிவித்தார்.

மேலும் தங்களிடம் இருந்த ஒரு கடறொழில் துறைமுகமும் பறிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நிலங்கள் பறிக்கப்பட்டுக்கொணடேயிருக்கிறது என்றும் குறிப்பிட்ட அவர் இதே நிலைமை தொடர்ச்சியாக நீடித்துச் சென்றால் இன்னுமொரு பத்து பதினைந்து வருடங்களில் முற்றுமுழுதாக நாங்கள் நிலமற்ற மக்களாக மாறிவிடுவோம் எனக் கவலையோடு தெரிவித்தார்.

தங்களின் விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் எங்கள் மக்களின் வறுமை மற்றும் கல்வியறிவு இன்மையை பயன்படுத்தியும், அரசியல் மற்றும் அதிகாரிகளின் அதிகாரங்களை பயன்படுத்தியுமே அபகரிக்கப்படுகிறது. எங்கள் நிலங்களை அபகரிக்கின்றவர்களின் பின்னால் அவர்களின் அரசியல்வாதிகள், அதிகாரிகள் இருப்பது போன்று எங்களின் அரசியல் தரப்புக்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.

பழங்குடி தலைவருடன் உரையாடும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி.
வறுமையில் உள்ள எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களிடம் உணவு உள்ளிட்ட பொருட்களை கடனுக்கு வழங்குதல் தொடர்ச்சியாக பல மாதங்களுக்கு கடன் வழங்கப்படும் பின்னர் கடனை திருப்பி கேட்கும் போது எம்மவர்களிடம் பணம் இருக்காது இச்சந்தர்ப்பத்தில் கடனை குறிப்பிட்டு பல காரணங்களை சொல்லி கையெழுத்து பெற்றுக்கொள்கின்றனர். எம்மவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் எனவே அவர்கள் சொல்லும் இடங்களில் இவர்கள் கைநாட்டு போடுவார்கள். பின்னர் அந்த கைநாட்டுக்கள் காணிக்கான ஆவணங்களுக்கு பயன்படுத்தப்பட்டு தங்களின் பெயரில் காணிகளை மாற்றி பிடித்துக்கொள்கின்றனர். இப்படியும் ஆக்கிரமிப்பு நடக்கிறது. இப்படி பல வழிகளிலும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு நிலங்கள் எங்களிடமிருந்து கடந்த சில ஆண்டுகளில் பறிக்கப்பட்டுவிட்டன. என்றார் கனகரட்னம் அவர்கள்.

பழங்குடி மாணவர்களுடன் உரையாடல்
இதனால் மூதூர் கிழக்கு பழக்குடி தமிழ் மக்கள் தற்போது நிலமிழந்து மக்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமை அவர்களை ஒரு கட்டத்தில் நடுத்தெருவுக்கு கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது.

கல்வி

இந்தப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் பௌதீக மற்றும் ஆளணி வளப்பற்றாக்குறைகளுடனேயே இயங்கி வருகின்றன. நீண்ட காலமாகவே இந்தப்பிரச்சினைகள் காணப்படுகிறது. அரச உத்தியோகத்தை பெற்றுக்கொள்வதற்காக அல்லது பதவிகளை பெற்றுக்கொள்வதற்கு இப்பாடசாலைகளை பயனப்படுத்துகின்றவர்களே அதிகமாக காணப்படுகின்றனர். தான் அறிந்த வகையில் தங்களது பிரதேசத்தில் இருந்து ஒரேயொருவர் மட்டுமே பல்கலைகழகத்திற்கு சென்றுள்ளார் எனவும் அரச உத்தியோகத்திலும் சாதாரண ஒரு பணியில் ஒருவர் மாத்திரமே உள்ளார் என கனகரட்னம் ஐயா தெரிவிக்கின்றார்.

இலங்கையின் கல்வி திட்டத்திற்கு படி தரம் ஐந்து வரை ஒரு ஆசிரியரே அனைத்து பாடங்களையும் கற்பிக்கின்றனர். இங்கே இந்த பிரதேசங்களில் உள்ள பல பாடசாலைகளில் தரம் ஐந்துவரைக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் ஆசிரியர்கள் ஆனால் மாணவர்கள் அனைவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ மாணவர்கள் எனவே இங்கு சமயபாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை. இது அந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இதனைத் தவிர வகுப்பறை பற்றாக்குறைகள், கணித மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பன தொடர்ச்சியாகவே நிலவிவருகின்றன. நாம் சென்ற ஒரு பாடசாலையில் தரம் நான்கில் கல்வி பயிலும் ஒரு மாணவனிடம் பேசிய போது அவனுக்கு ஆங்கில எழுத்துக்களில் எச் (ர்) பிறகு ஒழுங்காக கூற முடியாத நிலையில் இருப்பதனை அவதானிக்க முடிந்தது. சுமய பாட கொப்பி வெறுமையாக காணப்பட்டது. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுடன் அங்குள்ள பாடசாலைகள் இயங்கி வருகின்றன.

கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் தலைமைகள்

2009 இற்கு முன் தாங்கள் பாதுகாப்பாக இருந்ததாகவும், பின்னர் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில் தங்களது கிராமங்களில் பல அபிவிருத்திகள் இடத்பெற்றதாகவும், பாடசாலைகள் அக்காலப்பகுதியில்தான் மாடிக்கட்டங்களை கண்டதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள் அதற்கான காரணம் பிள்ளையான் விடுதலைப்புலிகள் அபை;பில் இருந்த காலத்தில் தங்களது தங்களது கிராமங்கள் தொடர்பில் அதிக தெரிந்தவல் என்ற அடிப்படையில் அபிவிருத்திகளை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் அதன் பின்னர் எந்த அரசியல்வாதிகளும் தங்களது பிரதேசங்களை திரும்பியும் பார்க்கவில்லை தேர்தல் காலங்களில் கூட தமிழ் அரசியல்வாதிகள் வாக்கு கேட்டுக் கூட கிராமங்கள் பக்கம் வருவதில்லை என்றும் எங்கோ ஒரிடத்தில் அனைவரையம் ஒன்றுதிரட்டி ஒரு கூட்டத்தை நடத்துவார்கள் அதிலும் அனைவரும் கலந்துகொள்வதில்லை என்றனர் பொது மக்கள்

ஒரு தடவை குவேணி மக்கள் பழங்குடி மக்கள் அமைப்பின் சார்பில் அதன் பிரதிநிதிகள் சென்று அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த சம்மந்தன் ஐயாவை சந்தித்து தங்களது காணி பறிப்பு உட்பட பிரச்சினைகளை கூறிய போது ஆ… அப்படி நடக்கிறதா, எனத்திருப்பி கேட்டுவிட்டு தான் பார்ப்பதாக ஒரு வரியில் கூறியவர்தான் அதன் பின்னர் எதுவும் செய்யவில்லை.என்கின்றனர் .

இவ்வாறு எவரும் திரும்பி பார்க்காத கைவிடப்பட்ட நிலையில் படிப்படியாக வாழ்விழந்துக்கொண்டிருக்கும் மூதூர் கிழக்கு பழங்குடி மக்கள் மீது விசேட கவனம் செலுத்தி கவனிக்கப்பட வேண்டும், தங்களது பிரதேசங்களின் உட்கட்டுமான அபிவிருத்தியில் மேம்படுத்தவேணடும், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் தங்களது பாடசாலைகள் அபிவிருத்திச்செய்யப்படவேண்டும். தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்த வேண்டும், இது எல்லாவற்றுக்கும் மேலாக தங்களது கண்முன்னே பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தங்களது பூர்வீக காணிகள் பாதுகாக்கப்படவேண்டும் என தங்களது கோரிக்கைகளை அடிக்கொண்டே செல்கின்றர்.

எனவே இந்த மக்களின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விடின் இன்னும் ஒரு தசாப்த்திற்குள் மூதூர் கிழக்கு பழங்குடி தமிழ் மக்கள் என்ற ஒரு இனம் இருந்ததாக வரலாற்று ஏடுகளில் மாத்திரமே காணமுடியும்.

கட்டுரையாளராகிய மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியிலிருந்து செயற்படும் சுயாதீன பத்திரிகையாளராவார்.