புவியில் பூத்தது நவம்பர் 19 புலியால் உதிர்ந்தது ஜூன் 19

பிற இனத்தை ,மதத்தை, மொழியை மதிக்க தெரிந்தவர்களால் மாத்திரம் தான் நல்ல தலைவர்களாக இருக்க முடியும், அந்த வகையில் திப்பு சுல்தானும் ,பத்மநாபாவும் மிகவும் சிறந்த தலைவர்கள்தான் .

உடனே இங்கு வந்து நீ எப்படி பத்மநாபாவை திப்பு சுல்தானுடன் ஒப்பிடுவாய்? நான் அவருடன் 10 வருடங்கள் ஒன்றா இருந்தேன் , அவரின் தட்டில் நான் சாப்பிட்டேன் , அவர் சாகும் போது அவர் பக்கத்தில் இருந்தேன், இப்படி யாராவது வருவீர்களாக இருந்தால் , நான் உங்களிடம் கேட்பது 10 வருடம் வாங்கி சாப்பிட்டதற்கு நீ அவருக்கு விசுவாசமாய் இருந்திருந்தால் அவர் இறக்கு முன் நீ அவரை காப்பாற்ற முயற்ச்சி செய்து நீ இறந்திருக்கவேண்டும்.அப்போது தான் நீ உண்மையான தொண்டன்.

பத்மநாபாவின் ஆட்சி முறையை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் முதலில் திப்பு சுல்தானை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

திப்பு சுல்தான் ஒரு இஸ்லாமியர் ஆனால் 
திப்பு சுல்தானின் சமய அணுகுமுறை இந்துக்களுக்கு எதிராகவும் இல்லை, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் இல்லை. மாவீரன் திப்புவின் பெயரை கேட்டாலே ஆங்கிலேயர்கள் குலைநடுங்கினார்கள் என்பது வரலாறு ,திப்புவின் வீரமும்தீரமும் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்டவை,அவரை களங்கப்படுத்த நினைக்கும் சூழ்ச்சி என்றும் பலிக்காது .

கர்நாடகத்தில் மூன்றாவது ஆண்டாக திப்பு சுல்தானின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது ,இவ்விழாவுக்கு இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. திப்பு சுல்தான் இந்து மதத்தினரைத் துன்புறுத்தியவர் என்று ஆங்கிலேயர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள புனைந்த கதைகளை இப்போது இந்துத்துவவாதிகள் கையிலெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

திப்பு சுல்தான், குடகுப் பகுதியை இணைத்துக்கொண்ட போது 80,000 பேரை இஸ்லாமிய சமயத்துக்கு மதம் மாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் குடகில் 10,000 சொச்சம் பேரே இஸ்லாமியர்களாக இருந்தார்கள் என்று தெரிய வந்தபின் இது ஒரு பொய் பிரச்சாரம் என்று தெரிய வந்தது ,உண்மையில் தனது ஆட்சிக் காலத்தில் திப்புவின் சமய அணுகுமுறை இந்துக்களுக்கு எதிராகவும் இல்லை, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் இல்லை. 100 கோவில்கள் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு மசூதியை தான் வைத்திருந்தார் , 669 ஏக்கர் காணியை குருவாயூரப்பா கோவிலுக்கு கொடுத்தார் , இந்துக்களின் தசரா பண்டிகையை ஒலிம்பிக் விளையாட்டுப்போல் மிகவும் கோலாகலமா நடத்தி வைத்தார்.மதச்சார்பற்ற ஆட்சியையே அவர் நடத்தினார்.

சிறீரங்கப்பட்டணத்தின் புகழ்பெற்ற ரெங்கநாதர் கோயிலிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் திப்பு சுல்தானின் அரண்மனை இருந்தது. திப்பு மதவெறியராக இருந்ததில்லை என்பதற்கு அந்தக் கோயிலே முதன்மைச் சான்று. இன்றும் நஞ்சன்கூடு கோயிலில் அவர் அளித்த மரகத லிங்கமும் மேல்கோட்டை நரசிம்மர் கோயிலில் அவர் வழங்கிய முரசும் பார்வைக்கு இருக்கின்றன. மேலும், அவரது அரசாங்கத்தால் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளில் 90% இந்து சமய நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டன. அதனால்தான் நரசிம்மர் கோயிலில் புராண நிகழ்ச்சிகளை விவரிக்கும் ஓவியங்களுக்கு இடையே திப்பு சுல்தானின் படத்தையும் வரைந்து பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

மராட்டியர்கள் சிருங்கேரி மடத்தைக் கொள்ளையிட்டு, அங்கிருந்த பிராமணர்களைக் கொன்று, சாரதாதேவி யின் பொற்சிலையைக் கொண்டுசென்றபோது, அம்மடத்தின் பணிகள் மீண்டும் தொடர்வதற்குக் கொடைகளை அளித்ததுடன் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்குப் பாதுகாப்பாக சையத் முகமது என்ற தளபதியையும் ஒரு படையையும் அனுப்பிவைத்தவர் திப்பு சுல்தான்.

திப்பு சுல்தான் கேரளத்தின் மலபார் பகுதியை நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது, குருவாயூர் கோயிலில் இருந்த பிராமணர்கள் அங்கிருந்த சிலையை மறைத்து வைத்தனர். அவர்களது அச்சத்தை அறிந்த திப்பு சுல்தான், சிலை இருந்த இடத்தில் மீண்டும் அதை நிறுவச் செய்து அக்கோயிலுக்குக் கொடையளித்துத் திரும்பினார். மலபார் பகுதியில் பெண்கள் மேலாடை இல்லாமல் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த திப்பு சுல்தான், அவ்வழக்கத்துக்குக் காரணம் எதுவென்றாலும் அது உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே சச்சரவுகள் எழுந்தபோதும் திப்பு சுல்தான் சமயச் சார்புக்கு ஆளாகிவிடவில்லை. சிறீரங்கப்பட்டணத்தில் நடந்த ஒரு இந்து மத ஊர்வலத்தின்போது இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாமிய சமய அறிஞரான பீர்லதா அரசரிடம் புகார் செய்தார். விசாரித்த திப்பு சுல்தான், அந்த ஊர்வலத்தில் சிக்கல் உருவாவதற்கு இஸ்லாமியர்களே காரணம் என்று அறிந்து அவர்களைத் தண்டித்தார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்கப்படாவிட்டால் நாட்டை விட்டே தான் வெளியேறப் போவதாகப் பயமுறுத்தினார் பீர்லதா. ‘தங்களது விருப்பம் அதுவானால் அப்படியே நடக்கட்டும்!’ என்று பதிலளித்தவர் திப்பு சுல்தான்.

திரிக்கப்பட்ட வரலாறு

1787-ல் திப்பு சுல்தான் வெளியிட்ட பிரகடனம், பிற மதங்களிடம் சகிப்புத்தன்மையே புனித குர்ஆனின் கோட்பாடு என்று தொடங்கி சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதும் ஒதுக்குவதும் சட்டவிரோதமானது என்று முடிகிறது.

விவசாயிகளின் நண்பர்

திப்பு சுல்தான் தொலைநோக்கு கொண்ட நிர்வாகத் திறமையாளரும்கூட. 17 ஆண்டுகால ஆட்சியில் அவர் மேற்கொண்ட திட்டங்கள் இன்றைக்கும் வியந்துநோக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொழில் மற்றும் வணிகக் கொள்கையை வகுத்த மன்னர் அவர். விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, அவற்றை நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்கும் முறையை அறிமுகப்படுத்தியவர். விவசாயம் செய்யப்படாத நிலங்களைக் கண்டறிந்து, அவற்றை நிலமில்லாதவர்களுக்கு அளித்தார்.

நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவியவர், ‘‘குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி அளிக்காத தந்தை கடமையை மறந்தவன்’’ என்று அறிவித்தார். பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய திப்பு சுல்தான், அதனால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பைப் பற்றி கவலைப்படவே இல்லை. திப்பு சுல்தானின் இச்செயலுக்காக அவரை உன்னதமான மன்னர் என்று வியந்து பாராட்டி எழுதியிருக்கிறார் காந்தி. காவிரிக் கரையோரத்தில் இருந்த ஆயுதத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கந்தகக் கழிவால் நதிநீர் மாசுபட்டு, நீர்வாழ் உயிரினங்கள் அழியுமென்று அத்தொழிற்சாலையை வேறிடத்துக்கு மாற்றியவர் திப்பு சுல்தான். இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அவர் முன்னோடி.
.

ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி. அக்கடிதம் இப்படி நீள்கிறது.

ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.

இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.
நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான்.

விடுதலை வீரர், சிறந்த நிர்வாகி என்ற காரணங்களுக்காக திப்பு சுல்தான், பத்மநாபா ஆகியோர் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் . குறிப்பாக, இன , மதச்சார்பற்ற ஆட்சிமுறைக்காக அவர்களை 
போற்றுவது இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமாகும் , மதநல்லிணக்கத்தை விரும்பியவர்களை மதவாதியாக சித்தரிக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும், இவ்வாறானவர்களை பார்த்த பின்னரும் கூட இன மதவாதிகளிடம் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

அன்றய புலிகள் இன்றய புலிகள் புலிக்கொடி புலிச்சின்னம் புலி அமைப்புக்கள் புலிகளின் போராடடம் யாவும் சகோதரப் படுகொலையின் சின்னங்கள் என்பதை பலர் அறியாமலே இன்று அந்தக கொடியினை உயரத்திப்பார்க்கிறார்கள் புலிக்கொடியின் சிகப்பு நிறம் சகோதரப்படுகொலையின் இரத்தமேயாகும்.

நல்லவேளையாக காந்தி, மண்டேலா, சே குவேரா, மார்க்ஸ், லெனின் ,திப்பு சுல்தான் போன்றவர்கள் எல்லாம் ஈழத்தை தவிர வேறு நாட்டில் பிறந்தார்கள்,

ஒருவேளை அவர்கள் ஈழத்தில் பிறந்திருந்தால் என்றோ துரோகி என சுட்டுகொல்லபட்டிருப்பார்கள்.

காந்தி பிறந்த தேசத்தில் காந்தி மாண்ட முறையிலேயே, குண்டுகளுக்கு இரையாகி தன் இலட்சியத் துணைவர்கள் பன்னிருவருடன் உயிர் துறந்தார் பத்மநாபா. அவரையும் அவருடன் தோளோடு தோள்நின்ற நிராயுதபாணிகளான இளம் இயக்கத் தலைவர்களையும் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற கொலைபாதகர்களான ஒற்றை கண் சிவராசனையும் , ராஜீவ் கொலை வழக்கில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் சாந்தனையும், அவர்களின் கூட்டாளிகளையும் , 
அவர்களைத் தூண்டியவர்களையும் வரலாறு மன்னிக்கவே முடியாது.

பத்மநாபா ஒருமுறை இவ்வாறு கூறினார் , எமது எதிரி புலிகள் அல்ல, சிங்களப் பேரினவாத அரசே என வலியுறுத்தினார் . அவர்களைக் கூட ஐக்கியப்பட்டுப் போராட அழைத்தார் எனக் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது,சுதந்திர நல்வாழ்விற்கான போராட்டத்தில் அனைவரையும் ஒன்றுபடுத்துவது அவசியம். தவறான பாதையைப் பின்பற்றுவோர் பின்னாலும் பெரும்பகுதி மக்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்கலாகாது. அத்தகைய இயக்கத்தினரையும் ஒன்றிணைத்து, தவறுகளைப் போக்கி முன்னேறும் மார்க்கம் காண்பதே வெற்றி வாகை சூடுவதற்கான பாதை.

பத்மநாபா மறைந்துவிட்டார்.

ஆயினும் பத்மநாபாவின் நினைவு நீங்கவே நீங்காது.
பத்மநாபாவின் லட்சியங்கள் அழியவே அழியாது.

வாழ்க பத்மநாபாவின் நாமம்.

பத்மநாபாவின் லட்சியங்களை நிறைவேற்றுவதே பத்மநாபாவிற்கு செய்யும் அஞ்சலி.

புலிகள் அனைத்து அமைப்புகளையும் அன்று கொன்று தடை செய்தார்கள் , இன்று அனைத்து அமைப்புகளும் இயங்குகின்றன 
ஆனால் புலிகள் இல்லை. இந்திய துணையின்றி ஈழத்தில் விடுதலை கிடையாது என்று கூறியதற்காக பத்மநாபாவை மண்ணுக்கு அனுப்பிய பிரபாகரன் அதே இந்திய துணையில்லாமையால் இறுதியில் சிங்களவர்களால் மண்ணுக்கு அனுப்பப்பட்டார் 
என்பது தான் வரலாறு.

*இன்று சகோதர யுத்தத்தை நடத்துவோரை நீங்கள் தேடி அழிக்க வேண்டியதில்லை அவர்கள் தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள்.
பத்மநாபா 1987

* நாம் மரணத்தை கண்டு அஞ்சவில்லை ஒரு அடிமையாய் அனாதையாய்
தெருக்களில் மரணித்துப் போவதைத்தான் வெறுக்கிறோம்.
பத்மநாபா 1987.

வாழ்க பத்மநாபாவின் புகழ்.

(Sutharsan Saravanamuthu)